Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 டிசம்பர், 2012

இக்னோ: Sustainable Management ஆன்லைன் படிப்பு


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) ஆன்லைன் வழியாக Sustainable Management of Biodiversity படிப்புக்கு தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை, ஆராய்ச்சி, பொறியியல், மருத்துவ படிப்பு ஆகிய படிப்பை எடுத்து படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பு குறைந்தபட்சம் 1 மாத காலமாகும். அதிகபட்சம் 6 மாத காலமாகும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிப்பில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட உள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு இக்னோ பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

திறந்தவெளி பல்கலைகழகத்தில் +2 படிக்காமல் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை


பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்.

அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர். பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.

இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:

* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...

* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...

* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...

* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

புதன், 19 டிசம்பர், 2012

சிறுமியின் பேரில் வில்லங்கம் வந்ததது பிரதமருக்கு, சிறுமியின் பின்னே ஒழிந்திருப்பது யார் ?

"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி பெயரில் , பிரதமருக்கு, நோட்டீஸ் வந்துள்ளது .


அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி பெயரில் , பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு,  வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் வந்துள்ளது .

அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறுமியின் பின்னணியில் ஒளிந்திருப்பது யார் என்று மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .

ஆளுமைத்திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி வேண்டும் : கவர்னர் ரோசய்யா


"கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்" என தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 51ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் சந்தீப் சக்கரவர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவது: ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றுவதற்குரிய அடித்தளத்தை உருவாக்குவதுடன்; நாட்டை காப்பாற்ற, வெளிநாட்டவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ராணுவம் நம் நாட்டின் பெருமைக்குரிய அடையாளம். இதை உங்களிடம் பார்க்கிறேன். அணிவகுப்பு மரியாதை மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

நல்ல பள்ளி என்பது என்பது மாணவர்களை நல்ல வழியில், சரியான திசையில் வழிகாட்டி செல்வதேயாகும். தேசிய பாதுகாப்பு கழகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதில், 24 சைனிக் பள்ளிகளில், நான்கு பள்ளிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதில், அமராவதி நகர் சைனிக் பள்ளியும் ஒன்று.

கடந்த 50 ஆண்டுகளில், 500 மாணவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். மாணவர்கள் லட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு கவர்னர் ரோசய்யா பேசினார்.

காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?


தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

2001 முதல் 2005 வரை அதிகரிப்பு:
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு:
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.

ஊழியர்களுக்கு பணி சுமை:
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.

அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ஓய்வுக்கு பிறகும் வேலை:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.

மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

எதிரிகளின் சவால்களை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது: ஜனாதிபதி பிரணாப்


இந்திய விமானப்படையின் 25-வது படைப்பிரிவு மற்றும் 33-வது படைப்பிரிவு தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவையட்டி இரு படையினருக்கும் உயரிய விருதான ஜனாதிபதி தர விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை சூலூரில் உள்ள விமானப்படை மைதா னத்தில் இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இரு படைப்பிரிவினருக்கும் விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடி மற்றும் விமானப்படையின் கொடிகளை ஏந்தியபடி பறந்தன.

அதைத் தொடர்ந்து விருது களை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

இந்தியாவின் பாரம்பரியமிக்க ராணுவத்தில் இந்திய விமானப்படையின் பங்கு மகத்தானது. சுய நலமில்லாத சேவையை இந்த நாட்டிற்காக விமானப்படை செய்து வருகிறது. 80 ஆண்டு சரித்திரத்தில் பல்வேறு நெருக்கடியான காலத்தில் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்ததோடு முன் னேற்றத்துக்காகவும் பெரும் பங்காற்றி வருகிறது. போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்களின் போதும் மக்களைப் பாதுகாக்கும் பணியையும் இந்திய விமானப்படை செய்து வருகிறது.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நமது விமானப்படை பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின்போதும், 2008-ல் சீனாவில் ஏற்பட்ட பூகம் பத்தின் போதும் இந்திய விமானப்படை தனது பங்களிப்பை செய்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அமைதியை விரும்புவது தான். இதில் நமது விமானப்படை உறுதியோடு தனது அர்ப்பணிப்பை செய்து வருகிறது. தற்போது உயர்ந்த விருதான தர விருது பெற்றுள்ள 25 மற்றும் 33-வது படைப்பிரிவினர் 1965, 71-ல் நடந்த போரின் போது மிகப்பெரிய சேவையை செய்துள்ளனர். தற்போது படைப்பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள மகத்தான பணிக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்துகிறோம்.

இந்தியா அமைதியைத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேச நலனுக்கு இடையூறு ஏற்பட்டால் அதனை சந்திக்கவும் தயாராக உள்ளோம். ஐக்கியநாடு சபை பாதுகாப்பு குழுவில் நமது நாடும் இடம் பெற்றிருப்பது நமது திறமைக்கு கிடைத்த சான்று.இந்திய விமானப்படை பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
 இவ்வாறு அவர் பேசினார்.

மகாராஸ்டிரா சிறைகளில் விசாரணைக் கைதிகளாக 70% பேர் முஸ்லிம்கள்

மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோஸியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஸ்ட்ரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள், குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சார்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தினர்.

மகாராஸ்ட்ராவில் உள்ள 15 சிறைச்சாலைகளில் 339 ஆண், பெண் முஸ்லிம் கைதிகளிடம் பேட்டி கண்டு, தங்களின் ஆய்வுகளை, """"சோஸியோ எகனாமிக் ஃபுரோபைல் அண்டு ரிஹாபிலிடேஷன் நீட்ஸ் ஆஃப் முஸ்லிம் கம்யூனிடி இன் பிரிசன்ஸ் இன் மகாராஸ்ட்ரா’’ என்னும் தலைப்பிட்டு அறிக்கையாக அவ்விரு பேராசிரியர்கள் தந்துள்ளனர். அதனை மகாராஸ்ட்ரா மாநில மைனாரிடீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் படிப்போர் குருதியை உறைய வைக்கக்கூடிய செய்திகள் தரப்பட்டுள்ளன. 141 பக்கம் கொண்டுள்ள அந்த அறிக்கை தரும் செய்திகளைப் படித்து, இதயம் துடிதுடித்து, ஆவேசப்படுவதைத் தவிர்த்துவிட்டு, இத்தகைய கோரப் பிடியில் இருந்து சமுதாய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்கு எது வழி? என்று ஆய்ந்தறிந்து செயல்படுவதற்கு முன்வருதல் இன்றைய அவசரமும் அவசியமும் ஆகிறது!

மகாராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர்.

இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.

மகாராஸ்ட்ரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதிள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

பெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் பங்களா தேசத்தைச் சேர்ந்தவர்கள்; இந்தப் பெண் கைதிகளுக்கு சிறைச்சாலையில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அவர்கள் நடத்தப்படும் விதம் கொடுமையிலும் கொடுமையாகும் என்கிறது அந்த அறிக்கை. சிறையில் உள்ள 96 சதவீதமான முஸ்லிம் கைதிகள் எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை.

இவர்களில் 25 சதவீதம் பேருக்கு வாதிட ஒரு வக்கீலும் இல்லை. அரசுசாரா நிறுவனங்கள் மூலம் உதவி பெற முடியும் என்பது 61 சதவீதமானவர்களுக்குத் தெரியவில்லை. 23 சதவீதம் பேர் இப்படியொரு நிறுவனம் இருப்பதுகூட அறியவில்லை.

50 சதவீதம் பேருக்கு 2013-ல் தண்டனை காலம் முடிகிறது; அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்படியான எந்தவொரு திட்டமும் மகாராஸ்ட்ரா மைனாரிடி கமிஷனிடம் இதுவரை இல்லை.

38 சதவீதம் பேர் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.

பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிட்விடால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவரைக் கைது செய்வதன் மூலம் காவல்துறையினர் அநீதம் இழைத்துள்ளனர்.

தடா போன்ற வன்கொடுமைச் சட்டங்களின் கீழ் முஸ்லிம்கள் மீது காவல்துறை வழக்கு ஜோடிப்பது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலான வழக்குகள், குடும்பச் சண்டைகள், பணத் தகராறுகள், சொத்துப் பிரச்சினைகள், காதல் விவகாரங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்றவையே முஸ்லிம்கள் மீது வழக்குத் தொடுப்பதற்குரிய காரணங்களாக உள்ளன.

சாட்சியம் எதுவும் இல்லாமல் கைது செய்து கடுமையான சட்டப் பிரிவின் கீழ் பொய் வழக்கு போடுவது காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கையாகும்.

இந்த ஆய்வறிக்கை தந்த பேராசிரியர் விஜய் ராகவன் கூறியதாவது:

இந்த ஆய்வு பெரிய சவாலாகிவிட்டது. சிறைச்சாலைகளில் கைதிகளைக் காண்பதற்கு அனுமதி பெறுவதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. போலீசார் மீது குறை சொன்ன ஒரே காரணத்துக்காகப் பலர் கைதிகளாக வாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மீது பொய் வழக்குகளே போடப்பட்டுள்ளன என்பதை அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் அறிந்தோம் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நடவடிக்கை :
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப்பாவிகளை விடுவிக்கக்கோரியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பிரமாண்டப் பேரணி நாளை 19-12-2012-ல் தேசிய துணைச் செயலாளர் எச்.அப்துல் பாஸித் தலைமையில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விதர்பா பிரதேச முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சையது அப்ஸர் அலி செய்துள்ளார். பேரணியின் முடிவில்  மகாராஸ்டிரா முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவானை சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு மகஜர் கொடுக்கும் .