Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

'அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது'அணிசேர நாடுகள் மாநாட்டில் ஈரான் தலைவர் ஆயதுல்லா பேச்சு


"அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை, ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது,'' என, ஈரான் தலைவர் ஆயதுல்லா  தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அணி சேரா நாடுகளின் மாநாடு, நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், உட்பட 50க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


ஈரான் நாட்டின் ஆன்மீகத்  தலைவர் ஆயதுல்லா , இந்த மாநாட்டில் பேசியதாவது:அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் எங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டப் பணிகளை, ஒரு போதும் கைவிட முடியாது. அணு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகள், உண்மையில் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க மனமில்லை. மாறாக, எங்கள் நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை திணித்து வருகின்றன.

"அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது' என்று சொல்பவர்கள், அணு எரிபொருள் சப்ளை செய்வதை தங்கள் வசம் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை நாங்கள் பாவமாக கருதுகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில், அணு ஆயுதமே இருக்கக்கூடாது, என்ற திட்டத்தை வற்புறுத்துகிறோம். அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு.இவ்வாறு ஆயதுல்லா  பேசினார்.


ஈரான் அதிபர் அகமது நிஜாத் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா, அமைப்பு ரீதியான முறையில் மக்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் "வீட்டோ' அதிகாரம் பெற்ற நாடுகளுக்கு சாதகமாக தான் நடக்கிறது' என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பேசுகையில், "பலதரபட்ட சமுதாய மக்கள் ஒன்றிணைந்து வாழும் ஜனநாயக நடைமுறையை, இந்தியா ஆதரிக்கிறது. சிரியா போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடக்கிறது. இதுபோன்ற கிளர்ச்சி, வெளியிலிருந்து தூண்டப்படக் கூடாது. இதனால், உள்ளூர் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், சிரியா நாட்டு விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டும்' என்றார்.


செங்கோட்டையில் பலத்த மழை: குண்டாறு அணை நிரம்புகிறது

செங்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தென்காசி பகுதிகளான இலஞ்சி, பாவூர்சத்திரம், மேலகரம்மற்றும் செங்கோட்டை பகுதிகளான புளியரை, தெற்குமேடு, கட்டளைகுடியிருப்பு, சுப்பிரமணியபுரம், வல்லம், பிரானூர் பார்டர் ஆகிய பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. 

இந்த மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குண்டாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வனவிலங்கு பாதுகாப்பு படிப்பு (LIFE SCIENCE )


வனவிலங்குகளின் வாழ்வைப் பற்றிய அடிப்படை புரிதலை Life Sciences பாடம் வழங்குகிறது. அதேசமயம், கால்நடை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பில் துணை செய்கின்றன. பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்தப் பிறகு, இளநிலைப் படிப்பில், விலங்கியல், தாவரவியல், வனவளம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படிப்பது, இத்துறையில் நுழைவதற்கான ஒரு ஆரம்பம்.

பூகோள தகவல் அமைப்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் புள்ளியியல் போன்றவை, மிருகங்களை கண்காணித்தல் மற்றும் கணக்கெடுத்தல் போன்ற பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நவீன அம்சங்களாக திகழ்கின்றன. The wildlife institute of Inida(WII), National centre of biological sciences(NCBS) போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலை போன்ற சில முக்கிய பல்கலைகள், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகள் Landscape ecology, Remote sensing and Conservation genetics போன்ற தொழில்நுட்பங்களை இணைக்க முயல்கின்றன.

NCBS கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் M.Sc in wildlife biology and conservation என்ற படிப்பானது, பெங்களூர் வனவிலங்கு படிப்புகளுக்கான மையத்தின்(CWS) கூட்டிணைவோடு வழங்கப்படுகிறது மற்றும் பட்டமானது, அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரிலுள்ள Ashoka trust for research in ecology and the environment, Nature conservation foundation and National institute of advanced studies போன்ற கல்வி நிறுவனங்களும், இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகின்றன.


தகுதிகள் மற்றும் சேர்க்கை
NCBS கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையானது, தேசிய அளவிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் நடைபெறுகிறது. பலவிதமான படிப்பு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை சேர்ப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் ஆகியோர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

WII கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கை சற்று மாறுபட்டது. உயிரி அறிவியலை முக்கிய பாடமாக வைத்து, பி.எஸ்சி முடித்தவர்கள் அல்லது கால்நடை அறிவியல், வனவளம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCBS -ஐ பொறுத்தவரை, 2 வருடங்களுக்கு ஒருமுறையே அந்தப் படிப்பு வழங்கப்படுகிறது மற்றும் சேர்க்கைக்கான விளம்பரம், படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது. மேலும், மாதம் ரூ.10,000 உதவித்தொகையும் NCBS மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்குமிட வசதியும் உண்டு.

இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதும் சுவாரஸ்யமான ஒன்று. இதன்மூலம் ஒருவரின் அறிவு விரிவடைவதுடன், பலவிதமான வாய்ப்புகளையும் ஒருவர் பெற முடியும். நமக்கு விருப்பமான தலைப்பில் பி.எச்டி செய்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.


பணிநிலைகள் மற்றும் துறைகள்
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் நுழைய பலவிதமான வழிகள் உள்ளன. இங்கே அவை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு ஜர்னலிசம் மற்றும் டூரிஸம்
வனவிலங்கு ஜர்னலிசம், இயற்கை போட்டோகிராபி அல்லது டாகுமென்டரிகளை தயாரிக்கும் அதிகளவு நபர்களை இந்தப் பிரிவு ஈர்க்கிறது. மீடியா திறனிற்கு அப்பாற்பட்டு, வனவிலங்கு தொடர்பான அம்சங்களை ஆராய்வதற்கான அறிவு மற்றும் ஆர்வத்தை இத்துறை கோருகிறது. மீடியாவைப் போலவே, வனவிலங்கு டூரிஸமானது, பல இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களின் விருப்பத்தையும், தொழிலையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

கார்பரேட் சமூக பொறுப்பு(சி.எஸ்.ஆர்/என்.ஜி.ஓ)
அழிந்துவரும் விலங்கினங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், என்.ஜி.ஓ -க்கள் பலவிதமான பணிகளை ஆற்றி வருகின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள், களப் பணியாளர்கள், மீடியா நபர்கள், Outreach பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு மற்றும் நுண்ணறிவு நெட்வொர்க் நிபுணர்கள் போன்ற பல பணி நிலைகளில் என்.ஜி.ஓ -க்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், வன அருகாமையிலுள்ள சில பாரம்பரிய வேட்டை சமூகத்திடமிருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை, வேட்டைக்கெதிராக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆராய்ச்சிப் பணி:அரசுகள், என்.ஜி.ஓ -க்கள், WII, NCBS, ATREE, NCF போன்றவை, வனவிலங்குகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. வனவிலங்கு அறிவியல் துறையில் முதுநிலைப் படிப்பை முடித்தப்பின்னர், மேற்கூறிய நிறுவனங்களில், பி.எச்டி மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவதுடன், Wildlife biologist மற்றும் Research associates போன்ற பணி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
அரசுப் பணிகள்:தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றவும், நிர்வகிக்கவும், மத்திய - மாநில அரசுகள், அலுவலர்களை நியமிக்கின்றன. இந்த அலுவலர்கள் பின்னாளில், வனவளம், வனவிலங்கு மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பட்டதாரி, இதுபோன்ற பணிகளில் இணைந்து, வனவிலங்கு பற்றிய தனது திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சில அரசுத்துறை பணியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "கன்சர்வேஷன் பயாலஜிஸ்ட் போன்ற ஒரு சில பணிவாய்ப்புகளே அரசுத்துறைகளில் உள்ளன. இதன்மூலம், வனவிலங்கு அறிவியலில் பயிற்சிபெறும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் சுருங்கி காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சட்டம்:வனவிலங்கு மற்றும் வனங்களைப் பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள், அதன்பொருட்டு தங்களின் சட்ட அறிவைப் பயன்படுத்தி சாதிக்கலாம். ஆனால் அதேசமயம், நீதிமன்றங்களில் வாதாட, சட்டப் படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:இத்துறையில் முதுநிலைப் படிப்பை முடித்து என்.ஜி.ஓ -வில் பணிக்கு சேரும் ஒருவர் ஆரம்பத்தில் ரூ.15000 முதல் 20000 வரை பெற முடியும். GIS நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அவரவர் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்தைப் பெறலாம். வனம் தொடர்பான பல பணிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூலம் பெறலாம்.
பல ஆர்வலர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். WII, NCBS போன்ற கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் பி.எச்டி பட்டங்களைப் பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன.
தேவைப்படும் பண்புக்கூறுகள்:இத்துறையில் ஈடுபடுவோர், வனவாழ்க்கைத் தொடர்பான சமூக, சுற்றுப்புற மற்றும் பொருளாதார காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு, சிறந்த தகவல்தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் இருக்க வேண்டும். அதேசமயம், தங்களின் பணி தொடர்பான உயரிய லட்சியத்தை, அவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதே இங்கு முக்கியம். அதுவே, உங்களுக்கான ஆத்ம திருப்தி!

புதன், 29 ஆகஸ்ட், 2012

இளைய தலைமுறையே! நம் சமுதாயத் தந்தையின் வாழ்க்கையை அறிந்துகொள் !


பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயிதே  களுக்குத்தான் பஞ்சம் !

ஓட்ஸ் - மருத்துவ குணம்


ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது.

இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது.  இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.

அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது

ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

சிங்கப்பூரில் படிப்பவர்களுக்கு செலவும், நேரமும் மிச்சம்


பொதுவாக, மேலாண்மை படிப்புகளுக்கு பெயர்பெற்ற சிங்கப்பூர், தற்போது பலதுறைகளில் படிப்புகளை வழங்கி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பாக, சிங்கப்பூரின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 70,000. ஆனால் அந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டின் முடிவில் 1,00,000 என்ற அளவிற்கு அதிகரித்தது.

வரும் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 1,50,000 என்ற அளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க திட்டங்கள்
மாறிவரும் உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல புதிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பார்த்தால், சிங்கப்பூர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலாச்சாரம், அமைப்பு மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றில் 4 வருட இளநிலை சமூக அறிவியல் படிப்பை வழங்குகிறது. மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்(NUS), ஆங்கில மொழியில், ஒற்றை மேஜர் பி.ஏ(ஹானர்ஸ்) 4 வருட படிப்பை வழங்குகிறது.

பி.பி.ஏ(அக்கவுன்டிங்) என்ற 5 வருட படிப்பானது, சிங்கப்பூரில் வழங்கப்படும் புகழ்பெற்ற படிப்புகளில் ஒன்றாகும். NUS, நிதி மற்றும் நியூ மீடியா துறையில் பி.பி.ஏ(ஹானர்ஸ்) இரட்டைப் பட்டப் படிப்பை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் பல பொறியியல் படிப்புகளை சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவைத்தவிர, பி.ஏ(எகனாமிக்ஸ்) மற்றும் பி.இ(எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய படிப்புகள், பொறியியல் கல்லூரி மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தால் கூட்டாக சேர்ந்து வழங்கப்படுகின்றன.


செலவினங்கள்
கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு பல்கலை வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதுபோன்ற பல்கலைகளால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் தாய்நாட்டு கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. சராசரியாக, சிங்கப்பூரில் பெறப்படும் வெளிநாட்டுப் பட்டம் 20% குறைவான பொருட் செலவில் கிடைக்கிறது. அதேசமயம், அது படிப்பையும், கல்லூரியையும் பொறுத்தது.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட ஜேம்ஸ் கூக் பல்கலையை உதாரணமாக எடுத்துக்கொண்டால், சராசரியாக, இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 40,000 சிங்கப்பூர் டாலர்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 28,000 சிங்கப்பூர் டாலர்களும் செலவாகிறது.

மேலும் காலமும் மிச்சமாகிறது. ஏனெனில், எம்.பி.ஏ படிப்பை எடுத்துக்கொண்டால், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும். அதேசமயத்தில், சிங்கப்பூரில் இதற்கு 1 வருடம்தான் ஆகும்.

வேலை வாய்ப்புகள்
சிங்கப்பூரை பொறுத்தவரை, முழுநேரமாக, பல்கலைகளிலும், பாலிடெக்னிக்குகளிலும், இதர கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவர்கள்தான் பகுதிநேர வேலைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வொர்க் பர்மிட் தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 16 மணி நேரங்களே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

படிப்பை முடித்தப்பிறகு ஒரு மாணவர், எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு, மனிதவள அமைச்சகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு, வேலை வாய்ப்பிற்கான inprinciple approval -ஐ நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஒருவர் பெறக்கூடிய சம்பளம் மாதத்திற்கு குறைந்தது 25000 சிங்கப்பூர் டாலர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே, எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுசு கூடும் மதுரை மல்லி


மதுரை மல்லிக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் மவுசு அதிகரித்து வருகிறது.மல்லிகை பூ வகைகளில், அதிக வாசனை கொண்டது மதுரை மல்லி. இது, மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், 1,250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மல்லிக்கான தேவை,ஆண்டுக்கு, 10,500 டன்னாக உள்ளது.ஆனால், இதன் உற்பத்தி,9,500 டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், மதுரை மல்லி அதிக அளவில் விளைகிறது. அப்போது, கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழை மற்றும் குளிர் காலத்தில், கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டில்லி மும்பை ஆகிய நகரங்களில், மதுரை மல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அயல்நாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.விலையில் ஏற்ற, இறக்கம், போதிய கிடங்கு வசதியின்மை, இடைத்தரகர்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளால், மதுரை மல்லி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, மதுரை மல்லி விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.