Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 பிப்ரவரி, 2013

ஜவகர் சிறுவர் மன்றங்கள் விரைவில் அமையுமா?


ஒன்றியங்கள் தோறும், ஜவகர் சிறுவர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்த, அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில், 5 முதல், 16 வயதுக்கு உட்பட்ட, மாணவர்களிடையே, மறைந்திருக்க கூடிய, ஆக்கப்பூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, பயிற்சி அளித்து, அவற்றை வெளிப்படுத்துவதற்காக, 1979ல், "தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம்" துவங்கப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும், இம்மன்றத்தில், 24 மாவட்ட சிறுவர் மன்றங்கள், 10 விரிவாக்க மையங்கள், இரண்டு ஊரக மையங்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும், 36 சிறுவர் மன்றங்கள் தவிர்த்து, சென்னையில், தாம்பரம், சேலையூர், புழுதிவாக்கம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கைவினை, குரலிசை, நாடகம், உடல்திறன், மிருதங்கம், தபேலா போன்ற, 20க்கும் மேற்பட்ட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படும் பயிற்சி மையங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், கடந்த, கோடைகாலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி முகாம்களில், 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். கிராமப்புறங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாலை நேரத்தில், இங்கு, பொழுதை வீணாக கழித்து வருகின்றனர். இம்மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக, ஒன்றியங்களில் சிறுவர் மன்றங்கள் அமைத்து, பல்வேறு கலை பயிற்சி, கைவினை பயிற்சி அளித்தால், அவர்களின் வாழ்க்கை மேம்படும் என, பல ஆண்டாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதனால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்றியங்கள் தோறும், சிறுவர் மன்றங்களை அமைக்க, பொதுமக்கள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில், ஒன்றியங்களில், சிறுவர் மன்றங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தெரிகிறது. மேலும், இத்திட்டம் குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும், அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இது குறித்து, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

மாடுகளை சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை : திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;
நெல்லை மாநகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தொழுவத்தில் கட்டி வளர்க்க வேண்டும். மாறாக தெருக்கள் மற்றும் ரோடுகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலைகளைகளில் ஒப்படைக்கவுள்ளனர்.

கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் மாடுகளை உரிமையாளர்கள் மீட்க முடியாது. மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் தெரிவித்துள்ளார்.

கரன்சி நோட் பிரிண்டிங் ஆலை பணி வாய்ப்பு


கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் எனப்படும் பி.என்.பி.எம்.ஐ.எல்., இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் 2010ல் உருவாக்கப்பட்டது. செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களின் இணைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் உள்ள இள நிலைப் பிரிவைச் சார்ந்த 3 பிரிவுகளிலான 73 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
ஜூனியர் கிரேடு  புரொடக்சன்/மெயின்டனன்ஸ் பிரிவிலான இந்தக் காலி இடங்களில் மெக்கானிகலில் 25 காலி இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 காலி இடங்களும், கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவில் 22 காலி இடங்களும் பி.என்.பி.எம்.ஐ.எல்., நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
மெக்கானிக்கல் பிரிவிலான மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ ஆகிய ஏதாவது ஒன்றை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் தேவைப் படும். எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., படிப்போ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பையோ தொடர்புடைய பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுபணி அனுபவம் தேவைப் படும். கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களும் 10ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் பிளான்ட் பிரிவிலான படிப்பாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மற்ற விபரங்கள்
பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஜூனியர் கிரேடு புரொடக்சன்/மெயின்டனன்ஸ் காலியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர் காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவி களுக்கு விண்ணப்பிக்க எக்சிகியூடிவ் பிரிவுக்கு ரூ.500/ம், இதர பிரிவுகளுக்கு ரூ.350/ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாக BNPM Recruitment Account No: 32786458505 என்ற அக்கவுன்டில் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 28.02.2013
இணையதள முகவரி: www.bnpmindia.com/job/final%20advertisement.pdf

ஆயுத தொழிற்சாலையில் டெக்னிக்கல் பதவி


இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரிலுள்ள கமரியாவில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் டெக்னிக்கல் பிரிவில் உள்ள 676 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் டேஞ்சர் பில்டிங் ஒர்க்கர் பிரிவில் 250 காலி இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 100 காலி இடங்களும், ஜெனரல் பிட்டர் (எஸ்.எஸ்.,) பிரிவில் 72 காலி இடங்களும், பிட்டர் ஆட்டோ, பிட்டர் பாய்லர், பிட்டர் எலக்ட்ரிக், பிட்டர் பைப், பிட்டர் எலக்ட்ரானிக், பிட்டர் ரெப்ரிஜிரேஷன் மற்றும் பிட்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பிரிவுகளில் தலா 15 காலி இடங்களும், எக்ஸாமினர் பிரிவில் 50 காலி இடங்களும், கிரைண்டர் பிரிவில் 32 இடங்களும், மேசன் மற்றும் கார்பெண்டர் பிரிவுகளில் தலா 23 இடங்களும், டர்னர் பிரிவில் 20 காலி இடங்களும், எலக்ட்ரோபிளேட்டர் பிரிவில் 16 காலி இடங்களும் உள்ளன.

தேவைகள்
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரியின் மேற்கண்ட டெக்னிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் என்.சி.வி.டி., வழங்கும் நேஷனல் அப்ரென்டிஸ் சர்டிபிகேட் அல்லது நேஷனல் டிரேடு சர்டிபிகேட்டை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

இதர தகவல்கள்
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி கமரியாவின் மேற்கண்ட பதவி களுக்கு விண்ணப்பிக்க ரூ.50/க்கான டி.டி.,யை The Sr. General Manager, Ordnance Factory Khamaria, Jabalpur - 482 005 என்ற பெயரில் ஜபல்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.03.2013. முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.  இணையதள முகவரி - www.ordkham.gov.in/lb050213/Detail_advt_691.pdf

புதன், 20 பிப்ரவரி, 2013

பாராசிட்டாமல் (PARACETAMOL ) குறைப்பால் உயிரிழப்பு தவிர்ப்பு


பாராசிட்டாமல் மாத்திரை உட்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிநிவாரணியாக பயன்படும் பாராசிட்டாமல் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க, பிரிட்டனில் பாராசிட்டாமல் மாத்திரை விற்பனை குறைக்கப்பட்டது. மருந்தகங்கள் மூலம், 32 பாராசிட்டாமல் மாத்திரைகளும், மருந்தகம் அல்லாத இடங்களில், 16 மாத்திரைகளும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என, கடந்த, 1998ல் பிரிட்டன் அரசு, உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன் குறிப்பிடுகையில், "இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டாமல் உட்கொள்வது குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த மாத்திரைகளை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.

ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள்


இரத்தினக் கற்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்காக Institute of Diamond Trade(IDT) எனும் வைர வணிகம் பற்றிய கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இரத்தினங்கள் மற்றும் வைர வணிகத்துக்கான கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுக்கிறது. இந்த துறையில் ரத்தினங்கள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு உதவும் வகையில் 60 நாள் அறிமுகப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று வைர நகை விற்பனையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான 8 வார பயிற்சி வகுப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. வைரங்கள் தரம் பிரிப்பதற்காக நிறம், தூய்மை, வெட்டுதல் மற்றும் கேரட் அளவு பற்றிய சர்வதேச தர மதிப்பீட்டு விபரங்கள் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் வைர நகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும், ஆய்வுக்கூடங்களிலும் வேலை செய்யலாம்.

ஐடிடி நிறுவனம் இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. பயிற்சிக்கான கட்டணங்கள் முறையே, ரத்தினங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.9,950ம், வைரங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.5,515 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சான்றிதழ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. அவை பற்றிய தகவல் அறிய www.idt.edu.in என்ற இணையதளத்தை காணவும்.

சமுதாயத்தை மேம்படுத்தும் சமூகசேவை படிப்பு


தொடக்கத்தில் சமூகசேவையோடு தொடர்புடைய படிப்பாக மட்டுமே சமூகப்பணி கருதப்பட்டது. ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு, தொழிலாளர் நலன், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகப்பணி தான்.

சமூகசேவையில் ஈடுபடுபவருக்கு ஏற்படும் மனதிருப்தியை வார்த்தைகளால் கூற முடியாது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால், இப்படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும், என்ற நம்பிக்கை இத்துறைக்கு அவசியம் வேண்டும்.

சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணி. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி, உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

சமூகப் பணிகளின்கீழ் கிளினிகல் சமூகப்பணி, பள்ளி சமூகப்பணி, உளவியல் சமூகப்பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப்பணி, சமுதாயப்பணி என பல பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது.

அரசுத் துறைகளிலும், தன்னார்வ நிறுவனங்களிலும் சமூகப்பணி படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ. படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.