Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 ஆகஸ்ட், 2012

கோழிப்பண்ணை தொழிலுக்கு அரசின் தாராள உதவி


 புதிய கால்நடை மருந்தகங்கள், விவசாயிகள், சுயவிருப்பத்தில் கோழிப் பண்ணைகள், நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க, 28.35 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். தென்மாவட்ட விவசாயிகளும், காஞ்சிபுரம் உட்பட வட மாவட்ட விவசாயிகளும் கோழிப்பண்ணை அமைக்க, இந்தத் திட்டம் உதவிடும்.

மருந்தகம்! இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, நடப்பாண்டில், 20 புதிய கால்நடை மருந்தகங்கள், ஆறு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என, இரு புதிய கோழி பண்ணை தொகுப்பு மண்டலங்கள் உருவாக்கப் படுகின்றன.

இந்த மண்டலங்களில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அவர்கள் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப, 1,000 முதல், 5,000 கறிக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்ள வசதியாக, 20.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், 230 கோழிப் பண்ணைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

நாட்டு கோழி :திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, 2.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட, 35 பண்ணைகள் அமைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அர்த்தமுள்ள வரவேற்பு


நரிக்குறவ சமுதாயத்தில் பிறந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான ராஜபாண்டி, பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். ராஜபாண்டிக்கு மருத்துவம் படித்து ஏழை, எளியோருக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயரிய லட்சியம் இருந்து வந்தது.
மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் கட்டணத்தை நினைத்து அவர் பெரும் கவலை அடைந்தார்.
இதையடுத்து நடிகர் ஜீவா ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவி செய்தார். அதேபோல தூத்துக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர், டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.
இதையடுத்து நம்பிக்கை பெற்ற ராஜபாண்டி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதலாமாண்டுத் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. அப்போது ராஜபாண்டிக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு கொடுத்து அவரை மகிழ்வித்தனர் கைகுலுக்கியும், வாழ்த்துகள் கூறியும் அவர்கள் வரவேற்றது ராஜபாண்டியை நெகிழ வைத்தது.
அதேபோல கல்லூரி டீன் உமாதேவியும் ராஜபாண்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அன்னை கதிஜா (ரலி )

எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக
 உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:

உலகிற் சிறந்த பெண்மணி


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].
மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி]

கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்


ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]

சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்


நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]


மரணம்


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு உதவி செய்ய IUML நிவாரணக்குழு அமைப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் மற்றும் கட்சி யின் சட்ட திட்ட திருத்தக் குழு ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் ஆக.1-ந்தேதி புது டெல்லி ரபீ மார்க்கில் உள்ள அரசியல் சட்ட அரங்கில் நடை பெற்றது. கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியு றவுத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரு மான இ. அஹமது சாஹிப் தலைமை தாங்கினார். 


அசாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்க ளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் களை அமைப்பாளராக கொண்டு 7 பேர் அடங்கிய ஒரு குழுவை புதுடெல்லி யில் கூடிய தேசிய நிர்வா கிகள் குழு அமைத்துள்ளது. நிவாரண உதவிகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்கும்படி அக் கூட்டத் தில் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. 


கீழ்க்கண்டவர்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அசாம் கலவர நிவாரண கமிட்டியை அமைக்க இந்த கூட்டம் முடிவெடுக் கிறது. 

1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர், தேசியச் செயலாளர் - அமைப்பாளர். 

2. இக்பால் அஹமது - தேசிய துணைத் தலைவர் - உறுப்பினர் 

3. ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.,- உறுப்பினர் 

4. கே.பி.ஏ. மஜீத் - கேரள மாநில பொதுச் செயலாளர் - உறுப்பினர் 

5. பி.வி.. அப்துல் வஹாப், முன்னாள் எம்.பி., - உறுப்பினர் 

6. தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய பொருளாளர் - உறுப்பினர் 

7. குர்ரம் அனீஸ் உமர், தேசியச்செயலாளர் - உறுப்பி னர் 

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள அசாம் நிவாரண நிதிக்கு தாராளமாக பொருளு தவி வழங்கும்படி வேண்டு கோள் விடுக்கப்படுகிறது. 


நிவாரண நிதி அளிக்கவிரும்புவோர் 
காசோலை எடுக்கவேண்டிய முகவரி :
`IUML - ASSAM RELIEF FUND ' என்ற பெயரில் 
இந்தியன் வங்கி ஹார்பர் கிளை 
சென்னை - 1 


காசோலை அனுப்ப வேண்டிய முகவரி :
காயிதே மில்லத் மன்ஸில்
36, மரைக்காயர் லெப்பை தெரு,
 சென்னை - 600 001

10 லட்சம் குழந்தைகள் பட்டினி

ஆப்பிரிக்காவில் மேற்கு பகுதியில் சினேகல் என்ற நாடு உள்ளது. இங்கு சமீபகாலமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இங்குள்ள மக்களால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரும்பாலும் பட்டினியாக கிடக்கிறார்கள். 

சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாலி, நைஜர், சாட், முரிட்டோனியா ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவுகிறது. 

இந்த நாடுகளில் மட்டும் 18 லட்சம் பேர் போதிய உணவு இல்லாமல் பட்டினி கிடப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் நிர்வாக திறமையின்மை காரணத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

பட்டினியை தவிர்க்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவ  வேண்டும் என மற்ற நாடுகளை ஐ.நா.சபை கேட்டுக் கொண்டு உள்ளது.

மியான்மரில் இராணுவமே முஸ்லிம் பெண்களை கற்பழித்த கொடுமை :மனித உரிமை அமைப்பு அறிக்கை

மியான்மர் நாட்டில் உள்ள ரோகின் கயா பகுதியில் கடந்த மாதம் பயங்கர மத கலவரம் ஏற்பட்டது. மியான்மரில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். இதுபோல சிறுபான்மை மதங்களும் உள்ளன. இதில் புத்தமதத்தினருக்கும், ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. 

இந்த கலவரத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள வங்காள தேசத்திற்கு ஓடினார்கள். இந்த கலவரம் தொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமை அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- 

மியான்மரில் நடந்த கலவரத்தில் ராணுவமே அத்து மீறி நடந்து கொண்டது, அவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக இருந்தனர். சிறுபான்மை மக்களை வேண்டும் என்றே சுட்டுக் கொன்றனர். ஏராளமான சிறுபான்மை பெண்களும் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். 

மியான்மர் அரசு கலவரத்தை கட்டுப்படுத்த போதிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறு செய்த ராணுவத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கண் முன்பே கலவரம் நடந்த போது ராணுவம் வேடிக்கைபார்த்தது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை

அடிப்படை அறிவியல் (Basic Science) பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மத்திய அரசு ஆண்டு தோறும் KISHORE VAIGYANIK PROTSAHAN FELLOWSHIP - 2012 கல்வி உததவித்தொகை வழங்கி வருகிறது.


கல்வித்தகுதி: Stream SA: 10ம் வகுப்பு பொது தேர்வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவில் +1 படித்து கொண்டிருக்க வேண்டும்.



Stream SX: அறிவியல் பாடப்பிரிவில் தற்போது +2 படித்துக் கொண்டிருக்க வேண்டும். 80 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று அறிவியல் பாடத்தில் பி.எஸ்சி படிப்பை தொடர விரும்பும் மாணவராக இருக்க வேண்டும்.



Stream SB: +2 அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி படிப்பை தொடரும் மாணவராக இருக்க வேண்டும்.



தகுதியான மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் உதவித்தொகைப் பெற தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண் விகிதத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 10 சதவீத சலுகை தரப்படும்.

2012-13ம் கல்வியாண்டில் +1, +2, பி.எஸ்சி., படிக்கும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக மாதம் ரூ.4000 முதல் ரூ.7000 வரை வழங்கப்படும்.

3 வருடம், வருடத்திற்கு 4 மாதங்கள் மட்டும் வழங்கப்படும். மேலும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பா மேற்கொள்ளப்படும் பயணங்கள், இதர செலவுகள் மத்திய அரசால் வழங்கப்படும்.

www.kbpy.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 07 கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 12 கடைசி நாளாகும்.

Kishore Vaigyanik. Protsahan Yojana (KVPY), Indian Institute of Science. Bangalore - 560012.என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.