Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 27 மே, 2013

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை முதல் சென்னை வரை தண்ணீர் இன்றி பயணம் பயணிகள் கடும் அவதி

திருச்செந்தூரில் இருந்து தமிழகத்தின் தலைநகரமாம் சென்னைக்கு தினமும் இரவு 7.45 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16736) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 7.45 மணிக்கு வழக்கம் போல் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டது.

அப்போது ரெயிலில் ஏ.சி. பெட்டியை தவிர மற்ற அனைத்து பெட்டிகளிலும் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் காலியாகி விட்டது. பயணிகளின் உற்சாகம் பறிபோனது.

ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் கழிவறைகளுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் திண்டாடினார்கள். இது குறித்து பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவரிடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

பயணிகள் மிகுந்த சிரமம்
மதுரை, திருச்சி போன்ற முக்கிய ரெயில் நிலையங்களிலாவது தண்ணீர் நிரப்பப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அங்கும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் இரவு முடிந்து அதிகாலை நேரத்தில் பயணிகள் காலைக் கடன்களை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆனால் கழிவறைகளில் தண்ணீர் இல்லை. இதனால் பயணிகள் தண்ணீர் இன்றி காலைக் கடன்களை கழித்தனர். இதனால் கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் பயணிகள் ரெயிலில் உட்கார முடியாமல் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

நிம்மதி பெருமூச்சு
பின்னர்  காலை 8.35 மணியளவில் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அடைந்த போது, ரெயிலில் ஒன்றிரண்டு பெட்டிகளுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பினர். பெரும்பான்மையான பெட்டிகளில் தண்ணீர் சிறிதும் இன்றி பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காலை 11.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தனர்.

இதுகுறித்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–7 பெட்டியில் பயணம் செய்த திருவேற்காட்டை சேர்ந்த கற்பகம் கூறும்போது:–

நெல்லை வரை ரெயிலில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு தண்ணீர் வரவில்லை. ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் ரெயில் நிற்கும்போது, தண்ணீர் நிரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.

அதோடு அல்லாமல் நானும் என் சகோதரிக்கும் ஆர்.ஏ.சி. டிக்கெட் தான் கிடைத்திருந்தது. டிக்கெட் பரிசோதகர் வராததால் படுக்கை வசதி இன்றி மிகுந்த சிரமத்துடன் வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக