Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 26 ஜனவரி, 2013

"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது"


 "வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கமும், சந்தேகமும் இளைஞர் பட்டாளத்திற்கு உள்ளது. தேவையான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

நாட்டின், 64வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதிய இந்தியாவின் அடையாளமாக திகழ வேண்டிய இளம் பெண், தலைநகர் டில்லியில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்ததும், நம் இதயங்கள் வெற்றிடமாகி விட்டன; அறிவில் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டன.

ஒரு உயிரை மட்டும் நாம் இழக்கவில்லை; ஒரு கனவையும் நாம் இழந்துவிட்டோம். இந்திய நாகரிகத்தில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் புனித தன்மை போற்றப்பட வேண்டும் என காலம் காலமாக போதிக்கப்பட்டு வந்துள்ளது. அத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணை சிதைத்ததன் மூலம், தேசத்தின் ஆன்மாவையும் சிதைத்து விட்டோம்.

தேசத்தின் அற நெறி திசைகாட்டியை மாற்ற வேண்டிய நேரமிது. நாம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குகிறோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும்.தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கத்திலும் சந்தேகத்திலும் இளைஞர் பட்டாளம் உள்ளது.

வளரும் தலைமுறையினரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அவர்களால் தேச குறிக்கோளை அடைய முடியும்.அதற்காக விரைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நக்சல் தீவிரவாதம் போன்ற வன்முறைகள், ஆபத்தான வடிவங்களை பெற்று விடும். தேசிய குறிக்கோளை அடைய அரசு நிர்வாகமும், சமுதாய மாற்றத்தை விரும்புபவர்களும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.

எதிர்பார்த்த அளவு கல்வி, உயர்மட்டத்தை இன்னும் அடையவில்லை. சரியான படி கல்வி வளர்ச்சி அடைந்திருந்தால், இப்போதிருக்கும் அளவை விட, இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி பெற்றிருப்போம். முந்தைய ஆறு நூற்றாண்டுகளை விட, கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்றிருக்கிறது என நீங்கள் நினைத்தால், கடந்த, 60 ஆண்டுகளை விட, வரும், 10 ஆண்டுகளில் இன்னும் அபரிமித வளர்ச்சி அடையும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, தன் முதல் குடியரசு தின உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக