Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை :தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தாண்டவமாடும் தண்ணீர் பிரச்னையால் கடையநல்லூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாற்று படுகையில் முற்றிலுமாக நீர்பிடிப்பு குறைந்துவிட்டது. இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறுகளிலும் நீர்மட்டம் முழுவதும் குறைந்துவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக வரக்கூடிய தண்ணீர் வினியோகம் தான் தற்போது பரவலாக மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறையை அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றிற்கு நான்கு லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீரும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடான நிலையிலேயே கிடைத்து வருகிறது.
இதனிடையில் குடிநீர் முறையாக வழங்கிட கோரி நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தி வரும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி நிவாரணத்தின் சிறப்பு நிதி மூலம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்திற் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் இதேநிலையில் தொடர்ந்தால் அடுத்த வாரம் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரை கூட பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலைதான் இருக்கக்கூடும். இருப்பினும் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையை தவிர்த்திட லாரிகள் மூலம் வழங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் தாண்டவமாடும் நிலையில் மாவட்ட நிர்வாகம் வறட்சி நிவாரண சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்து லாரிகள் மூலம் கூடுதலான வகையில் அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக