Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 மார்ச், 2013

சான்றிதழ்கள், ஓய்வூதியம் வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்


பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில் வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது. சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.

பாஸ்போர்ட் பெற வேண்டுமானால், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மாதக் கணக்கில் அலைய வேண்டும். தள்ளாத வயதில் ஓய்வூதியம் பெறச் செல்லும் பெரியவர்களுக்கு, குறித்த நேரத்தில், ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு, வருவாய் துறை அலுவலகத்துக்கு, நடையாய் நடந்தாலும், அதிகாரிகளின் மனக் கதவுகள், திறக்கவே திறக்காது. "இன்று போய் நாளை வா' என்ற, ரெடிமேட் பதிலை, உதட்டின் மீது தேக்கி வைத்தபடி, பொதுமக்களை விரக்தியின் உச்சத்துக்கு தள்ளுவது, அதிகாரிகளுக்கு கை வந்த கலை. பொதுமக்களால், காலம் காலமாக கூறப்பட்டு வந்த, இந்த குறைகளுக்கு, விரைவில் விடிவு பிறக்க உள்ளது. "பொதுமக்களுக்கான சேவையை குறித்த நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து, மக்களுக்கான சேவைகள் மற்றும் பொருட்களை, குறித்த காலத்தில் வழங்கும் மற்றும் குறை தீர்க்கும் மசோதாவுக்கான வரைவை, மத்திய அரசு தயாரித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: பாஸ்போர்ட், ஒய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை, பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். எந்தெந்த சேவைகளை, பொருட்களை, எவ்வளவு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், அவர்களின் குறைகளை கேட்பதற்கும், உதவி மையம், வாடிக்கையாளர் மையம், பொதுமக்கள் ஆதரவு மையம் போன்றவற்றை அமைக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கமிஷனை அமைக்க வேண்டும். இந்த கமிஷன்கள் மூலம், தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என, பொதுமக்கள் கருதினால், கமிஷன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்தியில் செயல்படும் லோக்பால் அமைப்பு அல்லது மாநிலங்களில் செயல்படும் லோக்ஆயுக்தா அமைப்பு ஆகியவற்றில் முறையீடு செய்யலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சேவைகளும், இந்த மசோதா வரம்பிற்குள் வரும். பொதுமக்களுக்கான சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காமல், தாமதிக்கும் அதிகாரிகளுக்கு, கடமையை செய்ய தவறியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது போன்ற முக்கிய அம்சங்கள், இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இந்த மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 7 மார்ச், 2013

மேன்மைப்படுத்த வேண்டிய மென்திறன்(SOFT SKILLS )


இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அடிக்கடி பேசப்படும் வார்த்தை "சாப்ட் ஸ்கில்ஸ்". மென்திறன்கள் எனப்படும் "சாப்ட் ஸ்கில்ஸ்" தான், நமது தகுதிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பிசினஸ் வெற்றிக்கு உதவும் திறன்கள் தான் "சாப்ட் ஸ்கில்ஸ்" என அழைக்கப்படுகின்றன. இவை எவை?

* குழுவாக பணியாற்றும் போது எளிதாக நட்பு கொள்ளும் திறன்.
* குழுவில் இணைந்து செயல்படும் குழு உணர்வு (டீம் ஸ்பிரிட்).
* பிறர் மனதை கவரும் முறையில் வெளிப்படுத்திக் கொள்ளும் திறன்.
* எளிமையான, தீர்க்கமான உடல் அசைவுகள்.
* அனைவரையும் கவரும் விதமான உரையாடல் திறன்.
* எதையும் உறுதியாகப் பார்க்கும் மனப்பாங்கு.
* பிறருக்கு ஊக்கமளித்து, தானும் ஊக்கத்துடன் இருத்தல்.
* எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் மேலாண்மைத் திறன்.

இப்பட்டியலில் அடங்காத சில அம்சங்களும் உள்ளன. ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்கும் அனைத்துமே மென்திறன்கள் தான். இந்த குணங்களும், திறன்களும் அனைவரிடமும் இருப்பது கடினம். இத்திறன்களை வளர்த்துக் கொள்ளத் துவங்கினாலே, வெற்றிப்பாதையில் பயணிக்கலாம்.

நேர்மை, நம்பகத்தன்மை, இலகுத்தன்மை, சிறப்பாக எழுதும் திறன், நிர்வாகத்திறன், கற்றுக் கொள்ளும் ஆர்வம், பொது அறிவு, சிறப்பான தோற்றம் ஆகியவற்றையும் "சாப்ட் ஸ்கில்ஸ்" என்றே அழைக்கிறார்கள். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு திறன்களையும், குணங்களையும் பெற்றிருந்தாலே நல்ல வேலை கிடைப்பது உறுதி.

எய்ம்ஸ்(AIIMS ) - எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டில்லியில் உள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ( ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.,) கல்வி நிறுவனம், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஐதரபாத், மும்பை போன்ற இடங்களில் ஜூன் 1 ல் நடைபெறும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கட்டணமாக எஸ்.சி/ எஸ்.டி., பிரிவினருக்கு 800 ரூபாயும், மற்றவர்களுக்கு 1000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மார்ச் 24.

விவரங்களுக்கு www.aiimsexams.org

டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக உள்ள நட்ராஜின் பதவி காலம் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் நவநீத கிருஷ்ணன், டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதிக்குப் பிறகு நவநீத கிருஷ்ணன் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதன், 6 மார்ச், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணியில்லாமல் தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.

தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல், டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதற்கட்டமாக ஜூலை 4ம், இரண்டாவது கட்டமாக அக்.,31ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து, தாவரவியல் பட்டதாரிகளை தவிர பிற பிரிவுகளை சேர்ந்த பட்டதாரிகளுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அப்போது விடுபட்ட பட்டதாரிகளுக்கு, நேற்று ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் ஒதுக்கி, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தாவரவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு இல்லை.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: தாவரவியலில் 500 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரியவில்லை, என்றனர்.

ஏகாதிபத்தியத்தின் சிம்மசொப்பனம் சாவேஸ் மறைவால் , வெனிசூலாவில் நுழைய துடிக்கும் ஒபாமா !


புற்று நோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபரான ஹியூகோ சாவேஸ் (வயது 58), நேற்று மாலை 4.25 மணிக்கு அதிபர் மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் மரணமடைந்த செய்தி வெளியான சிலமணி நேரத்திலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது:-

அதிபர் ஹுகோ சாவேஸின் மரணத்தினால் சவாலான நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் வெனிசுலா மக்களுக்கு அமெரிக்க முழு ஆதரவையும் கொடுக்கும். மேலும் அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான உறவை மேம்படுத்திக்கொள்ள  அமெரிக்கா விரும்புகிறது.

வெனிசுலா புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கும் இந்நிலையில், வெனிசுலாவில் ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிக்கும், சட்டத்தின் வரைமுறைகளை நிலை நிறுத்தும், மனித உரிமைகளை மதிக்கும் புதிய கொள்கைகளை  உருவாக்குவதில் அமெரிக்க உறுதி ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெனிசுலா அதிபர் புரட்சியாளர் சாவேஸ் காலமானார்


புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58).ஏகாதிபத்திய நாடுகளின் சிம்மசொப்பனமாகவும் , வளரும் நாடுகளின் நண்பனாகவும் விளங்கினார்.  புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பிய நிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை அதிபர் நிக்கோலஸ் மௌர்டோ, அந்நாட்டு டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார்.பின்னர் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை அதிபராகவே சவேஸ் காலமானது அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது.