Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது:சிவானந்த் திவாரி

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். போலவே மக்களிடையே வெறுப்பையும் மததுவேஷத்தையும் உருவாக்க மோடி முயற்சிக்கிறார்.

நேற்றைய சுதந்திர தின பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவர்கள் எல்லாம் மோடி வந்த வழியில் வந்தவர்களல்ல. அவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்கள்.

காந்தியின் படுகொலையை பற்றி மோடிக்கு நினைவிருக்குமா? என்பது எனக்கு தெரியாது.

ஆர்.எஸ்.எஸ். கடைபிடித்த மததுவேஷமும் பிறமத வெறுப்புணர்வும்தான் காந்தி படுகொலைக்கு காரணம் என குரு கோல்வார்கருக்கு கடிதம் எழுதிய சர்தார் வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்தார்.

இதே போன்ற வெறுப்புணர்வைதான் மோடியும் தற்போது ஏற்படுத்தி வருகிறார்.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் வாழ்ந்த நாட்டில் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி பிரதமராக துடிக்கும் மோடியின் கனவு ஒருபோதும் பலிக்காது.

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடியால் சுதந்திர கொடியை ஏற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சமுதாயத்திற்காக சதா உழைத்த சகாப்தம் கடையநல்லூர் கரீம் அண்ணன் .....! ---- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

ஒரு பச்சைத் துண்டு மடிந்து தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு தொப்பி. சற்று தடித்த மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் நீண்ட பருத்த ஹேண்ட் பேக் இடது பக்க அக்குலுக்குள் அடங்கி இருக்கும். சட்டை, கைலி. சட்டைப் பை உப்பிசமாக புடைத்து இருக்கும். வலது கையில் ஒரு கைக் கடிகாரம்.சற்று பெரிய வட்டத்தில் பதிந்து இருக்கும். ஒரு பக்கம் கொஞ்சமாக சாய்ந்த நிலையில் நடை. இப்படி ஒரு மனிதரை அந்தக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் எங்கேயாவது கண்டால், “கரீம் அண்ணே அல்லது கரீம் வாப்பா” என்று அழைத்து தைரியமாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்.

உடனடியாக கனத்த சாரீரத்தில் “வ அலைக்கும் ஸலாம்” என்ற பதில் நம் காதுகளில் வந்து ரீங்காரமிடும்.

இவர்தான் கரீம் அண்ணன். கரீம் வாப்பா.
வெ.கா.உ.அப்துர் ரஹ்மான் சாஹிபின் தயாரிப்பு இவர்.

நானெல்லாம் பிள்ளைப் பிராயத்திலிருந்து கொஞ்சம் எம்பிக் குதித்து, இளமைப் பருவத்துக்குள்ளே ,மீசையாக பூனை முடி முளைத்திருந்த தருணத்திலிருந்து ,கரீம் அண்ணனை இப்படித் தான் பார்த்து இருக்கிறேன்.

இந்தப் பருவத்தில் அவரைப் பார்க்கும் பொழுதும் ஐம்பது வயது போல இருக்கும். அதற்குப் பின் எந்தப் பருவத்தில் பார்க்கும் போதும் ஐம்பது வயது போலவே தோன்றும். கரீம் அண்ணன் நடமாட முடியாமல் வீட்டில் இருந்த தருணத்தில்தான் ஒரு வயோதிகர் அமர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றியது.

அப்போதும் , “ஸலாம் அலைக்கும் வா வாப்பா” என்ற அழைப்பின் ஓசை அதே பழைய கனத்த சாரீரத்தில் வந்து தழுவும்.

கரீம் அண்ணனுக்கு ஒன்று மட்டும் எல்லாவற்றையும் விட அதிகம் உரிமையாக இருந்தது. அதுதான் உழைப்பு.

கரீம் அண்ணன் அநேகமாக இவ்வுலக வாழ்க்கையை நீத்த பருவத்தில், தொண்ணூற்று மூன்று அல்லது தொண்ணூற்று நான்கு வயது இருக்கலாம்.

சென்னை மெரீனா கடற்கரையில் , உழைப்பாளர் சிலை இருக்கிறது. இது சிற்பிகளின் கற்பனைப் பிறப்பு. ஆனால், உழைப்பின் எதார்த்த சின்னமாக அன்று முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடமாடிய மனிதர் எங்கள் கரீம் அண்ணன்.

கரீம் அண்ணன். நெல்லை மாவட்டத்தின் சந்து பொந்து, இண்டு இடுக்கு, பட்டி தொட்டி, எங்கெங்கும் அலைந்து திரிந்து சமூகப் பணியாற்றிய சாதனை வடிவம்.

நெல்லை மாவட்டத்தின் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிபோடும், செயலராக இருந்தவர். அடுத்து தலைவரான என் சிறிய தந்தையார், பொதிகைக் கவிஞர் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி நகர சபையின் முதல் தலைவர் அ.ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களுடனும் செயலாளராக பணியாற்றியவர்.என்னுடைய தந்தையார் A.K.ரிஃபாய் சாஹிப் அவர்களுடனும் செயலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி நீண்டதொரு, நிரந்திர மாவாட்ட செயலாளர் போல செயலாற்றிய சிறப்பு, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் கரீம் அண்ணனுக்குத் தான் உண்டு.

காயிதே மில்லத், மாநிலத் தலைவர் திருச்சி ஜானி பாய் M.L.C., சிராஜுல் மில்லத் சமது சாஹிப் உள்ளிட்ட தலைவர்களின் மாநில செயற்குழுவில், அசைக்க முடியாத இடம் பிடித்து இருந்தவர் கரீம் அண்ணன்.

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் செயலாளர், தெற்குப்பட்டி நூருல் இஸ்லாம் கல்வி நிலையத்தின் தாளாளர் , நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் நிரந்திர செயற்குழு உறுப்பினர். இப்படி பலதரப்பட்ட சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட பொறுப்பாளர் கரீம் அண்ணன்.

சமூகத்துக்கென்று ஒரு அர்ப்பணிப்பை வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்த அவரை நையாண்டி செய்த நபர்களும் ,இந்த சமூகத்தில் உண்டு.

தென்காசி மரைக்காயர் பள்ளி வாசல் தெரு. இது எங்களின் பூர்வீக தெரு. இந்தத் தெருவில் ஜங்க்ஷன் மாதிரி ஒரு முக்கு (சந்தி) இருக்கும். அங்கே சாயங்காலம் மாலை வேளைகளில் சிலர் ,நின்று கொண்டோ , சாக்கடை பாலத்தின் சுற்றுத் திண்டில் அமர்ந்துக் கொண்டோ பேசிக் கொண்டிருப்போம் .

அப்படி நானும் ஒரு நாள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அந்த முக்கின் மேற்கில் நேரெதிரில் எங்கள் பள்ளிவாசல் இருக்கும்.

அந்தப் பள்ளிவாசல் வலது பக்க சந்து வழியாக , பஜாரில் இருந்து வருபவர் எங்கள் தெருவுக்குள் நுழைவார்கள்.

அப்படி, கரீம் அண்ணன் ஒரு நாள் அஸர் தொழுகைக்கு முன்னே, அவர்களின் அந்தத் தோற்றப் பொலிவோடு அசைந்த நடையில் எங்கள் தெருவுக்குள் வருகிறார்கள். அவர்கள் வருவது , சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிபை பார்க்கத்தான்.

நாங்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் முக்கை ஒட்டி உள்ள பெரிய வீடு , முஸ்தபா சாஹிபுக்கு உரியது. இவர் தாசில்தாராகப் பணிபுரிந்தவர். சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் டைரக்டர்களில் ஒருவராக இருந்த இன்ஜினியர் பீர் முஹம்மது சாஹிபின் மூத்த அண்ணன். நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் செயலாளர். எனக்கு சுற்றி வளைத்து பெரிய வாப்பாமுறை. நெருக்கமாக சொன்னால் , என் தம்பியின் (ஷாஹுல் ஹமீது சாஹிப் மகன்) மனைவியின் தந்தையார்.

இவர் ,அவர் இல்லத்தை விட்டு இறங்கி ,தொழுவதற்கு பள்ளிவாசல் நோக்கி வருகிறார். எதிரே சற்று தூரத்தில் கரீம் அண்ணன் வருவதைப் பார்க்கிறார்.

நான் முக்கில் நிற்பதை கவனித்து விட்டு, என்னிடம்

“ஏய் ஹிலால், எதுக்க என்னடேய் பச்சைத் துண்டு வருது” என சொன்னார்.

அவர் சொன்னதின் பின்னால்தான் நான் எதிரெ பார்த்தேன். கரீம் அண்ணன் வந்துக் கொண்டிருந்தார்.

அந்த உழைப்பின் அடையாளம் லீகின் அசைத்து பார்க்க முடியாத ஒரு தூண், முஸ்தபா சாஹிபுக்கு நையாண்டித் தனமாக ,”பச்சைத் துண்டாக“ தெரிகிறார். அதுவும் என்னிடமே அதைச் சொல்லுகிறார்.

“வாப்பா கொஞ்சம் நில்லுங்கள், எதிரே வருவது பச்சைத் துண்டு என்றால், அந்தப் பச்சைத் துண்டு யாரைப் பார்க்க வருகிறது தெரியுமா? இதோ மூணாவது வீட்டில் இருக்கும் “பச்சைச் சட்டையைத்” தான் பார்க்க வருகிறார். (பச்சை சட்டை – அ.ஷாஹுல் ஹமீது சாஹிப்)”

கரீம் அண்ணன் பச்சைத் துண்டென்றால் உங்கள் தம்பி , ஷாஹுல் ஹமீது சாஹிப் பச்சைச் சட்டை என்பது உண்மையாகும். இனிமேல் ஷாஹுல் ஹமீது சாஹிபை பச்சைச் சட்டை என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருந்தால், கரீம் அண்ணனை பச்சைத் துண்டு என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கடுமையாக நான் சாடிவிட்டேன்.

இந்த நிகழ்வு நடந்த அரைமணி நேரத்துக்குள் எங்கள் ஷாஹுல் வாப்பா வீட்டிற்குள் செய்தி போய் விட்டது. ஷாஹுல் வாப்பா என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.

“நாங்கள் கேள்விப் பட்டது சரி தானா?” என்று கேட்டார்கள்.
“நூறு சதவிகிதம் சரிதான்” என்றேன்.
“ரொம்பச் சரியா சொல்லி இருக்கிற” என ஷாஹுல் வாப்பா சொன்னார்கள்.

கரீம் அண்ணன் வருத்தப்பட்டார்கள்.

“ஹிலால் , அவர் கிட்ட போய் இப்படி நீ பேசி இருக்க வேண்டாம். பேசுறவன் பேசிட்டு போறான். பச்சைத் துண்டுன்னு தான சொன்னார். அது நம்ம கொடி தானே, ஆனால் அவர் எதையும் மறக்க மாட்டார். உனக்கு ஏதாவது இடைஞ்சல் பின்னால் தருவார்.” என அக்கறையோடு கரீம் அண்ணன் வருத்தப் பட்டார்.

அவர் சொன்னது மாதிரிப் பின்னர், எனக்கு சில நிழந்தது. அது இங்கே தேவை இல்லை.

சமூகத்தின் , சேவைகளை நினைத்து பூரிப்பு அடைகிற ஒரு திருக்கூட்டம் இருப்பது போல , சேவையை நையாண்டித் தனம் செய்யும் சின்னக் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது.

கரீம் அண்ணன் உறுதியில், கொள்கைப் பிடிப்பில் , செயல் புரியும் வீரியத்தில் எவருக்கும் சளைத்தவர் அல்லர்.

நெல்லையில் முஸ்லிம் அனாதை நிலையத்தில் கல்வி மாநாடு , சமூக இணக்க மாநாடு என்ற இருபெரும் மாநாடு ,ஒரே மாநாடாக இரு தினங்களில் நடந்தன.

முதல் நாள் மாநாட்டிற்கு A.K. ரிஃபாய் சாஹிப் தலைமை தாங்கினார். சிறப்பு சொற்பொழிவு ஆற்ற யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் சுலைமான் சேட் சாஹிப் M.P வந்திருந்தார். தமிழ் மாநிலத் தலைவர் , சமது சாஹிப் M.P வந்திருந்தார்.

ஆனால் , முஸ்லிம் அனாதை நிலையத்தார், முஸ்லிம் லீகர்களை வரவேற்பதில் ,சற்று கவனக்குறைவாக நடந்துக் கொண்டார்கள். அதாவது, MOC மைதானத்தில் ஒரு மரத்தடிக்கு கீழே தலைவர் சுலைமான் சேட்டுக்கும், தலைவர் சமது சாஹிபுக்கும் இரு சேர்களை போட்டு அமர வைத்திருந்தனர். இது லீகர்கள் மனதைப் புண்படுத்தி விட்டது.

மாவட்டத் தலைவர், அ.ஷாஹுல் ஹமீது சாஹிப், செயளாலர் மேலப்பாளயம் சட்ட மன்ற உறுப்பினர் சாச்சா கோதர்மைதீன் சாஹிப் போன்றோர்களுக்கு மிக எரிச்சலைத் தந்து விட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தலைவர்களிடம் முறையிட்டனர். கரீம் அண்ணன் கிட்ட தட்ட வானத்துக்கும் , பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இறுதியாக தலைவர் சுலைமான் சேட் மட்டும் மாநாட்டில் பேசுவது என்றும் , மற்ற தலைவர்கள் அனைவரும் தென்காசிக்கு சென்று அப்போதுதான் உருவாகி இருந்த ரஹ்மத் நகரில் சென்று முஸ்லிம் லீக் கூட்டமாக நடத்திக் கொள்ளுவது என முடிவெடுத்து ,சுலைமான் சேட் பேசியவுடன் , அவரையும் அழைத்துக் கொண்டு லீக் தலைவர்கள் தென்காசிக்கு புறப்பட்டு விட்டனர்.

அடுத்து அதே மேடையில் கவியரங்கம். பேராசிரியர் மர்ஹூம் கா.அப்துர் கபூர் சாஹிப் தலைமையில் கவியரங்கம் நடக்க இருக்கிறது. இது அண்ணலாரைப் பற்றிய மீலாது கவியரங்கம்.

இதில் நானும் கலந்து கொள்கிறென். ஆனால் லீகர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்து தென்காசிக்கு செல்கின்றனர்.

சமது சாஹிப் என்னைத் தனியே அழைத்து,

“கவியரங்கத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளுங்கள், ஒரு லீகன் என்ன செய்ய வேண்டுமோ அதை கவியரங்கத்தில் செய்துக் கொள்ளுங்கள்.” என சொல்லி சென்று விட்டார்.

இது கரீம் அண்ணனுக்கு தெரியாது. நான் கரீம் அண்ணனிடம் தென்காசிக்கு வரவில்லை. கவியரங்கத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னேன்.

கரீம் அண்ணன் விழிகள், அந்த பருத்த கண்ணாடியையும் தாண்டி என்னை வந்து குத்தின.

“நீ கலந்து கொண்டால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக கூறி விட்டு சென்று விட்டார்.

கவியரங்கம் நடந்தது. நான் கவிதை படித்து முடித்த உடன், கூட்டத்தில், பெரிய கலகலப்பு . அதே நேரத்தில் ஆதரவு ஆரவாரம்.

தலைமை தாங்கிய பேராசிரியர், கபூர் சாஹிபுக்கு அதிர்ச்சியும் மனவருத்தமும். என்னுடைய சின்ன வாப்பா முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் , மிகுந்த கோபம் அடைந்தார். இதனால் , அவர்களும் நானும் , கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.

கவியரங்கத்தில் நடந்தவை மறுநாள் கரீம் அண்ணனுக்கு தெரிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள், குற்றாலம் பயணியர் விடுதி இல்லத்தில் சமது சாஹிபிடம் நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.

கரீம் அண்ணன் அப்பொழுது அங்கு வந்தார். என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

“நம் தலைவர்களை அவமதிப்பவர்களை நாம் அவமதிக்கத்தான் வேண்டும்” என்றார்.

அந்தப் பசுமையை, இதைப் பதியும் பொழுதும் என்னால் உணர முடிகிறது.

கரீம் அண்ணன் லீக் கொள்கையில் எப்பொழுதும் உறுதியாக இருக்கக் கூடியவர்.

சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிப், கரீம் அண்ணன் இரட்டையர் போல ஒருவருக்கொருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தோழைமையும் பிரிவில்லாதது. “விடுதல் அறியா விருப்பு” என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் , மாநில முஸ்லிம் லீக், ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களை இயக்கத்தை விட்டு ஆறாண்டுகள் விலக்கி வைத்தது. இந்த விலக்கல் செயற்குழுவிலும், கரீம் அண்ணன் கலந்து கொண்டிருந்தார்.

அந்த நிமிடத்தில் இருந்து , ஷாஹுல் ஹமீது சாஹிபை ஆறாண்டுகள் கரீம் அண்ணன் பார்க்கவும் இல்லை. அவர்களிடம் பேசவும் இல்லை. எந்தத் தனிப் பகையும் கிடையாது. இயக்கம் விலக்கியதை தனக்கும் விலக்கலுக்குரிய சட்ட விதியாக ஏற்றுக் கொண்டார் கரீம் அண்ணன்.

இன்னும் ஒரு நிகழ்வு சொல்லித் தான் ஆக வேண்டும்.

சென்னை வாலாஜா பள்ளிவாசலில் , காயிதே மில்லத் அடக்கத் தலம் இருக்கிறது. இந்தப் பள்ளிவாயில் சுற்றி உள்ள இடங்கள் ஆற்காடு நவாப் குடும்பத்தினர்களுக்குரியது.

அங்கே ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி பெற்றவர்கள். காயிதே மில்லத் மட்டுமே அங்கே அடக்கமாகி இருக்கும் அன்னியர்.

காயிதே மில்லத்துடைய அடக்கத் தலம் எது என்றே கண்டறியாதபடி நாய்களும் பிற உயிரனங்களும் அங்கு நடமாடிக் கொண்டிருந்தன. அங்கே ஜியாரத் செய்ய சென்ற முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் இந்த நிலைக் கண்டு ரொம்ப வேதனைப் பட்டார்.

சில லீக் தலைவர்களிடம் காயிதே மில்லத் மறைவிடத்தை வெளித் தெரிகிற மாதிரி உயர்த்திக் கட்ட கோரிக்கை வைத்தார்.

அந்த இடம் , ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்களுக்கு உரியது. அங்கே நாம் எதுவும் கட்ட முடியாது என்ற பதில்தான் லீகர்களிடம் இருந்து வந்தது.

ஜமால் முஹம்மது சாஹிப் உடனடியாக ஒரு தனிக் குழு அமைத்து, ஆற்காட்டு இளவரசரைச் சென்று சந்தித்து, அனுமதிப் பெற்று அந்தக் குழுவினரின் செலவில் , உயர்த்திக்கட்டி அடையாளப் படுத்திக் காட்டினார்.

அந்த கபறில்தான், அத்தனை அரசியல் கட்சி காரர்களும் முஸ்லிம் லீகர்கள் உட்பட ஜூன் 5 அன்று , ஒவ்வொரு ஆண்டும் சென்று , துஆவும் மரியாதையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் லீகர்களுக்கும் , முஸ்லிம் அனாதை நிலையத்தினர்களுக்கும் கொஞ்சம் மனமுரண்கள் இருந்தன.

கரீம் அண்ணன் அவர்கள், ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களை சந்தித்து, தன் மனம் நிறைய வாழ்த்து சொன்ன முதல் முஸ்லிம் லீகராக இருந்தார்.

கரீம் அண்ணன் கண்ணோட்டத்தில், காயிதெ மில்லத், முஸ்லிம் லீக், சமூகப் பணி, சதா உழைப்பு இவை மட்டுமே இறுதி வரை அவரிடம் நேர்கோட்டில் இருந்தன.

புதன், 14 ஆகஸ்ட், 2013

மீண்டும் மலர்கிறது குர்ஆனியப் புரட்சி! - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மாண்பு தரும் நோன்பு நிறைவடைந்து, ஆறு நோன்பும் முடிவடைகிறது.

நோன்பு மாதமாகிய ரமளான் முழுவதிலும் பெற்ற மன அமைதியும், நிறைவும், உடல் சுகமும், உள்ளத்தில் பொங்கிய இன்பமும் அடுத்த ரமளான் வரும் காலந்தொட்டு தொடர வேண்டும் என்று ஆசிப்போம்.

தமிழகத்தில் பழக்கத்தில் உள்ள நோன்புக் கஞ்சி, இப்பொதெல்லாம் அரபு நாடுகளிலும், கடல் கடந்த பூமிகளிலும் சிலாகித்துப் பேசப்படுகிறது. நோன்பு காலத்து உணவில் மிகமிகச் சிறந்ததாக நோன்புக் கஞ்சி பெயர் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் நோன்புக் கஞ்சி காய்ச்சப்படுவதும், மாலை நான்கு மணி அளவிலிருந்து அதை நோன்பாளிகளின் வீடுகளுக்கும், பிற சமுதாய மக்கள் கேட்டு வரும் போது அவர்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதும் உலகத்தில் வேறெங்கும் காணாத காட்சி என்றால் அது மிகையல்ல.

நோன்புக் கஞ்சிக்கு அரசாங்கமே சலுகை விலையில் குருணை அரிசி வழங்குவது தமிழகத்தில்தான். இதுபோன்ற தொரு நடைமுறை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகவோ, உலகில் எந்தவொரு நாட்டிலும் உள்ளதாகவோ, நாமறிந்தவரை தெரியவில்லை. இப்படியொரு நல்ல பாரம்பரியத்தைத் தமிழகத்தில் தோற்றுவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதையும், அதை ஆரம்பி வைத்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதையும் நினைத்துப் பார்க்கும் போது நமக்கு ஒரு பெருமை தான்.

கடந்த 11-ஆம் தேதி தஞ்சை நகரில் அதன் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது ஹாஜியார் குடும்பத் திருமண விழாவிற்குச் சென்றிருந்தோம். திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம். பாரூக், மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் ஜி.எம். ஹாஷிம், தஞ்சை மாவட்டச் செயலாளர் லயன் வழுத்தூர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் பல சகோதரர்கள் தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தோம்.

மஸ்ஜிது நஃபில் தொழுதுவிட்டு வெளியே வந்தபோது நோன்புக் கஞ்சி தேக்ஷா அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தது. மஸ்ஜிது மோதினாரும், நோன்புக்கஞ்சி காய்ச்சுபவரும் அங்கிருந்தனர். ரமளான் நோன்பு முடிந்து பெருநாளும் கொண்டாடி முடிந்து விட்டதே என்று கூறி, தேக்ஷாவில் என்ன வேகிறது? என்று கேட்டோம்.

மோதினார் கூறினார்: ஆறு நோன்பு திறப்பாளிகள் சற்றொப்ப 60/ 70 பேர் வருவார்கள். அவர்களுக்கான நோன்புக்கஞ்சி என்றார். ஆறு நோன்பு நோற்பது என்பதே ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. வயது முதிர்ந்தவர்கள் ரமளான் நோன்புடன் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பார்கள். குறிப்பாக, பெண்கள் இதில் அதிகம் நோன்பு இருப்பார்கள்.

ஷவ்வால் மாதத்திற்கு முஸ்லிம் பெண்கள் சூட்டியுள்ள அழகிய பெயர் `ஆறு நோன்புப்பிறை’ என்பதுதானே. ஆறு நோன்பு திறப்பதற்கு மஸ்ஜிதில் நோன்புக் கஞ்சி ஏற்பாடு என்பது இப்பொழுதுதான் தெரிந்தோம். வேறு எங்கெங்கெல்லாம் இப் பழக்கம் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்த ஆண்டு ரமளானில் முக்கியமான நிகழ்வு எங்களுடைய கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த இஃப்தார். அதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் வந்திருந்தனர். இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிற அரசியல் கட்சியினரை - குறிப்பாக தி.மு.க. தலைவரை அழைக்கும் மரபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் முதன் முதலில் துவக்கியது. அது சில ஆண்டுகளாக தொடராமல் இருந்தது. இந்த ஆண்டு அந்த மரபை புதுப்பித்தோம். டாக்டர் கலைஞரும் வந்தார் - பங்கேற்றார் - பெருமகிழ்ச்சி கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு சாதனை - அது செய்துள்ள தியாகம் - சமுதாயத்திற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்றுக் கொடுத்த நன்மைகள் பற்றியெல்லாம் விரிவாக பேசி இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி முஸ்லிம் சமுதாயம் ஆய்வுசெய்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கலைஞர் - தளபதி பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை உருவாக்கி விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை வந்தது. எது நடந்தாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி - அதில் கலைஞர் பங்கேற்று ஆற்றிய உரை எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கும் நிகழ்வாகவே அமைந்து விட்டது. சூரிய ஒளிக்கு முன் அகல் விளக்குகளின் வெளிச்சம் எடுபடாது என்பது உண்மைதானே.

வந்துபோன ரமளான் மாதத்தில் பல புதிய அம்சங்கள் ஆங்காங்கே தோன்றியிருந்தன. மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலத்தில் மார்க்க அறிஞர்களின் சிறப்பான சொற்பொழிவுகள் நிகழ்ந்துள் ளன.

சென்னை விருதுநகர் ஹோட்டலில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 30 நாட்களும் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு விலையில்லா - விலை மதிப்புள்ள உணவு வழங்கப்பட் டுள்ளது. அதன் முதல்வர் இப்றாஹீம் அவர்கள் இறைப் பொருத் தம் வேண்டி பல காலமாக இதனை செய்து வருகிறார். அதைப் பின்பற்றி இந்த ஆண்டு நோன்பின் கடைசி பத்து நாட்கள் பல பள்ளிவாசல்களிலும், திருமண மண்டபங்களிலும் இலவச ஸஹர் ஏற்பாடு நடந்துள்ளது.

சென்னையில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு உழைத்து வரும் உ.பி., அஸ்ஸாம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வாலிப முஸ்லிம்கள் இந்த வசதியை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

வருங்காலங்களில் மஸ்ஜிதுகளில் நோன்பு திறப்பதற்கு எப்படி எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்படுகிறதோ அதைப் போன்று ஸஹர் உணவுக்கும் ஏற்பாடு செய்வது கட்டாய மாகலாம்.

முன்பெல்லாம் ஊரில் பல மஸ்ஜிதுகள் இருந்தாலும் ஏதோ ஒரு பள்ளிவாசலில் ஓரிருவர்தான் `இஃதிகாப்’ என்னும் அந்த கடைசி பத்து நாள் துறவு வாழ்வை மேற்கொள்வர். ஊருக்கு ஒருவராவது இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதை நிறைவேற்றி வந்தனர். ஆனால், இப்பொழுது பள்ளிகள் தோறும் இஃதிகாப் இருப்போர் பெருகியிருக்கின்றனர்.

எல்லா பள்ளிவாசல்களிலும் திரைகள் அலங்கரித்தன. அப்படி யிருந்தவர்கள் பலர் இளைஞர்களாக இருந்தனர் என்பது குறிப் பிடத்தக்க செய்தியாகும்.

சென்னையில் குர்ஆன் பாடப் போதனைகள் பல மஸ்ஜிது களில் நடக்கின்றன. அரபி மொழியை அறிந்து கொள்ளும் வகையிலும், குர்ஆன் வசனங்களை ஓதியும் படித்தும், அவற்றின் அருத்தத்தைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த குர்ஆன் பாட போதனை நடக்கிறது. குர்ஆன் ஷரீபை ஓதும்போதே அதனுடைய பொருளையும் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் அதைவிட ஓர் அற்புத வாழ்க்கை வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் ஷரீப் `வஹி’ மூலம் வந்தது. அதனை ஸஹாபா தோழர்களுக்கு ஓதி காட்டினார்கள். நபி தோழர்கள் தங்கள் தாய் மொழியான அரபியில் வந்த குர்ஆனை ஓதியும், படித்தும் அதன் பொருளை தெரிந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வில் மிகப் பெரும் மாற்றம் - புரட்சி - எழுச்சி ஏற்பட்டது.

உலக வரலாற்றில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப் போல் வேறு எந்த காலத்திலும், வேறு எந்த புரட்சியும் நடக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அந்த குர்ஆனிய புரட்சி இடைப்பட்ட காலத்தில் தொடராமல் ஒரு தொய்வு ஏற்பட்டது. எதனால் என்றால், குர்ஆனை அருத்தம் தெரிந்து ஒதாமலும், உணராமலும் இருந்து விட்டதுதான்.

இப்போது அந்த மதீனா காலத்து வரலாறு மலரத் துவங்கியி ருக்கிறது. குர்ஆனியப் புரட்சி மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்படும் காலம் கனிந்து வருகிறது என்று சொல்ல வேண்டும்.

சுருங்கச் சொன்னால், சென்றுள்ள ரமளான் மாதம் - அதில் நோற்ற நோன்பு - அதன் சீரிய அம்சங்கள் யாவும் புதியதொரு புரட்சிக்கு வித்தாகி இருக்கிறது.

குர்ஆனியப் புரட்சி தொடர்ந்தால் குவலயத்தில் அமைதி - சாந்தி - சமாதானம் - நல்லிணக்கம் - நல்வாழ்வு நிறையும்! போர் இல்லாத உலகப் புரட்சி தோன்றும் என்பதில் ஐயம் ஏது?

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

111 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது :தொடர்ந்து நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை

சென்னையில் 111 ஆண்டு காலமாக இயங்கி வந்த தமிழகத்தின் ஒரேயொரு உர்தூ ஆசிரியர் பயிற்சி நிறுவனமான உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது முஸ்லிம்களி டையே மிகப் பெரும் அதிர்ச்சி யலைகளை ஏற்படுத்தியுள் ளது. இப்பயிற்சிப் பள்ளியை திறந்து மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுவிஷயத்தில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய பரிகாரம் காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ. அஹமது சாஹிப், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் இன்று காலை புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1902-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக்கப்பட்டது. தமிழ்நாட்டி லேயே ஆண்களுக்கான ஒரே யொரு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக இந் நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வந்தது.

ஆண்டுக்கு 40 மாணவர் கள் பயிற்சி பெற்று வெளியேறி வந்த நிலையில் கடந்த 10 வருட காலமாக இதன் முக்கியத்துவம் படிப் படியாக குறைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இப் பயிற்சிப் பள்ளிக்கான உர்தூ மொழி, கணிதம், அறிவியல், மனோதத்து வம், ஆங்கிலம், சமூக அறிவியல் உள்ளிட்ட 7 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்பட வில்லை.

இதைவிட மிகப் பெரிய கொடுமை என்னவெனில், உர்தூ மொழியே தெரியாத தெலுங்கு ஆசிரியர் இப் பயிற்சிப் பள்ளிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார். பயிற்சியளிப் பதற்கு உரிய விரிவுரையாளர் கள் இல்லாததால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டினர். தமிழக அரசின் முழு நிதியுதவியில் நடத்தப்பட்ட இப் பயிற்சிப் பள்ளியை மூட முடிவெ டுத்த அரசு அதிகாரிகள் கடந்த இரண்டு வருட காலமாக திட்டமிட்டு காய் நகர்த்தினர். முதல் கட்டமாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கையாக இப் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பித் திருந்த 12 மாணவர்களின் விண்ணப்பங்களையும் ஏதேதோ காரணங்களை சொல்லி நிராகரித்தனர். இது மட்டுமின்றி பயனின்றி கிடக் கும் இந்த இடத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பெற் றோர் - ஆசிரியர் சங்கத்தின் மனு ஒன்றையும் அவர்கள் பெற்றனர்.

இவ்வளவையும் செய்து விட்டு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேரவில்லை என காரணம் காட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன் உத்தரவின்பேரில் இப் பள்ளி மூடப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இச் செய்தி குறித்து உர்தூ டீச்சர்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பாளர் ஒசூர் ஹபீபுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வாணியம் பாடி நரி முஹம்மது நயீம் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத் தின் கவனத்துக்கு கொண்டு வந்த னர்.

தலைமையின் அறிவுறுத்த லுக்கிணங்க மாநிலச் செயலா ளரும், மணிச்சுடர் செய்தியாசிரி யருமான காயல் மகபூப், செய்தி யாளர் மகபூப் ஷரீப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அமா னுல்லாஹ், தமிழ்நாடு உர்தூ ஸ்கூல் டீச்சர்ஸ் அசோசியே ஷன் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ. அப்துல் அஜீஸ் மற்றும் அப் பயிற்சி நிறுவனத் தில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் சுற்று வட்டார பொதுமக்களிடையே தகவல் களை திரட்டினர்.

இப்பயிற்சி பள்ளி மூடப் பட்டது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கும், மொழிவழி சிறுபான்மையின ருக்கும் செய் யப்பட்ட மாபெரும் துரோகம் என பொது மக்கள் கருத்து தெரி வித்தனர்.

பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டில் உர்தூ மொழி பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது முஸ்லிம்களை வேதனைப்படுத்தி வரும் நிலையில் அதன் ஆசிரியர் பயிற்சி நிறுவனமே மூடப்பட் டுள்ளது என்பது பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப் புரம், ஈரோடு, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங் களில் உர்தூ மொழி பள்ளிக் கூடங்கள் 350-க்கும் மேல் உள்ளன. சுமார் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இந்த பள்ளிக்கூடங்களில் 150 ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

அரசின் நிதியுதவியில் நடத்தப்பட்ட பள்ளிகள் எல்லாம் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில் தனியார் நிர்வாகத்தின் மூலம் நடத்தப் படும் சுமார் 50 பள்ளிகளே சிறப்பாக செயல்படுகின்றன. இப் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் மூலமே நிரப்பப் பட வேண்டும். ஆனால் அது மூடப்படுவது அனைத்து உர்தூ பள்ளி களையும் மூடுவதற்கான முன் னோட்ட நடவடிக்கையாகும்.

எனவே, தமிழக அரசு மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மை யினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு மூடப்பட்ட உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை மீண்டும் திறந்து தொடர்ந்து நடத்த ஆவன செய்ய வேண் டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இ.அஹமதுடன் அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்திப்பு 
இதனிடையே, இன்று காலை புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணைய மைச்சரும், தேசியத் தலைவரு மான இ.அஹமது சாஹிபை தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப் பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்தித்து இதுபற்றி எடுத்துக் கூறினார். உர்தூ மொழி வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உர்தூ மொழி வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது கோரிக்கை வைத்து அது மத்திய அரசால் ஏற்கப்பட்டுள் ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் ஒரு பயிற்சிப் பள்ளியை மூடுவது என்பது ஏற்க முடியாதது. எனவே, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சகத்தின் மூலம் தமிழக அரசுக்கு உரிய வேண்டுகோள் விடுக்க இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய மதரஸா மேம்பாட்டு வாரிய உறுப்பினரு மான கே.ஏ.எம்.முஹம்மது அபூ பக்கர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜுவுக்கு அனுப்பி யுள்ள அவசர செய்தியில் இதுவிஷயத்தில் தலையிட்டு உர்தூ பயிற்சி பள்ளி தமிழ்நாட் டில் தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவிகள் அச்சம் 
ஆண்களுக்கான உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்ட நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடத்தப்படும் சென்னை ராயப்பேட்டை ஹோப்பாட் வளா கத்தில் உள்ள உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் மூடப்பட்டு விடும் என்ற அச்சம் அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் உர்தூ மொழியி லான மாணவிகளுக்கு ஒன் றாக பயிற்சியளிக்கப்படுவ தால் இப்பள்ளி காப்பாற்றப் பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழக அரசு கல்வி உதவித் தொகை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி./எம்.பி.சி./டி.என்.சி. மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

http://www.tn.gov.in/announcements/announce_view/38917 இணையதளத்தில் விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன...

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நெல்லை தந்த சமுதாய துருவ நட்சத்திரங்கள்! ---- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

1947 க்கு பின்னர் தமிழகத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் கிளைகள் அதாவது பிரைமரிகள் பரவலாகப் பெருகி வந்தன என்றாலும் இந்தப் பரவல் சாதாரணமாக நடந்து விடவில்லை.

இந்தப் பரவலுக்கு பலதரப்பட்ட மனிதச் செம்மல்களின் தியாக வரலாறு , சரித்திர மேனியில் தழும்புகளாகக் கிடக்கின்றன. இந்தத் தழும்புகள் ஆறிப் போன புண் என அலட்சியப் படுத்தக் கூடிய ஒன்று அல்ல. மீண்டும் மீண்டும் நினைவு கூரத்தக்க மாட்சிமை கொண்டவை.

 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக ஆளுமையை அந்தக் காலகட்டத்தில் மூன்று மாவட்டங்கள்தாம் முன்னெடுத்து சென்றன. அவற்றில் முதன்மையானது நெல்லை மாவட்டம் , அடுத்து தஞ்சை மாவட்டம், அதைத் தொட்டு வேலூர் மாவட்டம்.

தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் பிரைமரிகள் தவழத் தொடங்கி இருந்தன. மேற்சொன்ன மூன்று மாவட்டங்களில் முஸ்லிம் லீக் இளமை கம்பீரத்தோடு எழுந்து நின்றது.

நெல்லை மாவட்டம், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களாகப் பிரிந்து இருக்கின்றன. அன்றைய நெல்லை மாவட்டம் இணைந்திருந்த பெரிய ஒரே மாவட்டம் ஆகும்.

மாவட்டத்தினுடைய லீக் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப்.

மு.ந. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே இஷா அத்துல் இஸ்லாம் என்ற ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கி அதன் தலைமையினையும் ஏற்று இருந்தார்கள்.

மு.ந. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே இஷா அதுல் இஸ்லாம் என்ற ஒரு சமூக அமைப்பையும் உருவாக்கி அதன் தலைமையினையும் ஏற்று இருந்தார்கள்.

நெல்லை மாவட்டத்தினுடைய செயலாளர் என்று நினைவு படுத்தி பார்க்கும் போது முதன்முதலில் நினைவுவெளியில் வெ.கா.உ. அப்துர் ரஹ்மான் சாஹிப்தான் பளீரென்று முன் வந்து நிற்பார்கள்.

மாவட்டத் தலைவர். அதே நேரத்தில் ,மாநில முதல் துணைத் தலைவர். மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிப். மாவட்டத்தினுடைய செயலாளர் கடையநல்லூரை சேர்ந்த வெ.கா.உ.அப்துர் ரஹ்மான் சாஹிப் . இந்த இரு அப்துர் ரஹ்மான் சாஹிப்களும் ஆற்றிய சமூகப் பணிகளை மறந்து விட்டால் அது சமுதாயத்தின் குற்றம் நிறைந்த பாபமாகி விடும்.

தலைவர் மு.ந.அ அவர்கள் வடிவத்தில் குள்ளமானவர்கள். தேக ஆரோக்கியத்தில் வலிமையானவர்கள். வயோதிகம் அவரைத் தொட்டிருந்த போது கூட சிந்தனை ஆற்றலிலும் தேக வலிமையிலும் அவர்களை ஒத்த வயோதிகர்கள் வேறு எவரும் அரிதாக வேண்டுமானால் இருக்கலாம்.

கடையநல்லூர் வெ.கா.உ.அ அவர்கள் நெடு நீண்ட வடிவம் கொண்டவர்கள். உயரத்திற்கேற்ற பருமன் சார்ந்திருந்தவர். நல்ல நிறம். முகத்தில் நாடியிலே அந்த தாடியின் அழகை இன்று நினைத்தாலும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.கருத்த , உயர்ந்த வட்ட வடிவ தொப்பி ,அது துருக்கி தொப்பி போல் இருக்கும் ஆனால் தொப்பியில் குஞ்சம் இருக்காது.

மாவட்டத் தலைவரும் , செயலாளரும் கடைபிடித்த ஒற்றுமைக்கு இன்று கூட ஒரு எடுத்துக் காட்டை காட்டி விட முடியாது.

வெ.கா.உ.அ அவர்கள் பள்ளிப் படிப்பு அதிகம் இல்லாதவர். ஆனாலும் அவரின் பேச்சாற்றல் மாஸ்டர் டிகிரி படித்தவர்களையும் நிலை குலைய செய்து விடும். தனக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் உதாரணங்கள் இன்னொருவரால் தடுத்தோ, மறுத்தோ பேச முடியாமல் அவரைத் திக்பிரமை அடைய வைக்கும்.

செயலாளர் வெ.கா.உ.அ. அவர்கள், தலைவர் மு.ந.அ அவர்களிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து காட்டி விட முடியாது. இஷா அத்துல் இஸ்லாம் சபைக்கும் இந்த இருவருமேதாம் தலைவர் ,செயலாளர்.

இந்த இருபெரும் தலைவர்கள் மீதும் காயிதே மில்லத் மேன்மையான மதிப்புகள் வைத்து இருந்தார்கள்.

மாவட்டம் எங்கும் இளைஞர்களைப் போல முதிய தலைவரும், முதுமையைத் தொட்டுக் கொண்டிருந்த செயலாளரும் சதா பயணப் பட்டு உழைத்து கொண்டே இருந்தார்கள்.

மாவட்டத் தலைவர் மு.ந.அ அவர்கள் அதிகப் படியான ஆன்மீகப் பிடிப்பு உள்ளவர்கள். இறை அச்சம் மட்டுமே அவர்களின் அச்சத்திற்குரிய பெரும் ஆற்றல் கொண்டது. வேறு எவற்றைப் பற்றியும் அச்சம் துளியும் இல்லாதவர்கள்.

தலைவர் மு.ந.அ அவர்கள் தன் வாழ்நாளில் இறுதி வரை ,அலோபதி மருத்துவத்தை ஏற்று கொள்ளாமல் இருந்தார்கள்.அவர்களின் கிட்டத்தட்ட் எழுபதாவது வயதில் காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

ஆனாலும் தன் உடம்பில் எந்த வித இன்ஜக்ஷனும் போடாமல் பண்ண வேண்டும் என அடம் பிடித்தார்கள்.அதுவரை தன் வாழ்நாளில் இன்ஜெக்ஷன் போட்டதே இல்லை அவர்கள்.

தலைவர் மு.ந.அ அவர்கள் முடிவெடுத்து விட்டால், அதை மாற்றக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றிரண்டு பேர்கள்தாம்.

காட்ராக்ட் ஆபரேஷ னை செய்ய வற்புறுத்தவும் ,இந்த ஒருமுறை இன்ஜெக்க்ஷனை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவும் செய்ய சென்னையிலிருந்து காயிதே மில்லத் அவர்கள் நெல்லைக்கு வந்தார்கள்.

தலைவர் மு.ந.அ விடம் காயிதே மில்லத் சொன்னவுடனே எந்த மறுப்பும் சொல்லாமல் ,

"அப்படியென்றால், பிரதர் (இப்படித் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வர்) சரி "

என்று உடனே சம்மதித்து விட்டார்கள்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அதற்குப் பின் கண்ணாடி போட்டுக் கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ,ஹிந்து பத்திரிகைகளை வரிவிடாமல் படிக்கத் தொடங்கினார்கள்.

இந்த அறுவை சிகிச்சை மதுரையில் நடக்கும் தினத்தில் , காயிதே மில்லத் தலைமையில் முஸ்லிம் லீக் பொதுக் குழு கூடியது. அந்த பொதுக் குழுவில் காயிதே மில்லத் அவர்கள் தலைவர் மு.ந.அ அவர்கள் கண் அறுவை சிகிசைக்காககவும் , அவர்களின் உடல் நல ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய பொதுக்குழுவை கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது அந்த பொதுக்குழுவில் காயிதே மில்லத் அவர்கள் பயன்படுத்திய சொற்பிரயோகத்தை இங்கு பதிவு செய்கிறேன் .

"தென்காசி பெரிய முதலாளி ,பிரதர் மு.ந.அ அவர்கள் நம் காலத்தில் நம் கண்முன் நடமாடிக் கொண்டிருக்கும் ஒலியுல்லாஹ் என இறைவன் கருணையினால் நான் அறிந்திருப்பதை சொல்லுகிறேன்." எனப் பதிவு செய்தார்கள்.

மு.ந.அ அவர்களின் ஆன்மீகப் பயணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளலாம். இங்கே அவர்களின் அரசியல்,சமூகப் பணிகளை தொடர்ந்து பேசலாம்.

இந்திய விடுதலைக்கு முன் , மு.ந.அ அவர்களின் தம்பி மு.ந.முஹம்மது சாஹிப், இவ்விருவரின் வயோதிகத் தாயார், இன்னும் ஒரு சில பணியாளர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல ஏற்பாடாகியது.

இந்தக் காலகட்டத்தில் நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஒரு பகுதியில் ,முஸ்லிம் ஜமாஅத்தினர் ஒருவருக்கொருவர் இடையே கருத்து முரண்பட்டு தாக்கிக் கொண்டார்கள்.

முஸ்லிம்களுக்கு இடையே ஒரு சின்ன கலவரம் உண்டாகிவிட்டது.மு.ந.அ அவர்கள் அங்கே சமாதானப் படுத்த புறப்பட்டு சென்று விட்டார்கள்.

தாயாருடனும் ,தம்பியுடனும், பிற பணியாளருடனும் ஹஜ்ஜுக்கு புறப்பட வேண்டிய நாள் வந்து விட்டது. நெல்லையிலிருந்து சென்னை சென்று, சென்னையிலிருந்து பம்பாய் போய் கப்பலில்தான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும்.

அந்த நேரத்தில் ஹஜ்ஜை கடைசிக் கடமை எனக் கருதியதை விட, அது ஒரு கடைசிப் பயணம் என்றே அனைவரும் கருதிக் கொள்வார்கள். பயணம் அவ்வளவு இடைஞ்சலாக, சிரமமாக இருக்கும்.

மு.ந.அ அவர்கள், தாயாரிடம்
“நீங்கள் அனைவரும் புறப்படுவது போல புறப்பட்டு சென்று விடுங்கள். அங்கே போய் துஆ செய்யுங்கள். பின் ஒருமுறை எனக்கு ஹஜ்ஜைக் கடமையாக்க இறைவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஹஜ்ஜா? சமுதாயப் பிளவிற்கு தீர்வா? என்ற நிலை ஏற்பட்டால் என் கடமை சமுதாயப் பிளவைத் தீர்ப்பதில்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்”
என தாயாரிடம் பரிவுடன் பேசி அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி விட்டார்கள்.

விடுதலைக்கு பின் 1962 அல்லது 1963 ஆம் ஆண்டுகளாக இருக்கலாம். மு.ந.அ அவர்களின் தம்பி , மு.ந.முஹம்மது சாஹிப் அவர்கள், அவருடைய மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் , ஜமால் முஹம்மது சாஹிபின் மனைவியார், மு.ந.அ அவர்களின் ஒரே மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம் அவர்கள் , இவர்களுக்கு சமையல் பொறுப்பை செய்துக் கொடுக்க பணியாளர், வடகரை சமர்த்தன் அவர்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டனர். அப்போதும் மு.ந.அ அவர்களையும் சேர்த்தே டிக்கெட் தயார் செய்யப் பட்டது.

அந்த நேரத்திலும் அல்லாஹ் நாட்டம் வேறு விதமாக இருந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு பக்கத்தில் ஒரு ஜமாஅத்தார், இரு பிரிவாக மோதிக் கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர். நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசலை மூடி விட்டது. தொழுகைப் பள்ளி மூடப்பட்டது அறிந்தவுடன் ,மு.ந.அ. அவர்கள் அங்கே சென்று விட்டார்கள்.
ஜமாஅத்தார்களை அழைத்து பேசிப் பார்த்தார்கள். அவர்கள் உடன்படுவதாக தெரியவில்லை. மறுநாள் சஹர் நேரத்தில் சஹரை முடித்துக் கொண்டு , நோன்பு வைத்து, மூடப்பட்ட பள்ளிவாயிலின் படிக்கட்டில் போய் அமர்ந்து விட்டார்கள்.

ஊர் ஜமாத்தார் கூடினர்.அவர்களைப் பார்த்து
"நீங்கள் சமாதானமாகி பள்ளி வாசலைத் திறக்க நீதிமன்றத்தில் அனுமதிப் பெற்று மீண்டும் தொழுகையை இங்கே நிறைவேற்ற முயற்சி எடுக்கும் வரையில் நான் இந்தப் பள்ளிவாசல் படிக்கட்டில் அமர்ந்து நோன்பு இருப்பேன்"
என்று கூறிவிட்டார்கள்.

மு.ந.அ. அவர்களின் பிடிவாதம் ஊரறிந்த ஒன்று. ஒன்றிரண்டு நாட்களிலே ஜமாஅத் ஒன்றிணைந்து வழக்கை வாபஸ் வாங்க முயற்சித்தனர். இந்த முறையும் மு.ந.அ அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அந்த குடும்பத்தில் மீதமுள்ளவர்கள் ஹஜ்ஜு செய்தனர். மு.ந.அ அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியவில்லை.

இதற்கு பின் ஹஜ்ஜு செய்ய மு.ந.அ அவர்கள் நினைத்தார்கள் என்று கூட துணிந்து சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்கள் ஹஜ்ஜு செய்யவே இல்லை.

இந்த இடத்தில இன்னொரு தகவலும் சொல்லுகிறேன். தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் பல கோடிகளை சம்பாதித்து (இந்திய விடுதலைக்கு முன்பே) தன் சம்பாத்தியத்தில் 75 சதவிகிதத்தை சமூக நலனுக்காகவும் , கல்விப் பணிக்காகவும் வாரி வழங்கிய செய்யது C.அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்கள் தன வாழ்நாளில் , ஹஜ்ஜு செய்ய புறப்பட்டு ஆம்பூரில் இருந்து சென்னை வந்தார்கள்.

ஆனால் சென்னையில் கடுமையான நோய் வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்கள்.

C.அப்துல் ஹக்கீம் பெயரில் திருவல்லிக்கேணி ஹைரோட்டில் அவர் நிறுவிய மேல்நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் C.அப்துல் ஹக்கீம் ஹிந்து முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி ,இன்றும் தன் கல்விப் பணி யை ஆற்றிக்கொண்டிருக்கிறது. ஆம்பூரில் கல்வி நிலையம், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிர் புறத்தில் பயணிகள் தாங்கும் முஸாபர்கானா உருவாகப் பங்களிப்பு என சமூகப் பணியாற்றிய வள்ளல் C.அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்களுக்கும் ,எல்லோரையும் போல ஹஜ் ஜை ஏனோ நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது.

ரகசியம் இறைவனுக் கே சொந்தமானது.

தலைவர் மு.ந.அ அவர்களும் ,செயலாளர் வெ.கா.உ.அ அவர்களும் பலப்பல எதிர்ப்புகள் ,அச்சுறுத்தல்கள் போன்ற இவைகளை துரும்பு அளவு கூட சட்டை செய்யாமல் சமூகப் பணி ஆற்றியவர்கள்.

நெல்லை மாவட்டத்தில் வாழக் கூடிய வீரம் செறிந்த ஒரு சமூகம் என குறிக்கப்படும் அந்த சமூகத்தவர்கள் ,இவ்விருவரையும் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை கொல்லுவதற்கான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள். அப்போதும் தளர்ந்து விடாமல் அந்த சமூகத்தவர்கள் வாழுகின்ற பகுதிக்கே சென்று இயக்க ,சமூக பணிகளைச் செய்யும் துணிச்சல் பெற்று இருந்தார்கள்.

ஒருமுறை சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து நெல்லைக்கு ,நெல்லை எக்ஸ்ப்ரஸில் பயணம் புறப்பட்டார்கள் இந்த இருவரும். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எல்லாம் கிடையாது.

ரயில் நிலையத்தில் ரயில் கோச்சில் உள்ள இருக்கையில் வெ.கா.உ.அ அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். பிளாட்பாரத்தில் மு.ந.அ. அவர்களும் இயக்கத் தொண்டர்களும் நின்று இருந்தனர்.

மு.ந.அ அவர்கள் தன் பக்கத்தில் நின்றிருந்த மகன் A.K.ரிபாயிடம் மணி கேட்டார்கள் .அவர் மணி சொன்னார்.அது மக்ரிப் நேரம். உடனே “மேற்கு எது?” என்று மு.ந.அ கேட்டார்கள்.

திசை காட்டியவுடன் தோளில் இருந்த துண்டை பிளட்பரத்தில் விரித்து தொழுகையை ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்களை தடுக்க முடியாது. நெல்லை எக்ஸ்பிரஸ் சரியாக புறப்படும் நேரம் அது. நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டும் விட்டது.

வண்டிக்குள் வெ.கா.உ.அ. அவர்கள். பிளாட்பாரத்தில் மு.ந.அ. அவர்கள். வண்டி எழும்பூரைத் தாண்டி சேத்துப்பட்டுடைய ரயில்வே கேட் (பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதி) அருகில் திடீரென்று நின்றுவிட்டது.

பிளாட்பாரத்தில் மு.ந.அ வின் தொழுகை நடந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் பின்னோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே புறப்பட்ட பிளாட்பாரத்திற்கு உள்புகுந்து நிற்கிறது. ரயில்வே துறையினர் ஏதோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மு.ந.அ வின் மக்ரிப் தொழுகை அவருடைய பிரார்த்தனையோடு நிறைவு பெற்று அதிலிருந்து எழுந்து நிற்கிறார்கள்.

முதலில் வெ.கா.உ.அ அமர்ந்திருந்த கோச் எந்த இடத்தில நின்றதோ அதே இடத்தில நிற்கிறது.

மு.ந.அ. அவர்கள் நிதானமாக உரிய கோச்சில் ஏறி இருக்கையில் அமருகிறார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓசை எழுப்பி புறப்படுகிறது. மு.ந.அ அவர்களை திரும்ப வந்து ஏற்றி செல்வதற்கே வந்தது போல் ,அவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் வண்டி புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்வு எதுவும் மு.ந.அ அவர்களுக்குத் தெரியாது என்று நாங்கள் கருதிக் கொண்டோம்.

வெ.கா.உ.அ. அவர்கள் வண்டிக்குள்ளே மு.ந.அ அவர்களிடம் இந்தச் செய்தியை சொன்னார்களாம்.அதற்கு மு.ந.அ அவர்கள் ,எந்தச் சலனமும் இல்லாமல் ,

"அல்லாஹ் பெரியவன்" என்று கூறி வழக்கம் போல ஓதுதலை தொடங்கி விட்டார்களாம். இந்த நிகழ்வை வெ.கா.உ.அ அவர்கள் பின்னர் அடிக்கடி சொல்லிக் காட்டுவார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் ,இந்த நிகழ்வுக்கு முன் நடந்ததே இல்லையாம். இதற்கு பின் இன்று வரை நிகழ்ந்திருக்கிறதா? என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

இது நடந்திருக்குமா? என்ற கேள்விக்கு ஒரே பதில்தான். நடந்தது நடந்தது நடந்தது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமான தொண்டன் -------- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகம் 8,மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை-1

இந்த கட்டிடம் சமுதாயத்தின் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் உரிமை நிரம்பிய உணர்வோடு கலந்த அற்புத வரலாறு கொண்டது.

முகம்மது இஸ்மாயில் என்கின்ற வணிகர் குடும்பத்திற்கு உரிமையான கட்டிடம் இது.இந்த முஹம்மது இஸ்மாயில் குடும்பம் உருதை தாய்மொழியாக கொண்ட குடும்பம்.இந்த குடும்பத்தினர் செய்து வந்த வணிகம் ஏனோ தெரியவில்லை பலத்த வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டது.கடன் தலைக்கு மேல் கடந்து பரவியது.

மாற்று வழியாக வங்கியில் வீட்டை அடகு வைத்து தொழில் நடத்தினர்.அதிலும் சேதமானது.வட்டி கட்ட முடியாத நிலையில் வீடு கடனில் மூழ்கி விட்டது.மூன்று மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு அது.வங்கி இறுதியில் வீட்டை ஏலத்திற்கு விட்டது.

முஸ்லிம் லீக் மாநில மாநாடு போட்டு ஒரு தொகையை கை இருப்பில் வைத்திருந்தது. இந்த இல்லத்தை ஏலத்திற்கு எடுத்தது.காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் பெயரில் தான் இந்த வீடு உரிமையாக்கப் பட்டது.


 வங்கியில் இருந்து ஏலத்திற்கு எடுத்த வீட்டை கையகப் படுத்த முஸ்லிம் லீகின் சார்பாக காயல் பட்டினம் பி.ஏ .காக்கா, A .K .ரிபாய் சாஹிப் ,இஸ்மாயில் கனி சாஹிப் ,இளையனன்குடி P .N .I .அபுதாலிப் சாஹிப் ,காயல் ஹம்ஸா மற்றும் இன்னும் சிலர் அங்கே சென்றனர்.

சட்ட விதிப் படி அந்த கட்டிடத்தில் உள்ள எந்த பொருளும் முந்தைய உரிமையாளருக்கு சொந்தம் ஆகாது.அங்குள்ள எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து செல்லக் கூடாது.

ஆனால் காயிதே மில்லத் இப்படி சொல்லி அனுப்பி இருந்தார்கள் ,
"அங்கே வாழ்ந்து தாழ்ந்து போனவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் மன வேதனைகளை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் மனம் நம்முடைய எந்தச் செய்கையாலும் புண்பட்டு விடக் கூடாது.
அந்த வீட்டிலிருந்து ,எந்த எந்த பொருள்களை அவர்கள் எடுத்துச் செல்ல நாடுகிறார்களோ ,அவற்றை எல்லாம் அவர்களை எடுத்து செல்ல ,முழுவதுமாக அனுமதித்து விடுங்கள்"
என்று காயிதே மில்லத் சொல்லி இருந்தார்கள்.

அதன் படி இஸ்மாயில் பாய் குடும்பம் எடுத்துச் செல்ல நாடிய அனைத்தையும் எடுத்து செல்ல அனுமதித்தனர் லீக் குழுமத்தினர்.


 8,மரைக்காயர் லெப்பை தெரு வீட்டுக்குள் உரிமைக் குரல் பத்திரிகை அலுவலகமும் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமும் ஒரு சேர செயல் பட்டன.

தமிழக மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் லீகர்களுக்கு மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடம் அடைக்கலம் தரும் அன்னை வீடானது.

எல்லா நேரங்களிலும் அங்கே கலகலப்பு இருந்தது.தன்னை அறியாமல் ஒரு முழு உரிமையோடு அங்கே இருந்த அனைவரும் நடமாடி திரிந்தார்கள்.

மாலை வேளைகளில் சென்னையில் இருக்கும் காலங்களில் எல்லாம் ,காயிதே மில்லத் அவர்கள் அங்கே வந்து விடுவார்கள்.
ஒரு அறிவார்ந்த திருக்கூட்டம் குழுமி இருக்கும்.இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அங்கே அலசப்படும்.

காயிதே மில்லத் , பி.ஏ .காக்கா,சென்னை மாவட்ட தலைவர் ஹக்கீம் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் (மியாகான் சாஹிபின் மாமனார்), அப்துஸ்ஸமத் சாஹிப்,ஏ .கே.ரிபாய் சாஹிப்,மதுரை மாவட்ட செயலாளர் ஷரிப் சாஹிப் M .P .,பி.என்.ஐ.அபுதாலிப் சாஹிப் , இப்படி சிறப்புக்கு உரியவர்கள் எல்லாம் இருந்து தினம் தினம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இங்கே ஒரு நபரை கட்டாயம் சொல்லி ஆக வேண்டும்.

இஸ்மாயில் கனி அண்ணன். லிப்டன் தேயிலைக் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.அந்த நேரம் போக மீதி நேரங்களில் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அலுவல்களிலேயே காலம் கழித்தார்.

காயிதே மில்லத்திற்கு , இஸ்மாயில் கனி சாஹிபை விட தமிழகத்தில் நம்பிக்கையான ஒரு முஸ்லிம் லீகர் எவருமே கிடையாது.இப்படி துணிந்து சொல்லி விடலாம். இஸ்மாயில் கனி ,மிக நேர்மையானவர். ஆழமான நம்பிக்கையானவர். ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்புகளில், தீவிரமான ஈடுபாடுக் கொள்ளக் கூடியவர்.

முஸ்லிம் லீக், உரிமைக் குரல் அலுவலகமான 8,மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடத்திலுள்ள அனைத்து கதவுகளுக்கும் ,அலமாரிகளுக்கும் இரு சாவிகள் உண்டு.ஒரு சாவி தலைமை நிலைய பொறுப்பாளரிடம் இருக்கும்,மற்றொரு சாவி இஸ்மாயில் கனி அவர்களிடம் இருக்கும். இது காயிதே மில்லத் செய்து இருந்த ஏற்பாடு.

இஸ்மாயில் கனி நல்ல கவிஞரும் கூட.அந்த கட்டிடதொடு இவர் கொண்டிருந்த உறவின் அளவு இன்னொருவர் எவரும் பெற்று இருக்கவில்லை.

ஆனால் , காயிதே மில்லதினுடைய மறைவுக்கு பின்னால் ,சில பல காரணங்களினால் இஸ்மாயில் கனி அவர்கள் , அந்த கட்டிடத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டார்.இது மிகவும் கசப்பான செய்தி.

தலைமையகத்தை சார்ந்திருந்த அனைவரினுடைய நெஞ்சிலும் இந்த வலி இருந்தது.ஆனாலும் விரும்பத் தகாத இது நிகழ்ந்து விட்டது.

காயிதே மில்லதினுடைய இளவல், கே.டி.எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் மாநிலத்தினுடைய பொது செயலாளராக இருந்தார்கள்.அவர்களிடம் தான் மற்றொரு சாவி இருந்தது.

காயிதே மில்லத் வாழ் காலத்திலே கே.டி .எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் காலமாகி விட்டார்கள்.

கே.டி .எம்.பற்றி இன்னொரு இடத்தில விரிவாக சொல்லி ஆக வேண்டும்.

கே.டி .எம் மறைவுக்கு பின்னால் ,தமிழ் மாநிலத்தினுடைய பொதுச் செயலாளராக ஏ .கே.ரிபாய் சாஹிப் தேர்ந்தெடுக்கப் பட்டார் .

ஒரு நாள் தலைமை நிலையத்திற்கு, இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் வந்தார்கள்.தன்னிடம் காயிதே மில்லத் ஒப்படைத்து இருந்த அத்தனை சாவிகளையும் ஏ.கே.ரிபாய் சாஹிபிடம் ஒப்படைத்தார்.அதனோடு ஒரு லெட்டெர் பேடு தாளையும் ரிபாய் சாஹிபிடம் கொடுத்தார்.அந்த லெட்டெர் பேடின் தாள் காயிதே மில்லத் அவர்களின் M .P .லெட்டெர் பேடின் தாள்.

அந்த லெட்டெர் பேட் தாளின் கீழே காயிதே மில்லத் அவர்களின் கை ஒப்பம் இருந்தது.தேதிக் குறிக்கப் படவில்லை. இப்படி ஒரு வெற்றுத் தாளில் காயிதே மில்லத் இந்த உலகில் வேறு எவரிடமும் கையெழுத்து இட்டு கொடுத்ததே இல்லை.

இதை பார்த்த ஏ .கே.ரிபாய் சாஹிப் அதிர்ந்து போனார்.ஏனென்றால் இந்த தகவல் எவருக்குமே தெரியாது.

இஸ்மாயில் கனி சொன்னார். "தேவைப் படும் பொழுது எந்த அலுவல் காரணத்திற்காகவும் ,இந்த லெட்டெர் பேடை பூர்த்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இது பரம ரகசியமாகவே இருக்கட்டும்” என்று காயிதே மில்லத் ஒரு சந்தர்பத்தில் சொல்லித் தந்ததாக சொன்னார்.

ஏ .கே.ரிபாய் சாஹிப் அந்த லெட்டெர் பேடு தாள்களை இஸ்மாயில் கனி அவர்களிடமே திரும்ப கொடுத்து விட்டு ,"வாப்பா உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளச் சின்னம் இது.இதை பிரேம் போட்டு நீங்களே பாதுகாத்து வாருங்கள்.இது உங்கள் குடும்பத்தின் பொக்கிஷம்" என இஸ்மாயில் கனியிடம் ,ஏ .கே ரிபாய் சொன்னார்.

அந்த காயிதே மில்லத் கையெழுத்திட்ட வெற்றுத் தாள் இஸ்மாயில் கனி அண்ணன் குடும்பத்திடம் தான் இன்றும் இருக்க வேண்டும்.

ஒருநாள் ,அப்துல் வஹாப் M .A .PTh அவர்கள் இஸ்மாயில் கனி இல்லத்திற்கு மனைவியோடு திடீரென்று வந்தார்.இஸ்மாயில் கனி இதை எதிர் பார்க்கவில்லை . அப்துல் வஹாப் துணைவியார் கையில் தாம்பூலம் இருந்தது.அதில் சில பேரீத்தம் பழங்களும் ,வாழைப் பழங்களும் வைத்து இஸ்மாயில் கனி குடும்பத்தாரிடம் தரப் பட்டது.

"என் மூத்த மகனுக்கு உங்கள் மூத்த மகளை மணமுடிக்க பெண் கேட்டு வந்திருக்கிறோம்' என அப்துல் வஹாப் சாஹிப் கூறினார்கள். வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் நமக்குள் தேவை இல்லை என்று மேலும் சொன்னார்கள்.

இஸ்மாயில் கனி அண்ணன் சிரமத்தில் இருந்த காலகட்டம் அது.அப்துல் வஹாப் சாஹிபின் மகன் உயர்ந்த அரசுப் பதவியில்,நிறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இஸ்மாயில் கனி அண்ணனுடைய நேர்மைக்கும்,நம்பிக்கைக்கும் இறைவனே வழங்கிய அருட்கொடை அது. இஸ்மாயில் கனி அண்ணன் இன்று இல்லை.

முஸ்லிம் லீகினுடைய மரைக்காயர் லெப்பை தெரு தலைமையகத்தில் ,இன்றும் என்றும் எவர் நடமாடித் திரிந்தாலும்,இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் ஹக்கில் துஆ செய்ய கடமை பட்டிருக்கிறார்கள்.

இன்று தலைமை நிலையத்தில் மேனேஜராக இருக்கக் கூடிய மீரா சாஹிபுக்கு ,தொழில் கற்று கொடுத்த குரு இஸ்மாயில் கனி அண்ணன்.