Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 12 செப்டம்பர், 2012

"காயிதேமில்லத் பல்கலைக் கழகம்" காலத்தின் கட்டாயம் !


இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )

பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும்  தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .

டிப்ளமோ படித்தவர்களுக்கு டைடல் பார்க்கில் வேலை : 20 ஆயிரம் சம்பளம்


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000

வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.

தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி
The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113

மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com

மனித உருவில் மிருகங்களின் அட்டகாசம் !

ஊத்துக்கோட்டை கூனிபாளையத்தை சேர்ந்தவர் எழிலரசன் (எ) நாகலிங்கம். இவருக்கும், கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் மண்டபம் களை கட்டியிருந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூனிபாளையத்தை சேர்ந்த வினோத், பிரதாப், பாபுராஜ், பிரேம் ஆகியோர், ‘திருமணத்தில் பிரியாணி போடாதது ஏன்' என கேட்டு போதையில் தகராறு செய்தனர். அதோடு, மணமேடைக்கு சென்றனர். அங்கு, மணமக்களுக்காக கேக் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து, மணமகளுக்கும் மணமகனுக்கும் ஊட்டினர். பின்னர், கேக்கை எடுத்து மணமக்களின் முகத்திலும் பூசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர், பிளஸ் 2 படிக்கும் கவுதம் தாசா (17) என்ற மாணவன், 4 பேரையும் தட்டி கேட்டான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 4 பேரும், அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து கவுதம் தாசாவை தாக்கினர். அதில், கவுதம் தாசாவின் வயிறு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் அலறி துடிப்பதை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர். அதற்குள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கவுதம் தாசாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்ஐ சக்கரை வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பால் பொருள் பதப்படுத்த ஒரு மாத இலவச பயிற்சி



பால் பொருட்கள் பதப்படுத்துதல், மீன் பொருட்கள் தயாரித்தல் குறித்த, இலவசப் பயிற்சியில் சேர விரும்புவோர், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், அக்., 1 முதல், அக்., 31ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு, பால் பதப்படுத்துதல் தொடர்பாக இலவசப் பயிற்சி அளிக்க உள்ளது.பால் உற்பத்தியாளர்கள், பால் பதப்படுத்தும் தொழில் ஆர்வமுள்ளோர், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25ம் தேதி, விண்ணப்பித்தோரில், 30 பேர் தேர்வு செய்யப்படுவர்.

 விவரம் தேவைப்படுவோர், முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம், சென்னை - 52 என்ற முகவரியிலும், 2768 0214, 2768 0217 என்ற தொலைபேசியிலும், 94448 10657 என்ற அலைபேசியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


திங்கள், 10 செப்டம்பர், 2012

சச்சார் கமிசனும் ,ரங்கநாத் மிஸ்ரா கமிசனும் அமைக்க முழுக்காராணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : இ.அஹமது சாஹிப்


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணம் அல்-அமீன் பள்ளி மைதானத்தில் அல்ஹாஜ் எம்.ஏ. ஜமால் முகைதீன் பாப்பா நுழைவு வாயிலில் அரசியல்ஞானி வடகரை எம்.எம். பக்கர் நினை வரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் `கல்வி விழிப் புணர்வு மாநாடு'மிகப் பிரம் மாண்டமாக நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் மாநில கல்விப் பணி செயலாள ரும், மாநாட்டு அமைப்பாளரு மான ஆடுதுறை ஏ.எம். ஷாஜ ஹான் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழாக்கம் செய்தார்.

மாண்புமிகு இ.அஹமது சாஹிப் இம் மாநாட்டில் பேசிய தாவது-

தஞ்சை தரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னோடிகள் மிகப் பிரம்மாண் டமாக ஏற்பாடு செய்திருக்க கூடிய இம் மாபெரும் மாநாட்டில் நான் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து இந்த இரவு வரை நடக்கின்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கிடைத்த பெரும் பாக்கியத்தை எண்ணி பூரிப்படைகின்றேன்.

இன்று காலையில் நடை பெற்ற முஸ்லிம்களின் கல்வி நிலையும், இடஒதுக்கீட்டின் பயனும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றியவர் கள் பல அரிய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நானும் அதிலே கலந்து கொண்டு பல விளக்கங்களை அளித்தேன். இன்று மாலையில் நடை பெற்ற எழுச்சிமிகு ஊர்வலத்தில் அருமைமிகு இளைஞர்களும், அன்பு மாணவர்களும் உணர்ச்சி முழக்கத்தோடு கம்பீரமாக அணிவகுத்து வந்த காட்சியை காணுகின்ற போது எனக்கே ஒரு உத்வேகம் பிறந்து விட்டது.

இந்த அணிவகுப்பில் யானை ஒன்று கம்பீரமாக பீடு நடை போட்டு வந்ததும், குதிரை களில் இளைஞர்கள் கொடி பிடித்து வந்தது மகிழ்ச்சியை தந்தது. அந்த காட்சியை பார்க்கின்ற போது இந்த நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பலம் பொருந்திய யானையைப் போன்று பலம் பொருந்தி செயல்படுகிறது. தலைமை நிலையம் அமைந்துள்ள தமிழ கத்தில் அதன் தலைவர்கள் பலம் மிக்க இயக்கமாக தாய்ச் சபையை வளர்த்து வருகி றார்கள்.

கண்ணியமிக்க காயிதெ மில்லத் சொன்னார்கள்: `இரண் டரை கோடி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று� அவர்கள் காலத்தில் இரண்டரை கோடி முஸ்லிம்கள் இருந்தார் கள். இன்று நமது நாடடில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். அவர்கள் அத்தனை பேருக்கும் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளைய தலை முறையா னாலும், மூத்த தலை முறையா னாலும், அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்,

இன்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஏதோ கேரளாவிலும், தமிழ்நாட்டில் மட்டும்தான் செயல்படுகிறது என்று. கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை அது பல்வேறு மாநிலங்களில் பரவி செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களை பார்ப்பதற்காக என்னு டைய தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு சென்றது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர்.
அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்து ரயில்வே வேகன்களில் ஆடைகளும், தமிழ்நாட்டில் இருந்து பணமும், உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு ஏறத் தாழ ஒன்றரை லட்சம் மக்க ளுக்கு அவைகளை விநியோ கித்தோம். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. சாதி, சமய வித்தியாசம் இன்றி ஒட்டு மொத்த பாரத மக்களுக்கா கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இத்தகைய கடமைகளை செய்து வருகிறது. முஸ்லிம் லீக் பழமைவாய்ந்த இயக்கம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில பேர் இது மதவாத இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மதச் சார்பற்ற தன்மையை கடைபிடிப்பதில் நாம் உறுதியாக இருப்பவர்கள் மட்டும் அல்ல; மதச்சார்பற்ற அரசில் ஆளும் கட்சியாக திகழும் காட்சியை கண்டு கொண்டு இருக்கிறீர்கள்.

முஸ்லிம் லீக் வரலாற்று பேரியக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா வின் எந்த மூலையில் வேண்டு மானாலும் நின்று கொண்டு முஸ்லிம் லீக் என்று சொல்லிப் பாருங்கள். ஜிந்தாபாத் என்ற பதில் கோஷம் உடனே வரும்.

ஆளும் கட்சியாக இடம் பெற்று பேசாமடந்தைகளாக நாங்கள் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எண்ணற்ற நன்மைகளை பெற்றுத் தரும் பல்வேறு திட் டங்கள் உருவாவதற்கு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கி றோம்.

சச்சார், மிஸ்ரா கமிஷன்கள் வர இ.யூ. முஸ்லிம் லீகே காரணம்
முஸ்லிம்களுக்கு நன்மை கள் கிடைப்பதற்காகத்தான் சச்சார் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு இந்த சமுதாயத் துக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்து வருகின்றன. சச்சார் கமிஷன் அமைக்கப்படுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் காரணம் என்று பெருமைப் படுகிறோம்.

இந்த சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுத்தப்படுவது முஸ்லிம்களுக்கான கல்வி உதவித் தொகை. இந்த உதவித் தொகை கடந்த ஆண்டில் மட்டும் 62 கோடியே 71 லட்சம் நம்முடைய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது மகத்தான சாதனை ஆகும். நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம், இத்தகைய உதவிகள் செய்யப் படுகின்றன. 

சிறுபான்மை முஸ்லிம் களின் கல்வி நலனுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது என்பதை இங்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த தொகை போதாது. இது உயர்த்தப்பட வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கார ணத்தால் எங்கெல்லாம் அந்த வசதி தேவைப்படுகிறதோ அந்த பள்ளிகளில் எல்லாம் குறிப்பாக மாணவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகள் எங்கெல்லாம் தேவைப்படு கிறதோ அங்கெல்லாம் ஒவ் வொரு பள்ளிக்கும் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் முஸ்லிம் சமுதாயம் நடத்துகின்ற பள்ளி களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 350 முஸ்லிம் பள்ளிகளுக்கு 135 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள் ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த 50 லட்ச ரூபாயில் மத்திய அரசு 90 சதவிகிதமும், மாநில அரசுகள் 10 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நலத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன ளிக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ள இத் திட்டத்தால் பயன்பெறும் பள்ளிகள் மூலம் எல்லா சமுதாய மக்களும் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசு தரும் 90 சதவிகிதத்தைப் பெற்று தங்களின் பங்களிப்பாக 10 சதவீதத்தையும் சேர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. மத்திய அரசு நிதியை செயல்படுத்த மறுக்கும்

குஜராத் பி.ஜே.பி. அரசு

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது ஒரே ஒரு மாநிலம் மட்டும் முஸ்லிம்க ளுக்கு நன்மை பயக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அடம் பிடிக்கிறது. அந்த ஒரு மாநிலம் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் ஆகும்.

90 சதவிகிதம் நாங்கள் தரும் தொகையோடு வெறும் 10 சதவிகிதம் மட்டும் நீங்கள் சேர்த்து இத் திட்டத்தை பயன் படுத்தினால் என்ன என்று கேட்டபோது, நரேந்திரமோடி அரசு சொன்ன பதில், `நாங்கள் 10 சதவிகிதம் தந்தால் தானே 90 சதவிகித உங்கள் பணம் சிறுபான்மை சமுதாய நலனுக்கு செல்லும். ஆகவே, இந்த 10 சதவிகிதம் தரவே மாட்டோம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமுதா யத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்காமல் இருக் கிறது. இப்படி சாதி, மத வெறி பிடித்த அரசு குஜராத்தில் இருக்கிறது என்பது நமக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முஸ்லிம்களின் நலனுக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கி றார். நாங்கள் அவருக்கு உறு துணையாக ஒருங்ணைப்போடு செயல்படுகிறோம். இன்று, சச்சார் கமிஷன், ரங்கநாத் கமிஷன் அறிக்கை கள் எல்லாம் பெறப்பட்டதற்கு பிறகு முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இது போதாது குறைந்தபட்சம் ஆறு சதவீத அளவிலாவது இந்த இடஒதுக்கீடு இருக்க வேண் டும் என முஸ்லிம் சமுதாயம் வேண்டுகோள் விடுத்த நிலை யில் நீதிமன்றத்தால் இது முடக் கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறையில் நான் அமைச்சராக இருக்கிறேன். இந்த இடஒதுக் கீட்டை எப்படி பயன்படுத்த போகிறோம் என யோசித்துக் கொண்டு இருக்கும்போது எங்கள் கனவில் பேரிடியாக இந்த நீதிமன்ற உத்தரவு ஏற் படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்ற நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். டாக்டர் மன்மோகன்சிங் அரசு பொறுப் பேற்றுள்ள நாள் முதல் பி.ஜே.பி., சிவசேனா கட்சிகள் எல்லாம் எதற்கெடுத்தாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதையும், நாடாளுமன்றத்தை முடக்குவ தையும் வழக்கமாக கொண்டுள் ளன. இதற்கு காரணம் சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத் திற்கு இந்த அரசு நன்மைகள செய்து வருகின்றது என்பதால் தான்.

ஊழலில் ஒட்டுமொத்தமாக திகழ்ந்து கர்நாடகத்தை பங்கு போடும் பா.ஜ.க., டாக்டர் மன்மோகன்சிங் அரசை ஊழல் அரசு என குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பது எங்களின் நிலைப்பாடு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் ஜனநாயகத்தின் அத்தனை விஷயங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ள இயக்கமாகும். மதச்சார்பற்ற தன்மையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் உறுதி கொண்டுள்ள இயக்கம். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் பிரச்சினைகள் வரும் போது விவாதத்திற்கு தயார் ஆகி உண்மைகளை அறிந்து கொள்ள முன்வர வேண்டும். விவாதத்திற்கும் தயாராக இல்லை; நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இல்லை என்றால் இவர்களை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ச்சபை என்ற வரலாற்று பேரியக்கத்தை தம்முடைய மூத்த தலைவர்கள் தந்துள்ள னர். இந்த பெருமைக்குரிய வரலாற்றை தொடங்கி வைத் தது காயிதெ மில்லத் அவர்கள். அவர்களுக்குப் பின் சையது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், சி.ஹெச். முஹம்மது கோயா, ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்கள் இந்த தாய்ச்சபை யின் பணிகளை நம்முடைய கரங்களில் ஒப்படைத்திருக்கி றார்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற் கும், மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்டவும் மிக உறுதியாக இருந்தார்கள். இந்த அடிப்படை யில்தான் மதச்சார்பற்ற, மத சகிப்புத்தன்மை, மதங்களி டையே வேறுபாடு கிடையாது. எல்லாரும் சகோதர்கள்; நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு உறவு முறை களோடு வாழச்செய்வதை எடுத்து இயம்புகின்ற இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயங்குகின்றது.

இந்த இயக்கத்தை அழிப் பதற்கோ, ஒடுக்குவதற்கோ யாராலும் முடியாது. இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் லீக் என்ற இந்த இயக்கம் செயல்படும். முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

இவ்வாறு இ. அஹமது சாஹிப் உரையாற்றினார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்ற அடிப்படையில் மிஸ்ரா குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தை சாதி பிரிவினைக்குள் அடக்க முனையாமல் சாதியற்ற சமூக அமைப்பு என்ற அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமென கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012 செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடபெற்றது.

தேசிய தலைவரும் மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறைஇணைஅமைச்சருமான இ.அஹமது சாகிப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்டமான மாநாட்டில் நிiவேற்றப்பட்ட தீர்மனங்கள் வருமாறு '

1. இடஒதுக்கீடு சமூக நீதியின் சின்னம்!
தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் முஸ்லிம் சமுதாயப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இச் சதவீதம் போதியதன்று. இதனை குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென்னும் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் விசாரணை 10.09.2012 ல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற விருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருப்பினும், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமின்றி, தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்னும் அடிப்படையை இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உறுதி செய்ய வேண்டும்.

மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பதும், மாநில அரசு இடஒதுக்கீட்டு அதிகாரம் பெறச் சட்டத்திருத்தத்துக்குக் கரம் கொடுப்பதும் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரின் கடமையாகும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

அதேபோல, மத்திய அரசின் வேலை மற்றும் உயர்படிப்புகளில் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்குக்கென ஒட்டு மொத்தமாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மத்திய அரசு, முஸ்லிம் சமுதாயத்தை அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என்று சாதிப்பிரிவினைக்குள் அடக்க முனையாமல், சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்னும் அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்குச் சட்ட வடிவு கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

2. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம்
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 54957 துவக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் முஸ்லிம் சிறுபான்மை யினரின் நிர்வாகத்தில் உள்ளவை நானூறுக்கும் குறைவானவை என்னும் அதிர்ச்சித் தகவல் சீரிய சிந்தனைக் குரியதாகும்.

இப்போது நடைபெற்றுவரும் பள்ளிகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்த நிலையாகும்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் குறைந்த பட்சம் மஸ்ஜிதை மையமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஒரு பள்ளிக் கூடமாவது உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

புதிய பள்ளிகளை அமைக்கவும், நடக்கும் பள்ளிகளின் தரம் உயர்த்தவும், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவசியப்படின் நலிந்த பள்ளிக் கூடங்களை ஏற்று நடத்திடவும் ஆகிய கல்விப் பணிக்களுக்கென, தமிழகம் தழுவிய முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம் உருவாக்குவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.

சென்னைப் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாதிக், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பீர் முஸ்தபா ஹுசைன் போன்ற கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து கலந்தாலோசனை செய்து அவர்களின் ஒப்புதலுடன் இந்தக் கல்விக் குழுமத்தின் பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

3. சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ் நாட்டில் இயங்கி வரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கடந்த அரசு 26.02.2011 அன்று வெளியிட்ட அரசாணைகளில் 11307 ஆசிரியர்கள் 648 பணியாளர்கள் ஆக 11955 பணியிடங்களை ஏற்று ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் அனுமதி வழங்கியிருந்தது. 1991 - 1992 க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசு மான்ய உதவியுடன் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 31.05.1999 வரை மான்ய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட, மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மான்ய உதவியின்றியும் முழுமையாக மான்ய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி மான்யத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்து, �தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973� ல் திருத்தம் வெளியிட முடிவு செய்து, தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு சுமார் 4851 ஆசிரியர் பணியிடங்களும் 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 5499 பணியிடங்கள் 01.06.2011 முதல் அனுமதிக்கப்பட்டு, அரசுக்கு ஆண்டுக்கு 131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவும் ஏற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் 1990 - 1991 ம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் இந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இந்த அரசாணைகளை நடைமுறைபடுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4. இந்தியா - இலங்கை நட்புறவு
இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு. இந்தியாவும் இலங்கையும் சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நட்பு நாடுகள்.

இந்தஇரு நாடுகளிடையான விளையாட்டு, வர்த்தக, கலாச்சார உறவுகள் காலம் காலமாக இருந்து வருவதாகும்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை தாக்குவதும், விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவதும், இலங்கை மக்களுக்கெதிராக வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் வகையில் நடந்து கொள்வதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் இரு நாட்டு உறவுகள் சீர்கெடும் நிலை ஏற்படச் செய்வது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது.

எனவே இலங்கை மக்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் பகைமை உணர்வு ஏற்பட இடமளிக்கும் எத்தகைய செயலிலும் ஈடுபடவோ, ஈடுபட அனுமதிக்கவோ செய்யாமல் ராஜதந்திர அணுகுமுறையோடு காரியமாற்ற வேண்டுமென அனைவரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. திருமணப் பதிவும் மத்திய அரசின் திருத்தச் சட்டமும்
இந்திய உச்ச நீதிமன்றம் சீமா அஸ்வானி குமார் வழக்கில் தீர்ப்புக் கூறிய போது, இந்தியாவில் நடைபெறும் எல்லாத் திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வழிகாட்டுதலை 14.02.2006ல் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் கடந்த அரசு, திருமணப் பதிவு ( கட்டாய) சட்டம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது; ஆனால், கோர்ட்டு கூறிய எளிய, சுலபமான, எல்லாரும் அணுகக் கூடிய பதிவு முறை தமிழகத்தில் இல்லை என்பதை ஆய்ந்து, தமிழகத் திருமணச் சட்டத்தில் திருத்தம் வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை எழுப்பியது.

திருமணப் பதிவை எளியமுறையில் யாரும் பதிவு செய்யும் வகையில் அமைப்பதற்கு, பிறப்பு இறப்பு பதிவாளர் பொறுப்பில் திருமணப் பதிவுப் பொறுப்பையும் வழங்குமாறு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களிடம் நேரில் பேசி இந்தச் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். 

இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வந்து, ��பிறப்புகள், திருமணங்கள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் 2012�� என்னும் பெயரில் மசோதா ராஜ்ய சபையில் தாக்கல் செய்திருக்கிறது. 

