Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 1 மே, 2013

கர்நாடகத்தில் பாஜக அரசின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும்


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2008-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாவத்தால் பிறந்தது தான் பாஜக அரசு. பெல்லாரியில் நடைபெற்று வந்த சட்டவிரோத சுரங்கத் தொழில் அடிப்படையிலான அரசியலில் உருவானதுதான் பாஜக அரசு. இதன் விளைவாக முதல்வர், அமைச்சர்கள் பலர் சிறைக்குச் சென்று திரும்பியுள்ளனர். பாவத்தால் உருவான அரசை காப்பதிலேயே பாஜகவின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

பாஜகவின் மோசமான ஆட்சியால் கர்நாடக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய கர்நாடகம், பாஜக ஆட்சியால் கறைபடிந்துள்ளது. இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகத்தை பீடித்திருந்த பாஜகவின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும்.

கர்நாடகத்தில் மீண்டும் ஒளிமயமான நல்லாட்சியை அளிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நல்லாதரவுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நல்லாட்சியை அளிக்கும். பாஜக ஆட்சியால், பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் குப்பை நகரமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதன் மூலம், தென்னிந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்பட்ட பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்.

மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக - சிவசேனை ஆட்சி 1995-இல் அமைந்தது. 1999-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. அதன்பிறகு, மகாராஷ்டிரத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல, கர்நாடகத்தில் இனி எந்தக் காலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்றார் பிருத்விராஜ் சவாண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக