Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எது - எங்கே - எப்படி?-குழப்பம் வேண்டாம்


படிப்பா? கல்வி நிறுவனமா? சுய விருப்பமா? வேலை வாய்ப்பா? உள்ளூரிலேயே படிப்பதா அல்லது வெளிநாடு செல்வதா? இதுபோன்ற கேள்விகளை தமக்குள் போட்டு குடைந்துகொள்ளும் மாணவர்கள் இன்று ஏராளம். ஆனால் இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை என்றே கூறலாம்.
இன்றைய உலகில், ஒரு தனிப்பட்ட நபர் தனது 30 முதல் 40 வருட பணி வாழ்க்கையில், குறைந்தது 3 முதல் 4 வெவ்வேறான தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருவருக்கு புதிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் திறனும், திறன் மாற்றுத் தன்மைகளும் அவசியம் தேவைப்படுகின்றன.
உயர்கல்வியில், எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில், உங்களுக்குள் ஒரு போராட்டமே நடக்கும். அந்த சூழலில், உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை உடனடியாக நிராகரித்து விடுங்கள்.
கல்லூரியா - படிப்பா? எது முக்கியம்?
ஒரு பெயர்பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, ஏதோ ஒரு விரும்பாத பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதா? அல்லது மிகவும் விரும்பும் ஒரு படிப்பை, அது சாதாரண கல்லூரியில் கிடைத்தாலும், அதில் சேர்ந்து படிப்பதா? என்ற பெரிய குழப்பம் ஏற்படும்.
இதற்கான பொதுவான அறிவுரை என்னவெனில், பி.இ/எம்.பி.ஏ/எம்.சி.ஏ போன்ற, உடனடி வேலைவாய்ப்புக்கான தொழில் படிப்புகளைப் பொறுத்தவரை, கல்லூரியே முக்கியம் என்பதுதான் அது. ஆனாலும், சிலர் இன்னும் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். தொழிற் படிப்புகளுக்கு மட்டுமல்ல, பி.ஏ போன்ற கலை படிப்புகளுக்குமே, கல்லூரியின் புகழ் வலு சேர்க்கிறது என்கிறார்கள். அதேசமயத்தில், ஒரு புகழ்வாய்ந்த கல்லூரியில் படித்தாலும், படிக்கும் பாடத்தில் சுத்தமாக ஆர்வமோ, விருப்பமோ இல்லாதபட்சத்தில், பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
ஆர்வமா, வேலை வாய்ப்பா? எது முக்கியம்?
நமது சமூகத்தில் பொதுவாக, வேலைவாய்ப்புகளை வைத்தே, ஒருவரின் படிப்பு தேர்வு அமைகிறது. தனிமனித ஆர்வத்திற்கும், திறமைக்கும் பொதுவாக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஆனால், ஒருவர் என்னதான் அதிக சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், செய்யும் பணியில் ஒருவருக்கு ஈடுபாடும், திருப்தியும் இருப்பது முக்கியம். சிலரின் படிப்பிற்கும், அவர் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஒருவர், கணிப்பொறி அறிவியலில் எம்.டெக் படித்துவிட்டு, ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்துகிறார். என் வாழ்வில் நான் 10 ஆண்டுகளை கணினி துறையில் வீணடித்து விட்டேனே என்று புலம்புகிறார். வரலாற்றில் அதிக ஆர்வமுடைய ஒருவர், அதிலேயே எம்.பில் வரை படித்துவிட்டு, வேலைவாய்ப்பு குறைவு என்று தெரிந்ததும், மீண்டும் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டுள்ளார். அதிக வேலைவாய்ப்பு என்பதுதான் அவரின் தாவலுக்கு காரணம்.
எனவே, சிறந்த வேலைவாய்ப்புகளைக் கொண்ட படிப்பை நோக்கி நமது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதில் நமது திறமையை எவ்வாறு நிரூபிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும் அல்லது நமக்கு விருப்பமான துறையில், தற்போதைக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், எந்தவகையில் புதிய வேலைவாய்ப்புகளை நாமே சுயமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்பதையும், இளையதலைமுறையினர் புதுமையாக யோசிக்கப் பழக வேண்டும். ஏனெனில், இன்றைய கார்பரேட் உலகம் வேறு. அந்த காலம் வேறு. இன்றைய நிலையில், புதுமையான ஒவ்வொரு முயற்சிக்கும் பணம் கிடைக்கும். எனவே, சூழலுக்கு ஏற்றவாறு நம்மை நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இளநிலைப் படிப்பிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவையா?
புதிய தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையால், வழக்கமான பி.ஏ/பி.எஸ்சி போன்ற படிப்புகள் BS, BBA, BIFA, BSc (Tech) போன்ற படிப்புகளால் பின்தள்ளப்பட்டுவிட்டன. இளநிலை பட்டப்படிப்பிலேயே, Applied Nutrition, Biotechnology, Nanotechnology போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. கார்பரேட் யுகத்தில், ஒருவருக்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவைப்படுகிறது மற்றும் தொழில்துறை தேவைகளுக்கேற்ப தனது திறமையை தகவமைத்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதேசமயத்தில் இதுதொடர்பாக வேறு கருத்தும் உள்ளது.
BBA, BBS, BMS போன்ற படிப்புகளை முடித்த மாணவர்கள், Admin, Secretarial, coordination, sales and human resources job போன்ற பணி நிலைகளில் நேரடியாக நுழையும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், சில வருட பணி அனுபவத்திற்கு பிறகு, பதவி உயர்வு என்ற நிலை வருகையில், முதுநிலைப் படிப்பு தகுதி தேவைப்படுகிறது. எனவே, அந்த வகையிலும் திட்டமிடுதல் இருக்க வேண்டும். மேலும், ஸ்பெஷலைசேஷன் படிப்பை பொறுத்தவரை, ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டணம் மற்றும் சிறப்பான பயிற்சி
தொழில்துறை தொடர்பான படிப்புகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு கல்வி நிறுவனம், தொழில் நிறுவனங்களிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்து உரையாற்ற வைத்து, மாணவர்களை திட்டங்களில் பங்கெடுக்க வைப்பதை தனது திட்டமாக கொண்டிருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது செயல்படுத்தப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு சில கல்வி நிறுவனங்களிலேயே இவை பின்பற்றப்படுகின்றன.
அங்கீகாரம் முக்கியம்
நீங்கள் ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கையில் அதன் பரவலான அங்கீகாரம் பற்றி கட்டாயம் விசாரிக்க வேண்டும். ஏனெனில், ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு படிப்பானது, இன்னொரு மாநிலத்தில் செல்லுபடியாகாது. எனவே, நீங்கள் மேற்கொள்ளும் படிப்பு, நாடு முழுவதின் அங்கீகாரத்தைப் பெற்றதா என்பதை ஆய்வு செய்வது மிகவும் முக்கியம்.
ஆசிரியர் தொழில் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, சட்டத்துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி அல்லது மருத்துவம் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, முறையான அங்கீகாரம் இருந்தால்தான் உங்களின் பணமும், நேரமும் விரயமாகாது தடுக்கலாம்.
கல்லூரியை பற்றிய கவலை வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, மதிப்பெண்கள் எப்படி வருமோ? அதை வைத்து, எந்தக் கல்லூரி கிடைக்குமோ என்ற கவலை பல மாணவர்களுக்கு இருக்கும். ஆனால், சாதனையாளர்கள் தரும் பொதுவான அறிவுரை என்னவெனில், எந்தக் கல்லூரியில் சேரப் போகிறோம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அந்தக் கல்லூரியிலிருந்து எதைப் பெறுகிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்


சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.
 இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.
 ”சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.”
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.
 இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,
”பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது” என்று கூறினார்.
 ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.
 கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,
 மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.”
 இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..
”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்” இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.
இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..
”புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.”
என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.
பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ”இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?” என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.
ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?
வந்தவர்கள் பதில் சொல்லும் போது ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை” என்றார்கள்.
வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது” என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.
அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் ‘சகோதரர், சகோதரிகளே..!” என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.
”என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.”
இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!
விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்,நேசமுடன் இஸ்லாம்

நோன்புப் பெருநாள் தர்மம்

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?
பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-
ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?
இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-
முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? 
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510

ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? என்றால்,
தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். இஸ்லாம் (நாம் முந்திய பதிவில் பார்த்தபடி) இதுபோன்ற தர்மங்களை அங்கீகரிக்கவில்லை, சிறந்தவற்றையே கொடுக்கச் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!

புதன், 15 ஆகஸ்ட், 2012

அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்று, நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைக்கு உள்ளே திருந்திய மனிதர்களாக மாறி, முறையான வாழ்க்கை வாழத்துடிக்கிறார்கள். 

சீர்திருத்தும் இடம்தான் சிறைச்சாலை, தண்டிக்கும் இடம் அல்ல. ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப்பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி, விடுவிக்கப்படாமலேயே சிறைக்குள் வாடுகின்றனர். 

பலர் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் சிதறி சின்னா பின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத்துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். 

ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப்போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. சிறைவாசியைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ, பரோல் விடுப்பு தரப்படுகிறது. 

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்கு திரும்பி வர இயலாமல், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம், 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் கிடையாது. 

இந்த அணுகுமுறையை மாற்றி, மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொதுமன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும். வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். 

மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும். எனவே அவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்க வேண்டும். கடந்த ஆண்டும் இதே கோரிக்கைகளை முன் வைத்தோம். திருந்திய மனிதர்களாக, சிறைச்சாலைக்கு உள்ளே ஏராளமான மனிதர்கள் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். 

இந்த ஆண்டு திராவிட இயக்க நூற்றாண்டு, அண்ணாவின் 104-வது பிறந்த நாள் ஆகும். அதையொட்டி பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்போரை, விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு வைகோ அதில் கூறியுள்ளார்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

2-வது சுதந்திரப் போராட்டம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை


சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் கூறியதாவது:
 
நாட்டில் பசி, நோய் மற்றும் வறுமையை விரட்ட 2-வது சுதந்திரப் போராட்டத்தை  நடத்தவேண்டும். நவீன இந்தியாவின் அகராதியிலிருந்து வறுமையை விரட்டி, ஏழைகளை உயர்த்தவேண்டும்.  கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
 
இந்திய பொருளாதார வளர்ச்சியானது இளைஞர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமையவேண்டும். நாட்டின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலக அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தபோதிலும் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரம் முன் எப்போதையும்விட சிறப்பாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது.
 
நாடாளுமன்றம் நாட்டு மக்களின் ஆன்மாவாக திகழ்கிறது. அதன் மீது யாரும் தாக்குதல் தொடுக்கக்கூடாது. ஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஜனநாயகத்தின் மீது தாக்குவதை ஏற்க முடியாது.
 
அசாமில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. அமைதியே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
இவ்வாறு அவர் பேசினார்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆகஸ்டு 15 : தன் கல்லூரிப்படிப்பை தாய் நாட்டிற்காக துறந்த கண்ணியத்தலைவரை நினைவு கூறுவோம்

இந்திய இஸ்லாமியர்களின் உரிமையை பெற்றுத்தந்த தலைவராக  விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்(ரஹ்). நீண்ட காலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர். அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். 

தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். நேரு,இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார். 

இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் குர்ஆனும்,இஸ்லாமிய நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார். 1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 

1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58 ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராக பதவி வகித்தார். 

1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர். 

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி.இவர் 1962 ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

 "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31 ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏப்ரல் 4 ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. 

தொடர்ந்து மோசம் அடைந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். அன்றைய தினம் (4.4.1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. 

 முஸ்லிம் லீக் தொண்டர்களும் ,அரபிக் கல்லூரிகளின் மாணவர்களும்  அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள். நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76. 

மறுநாள் (5 ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள். 

முதல் அமைச்சர் கருணாநிதி, காலை 8.25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர். பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். 

 பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர். 

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள். இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. 

அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது: 

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல  இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. 

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்." 

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள். பாராளுமன்றம்  சட்டசபை அனுதாபம் இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். 

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் பிறந்த பச்சை தமிழனாக சுற்றி வந்த பெருமகனார் காயிதே மில்லத் ( ரஹ்) அவர்கள் ,கேரளா மண்ணிலிருந்துதான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்களே தவிரே ,தமிழ் நாட்டிலிருந்து ஒருமுறை கூட தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை,என்பது தமிழகத்திற்கு ,குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கரும் புள்ளி என்பதை யாராலும் மறுக்க முடியாது .

பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை


இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:
இளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு : முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பி.எச்டி., : முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். காலம்: ஒரு ஆண்டு
மதிப்பு:
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு இளநிலை பட்டம்: 2,400 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் இளநிலை பட்டம்: 3,600 ரூபாய்
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு முதுநிலை பட்டம்: 3,000 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் முதுநிலை பட்டம்: 4,800 ரூபாய்
பி.எச்டி.,:
வகுப்பு ஏ: ஆறாயிரம் ரூபாய்
வகுப்பு பி: எட்டாயிரம் ரூபாய்
வகுப்பு சி: பத்தாயிரம் ரூபாய்
வகுப்பு டி: 12 ஆயிரம் ரூபாய்
இதர தகுதிகள்:
இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்:  பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/- க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பி.எச்டி.,: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை விபரம்:உதவித் தொகை எண்ணிக்கை : தகுதி அளவைப் பொறுத்தது
கால அளவு: ஒரு ஆண்டு                                                                             
வழங்கப்படும் தொகை:                                                               பட்டப்படிப்பு படிப்போருக்கு : விவசாயம் மற்றும் பொதுப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2400/-
பட்டதாரிகளுக்கு: தொழில்நுட்பம் / மருத்துவம் ரூ.3600/-
முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு : விவசாயம் மற்றும் பொது பாடப்பிரிவு ரூ.3000/-
முதுகலை பட்டம்: தொழில் நுட்பம் / மருத்துவ படிப்புகளுக்கு ரூ.4800/-பி.எச்டி., படிப்போருக்கு: * பிரிவு ஏ ரூ.6000, * பிரிவு பி ரூ.8000 * பிரிவு சி ரூ.10,000/- * பிரிவு டி ரூ.12,000/-
விண்ணப்ப நடைமுறைகள்:
பிரிவு ஏ:
இந்தி, உருது, அரபி, பெர்சியன், வரலாறு,தத்துவம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், இசை, இதழியல், சமூக சேவை.

பிரிவு பி:
பொருளாதாரம், வர்த்தகம், மனித அறிவியல், கல்வி, ராணுவம், <உளவியல், மொழியியல், பழைமையான வரலாறு, தொல்பொருள் ஆய்வியல்

பிரிவு சி:
புவியியல், ரசாயனம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விவசாயம், மருத்துவம், பொறியியல், கணிதம், புள்ளியியல், டிராயிங், ஓவியம், வனம் சுற்றுச் சூழல்.

பிரிவு டி:
பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேசன், பயோ மெட்ரிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சுற்றுச் சூழல் மற்றும் எரிதி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.

Scholarship : பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை
Course : பி. இ., பி.டெக்.,பி.டிசைன். பி.பார்ம்.,
Provider Address : INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, ALLAHABAD, The Director, IIIT- Allahabad (IIIT-A), Deoghat Jhalwa, Allahabad 211 011 (UP), Tel:0532-2431684, 2552380, Fax: 0532-2430006, E-Mail: contact@iiita.ac.in, www.iiita.ac.in