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைக் கருத்திற் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருமணப் பதிவையும் சேர்த்து சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ள மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

ராஜ்ய சபாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி, லோக் சபாவிலும் விரைவில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசின் சட்டத்துறை மேற் கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


6. ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களுக்கு முடிவு வேண்டும்
இந்திய தேசத்தில் சட்ட ஒழுங்கைக் குலைத்தும், அமைதி கட்டுப்பாட்டைச் சிதைத்தும், மாநில மக்களுக்கிடையில் மோதலையும் புகைச்சலையும் உருவாக்கியும், இந்திய ஜனநாயக மரபுகளைச் சீரழித்தும், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கியும் தேசத்தில் பாஸிச தத்துவத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

பாஸிசத்தின் உச்ச நிலையாக, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் அதனைச் சுற்றியுள்ள மணிப்பூர், மிஜோராம், நாகலாந்து, இமாசல பிரதேசம் ஆகியவற்றிலும் பூர்வீகக்காலந்தொட்டு வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நிய தேசத்தவர், வந்தேறிகள், பரதேசிகள், பிறதேசிகள் என்றெல்லாம் அவப்பெயர் சூட்டி, கலவரத்தைத் தூண்டி விட்டு, இலட்சக்கணக்கான மக்களை தமது ஊர் வீடுகளை விட்டுத் துரத்தியும், சுட்டுப் பொசுக்கியும், எரித்து நாசப்படுத்தியும் வரும் போக்கிற்கு உடனடியாக முடிவு கட்டும் வகையில் மாநில மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

7. சட்டப்படிப்புக்கு உதவி
தமிழக முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சட்டக் கல்விக்கு ஆர்வம் மிகுந்திட வேண்டும் என்னும் எண்ணத்தில், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஐவருக்கு அவர்களின் சட்டப்படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்று ஊக்கப்படுத்துவது என்றும், அதன் பொறுப்பை மாநாட்டு வரவேற்புக்குழு ஏற்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

8 காயிதெ மில்லத் பல்கலைக் கழகம்

இந்திய தேசிய விடுதலை வீரரும், அரசியல் சட்ட நிர்மாணியும், சமூக நல்லிணக்க நாயகரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவருமாகத் திகழ்ந்து அனைவராலும் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் போற்றப்பட்டு வரும் காயிதெ மில்லத் அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தின் பிரதானமாகவும் நடு நாயகமாகவும் உள்ள பகுதியில்  காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் உருவாக்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.


9. தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள்
திருவாரூர் -சென்னை செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சை வழியாகச் செல்வதால் நூறு கிலோ மீட்டர் தூரம் அதிகப்படியாக பயணிக்க வேண்டியுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் அதிகப்படியான சிரமங்களைத் தவிர்த்திட, திருவாரூர்- சென்னை ரயில்களை மயிலாடுதுறை வழியாகச் செல்லும் முறையை நடைமுறைக்குக் கொண்டுமாறு தென்னக ரயில்வே நிர்வாகத்தை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே போன்று, தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் இதில் ரயில்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், எனவே தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மகாபலிபுரம்-அரக்கோணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை அகல ரயில் பாதை துரிதமாக அமைத்து வளர்ந்து வரும் இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தகம் செழிக்க வாய்ப்பு ஏற்படுத்துமாறு தென்னக ரயில்வே இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காரைக்காளிலிருந்து ஆக்கூர், சீர்காழி வழியாக சென்னைக்கு ரயில் இயக்குமாறு தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது 10. முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்புச் சான்று

சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பிக்கும்போது முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு """" இஸ்லாமாக மதம் மாறியவர்"" என்றே சான்று வழங்கப்படுகிறது.

இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பையும் பெற முடியாமல் போய்விடுகிறது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்பட்ட லெப்பை வகுப்பைச் சார்ந்தவர் என வருவாய்த்துறையினர் சான்றளிக்க ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சலுகைகளை கண்காணிக்க குழு
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கல்வித் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப் படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.

எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என வட்டாட்சியர் மூலம் கண்காணிக்கப்படுவதுபோல், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க மாவட்டம்தோறும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12. சிறுபான்மை தகுதிச் சான்று-முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு 
நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி சட்டம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுகிறது. 25 சதவீதம் இலவச கல்வியை மற்றவர்களுக்கு வழங்க வழி வகுக்கிறது.

உச்ச நீதி மன்றத்தை அணுகிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை தகுதி சான்று பெற்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச் சட்டம் மற்றும் 25 சதவீத கல்வி செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுள்ளன எனவே இந்த தீர்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவன தகுதி சான்று விரைவாக பெற முஸ்லிம் கல்வி நிறுவனங்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13. காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரி
புதுச்சேரி மாநிலத்தில் நாற்பது சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் காரைக்கால் மாவட்டத்தில் அம்மக்களுக்கு பயன்படும் வகையில் அரபி பாடதிட்டத்துடன் கூடிய அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென பதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வக்ஃப் வாரியத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் கொண்டுவரவும், வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதைச் செயல்படச்செய்யும்படியும் புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14. கரும்பு டன்னுக்கு ரூபாய் 3000ஆக உயர்த்தி தர வேண்டுதல்
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஈடுகட்டும் வகையில் கரும்பு டன்னுக்கு ரூ 3000/- ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற கரும்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்று செயல்படுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. முப்போகம் விளையும் தஞ்சை தரணியில் தண்ணீர் இல்லாததால் குறுவைப்பயிர் நடமுடியாத நிலையில் தாளடி பயிர் விதைத்து வருகின்றனர். இதனை காப்பாற்றும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

சனி, 8 செப்டம்பர், 2012

மத நல்லிணக்கம் குறைந்துவருகிறது : பிரதமர் கவலை


டில்லியில் நடைபெற்ற, அனைத்து மாநில, போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:

நம் நாட்டில், பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அதிலும் ஒற்றுமையாக இருப்பதே, நமது பலம். ஆனால், கடந்த சில மாதங்களாக, நாட்டின் வடகிழக்கு பகுதியில், வன்முறை மற்றும் கலவரம் தலைதூக்கியுள்ளது.இது, அனைவருக்குமே கவலை தரக்கூடிய விஷயம். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், சில சம்பவங்களும் நடைபெற்றன.மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில், நல்லதொரு இணக்கம் நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய சம்பவங்களால், அந்த மத நல்லிணக்கம் தேய்வது போலத் தெரிவது, மிகவும் கவலைக்குரிய விஷயம். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் மத்தியில், என்ன மாதிரியான உணர்வுகள் நிலவுகின்றன, அடிமட்டத்தில் என்ன தான் நடக்கிறது என்பதையெல்லாம், போலீசார் முழுமையாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்னையை ஏற்படுத்தும் நபர்களை, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் பொருத்தமான சட்டத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற் றோடு சேர்த்து, அமைதி மற்றும் சமூக நல்லிணக்க சூழ்நிலையை, முன்கூட்டியே ஏற்படுத்துதலும் அவசியம்.இணையதளத்தை பயன்படுத்தியும், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், வன்முறை மற்றும் வதந்தியைப் பரப்புவது, சமீப காலமாக, அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொழில் நுட்பங்களை வன்முறையாளர்கள், எவ்வாறு கையாளுகின்றனர் என்பது பற்றிய முழு விவரங்களையும், போலீசார் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நடக்கும் தவறான பிரசாரங்களை, எவ்வாறு அடக்குவது என்பது மிகவும் அவசியம். இனி வரும் காலங்களில், மிகவும் சவாலாக இருக்கப்போகும் இந்த பிரச்னைகளை, திறமையுடன் அணுக, போலீசார் பயிற்சி பெற வேண்டும்.மாநிலங்கள் சிலவற்றிலும், அவற்றின் எல்லைப்புறங்களிலும், நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாநிலங்களின் எல்லைகளில் உள்ள காடுகளை, நக்சலைட்கள், தங்களின் புகலிடமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் வைக்கும் கண்ணி வெடிகளால், உயிர் பலிகளும் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, துணை ராணுவப் படையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.நக்சலைட்கள் அபாயம் உள்ள மாநிலங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். போலீசாருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும்.