Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மத்திய அரசு வழங்கும் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு விற்கிறார் மோடி - சோனியா


மத்திய அரசு வழங்கிய நிதியை எல்லாம் சில தொழிலதிபர்களின் நலனுக்காக செலவழித்து விட்ட நரேந்திர மோடி, சராசரி மக்களின் வாழ்வை சீர்குலைத்து விட்டார் என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 2வது கட்ட தேர்தல் நடைபெறும் காந்தி நகர் தொகுதியில் சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியதை விட 50 சதவீதம் கூடுதல் நிதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கியுள்ளது. முக்கியமான சில நபர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக இந்த நிதியை மோடி செலவழித்துள்ளார். சாமானிய மக்களுக்கு இந்த நிதியினால் எந்த பலனும் சென்றடையவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குஜராத்திற்கு மத்திய அரசு 3,128 மெகாவாட் மின்சாரம் வழங்கி வருகின்றது. ஆனால் மின் இணைப்புக்காக காத்திருக்கும் ஏழைகளுக்கு புதிய மின்சார இணைப்பை வழங்க மறுக்கும் குஜராத் அரசு, 800 மெகாவாட் மின்சாரத்தை விலைக்கு விற்று, லாபம் சம்பாதித்து வருகின்றது.

குஜராத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டியில் குதித்துள்ளோம். தவறான வாக்குறுதிகளின் மூலம் மக்களை தவறான பாதையில் மோடி வழி நடத்துகின்றார். பல்வேறு திட்டங்களின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியை அவர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. மற்ற கட்சிகளைப் போல் வெற்று வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவதில்லை.

ஆட்சிக்கு வந்தால் எங்கள் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றுவோம். மோடியின் ஆட்சியில் குஜராத் எந்த வகையிலும் முன்னேறவில்லை. இங்குள்ள 20 லட்சம் பேர், வீடுகளின்றி தெரு ஓரங்களில் வசிக்கின்றனர். வேலை இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. நலிவுற்ற பிரிவு மக்களின் மீது மோடியின் அரசு அக்கறை காட்டவில்லை. ஊழல் செய்பவர்களை பாதுகாத்து, அப்பாவிகளை தண்டிக்கும் இந்த அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டும். இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக