Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 11 ஜூலை, 2013

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளருக்கு அமீரகத்தில் வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அமைப்பாளர் பேராசிரியர் .தஸ்ரிப் ஜஹான் அமீரகம் வந்துள்ளார் . அவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ,துபாய் முதீனா பார்க்கில் உள்ள கராச்சி தர்பார் கூட்ட அரங்கில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமையில் ,பொதுசெயலாளர் முஹம்மது தாஹா , பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

துபாய் மண்டல  செயலாளர் முதுவை ஹிதாயத் , கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா , விழாக்குழு செயலாளர் பரகத் அலி , மக்கள் தொடர்பு செயலாளர் ஹமீது யாசீன் ,தேரா பகுதி செயலாளர் சிந்தா , ஈமான் சங்க நிர்வாகி முகைதீன் அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

திங்கள், 8 ஜூலை, 2013

செயலற்ற நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம்; பரிதாப நிலையில் மாணவர்கள்


தகுதியான, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற குறைகளை மறைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை, ஆண்டுதோறும் கடல்சார் படிப்புகளில் சேர்த்து, கடல்சார் பல்கலை, மோசடி செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்கலையில் சேரும் மாணவர்களின் கடல்சார் பணி, கனவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், இந்திய கடல்சார் பல்கலை இயங்கி வருகிறது. கடந்த, 2008ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலை, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, திக்கு முக்காடி வருகிறது. இந்த பல்கலை சார்பில், நாட்டின், பல்வேறு பகுதிகளில், ஏழு கடல்சார் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், சென்னை, கொச்சின், கண்டலா துறைமுகம், கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இடங்களில், பல்கலை வளாகங்கள் இயங்கி வருகின்றன.

பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்துடன், 38 தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள், அதிக முதலீட்டில், நிறைவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளன.

ஆனால், கடல்சார் கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம் வழிகாட்ட வேண்டிய பல்கலையின் நிலைமை, மிக மோசமாக உள்ளது.பல்கலையிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும், தகுதியான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக உள்ளன. ஆனால், இதை அனைத்தையும் மறைத்து, மாணவர்களை தொடர்ந்து மோசடி செய்து வருவதாக, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில், நடப்பு கல்வி ஆண்டில், பி.டெக்., (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி., (நாட்டிகல் சயின்ஸ்) உள்ளிட்ட பல்வேறு இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வை, வரும் 8ம் தேதி முதல், 15ம் தேதி வரை, பல்கலை வளாகத்தில் நடத்துவதற்கு, பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்வு பெற்று, 7,800 பேர், கடல்சார் படிப்புகளில் சேர, முன் வந்துள்ளனர்.ஆனால், பல்கலை மற்றும் பல்கலை வளாகங்களில் உள்ள நிறுவனங்களில், 3,200 மாணவர்களைமட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, துறை வல்லுனர்கள் கூறியதாவது: கடல்சார் பல்கலையின், சென்னை மையத்தில், ஆசிரியர்களின் நிலை, படுமோசமாக உள்ளது. கடந்த ஆண்டுகளை விட, ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைந்துவிட்டது. பல்கலைக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, ஆசிரியர்கள், பணி பாதுகாப்பு கருதி, சென்னை ஐகோர்ட்டை அணுகினர்.

இதில், ஆசிரியர்களுக்கு சாதகமாக, ஐகோர்ட் உத்தரவு வந்ததால், எரிச்சல் அடைந்த பல்கலை, 20 ஆசிரியர்களை, சென்னை அல்லாத பிற இடங்களில் உள்ள பல்கலை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது. இதனால், ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் சரிந்துவிட்டது. இவ்வாறு, துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத, பல்கலையின், மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "நிரந்தர ஆசிரியர் நியமனம் தொடர்பாக, பல்கலை நிர்வாகத்திற்கும், கப்பல் துறை அமைச்சகத்திற்கும் இடையே, பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே, முந்தைய துணைவேந்தர் ரகுராம், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததற்குப் பிறகு, பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், சென்னையில் வேலை செய்ய, யாருக்குமே விருப்பம் இல்லை," என்றார்.

இதற்கு நடுவே, பல்கலையின், "கேம்பஸ்இன்டர்வியூ"வும், மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்கலையை விட, தரமான மாணவர்களை, தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. தனியார் கடல்சார் கல்வி நிறுவனங்களில், நிரந்தர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளும், முழுமையான அளவில் உள்ளன.இதனால், கடல்சார் துறை வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களின் பார்வை, தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கு மாறாக, பல்கலையில் சேரும் மாணவர்கள், படிப்பை முடிப்பதே, சிக்கலாக இருக்கும் நிலை எழுந்துள்ளது. இதனால், அவர்களின் கடல்சார் பணி கனவும், கனவாகவே மாறும் அபாயம் எழுந்துள்ளது.தவிரவும் ஏற்கனவே, டி.என்.எஸ்., கோர்சில் படித்த ஏறக்குறைய 2,000 மாணவர்கள், படிப்பின் ஒரு அங்கமாக, 18 மாத காலம் கப்பலில் வேலை செய்ய இயலாத பரிதாப நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார் ஜெயலலிதா : கருணாநிதி


 சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றினால் நமது எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் என்ற காரணத்தினால் இந்த திட்டம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., போராடி வருகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி நாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார்.

சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க.,தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாகப்பட்டினத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்; தமிழகத்தில் இந்த சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நன்மைகள் ஏராளம் கிடைக்கும். இதன் மூலம் வாணிகம் பெருகும். வெளிநாடுகளில் தமிழக வியாபாரமும், தமிழகத்தில் வெளிநாட்டு வியாபாரமும் நடக்கும்.

ஒரு சிறிய பஞ்சாயத்துக்கு ஒரு திட்டம் வந்தாலே கவுன்சிலர் முதல் தலைவர்கள் என அனைவரும் வரவேற்பர். மகிழ்ச்சி அடைவர். ஆனால் மாநிலத்திற்கு நன்மை தரும் திட்டத்தை வேண்டாம் என்று தமிழக அரசு சொல்வது வேடிக்கையாக உள்ளது. அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள அம்மையார், அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். இதைவிட இது போன்று துரோகத்தை யாராலும் அண்ணாவுக்கு செய்ய முடியாது. ஆனால் அண்ணாவின் பெயரில் கட்சி இருக்கிறது.

மீனவர்களுக்கு நன்மை தராது, மீன் வளம் பாதிக்கும் என தூண்டி விடப்படுகிறது. மீனவர்களுக்கு ஆபத்து இல்லை. செல்வம் கொழிக்கும், வளம் , வாய்ப்புகள் பெருகும். மீன் உற்பத்தி பெருகும். தமிழகம் வளர்ச்சி பெறும்.

சேது சமுத்திர திட்டம் கொண்ட வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல. இங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளின் விருப்பம் அல்ல. அண்ணா விரும்பிய திட்டம். எம்.ஜி.ஆர் விரும்பிய திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பலன் கிடைக்கப்போவது எனக்கல்ல. எனக்கு 90 வயதாகிறது. வருங்கால சமுதாயம் வாழ வேண்டும் என நான் கனவு காண வேண்டாமா? இது தவறா? ஒரு கிழவன் ஒரு மாங்கொட்டையை மண்ணில் புதைத்து கொண்டிருந்தான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவன் என்னய்யா இது , எப்போது மரமாகி, காயாகி , பலன் தரப்போகுது ? என்று ஏளனமாக கேட்டானாம். இதற்கு இந்த கிழவன் சொன்னான். “ இப்போது நீ உண்ணுகிறாயே இந்த மாம்பழம், உனது தாத்தனும், பூட்டனும் விதைத்தது. இது போல இது இந்த மாங்கொட்டை மரமாகி, பழமாகி எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் இதனால் தான் நான் விதைக்கிறேன் ”என்றார். இது போல நமது எதிர்கால சந்ததியினர் வாழத்தான் சேதுசமுத்திர திட்டம் கொண்டு வரவேண்டும் என்கிறேன்.

எனது வாழ்நாளில் எத்தனையோ சாதித்துள்ளேன். நான் சாதித்து காட்ட வேண்டிய திட்டங்களில் சேது சமுத்திர திட்டமும் ஒன்று . இதற்கு என்னோடு அனைவரும் பாடுபட வேண்டும். பாடுபட வாருங்கள் என அழைக்கின்றேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

கல்வி முறையில் மாற்றம் வேண்டும் : உச்ச நீதிமன்றம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பாளையில் கருத்தாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று ஆரம்பமானது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு பாட வாரியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது.


இந்த பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்தார்.

ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். முனைஞ்சிபட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் துவக்கி வைத்தார். ஆர்.எம்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகராஜன், செல்வராஜன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் தொகுத்து வழங்கினார். கருத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
இப்பயிற்சி இன்றும் (5ம் தேதி) தொடர்ந்து நடக்கிறது. இப்பயிற்சி பெறும் கருத்தாளர்கள் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

வியாழன், 4 ஜூலை, 2013

தமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் (DAIRY TECHNOLOGY ) பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

சி.எம்.சி., வேலூர்,

எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேசன், சென்னை,

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை,

என்.டி.டி.பி., ஈரோடு,

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,

விவசாய கல்லூரி மற்றும் ஆய்வு மையம், கோயம்புத்தூர்,

தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரி, சென்னை,

கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வு மையம், நாமக்கல்,

சென்னை கால்நடை கல்லூரி, சென்னை,

இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் நியூட்ரிசன், காட்டுப்பாக்கம்,

 பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், ஈரோடு,

விவசாயிகள் பயிற்சி மையம், காட்டாங்குளத்தூர்

ஆகியவற்றில் பால்வளம் தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன

24 அமைப்புகளின் கூட்டமைப்பு எனும் பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் --- எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! விரைந்து ஓடுகிற ஓட்டத்தில் சில பேர் சில துண்டுச் சீட்டுகளை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கும் போய்சேர்ந்துவிடுவார்கள். ஆனால், துண்டுச் சீட்டுகளின் சேட்டை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிவிடும். அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் புயலாய் உருவெடுத்து பூசல்களை உருவாக்கி சலனமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகத்தையே அலைக்கழித்துவிடுகிற நிகழ்வுகளும் நடந்துவிடும். யார் காரணம்? என்று அறிந்து அவர்களிடம் போய்க் கேட்டால் ‘‘நாங்கள் ஓடுகிற ஓட்டத்தில் எந்தச் சீட்டை எறிந்தோம் எனத் தெரியவில்லை; யார் அவைகளை எடுத்துப் படிக்கச் சொன்னது?’’ என்று கேட்பார்கள்.

பிறைநெஞ்சே! அதைப் போலத்தான் நம் சமுதாயத்தில் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைப்புச் செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு ‘இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு’’ என்ற பெயரில் இயங்குவதாகச் சொல்லி, ஓடுகிற ஓட்டத்தில் சம்பந்தமில்லாமல் நம் இயக்கப் பெயரை நமது தலைமையின் அனுமதியின்றியே பயன்படுத்தி துண்டுச் சீட்டுகளைப் பரப்பிவிட்டு அண்மையில் கோவை நகரில் ஒரு பூசலை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டமைப்பின் பொதுக் கூட்ட பிரசுரத்தில் ஒரு தனிநபரின் பெயரை ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என அடையாளப்படுத்தியுள்ளதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தலைமைக்குத் தகவல் தந்தார்கள்.

நானும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அப்போலோ ஏ.கே. முஹம்மது ஹனீபா அவர்களிடம் விளக்கமாய் பேசினோம்; தனக்கு தெரிவிக்காமலேயே நோட்டீஸ் போடப்பட்டதாகவும் உடனே தலையிட்டு நோட்டீஸ் விநியோகத்தைத் தடுத்து நிறுத்திவிடுவதாகவும், முடிந்தால் இப்போதே வேறு நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்வதாகவும் சொல்லி எங்களை அமைதிப்படுத்தினார். இது முதல் தடவையும் அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதுபோன்று வேண்டுமென்றே நமது இயக்கத்தின் பெயரை வம்புக்கு இழுத்து, பிறகு வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மீண்டும் அதே விளையாட்டை கோவை நிகழ்ச்சியிலும் ஏன் காட்டியிருக்கிறார்கள்? என்றுதான் புரியவில்லை. நாங்கள் இருவரும் விளக்கமாய் பேசிய பிறகும், அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு நிகழ்வுற்ற அந்த நிகழ்ச்சியில் இவரே தலைமை தாங்கி, அந்த தனிநபரின் பெயரைச் சொல்லி உரையாற்ற அழைக்கிறபோது ‘‘தேசிய பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என்றே அழைத்திருக்கிறார் என்றால் ‘ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் சமுதாயத்தில் குழப்பம் செய்யத் தொடங்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் எதிலும் தெளிவாக இருக்க விரும்புகிறோம். இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பில் நாம் இல்லை. அதனால் அதற்கு நாம் எதிர்ப்பும் இல்லை. இக்கூட்டமைப்பில் 22 அமைப்புகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் இத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால் அதனால் பெருமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் 60 அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றனவா? என்று இப்போது ஏளனம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டனர் இதுதான் நிதர்சனமான உண்மை.

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதில் யாரையும்விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறைந்ததல்ல. ஆனால், சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பில் நாம் இணைந்திருக்க முடியாததற்கு முக்கிய காரணங்கள் உண்டு. 1. முஸ்லிம் சமுதாயத்தில் மஹல்லா ஜமாஅத் எனும் பாரம்பரிய கட்டமைப்பு எல்லா ஊர்களிலும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதனைச் சிதைப்பதற்கோ, பிளவுபடுத்துவதற்கோ, தனி திருமண பதிவு (தப்தர்), தனி கப்ருஸ்தான் என தனித்தனியாக உருவாக்கிக்கொண்டு போட்டி ஜமாஅத் முறையை உண்டாக்குவதற்கோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு காலத்திலும் உடன்படாது. மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையைப் பேணி வாழ்கிற வாழ்க்கைதான் இஸ்லாம் காட்டுகிற வாழ்வுமுறை. இவ்வாழ்வு முறைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தச் செயலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஏற்காது. 2. மார்க்க விஷயங்களில் மார்க்க அறிஞர் பெருமக்களான சங்கைமிகு உலமாக்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதலை, மார்க்கச் சட்ட விளக்கங்களை ஏற்றுச் செயல்பட வேண்டும். அவரவர்களின் சிற்றறிவுக்கேற்ப புதுப்புது எதிர்ப்புகளையும், நவீன ஆய்வுகளையும் தெரிவித்துக் கொண்டு குழப்பங்கள் உருவாக்குவதை நாம் அனுமதிக்கவியலாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு நிலைபாடுகளிலும் நம்மைப் போன்று தெளிவாகவும், உறுதியாகவும் இருந்துவிட்டால் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கூட்டமைப்பில் அத்தகைய உறுதிப்பாடு ஒட்டுமொத்தமாக இல்லாததால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த கூட்டமைப்பில் இல்லை என்கிறோம். தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கும் எதிரியுமல்ல; பகையுமல்ல. நம்முடைய இந்த நிலைபாட்டை தெளிவாக்கிய பிறகும், சென்ற மாதம் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் பெயரை வேண்டுமென்றே பயன்படுத்தி, நம்முடைய அதிருப்தியைக் காட்டிய பின் ‘‘இனிமேல் அப்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லப்பட்டது. இப்போது கோவையிலும் அதே போன்று வேண்டுமென்றே பயன்படுத்தியது குழப்பம் செய்வதற்கான பிடிவாதத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் தொலைபேசி மூலம் மிகவும் கண்டிப்புடன் பேசிய பிறகும், அவரும் திருத்திக் கொள்வதாக உறுதியளித்த பிறகும் அவரே மேடையில் தலைமையேற்று நடத்திய நிகழ்ச்சியில் ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர்’’ என்று குறிப்பிட்டு ஒரு தனிநபரை பேசுவதற்கு அழைத்து அங்குள்ள நம்முடைய மாவட்ட நிர்வாகிகளை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார். இப்படி வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்குகிற இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்ட மேடையை முற்றுகையிடப் போவதாக நம்மிடம் அனுமதி கேட்ட மாவட்ட நிர்வாகிகளை நாம் அமைதிப்படுத்தியிருக்கிறோம். ‘‘முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு’’ என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஒரு அரசியல் இயக்கத்தை அனுமதித்து அங்கீகரிப்பதும், அதனை முறைப்படி அறிவிப்பதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உரித்தான உரிமை. அதன்படி ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இயக்கத்தைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஏற்று, கேரள மாநிலத்தில் 5 அமைச்சர்களையும், 2 எம்.பி.க்களையும், 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசின் அமைச்சரவையில் ஒருவர் இடம் பெற்றிருப்பதையும் கருத்தில் கொண்டு அரசியல் அங்கீகாரம் வழங்கி தனிச் சின்னமாக ‘‘ஏணி’’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் புறந்தள்ளி எந்த தனிநபரோ, எந்த அமைப்போ அத்துமீறுமானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்க விரும்புகிறோம். அரசியல் பணிகளில் தூய்மை, வாய்மை, நேர்மை எனும் நேர் கோட்டுப் பாதையினை வகுத்தளித்து, சமுதாயப் பணிகளில் உண்மை, பணிவு, துணிவு போன்ற அருங்குணங்களையே தனதாக்கிக்கொண்டு வாழ்ந்து மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள்தான் இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையிலும் மிளிர்கின்றன, இப்போதும் தொடர்கின்றன; இதனை எவரும் மறுத்திட முடியாது. அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அன்பு பாராட்டி, நேசக்கரம் நீட்டி, பாச உணர்வுகளைப் பகிர்ந்து வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக, அவனிடமே உதவி கோரியவர்களாக நாம் நமது பயணத்தைத் தொடர்கிறோம். இப்படித் தொடர்கிற நமது பயணத்தை எவரும் கோழைகளின் பயணம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பயணத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறதா? அவைகளை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதையும் அறிந்தே இருக்கிறோம். இருந்தபோதிலும், நிதானமும், நியாய உணர்வும், அடக்கமும், அமைதியும் நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன. அதனாலேயே சீண்டாதீர்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்பது நல்லது என எண்ணி நமது வழியில் பயணத்தைத் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்,பிறைமேடை