Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 10 ஜனவரி, 2013

இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை


ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 475 ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்திய முறை மருத்துவப் பிரிவு இயங்கி வருகிறது. இதில், 275 நிலையங்களில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயங்கும், இம்மருத்துவ பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வீதம், மாதத்திற்கு, 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

இதில் மருத்துவர்கள், பணிக்காக குறைந்தபட்சம், 200 கி.மீ., பயணம் செய்ய வேண்டி உள்ளதால், ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இப்பணியிடங்களை நிரப்பும்போது, பணிக்கு தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு, முக்கியத்துவம் தர வேண்டும் என, இந்திய முறை மருத்துவர்கள் கோரி உள்ளனர்.

இதுகுறித்து, நெல்லை மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பணிபுரியும் சித்த மருத்துவர் கூறியதாவது: எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், மாதத்திற்கு, 12 நாட்கள் பணிபுரிய, அங்கேயே தங்க முடியாது. எங்கள் ஊரில் தங்கியபடி, 200 கி.மீ.,க்கு மேல், பயணிப்பதால், சம்பளத்தில் பெரும் பங்கு, பயண செலவிற்கே போய்விடுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, இந்திய முறை மருத்துவ பணியிடங்களை நிரப்பும்போது, மருத்துவர்களின் வசிப்பிடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இந்திய மருத்துவ முறை பணியிடங்களை, அங்கு பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்டே, கவுன்சிலிங் மூலம் நிரப்பினால், மருத்துவர்கள் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். இதற்கான பரிந்துரை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என, இந்திய முறை மருத்துவ இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையை தூண்டும் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் ரத்து செய்யப்படுமா?


மாநில கல்லூரியில் சமீபத்தில் நடந்த அரிவாள் வெட்டு மோதலை அடுத்து, அதற்கு காரணமான, மாணவர் பேரவை தேர்தலை ரத்து செய்யும்படி, உயர் கல்வி துறைக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

மாநில கல்லூரியில், சமீபத்தில், மாணவர்கள் அரிவாளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், சமீபத்தில் நடந்த மாணவர் பேரவை தேர்தல், பெரும் பங்கு வகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் ரூட் அடிப்படையில் மாணவர்களிடையே ஏற்படும் பகையுணர்ச்சி, தேர்தலிலும் எதிரொலித்து, அரிவாள் வெட்டில் வந்து முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களை தடுப்பது குறித்து ஆலோசிக்க, பேராசிரியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையில், மாநில கல்லூரி முதல்வருடன் நேற்று அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து, அவர்களை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மோதல்கள் தேர்தலை மையப்படுத்தி நடப்பதால், மாணவர் பேரவை தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்.

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை ரத்து, பஸ் பாஸ் ரத்து, கல்லூரியிலிருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டன. இந்த பரிந்துரைகள், உயர்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உயர்கல்வி துறை அதன் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, தெரிகிறது.

மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில், போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என,  தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, "29 ஏ" பஸ் செல்லும் ஒவ்வொரு நிறுத்தத்திலும், போக்குவரத்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால், எப்போதும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, மேற்கூரையில் ஏறியபடி பயணிக்கும் மாணவர்கள், பஸ்சினுள் அமைதியாக சென்றனர். ஒவ்வொரு வழித்தடத்திலும், போக்குவரத்து போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்


உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகையில் விவசாயிகளின் சாலை மறியலால் பதட்டம் நிலவுகிறது. திருவாரூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்து விட்டது. இதனையடுத்து பயிர் கருகியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இதனால் மனமுடைந்த 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,682 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வறட்சி குறித்து ஆராய நிதியமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

திருவாரூர்: திருவாரூரில் கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. மதியம் 12.45 மணியளவில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டம் இரண்டு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு தே.மு.தி.க.,வினர் ஆதரவு கொடுத்துள்ளனர். போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு சால்வை அணிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மன்னார்குடி இடையே சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரிலும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. விவசாயிகள் போராட்ட இடத்தில் உணவு சமைத்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். அரசு உரிய முடிவு அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காவிரி இறுதித்தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும். காவிரி நீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:நாகையிலும் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம், இன்று மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும், பயிர் காப்பீடாக 8,682 என மொத்தம் 13, 682 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகை போதாது. நாங்கள் கூடுதலாக கேட்கிறோம். வறட்சி குறித்து ஆராய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்மட்டக்குழுவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. உயர்மட்டக்குழு தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்கிறோம். அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டால் தலைமைச்செயலகத்திற்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து தகவல் வந்த பிறகு தான் எதுவும் கூற முடியும். தலைமைச்செயலகம் சென்னையில் உள்ளதா அல்லது கொடநாட்டில் உள்ளதா என சந்தேகம் உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ளவில்லை. இதுவரை விவசாயிகள் அமைதியாக சட்டம் ஒழுங்கு கெடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மதியத்திற்குள் உரிய பதிலை அறிவிக்காவிட்டால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் இதற்கு தமிழக அரசே பொறுப்பு என கூறினார்.

சாலை மறியலால் பதட்டம்:நாகை மாவட்டத்தில், மாநில விவசாய சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நாகை வெளிப்பாளையம் அருகே பேருந்து நிலையத்திற்கு அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 புறங்களிலும் அவர்கள் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. என்ன செய்வது என தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

புதன், 9 ஜனவரி, 2013

மத்திய அரசுடன் பகைமை போக்கால் தமிழகம் தத்தளிக்கிறது, கடுமையான மின்வெட்டுக்கு அ.இ.அ.தி.மு.க அரசே காரணம் பேராசிரியர் கே.எம்,காதிர் மொஹிதீன் பேட்டி


திருச்சி புறநகர் மாவட்டத் தில் பிற முஸ்லிம் அமைப்புகளி லிருந்து விலகி. பிர்தௌஸ், சலீம், சித்தீக் ஆகியோர் தலைமையில் 25 இளைஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண் டனர்.

திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம். முஹம்மது ஃபாரூக் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் அனவைரையும் வர வேற்றுப் பேசினார்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது-

தமிழகத்தில் எந்த மாவட் டத்திற்கும் இல்லாத சிறப்பு திருச்சிக்கு இருக்கிறது. இந்த மாவட்டத்தை `நெஞ்சத் தாமரை’ என்று சொல்லப்படும். ஏனெனில் அனைத்து மாவட்ட மக்களையும் திருச்சியில் காண முடிகிறது. அதனால் தான் இந்த சிறப்புப் பெயர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு `ஏணி’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற - சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் நாடு முழுவதும் நாங்கள் `ஏணி’ சின்னத்தில் போட்டியிடுவோம்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்ட ணியிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி யிலும் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். இதில் எந்த மாற்றமுமில்லை. மற்ற மாநிலங் களைப் பொறுத்தவரையில் அதற்காகஅமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அந்தந்த மாநிலங் களில் சுற்றுப்பயணம் செய்து தரும் அறிக்கையின் அடிப்படை யில் அம் மாநில கூட்டணிகள் குறித்து முடிவு அறிவிக்கப் படும்.

பிற அமைப்புகளிலிருந்து விலகி இ.யூ. முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இணைந்தனர்

நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்கும் தேசிய பயிலரங்கம் வரும் மார்ச் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடை பெறுகிறது.

கட்சியின் வரலாறு, சட்டத் திட்டங்கள், எதிர்கால செயல் திட்டங்கள், சமயசார்பற்ற சமூக நீதியை நிலைநாட்டுவ தற்கான வழிமுறைகள் குறித்து இந்த பயிலரங்கில் பயிற்சியளிக்கப் படும்.

இதேபோன்று தமிழகத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் பிப்ரவரி 9, 10 தேதிகளில் சென்னையில் மாணவர்க ளுக்கான பயிலரங்கம் நடை பெறுகிறது.

இன்று திருச்சி புறநகர் மாவட்டத்தில் பிற அமைப்புகளி லிருந்து விலகி 25 இளைஞர் கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்துள்ளனர். பிர்தௌஸ், சலீம், சித்தீக் உள்ளிட்ட அந்த இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்கள். சேவை ஆர்வம் கொண்டவர்கள். அவர் களை வரவேற்கிறோம். இந்த இயக்கத்தின் கொள்கைகளை யும், லட்சியங்களையும் மாநிலம் முழுவதும் அவர்கள் பரப்ப வேண்டும். ஆட்சி நடக்கவில்லை - நாள் கடத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் ஆட்சி நடக்க வில்லை. ஆட்சியின் பெயரால் நாள்தான் கடத்தப்படுகிறது. மிகக் கடுமையான மின்வெட்டு இம் மாநிலத்தில்தான் அமலில் உள்ளது. தி.மு.க. ஆட்சியின் போது பிற மாநிலங்களிலிருந்து உபரியாக உள்ள மின்சாரத்தை கேட்டுப் பெற்று இங்கு மின்வெட்டு குறைக்கப்பட்டது. அதேவழியை பின்பற்றி உபரி மின்சாரத்தை பிற மாநிலங் களிலிருந்து பெறுமாறு தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். ஆனால், அ.இ. அ.தி.மு.க. அரசு அதை செவி மடுக்கவில்லை.

இப்போது தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்தெல்லாம் தொழில் நிறுவனங்கள் மூடி, தொழிலாளர்களெல்லாம் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து விட்டனர். சென்னை மாநகர் தத்தளிக்கிறது. வருங் காலத்தில் இது அரசியல் குழப்பத்தை கொண்டு வந்து விடும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் பொது மக்கள் போராடி இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின் இப்போது சத்தீஸ் கர் மாநிலத்திலிருந்து ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 2,500 மெகாவாட் மின்சாரம் பெற இருப்பதாகவும், இது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற் றப்படும் என்றும் அரசு அறி விக்கிறது. கடந்த தி.மு.க. அரசு மத்திய அரசோடு நட்பு பாராட்டி காரியங்களை சாதித்தது. ஆனால், அ.இ.அ.தி.மு.க. அரசு மத்திய அரசுடன் பகைமை உணர்வுடன் செயல்படுவதால் காரியங்களை சாதிக்க முடிய வில்லை. அதன் விளைவையே தமிழகம் அனுபவிக்கிறது. காவிரிப் பிரச்சினை

காவிரி நதி நீர் பிரச்சனை 
காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் பதிவு செய்யாததற்கு தி.மு.க. வின் முட்டுக்கட்டையே காரணம் என ஜெயலலிதா சொல்லி வருவது முற்றிலும் தவறானது.

ஏனெனில், காவிரி கண் காணிப்பு ஆணையம் அமைவ தற்கே தி.மு.க. தலைவர் கலைஞர்தான் காரணம். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மூலம் பெருமுயற்சி செய்தவர் கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உச்சநீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அரசிதழில் பதிவுசெய்வதை மத்திய அரசு தாமதப்படுத்து வதற்கு தி.மு.க. வை குறை கூறுவது சரியானது அல்ல.

 மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு 

தி.மு.க.வில் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என கலைஞர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. தி.மு.க.வினரின் ஒட்டு மொத்த கருத்தை அறிந்தே கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதை தி.மு.க.தொண்டர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார் கள். ஏனெனில் தி.மு.க. தொண்டர்களின் மன நிலையை தெளிவாக அறிந்தவர் கலைஞர்.

பேக்கேஜிங் துறையில் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பு


இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங், 1 வருட கிராஜுவேட் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

சேரும் தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனுமொரு பல்கலையில் பட்டப் படிப்பு முடித்து, 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள், இதில் சேர தகுதியானவர்கள்.

இந்தாண்டு ஜனவரி 1 முதல் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன.

கல்விக் கட்டணம் - ரூ.40,000 (சர்வீஸ் கட்டணமும் உண்டு).

சான்றிதழ் - ஆசியன் பேக்கேஜிங் பெடரேஷன் அங்கீகாரத்துடன், "Graduate Diploma in Packaging" என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு - பதிவுப் படிவம், விவரணம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை, ரூ.100ஐ பணமாகவோ அல்லது டிடி.,யாகவோ செலுத்தி (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங் என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்) பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர பிற விபரங்களை அறிய www.iip-in.com என்ற வலைத்தளம் செல்க.

விமானப்படைப் பணிப் பிரிவுகளும் அவற்றுக்கான கல்வித் தகுதிகளும்


பறக்கும் ஆசை பலருக்கும் இருக்கும். எனவே, விமானப் படையில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்தும், அதற்கு தயாராகும் முறைகள், தகுதிகள் குறித்தும் அறிய வேண்டும்.

பிரிவுகளும் அவற்றுக்கான கல்வித் தகுதிகளும்

பறத்தல் பிரிவு
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன், பட்டப் படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிப் படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து, குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.இ/பி.டெக் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பிரிவு
ஏரோநாடிகல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் அல்லது இந்திய பொறியாளர் கல்வி நிறுவனத்தின், அசோசியேட் மெம்பர்ஷிப்பின் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியவர்கள் அல்லது ஏரோநாடிகல் சொசைட்டி ஆப் இந்தியா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பொறியாளர் கல்வி நிறுவனத்தின் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வு ஆகியவற்றை எழுதியவர்கள்.

நிர்வாகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலைப் பட்டம் அல்லது சமமான டிப்ளமோ ஆகியவற்றைப் படித்து, குறைந்தபட்சம் 50% கூட்டு மதிப்பெண் பெற்றவர்கள்.

அக்கவுன்ட்ஸ்
குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.காம் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம்/சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ போன்றவற்றில், குறைந்தபட்சம் 50% கூட்டு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு
பறத்தல் பிரிவு - குறைந்தபட்சம் 19 வயதும், அதிகபட்சம் 23 வயதும் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப பிரிவு - குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 28 வயதும் இருக்க வேண்டும்.

Ground Duty பிரிவு - குறைந்தபட்சம் 20 வயது, பட்டதாரிகள் (அதிகபட்சம் 23 வயது), முதுநிலைப் பட்டதாரிகள்/எல்.எல்.பி(5 வருட இன்டக்ரேட்டட் படிப்பு) (அதிகபட்சம் 25 வயது), எல்.எல்.பி (பட்டப்படிப்பிற்கு பிறகான 3 வருட படிப்பு) (அதிகபட்சம் 26 வயது), எம்.எட். பிஎச்.டி, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ (அதிகபட்சம் 27 வயது).

கமிஷன் வகைகள்
நிரந்தர கமிஷன் - Superannuation வயது வரை, candidates பணிபுரிவார்கள்.

குறுகிய சேவை கமிஷன் - SSC Flying பிரிவுக்கான கமிஷனிங் தேதியிலிருந்து 14 வருடங்கள் மற்றும் டெக்னிக்கல் மற்றும் Ground duty பிரிவுகளுக்கு 10 வருடங்கள்(பணியிடங்கள் கிடைப்பதை பொறுத்து, 4 வருடங்கள் நீட்டிப்பு உண்டு)

AFCAT Men தேர்வுக்கான தேர்ந்தெடுப்பு முறை
குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 2 மணிநேரங்கள் நடக்கும் இத்தேர்வில், Verbal ability, Numerical ability, Reasoning, General awareness and Aptitude போன்ற பிரிவுகளில், ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சிபெறும் நபர்கள், டெஹ்ராடூன், மைசூர், காந்திநகர்(குஜராத்) அல்லது வாரணாசி போன்ற இடங்களிலுள்ள ஏர்போர்ஸ் தேர்வு வாரியங்களில், அடுத்தகட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இரண்டாம் நிலை தேர்வானது, கீழ்கண்ட தேர்வு முறைகளைக் கொண்டிருக்கும்,

நிலை I - இன்டலிஜென்ஸ் தேர்வு
நிலை II - சைகலாஜிகல் டெஸ்ட், குரூப் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு

இரண்டாம் நிலைக்குப் பிறகு தேர்ச்சிபெறும் நபர்கள், அவர்களின் தகுதி மற்றும் தேர்ந்தெடுத்த பிரிவுகளின் அடிப்படையில், Branch specific test -ஐ எழுத வேண்டும்.

Pilot Aptitude Battery Test(PABT) for flying branch

Engineering knowledge Test(EKT) for technical branch

மருத்துவ சோதனை
தங்களின் முதல் முயற்சியில் Pilot Aptitude Battery Test -ல் தோல்வியடைவோர் அல்லது ஏர்போர்ஸ் அகடமியில் பறத்தல் பயிற்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர், இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

AFCAT Men தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
http://careerairforce.nic.in/auth/candidate/default.asp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது AFCAT cell -க்கு, Post bag no-5, RK Puram (main) P.O., New Delhi - 110066 என்ற முகவரியில் உங்களின் விண்ணப்பங்களை அனுப்பலாம். சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

Reference புத்தகங்கள்
பொது ஆங்கிலம் - ஹரி பிரசாத்
பொது அறிவு - லட்சுமி காந்த்
ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.எஸ்.அகர்வால்
ஆரம்பநிலை கணிதம் - ஆர்.எஸ்.அகர்வால்

மேற்கூறிய எழுத்தாளர்களைத் தவிர, வேறுசில சிறந்த புத்தகங்களும் உள்ளன.

தேர்வுக்கான பாடத்திட்டம்
பொது விழிப்புணர்வு - 25 மதிப்பெண்
பொது ஆங்கிலம் - 25 மதிப்பெண்
எண்கணித திறன் - 25 மதிப்பெண்
ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - 25 மதிப்பெண்

வங்கித் துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு


நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக 22 ஆயிரம் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன.

எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.