Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ரோபோடிக்ஸ் துறை படிப்புகள்


பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, வீடு அல்லது காரை, ரோபோட்டுகளை வைத்து சுத்தம் செய்யலாம் என்ற சிந்தனையானது, வெறும் பகட்டும், ஆடம்பரமும் நிறைந்தது என்று சொல்லி ஒதுக்கப்பட்டது. இன்றைய நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ரோபோடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மனித வளத்திற்கு பஞ்சம் நிலவும் இன்றைய காலகட்டத்தில், பலவிதமான வேலைகளை செய்வதற்கு, ரோபோட்டுகளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக உள்ளது. மேற்கூறிய நாடுகளில், எதிர்வரும் குறுகிய காலத்தில், பலவிதமான வேலைகளுக்கு, மக்கள், ரோபோட்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு, விலை மலிவான மற்றும் பலவிதமான வேலைகளை செய்யும் ரோபோட்டுகளை அதிகளவில் தயாரிப்பதற்கான சூழல் உருவாகும் என்றால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ரோபோட்களின் பயன்பாடு

இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோட்களின் பயன்பாடு என்பது விரிவடைந்த ஒன்றாக விளங்குகிறது. வீட்டுப் பயன்பாடுகள் முதற்கொண்டு, பலவிதமான தொழிற்சாலை பயன்பாடுகள் வரை, ரோபோட்கள் தேவை இருக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள், பளுவான பொருட்களை கையாளுதல், வீட்டு வேலைகள், மனிதன் செய்ய வேண்டிய சில கடினமாக வேலைகள் போன்ற பல பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.

பரந்துவிரிந்த துறை

ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.

ரோபோடிக்ஸ் தொழில்துறையில், பொறியியல் செயல்பாட்டின் பல கட்டங்களில் பல நிலைகள் உள்ளன. சில பொறியாளர்கள், சிக்கல்களை, ரோபோடிக்ஸ் எவ்வாறு தீர்க்கிறது மற்றும் செயல்பாட்டை இன்னும் சிறப்புள்ளதாக மாற்றும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். வேறு சிலர், தற்போது இருக்கும் பொறியியல் கோட்பாடுகளை, ரோபோட்களை மேம்படுத்துவதில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் இதன் மேம்பாடுகள்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில்(SERC) கட்டுப்பாட்டின் கீழ், ரோபோடிக்ஸ் துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது.

பல பல்கலைகள், தேசிய ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல நிபுணர்களின் உதவியோடு மட்டும் அல்லாமல், பலவிதமான பிரிவுகளில், Programme advisory committee ன் உதவியையும் SERC பெறுகிறது.

இந்தியாவில் பின்பற்றப்படும் தராளமய பொருளாதார கொள்கைகளால், நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் பலவிதமான ஆட்டோமொபைல் கம்பெனிகளில், ரோபோடிக்ஸ் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது.


இந்தியாவில் பயிற்சி வாய்ப்புகள்

ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், சில பல்கலைகள், பட்டப் படிப்பை வழங்குகின்றன. இது highly interdisciplinary படிப்பாகும். அதேசமயம், இத்துறையில் நுழைய வேறு பல வாய்ப்புகளும் உள்ளன. இப்போதுவரை, இளநிலை பட்டப்படிப்பு அளவில், ரோபோடிக்ஸ் படிப்பிற்கு, இந்தியாவில் மிகவும் குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

அதேசமயம், ஒரு சில கல்வி நிறுவனங்கள், M.Tech மற்றும் MS நிலையில் இத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. Artificial Intelligence என்பது ரோபோடிக்ஸ் துறையுடன் மிகவும் நெருங்கியவை. பல கல்வி நிறுவனங்கள், Artificial Intelligence மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.

நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய படிப்புகளில் ஒன்றான, Theory of machines & control போன்ற படிப்பைக்கூட சிறப்பாக கற்றுத்தரும் அளவிற்கு தகுந்த ஆசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் இல்லை. இந்த நிலையில், ரோபோடிக்ஸ் துறையில், சிறப்பு பி.டெக் படிப்பை வழங்குவதென்பது இப்போதைக்கு பயன்தராத ஒரு விஷயம் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இளநிலைப் படிப்பு

இளநிலை அளவில் ஒருவரின் படிப்புத் தேர்வு என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் பி.டெக் படிப்பதானது, ஒருவரின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். முடிவாக, சிறப்பு படிப்பும் தேவை.

தற்போதைய நிலையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொணர்வது அவசியம். இதன்மூலம், மெக்கானிக்கல் பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் திணற அவசியமில்லை. அதேசமயம், மெக்கட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் பி.டெக் படிப்பானது, ரோபோடிக்ஸ் துறையுடன் ஓரளவு நெருங்கி வரும் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவிலுள்ள வேலை வாய்ப்புகள்

ரோபோடிக் தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் ஓரளவுக்கு விரிவடைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சிறப்பு(specialisation) படிப்பை முடித்தவர்கள், மெக்கானிக்கல் தொடர்புகள், சென்சார் - ஆக்சுவேடர் இன்டக்ரேஷன்ஸ், மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றின் அடிப்படையில், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமாக, ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படும் இடங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

இந்தியாவிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள்

Precision automation robotics India limited(PARI)
ABB
Kuka robotics and DiFACTO Robotics and Automation

போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), பலவிதமான சூழல்களையும், சிக்கல்களையும் கையாள, பல்வேறு விதமான ரோபோட்களை வைத்துள்ளது. DRDO, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் ரோபோட்களை கட்டமைக்க, Centre for artificial intelligence and robotics போன்ற நிறுவனங்களை அமைத்துள்ளது.

வரும் காலங்களில், வர்த்தகம், வீட்டு உபயோகம், பாதுகாப்பு, போக்குவரத்து, விநியோகம், மெக்கானிக்கல் உள்ளிட்ட மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில், ரோபோட்களின் பங்களிப்பு அதிகரித்துவிடும்.

இத்துறையில், அதிகளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், பயிற்சிகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது தொடர்பான படிப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பல்துறை அம்சமாக இருக்கும் ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் அல்லது கணிப்பொறி அறிவியல் துறைகளைப்போல், முதுநிலைப் பட்ட அளவில் ஒரு சிறப்பு படிப்பாக உள்ளது.

இந்தப் படிப்பில் ஆர்வமுள்ள ஒருவர், இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப்படிப்பை வழங்கும் வரை காத்திருக்கலாம். மற்றபடி, இதுதொடர்பான சிறப்பு படிப்புகளுக்கு தற்போதைக்கு, வெளிநாடுகளுக்கு செல்லலாம்.


ரோபோடிக்ஸ் பொறியாளரின் பணிகள்

* ரோபோட் வடிவமைப்பு.

* பல்துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்தல்.

* ரோபோட் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.

* ரோபோட் தயாரிப்பில் பயன்படக்கூடிய எலக்ட்ரானிக் உட்கூறுகளை ஆராய்தல்.

* ரோபோட்களை உருவாக்கிய பின்னர், குறைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சோதித்தல்.

* தேவைப்படும் இடங்களில், ரோபோட்களை அல்லது ரோபோட் அமைப்புகளை நிறுவுதல்.

* ரோபோட் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல்.

* பயனாளிகளுக்கு உதவுதல்

உள்ளிட்ட பலவிதமான பணிகள் உள்ளன.

ரோபோடிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

* IITs - Chennai, Delhi, Kanpur, Guwahathi, Powai, Roorki and Kharagpur.

* PSG College of Technology - Coimbatore.

* SRM institute of science and technology - Kanchipuram.

* International Institute of information technology - Hyderabad.

* The university of Hyderabad.

* University college of engineering under Osmania university - Hyderabad

* M.S. University - Baroda

* The institute of technology under the Banaras Hindu university - Varanasi

* The Birla institute of technology and Science - Pilani

* Sri sathya sai institute of higher learning - Prasanthi nilayam.


சனி, 13 அக்டோபர், 2012

முஸ்லிம் லீக் முகநூல் (Facebook ) சந்திப்பு


வேகமாக ஊடகத்துறை வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,உலகம் உள்ளங்கையில் என்பது போல் ஊடகத்துறை வளர்ச்சி கண்டுள்ளது .அதன் முக்கிய அங்கமாக முகநூல் (Facebook ) உள்ளது . 
கடந்த 12 /10 /2012 வெள்ளி அன்று துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் (Facebook ) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

     துபாய் முதீனா தெருவில் உள்ள கேரளபவன் ஆடிட்டோரியத்தில் ஜும்மா தொழுகை முடிந்த பின்பு துஆஉடன்  நிகழ்ச்சி துவங்கியது . நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் TKN .காதர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கேஎம்சிசி யின் அகில இந்திய செயலாளர் அப்துல்கரீம் சாஹிபு ,துபாய் கேஎம்சிசி யின் தலைவர் அன்வர் நாஹா , அமீரக காயிதே மில்லத் பேரவை கொள்பரப்புச் செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர் .
    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகநூல் மூலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்ந்த அனைத்து மாநில உறுப்பினர்களோடும் ஏற்பட்டுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் . அரபு அமீரகம் முழுவதுமிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கலந்து கொண்டனர் .குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் , யாரையும் நேரடியாகவோ ,அலைபேசி மற்றும் தொலைபேசி மூலம் அழைக்காமல் ,முகநூல் (facebook ) மூலம் விளம்பரம் செய்யப்பட்டதை மட்டுமே அழைப்பாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம் லீக்கை வலுப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இளைய சமுதாயம் திரண்டது .

   அல்லாஹ் நமக்களித்த இந்த முகநூல் ஊடகத்தை நன்மையான விஷயங்களுக்காகவும் , முஸ்லிம்சமுதாயத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கையும் பலப்படுத்த பயன்படுத்துவோம் என்று அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர் .

   முகநூல் மூலம் ஏற்பட்ட தொடர்பால் ,கோரப்பட்ட உதவிகளான, கேரளத்தை சார்ந்த ஒரு கேன்சர் நோயாளியின் மருத்துவச்செலவையும் ,தமிழ்நாடு திருநெல்வேலியை சார்ந்த ஒரு மாணவனின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டது .

  இறுதியாக முஸ்லிம் லீக் முகநூல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஹஷீத் நன்றி கூற துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .

புதன், 10 அக்டோபர், 2012

தொலைநிலைக் கல்வியா? கவனம் தேவை


தொலைநிலையில் உயர்கல்வி மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் தொலைநிலையில் வழங்கும் பாடத்திற்கு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை, தெலைநிலைக் கல்வி கவுன்சிலின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவேளை, நீங்கள் தொலைநிலைக் கல்வி மூலமாக மேற்கொள்ளும் பாடம், தொலைநிலைக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் இருந்தால், அதன்மூலம் நீங்கள் பெறும் பட்டமானது, மத்திய அரசின் பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பல கல்வி நிறுவனங்கள் சார்பாக, தொலைநிலைக் கல்விக்கான பாடங்கள் குறித்து பல போலியான விளம்பரங்கள் வருகின்றன. எனவே மாவர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், தொலைநிலைக் கல்வியில் சேரும்போது, Franchised study centre மற்றும் Contact point -ல் சேர்க்கை பெற வேண்டாம் என்றும், தொலைநிலைக் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி, பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தால், அதன் நிர்வாக எல்லைக்குள் நடத்தப்படும் Study centre -களில் மட்டுமே சேர்க்கை பெறுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்


தொழில் முறை கல்விக்கு ‌ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 52 பொறியல் கல்லூரிகளும் மூ‌டிவிட்டன என தெரியவந்துள்ளது.

பல கல்லூரிகளில் பொறியியல் மற்றும் மேலாண்மைப் பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, அதிக மாணவர்களை ஈர்த்த எம்.பி.ஏ. படிப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மவுசு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2011-12ல் மட்டும் நாடு முழுவதும் 146 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (பி-ஸ்கூல்) தொடங்கப்பட்டன. எனினும், அதே கால கட்டத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த 124 பி-ஸ்கூல் மூடப்பட்டன. அதேபோல் 84 கல்லூரிகளில் எம்.சி.ஏ. படிப்பு நிறுத்தப்பட்டு விட்டன.

இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமடைந்து விட்டதாக ஏ.ஐ.சி.டி.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் 101 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், புதிதாக 82 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன.

சனி, 6 அக்டோபர், 2012

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : ஓட்டல்கள் மூடல்


கடையநல்லூர், பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் தொழில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடந்த நாட்களில் கடுமையாக காணப்பட்டு வரும் மின்தடையினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்சப்ளை பெருமளவில் தடைபட்டு வருவதால் மின்சாரம் தொடர்பான அனைத்து பணிகளும் பெருமளவில் முடங்கி வருகின்றன.

ஏற்கனவே கடையநல்லூரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மின்தடையும் தொடர்வதால் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
சிறு தொழில் நிறுவனங்களும் முறையாக தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. கடந்த கடந்த நாட்களில்  இப்பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக  தொழில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

 மற்ற பகுதிகளை விட காற்றாலை மின்உற்பத்தியை வைத்து கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் போதுமான அளவில் மின்சப்ளை பாதிப்பின்றி ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலைகளும் சீராக இயங்காததால் அதன் மூலமான மின் உற்பத்தி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளில் நிலவி வருகின்ற மின்தடை போன்று கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் சுமார் 10 மணி நேரமும், இரவில் சுமார் 6 மணிநேரம் வரையிலும் மின்தடை தொடர்வதால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான மின்தடை குறித்து இப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுரையிலிருந்து உபமின் நிலையங்களுக்கு வரும் தகவல்களை பொறுத்தவரை சப்-ஸ்டேஷன்களில் இருந்து செல்லக்கூடிய மின் வினியோகத்தை நிறுத்தம் செய்திடவும், மீண்டும் தகவல் வரும்போது ஜார்ஜ் செய்தால் போதும் என்று கூறிவிடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஸ்காட்லாந்து - அருமையான சூழலில் வெளிநாட்டு படிப்பு


கடந்த பல ஆண்டுகளாகவே, உயர்கல்விக்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், ஸ்காட்லாந்து புகழ்பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்தின் எந்த பல்கலையில் படித்தாலும், சிறந்த அனுபவத்தை ஒரு மாணவரால் பெற முடியும்.
தனித்துவமான கலாச்சாரம், நல்ல இயற்கையமைப்பு மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஸ்காட்லாந்தை நோக்கி வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன.
ஸ்காட்லாந்து சரியான இடமா?
உங்களின் வெளிநாட்டு கல்விக்கு ஸ்காட்லாந்து சரியான இடமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் ஆம் என்பதுதான். ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கும் கல்வியால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமிருக்க, அந்நாட்டின் வலுவான பொருளாதாரமானது, உங்களுக்கு சிறந்த தொழில்துறை அறிவைக் கொடுக்கிறது.
நிதி, பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், லைப் சயின்சஸ், மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுலா, படைப்பாக்க தொழில்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை அந்நாட்டிலுள்ள முக்கியமான தொழில்துறைகள். ஸ்காட்லாந்தில், மாணவர்கள், cross - faculty படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஸ்காட்லாந்திலுள்ள ஒவ்வொரு பல்கலையும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இங்கே படிப்பவர்கள் பெறும் அனுபவம், அவர்களின் நீண்ட நல்வாழ்விற்கு துணைபுரிகிறது.
உயர்கல்வி அமைப்பு
ஸ்காட்லாந்தின் உயர்கல்வி அமைப்பானது, பிற ஐரோப்பிய நாடுகளின் நடைமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்நாட்டிலிருக்கும் மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள், சுய நிர்வாக உரிமையும், சுதந்திரமும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபடும் தன்மையும் கொண்டவை. டிகிரி மற்றும் இதர பட்டப்படிப்புகள், முற்றிலும் கல்வி நிறுவனம் சம்பந்தப்பட்டதே தவிர, ஸ்காட்லாந்து அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல.
பட்டம் வழங்குவதற்கு, ஸ்காட்லாந்து அதிகார அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட பல்கலைகளின் விபரங்கள் www.dius.gov.uk என்ற இணையதளத்தில் கிடைக்கும். இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் அனைத்தும் போலோக்னோ அமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்நாட்டில், இளநிலை மற்றும் முதுநிலை அளவில் வழங்கப்படும் தகுதி நிலைகள், அந்நாட்டு உயர்கல்வி தகுதிகளுக்கான விதிமுறைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விதிகள்
பொதுவாக, மாணவர் சேர்க்கை விதிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு மாணவர், தான் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்க பொருத்தமானவர்தானா? என்பதை தெரிந்துகொள்ள, பாட உள்ளடக்கத்தை கவனமாக படிக்க வேண்டும்.
சேர்க்கை நடைமுறைகளின்போது பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
www.ucas.com என்ற இணையதளமானது, பலவிதமான பாடங்களைப் பற்றியும், அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விபரங்களை வழங்குகிறது.
www.ucas.com இணையதளத்தில், ஆன்லைன் அப்ளிகேஷன் அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
www.ucas.com மூலம் அப்ளிகேஷன் செயல்பாட்டை தெரிந்துகொள்ளலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரங்களையும் இத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலை, உங்களுக்கான முறையான வழங்கல் கடிதத்தை அனுப்பும்.
கல்வி செலவினம்
பட்டப்படிப்பு அளவில், ஒரு வெளிநாட்டு மாணவருக்கான கல்விச் செலவு, வருடத்திற்கு 9000 பவுண்டுகள் முதல் 20000 ஆகிறது.
அதேசமயம், கல்விக் கட்டணமானது, படிப்புக்கு படிப்பு, பல்கலைக்கு பல்கலை வேறுபடும். மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு, பிற படிப்புகளை விட அதிக செலவாகும். மாணவர் விசா பெர்மிட் பெறுவதற்கு முன்பாக, உங்களின் நிதி ஆதார நிலையை நிரூபிக்க வேண்டும்.
உதவித்தொகை
Saltire என்பது, மாணவர்களுக்கான மிக முக்கியமான உதவித்தொகையாகும். முதுநிலைப் படிப்பில் 1 வருட கல்விக் கட்டணத்தை சமாளிப்பதற்கான 2000 பவுண்டுகள் உதவித்தொகை இதன்மூலம் கிடைக்கிறது. இந்தவகை உதவித்தொகைகளைப் பெறுவதற்கு, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த உதவித்தொகை, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Commonwealth scholarship, Fellowship plan and British Chevening scholarships(available only at post-graduate level) போன்றவை இதர சில முக்கிய உதவித்தொகைகளாகும். மேலும், ஒவ்வொரு பல்கலையும், தங்களிடம் சில குறிப்பிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன. இவைப் பற்றிய விபரம் அந்தந்த பல்கலை இணையதளங்களில் உள்ளது.
படிப்பின்போதான பணி
டிகிரி நிலையிலான படிப்பை(பவுண்டேஷன் அல்லது ஹையர்) மேற்கொள்கையில், வாரம் 20 மணிநேரங்கள் வரை பணிசெய்து, உங்களின் சில பொருளாதார தேவைகளை நிறைவுசெய்து கொள்ளலாம். அதேசமயம், படிப்பை முடித்தப்பிறகு, அந்நாட்டில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால், ஸ்காட்லாந்து பல்கலையிலிருந்து பெற்ற பட்டமானது, உலகளவில் நல்ல மதிப்பை கொண்டிருப்பதால், உங்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி கவலை வேண்டியதில்லை.

புதன், 3 அக்டோபர், 2012

மணிச்சுடர் தந்த மாமனிதர்


அக்டோபர் 4 !
ஆம், சமுதாய சங்கநாதமாம் "மணிச்சுடர் " வெள்ளி விழா !
ஆம், அன்று தான் ,மணிச்சுடர் தந்த மாமனிதர்  சிராஜுல் மில்லத் பிறந்த நாள் !
1926 அக்டோபர் 4ல் காரைக்காலில பிறந்தார்  சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் சாஹிபு .
அவர் வாழ்க்கையை பிற மக்களுக்கு பாடமாக வல்ல அல்லா ஆக்கினான் ,ஆம் அவரை ,தன சமுதாயப் பணிக்கு அல்லா தேர்ந்தெடுத்தான் என்றே சொல்லவேண்டும் . அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் கல்விப்பணிக்கு ஆற்றியே தொண்டு மகத்தானது . சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரை மட்டுமல்ல ,தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் தோன்றுவதற்கும் அவர்பணி காரணமாயிற்று என்று சொன்னால் மிகையாகாது .
    எல்லா மக்களும் எல்லா வளமும் பெற வேண்டுமானால் ,கல்வி முக்கியம் என்பதை தன் குறிக்கோளாக வைத்து தன் சமுதாயப் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார் என்பதை அவர் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் காணலாம் .
    அந்த காலக் கட்டத்தில் ,இன்று அப்போலா மருத்துவ மனை இருக்கும் இடத்திற்கு அருகில் , வாலஸ் கார்டனில் 'மணிச்சுடர் ' அலுவலகம் செயல் பட்டு வந்தது . அப்துஸ் சலாம் காகா என்பவர் வரவேற்பு அலுவலராக செயல் பட்டு வந்தார் . அந்த கால கட்டத்தில் ,ஒரு நாள் ஒரு சகோதர சமுதாயத்தை சார்ந்த ஒருவர் ,தன் மகளுடன் மணிச்சுடர் அலுவலகம் வந்தார் .சலாம் காகா என்ன வேண்டும் என்று கேட்டார் ,."பெரியவரை" பார்க்க வேண்டும் என்று பதில் சொன்னார் . சலாம் காகா ,உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? என்று கேட்டார் ,அதற்க்கு அந்த மனிதர் ,இதுவரைக்கும் நேரில் பார்த்து பேசியது இல்லை ,துதான் முதல் முறை என்று பதில் கூறினார் .உடனே , முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு , தலைவர் சிராஜுல் மில்லத்திடம் சென்று விபரம் கூற , தலைவர் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள் . வந்த விபரம் என்ன ? என்று தலைவர் கேட்டார்கள் ; அதற்க்கு வந்த மனிதர் அளித்த பதில் தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . 
அப்படி என்ன அந்த மனிதர் கூறியிருப்பார் , வேறொன்றும் இல்லை , அவர் கூட அழைத்து வந்திருக்கும் அவர் மகள் அரசு கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிக்க இடம் கிடைத்து முதல் வருடம் முடித்துவிட்டு , இரண்டாம் வருடம் ஆரம்பித்துவிட்டது ; ஆனால் , கல்விக் கட்டணம் கட்டுவதற்கும் , மற்றைய செலவிற்கும் எங்களிடம் பணம் இல்லை ,அவள் படிப்பு நின்று விடும் என்று பயப்படுகிறோம் ,எப்படியாவது என்மகள் டாக்டர் படித்து முடிக்க வேண்டும் என்று அந்த மனிதர் தலைவர் சிராஜுல் மில்லத்திடம் அழுத வண்ணம் வேண்டுகோள் வைத்தார் .
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் ,வந்தவர் எந்த மதம் ,எந்த சாதி என்று பார்க்கவில்லை .அந்த ,மனிதரை ஆறுதல் கூறி உங்கள்   மகள் படிப்பு இன்ஷாஅல்லாஹ் ,ந்த விதத்திலும் தடை படாது என்று கூறி ஆறுதல் படுத்திவிட்டு . அன்று துபையில் பணி செய்துகொண்டிருந்த ,அன்றைய காயிதே மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் ,இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான சமுதாயப் போர்வாள் அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களை தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தொடர்பு கொண்டு அந்த மாணவியின் டாக்டர் படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள கட்டளையிடுகிறார்கள் .அந்த தலைவரின் தொண்டரல்லவா ,அண்ணன் அப்துல் ரகுமான் ,மறு பேச்சு பேசாமல் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை  செலவுகள் முழுவதும் செலவு செய்யப் படுகின்றது .அந்த மாணவியும் நன் முறையில் படித்து மருத்துவராகி விட்டார் .ஆனால் ,சிராஜுல் மில்லதோ, அவர் வழி நடத்திய இயக்கமோ அவர்கள் மூலம் எந்த ஒரு உதவியும் ,பிரதி பலனோ அடைந்தது இல்லை ,இன்னும் சொல்லப் போனால் ,அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்னும் அந்த டாக்டர் முகம்  தெரியாது .
இது ஒரு சிறிய உதாரணம் தான் , தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்களும் ,பொறியாளர்களும் ,பட்டதாரிகளும் உருவாக சிராஜுல் மில்லத்தும் ,அவர் கட்டிக் காத்த இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கும் ,அதன் தொண்டர்களும் காரணமாக இருந்துள்ளார்கள் ,இனிமேலும் இருப்பார்கள் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் காயிதே மில்லத்தும் , அவர் வழிவந்த சிராஜுல் மில்லத்தும் தன்னலம் கருதாமல் சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தி ,தன் சுகங்களை அழித்துக்கொண்டு வாழ்ந்தார்கள் . அதே ,வழியில் இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் அவரை தொடர்ந்துள்ள நிர்வாகிகளும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணித்துக் கொண்டுள்ளனர்  கொண்டுள்ளார்கள் .அவர்கள் ,செல்லும் வழி வெல்லும் வழியாகட்டும் ! வல்ல அல்லா அருள் புரிவானாக !

அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் !

-----அபு ஆஸிமா