Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

பள்ளிகளில் இணைய சேவை துண்டிப்பு: ஹால் டிக்கெட் கொடுப்பதில் சிக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள இணைய சேவைக்கான நிலுவை தொகை கட்டப்படாததால், சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அடுத்த மாதம் நடக்க உள்ள, பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 167 உயர்நிலை பள்ளிகளும், 107 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பயிலும், 52,208 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 35,688 பிளஸ் 2 மாணவர்களும், பொது தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும், மார்ச் 1ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ம் தேதி, தொடங்கி ஏப்., 15ம் தேதி, வரை தேர்வு நடக்க உள்ளது.

இலவச சேவை பள்ளிகளின் அனைத்து நிர்வாக வேலைகளும், கணினிமயமாக்க முடிவான பின், 2009ம் ஆண்டு, எல்காட் நிறுவனம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும், இலவச இணைய சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போது, பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள், துறை அதிகாரிகளின் கடிதங்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

மேலும், பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகள் இணையம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதை பள்ளி நிர்வாகம் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜன., 18ம் தேதி, அனைத்து மேல் நிலை பள்ளிகளுக்கும், எல்காட் நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்தது. அதில், "2010-11 மற்றும் 2011-12 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, இணைய சேவை பயன்படுத்தியதற்காக, 12 ஆயிரம் ரூபாய் வரை, பில் தொகை செலுத்த வேண்டும். ஜனவரி மாதம் இறுதிக்குள், பில் தொகை செலுத்தாத பட்சத்தில் இணைப்பு துண்டிக்கப்படும்" என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

பெரும்பாலான பள்ளிகள் பில் தொகையை செலுத்தாததால், கடந்த, 1ம் தேதி முதல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விரைவில் நடக்கவுள்ள பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டுகளை எப்படி கொடுப்பது என, தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "துப்புரவு தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற இதர செலவுகள், பெற்றோர் கழக நிதியில் இருந்து கொடுத்து வருகிறோம்" என்றார்.

மேலும், "தற்போது, இணைய சேவைக்கான தொகை, 12 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என, எல்காட் நிறுவனம் கடிதம் அனுப்பியது. முதலில் இலவசம் என்று சொல்லி, பின் இப்படி பணம் கேட்டால், எங்கிருந்து கொடுக்க முடியும்" என்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, எல்காட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த தி.மு.க., ஆட்சியில், இணைய சேவை இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது உள்ள, அ.தி.மு.க., அரசு கட்டணம் வசூலிக்கும் படி தெரிவித்து உள்ளது. இந்த கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்தாமல், இரண்டு மூன்று தவணைகளில் செலுத்தும்படி, பள்ளிகளுக்கு தெரிவித்து உள்ளோம்" என்றார்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறுகையில், "இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறித்த விவரம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரம் கிடைத்தவுடன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் உள்ள நிதியை கொண்டு, இணையதள சேவைக்கான கட்டணம் செலுத்தப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக