Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சோதனைகள் தொடரலாம்; வேதனைகள் வெளிப்படலாம்; துணிவுடன் தொடருவோம் நம் பணியை !


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

செய்தித் தாள்களில் ஏதேனும் பரபரப்பு செய்தி என்றாலே சொல்லத் தேவை இல்லை நம் தமிழ்நாட்டில். அதைத் தொடர்ந்து அதே செய்தி வார இதழ்களில் கண்கள், காதுகள் வைத்து கொஞ்சம் கதை கலந்த செய்தியாக மாறும். பிறகு மக்கள் மத்தியில் அதே செய்தி சிலரால் கொம்பு சீவிவிடப்பட்டு வெவ்வேறு உருவில் மாற்றங்கண்டு அரவே உண்மையில்லாமல் போய்விடுகிற அநர்த்தங்களும் ஊடகங்களில் அடிக்கடி அரங்கேறி வருவதை யாரும் மறுத்திட முடியாது. இந்த கோணத்தில் உலா வரும் செய்திகளில் சில நம்மையும் நம் இயக்கத்தையும் சற்று பதம் பார்ப்பதிலும் தவறுவதில்லை. அத்தகைய செய்திகளில் ஒன்றுதான் அண்மையில் என்னைச் சுற்றி வலம் வந்தது.

எனக்கும் பல்வேறு பணிகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதிலேயே போதும் போதும் என்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக என்மீது இருக்கும் அன்பினாலும், தாய்ச்சபை முஸ்லிம் லீகின்மீது இருக்கும் ஈடுபாட்டினாலும் நேரிலும் தொலைபேசி மூலமும் என்னிடம் சில கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளார்கள் என்றாலும் அது பற்றிய மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கம். கடந்த 5.4.2013 வெள்ளியன்று மாலை சென்னையிலிருந்து எனது சொந்த ஊர் முத்துப்பேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். மறுநாள் மாலை, நாகை மாவட்டம் கிளியனூரில் நகர முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முத்துப்பேட்டையிலிருந்து காரில் செல்ல வேண்டும் என்பது திட்டம். புறப்பட்டுக் கொண்டிருந்தபோது என் தாயாரிடமிருந்து தொலைபேசி. ‘‘காவல் துறையினர் அதிரடியாக நம் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ள எல்லா அறைகளையும் சோதனையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று தகவல் தந்தார்கள். உடனே தொலைபேசியை அங்கிருக்கும் காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னேன். ‘‘உங்கள் அண்ணன் மகன்மீது அவர் செய்து வந்த வியாபாரம் சம்பந்தமாக சென்னையில் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது; அது சம்பந்தமாக விசாரிக்க வந்திருக்கிறோம்’’ என்றார். ‘‘விசாரிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு எனது வீட்டினுள் நுழைந்து அவரைத் தேடுகிறோம் என்று சொல்வது அர்த்தமற்ற செயல். எந்த அதிகாரத்தில் யாருடைய வற்புறுத்தலில் ‘பெண்கள் மட்டுமே இருக்கிறோம்’ என்று சொல்லியும் அதிரடியாக உள்ளே நுழைந்தீர்கள்? உடனே வெளியேறுங்கள்; நாளை நான் அங்கு வருகிறேன்; எதுவானாலும் நேரில் பேசிக் கொள்ளலாம்’’ என்று சொன்னவுடன் வெளியேறிவிட்டார்கள். திட்டமிட்டபடி மறுநாள் காலை ஊர் போய்ச் சேர்ந்தேன். காவல்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து காவல் துறையின் அத்துமீறிய அடாவடிச் செயலை வன்மையாகக் கண்டித்து சற்று கோபமாகவே பேசினேன். குழுத் தலைவராக வந்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் என்பவர் ‘‘சாரி சார்; தெரியாமல் செய்துவிட்டோம்; உங்களின் அனுமதி இல்லாமலும், உங்களுக்கு எந்தத் தகவலும் தராமலும் இப்படி உள்ளே நுழைந்தது எங்களின் தவறுதான் சார்; மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ‘‘சரி; என் வீட்டில் சோதனை போட்டீர்களே! உங்களுக்குத் தேவையான யாரும் அல்லது எதுவும் கிடைத்ததா?’’ என்று கேட்டேன். ‘‘ஒன்றும் கிடைக்கவில்லை’’ என்றார். ‘‘உங்கள் மனம் போன போக்கில் அத்துமீறி செயல்பட்ட இந்தச் செயலை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்’’ எனச் சொல்லி, எஸ்.பி.க்கும், டி.ஐ.ஜி.க்கும் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்தேன். இதுதான் நடந்தது.

மறுநாள் காலை தினகரன், தினமலர் போன்ற பல்வேறு நாளிதழ்களில் பெரிய செய்தி ‘‘முஸ்லிம் லீக் எம்.பி. வீட்டில் போலீஸார் ரெய்டு.’’ இதனிடையே எங்கு பார்த்தாலும் சி.பி.ஐ. ரெய்டு, என்போர்ஸ்மென்ட் ரெய்டு என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் என் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும். பொது வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ சவால்களையும், சோதனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் நமக்கு இது ஒன்றும் பெரிதல்ல. தாய்ச்சபை முஸ்லிம் லீகின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் என்னிடம் தொடர்பு கொண்டு ‘‘இப்படி கேவலப்படுத்திய போலீஸாரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்’’ என்றெல்லாம் அனுமதி கேட்டார்கள். எனது ஊர் முத்துப்பேட்டையிலேயே காவல் துறைறைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் முகைதீன் அடுமை தலைமையில் நகர முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் திரண்டு விட்டனர். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு ‘‘காவல்துறை அதிகாரிகளை நானே நேரில் கடுமையாகக் கண்டித்து பேசி, அவர்களும் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போன பின்பு இதற்கு மேலும் இத்தகைய அத்துமீறல்கள் தொடர்ந்தால் பார்த்துக் கொள்வோம்’’ எனச் சொல்லி ஆறுதல்படுத்தினேன். சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோரும் உடனே என்னிடத்தில் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டது பாராட்டத்தக்க ஒன்று. அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவம் நடந்து மறுநாள் 7.4.2013 அன்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியான பின்பு 8.4.2013 அன்று வேலூர் தொகுதிக்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அன்று காலை பல்வேறு தொலைக்காட்சி நிலையங்களிலிருந்தும், பத்திரிகை அலுவலகங்களிலிருந்தும் திடீரென அலை அலையாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். ‘‘தங்களின் சென்னை வீட்டில் சி.பி.ஐ. சோதனையாமே; நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ எனக் கேட்டவுடன் என் வீட்டுக் கட்டிட காவலாளியுடன் தொடர்பு கொண்டேன். ‘‘நமது வீட்டிற்கு முன்னால் ஏராளமான டி.வி. கேமராக்களுடன் பத்திரிகையாளர்களும் குவிந்திருக்கின்றனர்’’ எனச் சொன்னார். அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தி அரசு தலைமைச் செயலகத்திலிருந்தே தவறாகப் பரப்பப்பட்டுவிட்டது என்று தெரிய வந்தது. மீண்டும் மறுநாள் பல நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு சுகம் தேடிக் கொண்டன. வார இதழ்கள் நக்கீரன், ஜுனியர் விகடன் போன்றவைகளும் சளைத்தவைகள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில் அவர்களின் கற்பனைகளையும் அந்தச் செய்தியோடு அவிழ்த்துவிட்டிருந்தன.

இவை எல்லாவற்றிற்கும் சரியான மறுப்பு கொடுக்கும் வகையில் நமது நாளேடான ‘மணிச்சுடர்’ பத்திரிகையிலும், நமது இயக்க வளைதலத்திலும் விரிவான தகவல்களைத் தந்ததோடு டி.வி. சேனல்களும் என்னுடைய நேர்காணல் விளக்கத்தை சரியான நேரத்தில் வெளியிட்டன.

இங்கே நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது என்ன தெரியுமா? நாடாளுமன்றத்தில் எத்தனையோ நேரங்களில் சமுதாயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை மையப்படுத்தி பேசியிருக்கிறேன்; தொகுதி சம்பந்தப்பட்ட குறைகளை எடுத்து வைத்து தேவைகளைக் கேட்டு வாதிட்டிருக்கிறேன்; லிபரான் கமிஷன் அறிக்கைமீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று அரை மணி நேரம் விவாதம் செய்திருக்கிறேன்; பொருளாதாரச் சுரண்டலிலிருந்து இந்த நாடு மீள வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை ஒன்றே சிறந்தது என்று முழக்கம் செய்திருக்கிறேன். நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு பற்றி சுமார் பத்து முறைக்கு மேலாகப் பேசியிருக்கிறேன்; மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்குவது பற்றி விளக்கம் கேட்டிருக்கிறேன்; ஹைதராபாத் நகரில் நாட்டின் புராதனச் சின்னமான சார்மினார் கட்டிடத்தின் ஒரு மூளையில் திடீர் கோயில் வைத்து பிரச்சினைகளை உருவாக்கி வரும் குழப்பவாதிகள்மீது குற்றம் சுமத்திப் பேசியிருக்கிறேன்; இன்னும் ஏராளம். ‘‘இவைகளில் என்றைக்காவது இந்த ஊடகங்கள் எதனையாவது வெளிக்கொண்டு வந்தனவா?’’ என்றால் இல்லை. இன்றைக்கு நம்மை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் நமக்கு அறவே சம்பந்தமில்லாத ஒரு குற்றச்சாட்டை மிகைப்படுத்தி, குற்றம் சுமத்தப்பட்டவரின் பெயரை முன்னிலைப்படுத்தாமல் ‘‘முஸ்லிம் லீக் எம்.பி.’’ என்று தலைப்புச் செய்தி போட்டு அவமானப்படுத்த எத்தனிக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நமக்கு வருத்தம் இல்லை என்றாலும் ‘‘முஸ்லிம் லீக் எம்.பி.’’ என்று திரும்பத் திரும்ப யாரோ ஒருவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு சுகம் காணுவதில் ஊடகங்கள் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொண்ட இச்சம்பவங்களை பிறைநெஞ்சே! எண்ணிப்பார்.

இப்படித்தான் நம் சீரிய செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்த நம்மை விரும்பாத சில சக்திகள் ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல்களைப் பரப்புவார்கள்; எக்காலத்திலும் மனம் தளர்ந்துவிடாதே. உள்ளத்து உறுதியோடு உண்மை வெளிச்சத்தை உலகுக்குக் காட்டுவதில் சோதனைகள் தொடரலாம், வேதனைகள் வெளிப்படலாம்; இவைகளையெல்லாம் சாதனைப்படிகளாய் மிளிர வைப்பதில் யாருக்கும் சளைத்தவர்களல்ல நாம் என்பதை தாய்ச்சபைத் தலைவர்களின் வழிநின்று பயணத்தைத் தொடர்வதே நம் கடமை.

துணிவுடன் நட; உன்னுடனே நானும் பயணிக்கிறேன் வல்ல இறைவனின் துணைகொண்டு. இன்ஷா அல்லாஹ்.
 அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான்
 ஆசிரியர்- "பிறைமேடை" .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக