Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மக்கமாநகரில் இஸ்லாமிய நாடுகளின் அவசர உச்சி மாநாடு


புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது,

அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி மன்னர் கடிதம் எழுதியதாக நேற்று அறிவித்துள்ளது, இந்த அழைப்பு முஸ்லிம் உலகில் மிகப்பெரிய பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாநாடு சாதாரண மாநாடு அல்ல, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் தற்போது முஸ்லிம் உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது,

இம்மாநாட்டின் அறிவிப்பை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் சவூதியை நோக்கியே திரும்பியிருந்தது. மேலும் ஈரானுக்கான அழைப்பில் மேலும் மத்திய கிழக்கில் பரபரப்பு தொற்றிவிட்டது,

இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் மற்றும் OIC யை சேர்ந்த 57 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு கொச்சி ஷிப்யார்டு -ல் பயிற்சி பணி

கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி

காலியிடம்: 14

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், சிவில் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.08.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 ஆண்டுகால வரலாறு

சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில் 150வது ஆண்டு விழா செப்டம்பர் 8ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.


இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த சூழலில் அதன் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவது அவசியம் .



ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் தொடங்கியபொழுது, 1640-ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவுடன், வழக்குகளை விசாரிப்பதற்கென "சவுல்ட்ரி' என்று சொல்லப்படுகின்ற சத்திர நீதிமன்றம் தொடங்கப்பட்டு, அங்கு சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

1688-ல் மேயர் நீதிமன்றம், 1739-ல் கச்சேரி நீதிமன்றம், 1798-ல் ரிக்கார்ட் நீதிமன்றம் என்று பலவகையான சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1801-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றாலும், சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு 60 ஆண்டுகாலம் பதிவில் இருந்தது.

1861-ல் விக்டோரியா மகாராணி சென்னை, கல்கத்தா, பம்பாயில் உயர் நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டார். முறையாக 150 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1862 ஆகஸ்ட், 15-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பின் அதே ஆகஸ்ட் 15-ல் இந்தியா விடுதலை பெற்றது.

தற்போதுள்ள நீதிமன்றக் கட்டடத்துக்கான பணி 1888-ல் தொடங்கப்பட்டது. முதல் தலைமை நீதிபதியாக கோலி கார்மன் ஸ்காட்லாண்ட் நைட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் இந்த நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டனர். வழக்குகளில் ஆஜராவதற்காக வக்கீல்கள் மற்றும் "அட்டர்னி அட் லா' என்ற தகுதி பெற்றவர்களை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ராஜாஜி சாலையிலுள்ள சிங்காரவேலர் மாளிகை, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஒட்டிய பகுதியில் செயல்பட்டது. தற்போதைய பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் இந்த அற்புதக் கட்டடம் கட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இங்கு கட்டடப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் அங்கிருந்த சென்னகேசவப் பெருமாள், மல்லீஸ்வரர் ஆலயங்கள் பூக்கடை காவல் நிலையம் அருகில் மாற்றி அமைக்கப்பட்டன.

இங்குதான் முதன்முதலாக சென்னைக்கு கலங்கரை விளக்கம் அமைந்தது. ஜே.டபிள்யு. பிசிங்டனின் வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜெ.எச். ஸ்டீபன் போன்றோர்களின் முயற்சியில், இந்தோ - சாராசனிக் முறையில் இன்றைய இந்த கம்பீரக் கட்டடம் எழுந்தது. அதற்கான அன்றைய மொத்த செலவு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.

ஜூலை 12, 1892 அன்று காலை 10 மணி அளவில் சென்னை மாகாண கவர்னர் பாரிமுனை வர, அங்கிருந்து அவர் உயர் நீதிமன்ற வளாகத்துக்குப் பிரதான வாயில் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் மற்றும் சக நீதிபதிகள் அவரை வரவேற்று, திறப்பு விழா நடக்கும் நீதிமன்ற அரங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உச்ச நீதிமன்றச் சாவியை பொதுப்பணித் துறைச் செயலர் கவர்னரிடம் முறைப்படி வழங்க, அதை கவர்னர் தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

பிரமிக்கச் செய்யும் இந்தக் கட்டடத்தைக் கண்டு செஞ்சி ஏகாம்பர முதலியார் உயர் நீதிமன்ற அலங்கார சிந்து என்று பாடி, அதை 1904-ல் பூவிருந்தவல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்டது. அந்த அலங்கார சிந்துவில் குறிப்பிட்ட வரிகள்:
""அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தைபோல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதறும்படி தங்கத்திலூட்டி...''
1916-ல் செப்டம்பர் 22-ல் எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியதில் சுற்றுச் சுவர்கள் சேதமடைந்தன. அதுகுறித்து பதிவுகள் இன்றைக்கும் இந்தக் கட்டடத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ராஜாஜி சிலை அருகில் மதில்சுவரில் கல்வெட்டாக உள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது இந்த நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதன் கோப்புகள் கோவைக்கும் அனந்தப்பூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. சிலகாலம் கோவையில் சென்னை உயர் நீதிமன்றப் பணிகள் நடைபெற்று, போர் அச்சம் தணிந்தபின் தி.நகரில் உள்ள ஆங்கிலோ - இந்தியப் பள்ளியில் உயர் நீதிமன்றம் சிலகாலம் தனது பணிகளைச் செய்தது.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் பல செய்திகள், நிகழ்வுகள், கம்பீரமான கட்டடங்கள் போன்றவை மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டிய மெத்தப்படித்த, நுண்மான் நுழைபுலம் கொண்ட நீதிபதிகள், ஆற்றலும் பேரறிவும் பெற்ற வழக்குரைஞர்கள் இந்த வளாகத்தில் கம்பீரமாக உலவியது பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தெரு விளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர்தான், ஆங்கிலேயர் காலத்தில் 1878-ல் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்தார். நாடு விடுதலை பெற்றவுடன் டாக்டர் ராஜமன்னார் 1948-லிருந்து 1966 வரை நீதிபதியாக இங்கு அமர்ந்தது நீதித்துறையில் ஒரு மறுமலர்ச்சி காலம்.

உலகில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகத்தைக் கொண்டுள்ள இங்கு நடந்த வழக்குகளில் பல பரபரப்பான தீர்ப்புகளும், நியாயங்களும் வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டக் கூறில் 15 திருத்தங்கள் பெற வழிவகுத்தது. வ.உ.சி. ஆயுள் தண்டனை வழக்கு, வாஞ்சிநாதன் வழக்கு, தியாகராஜ பாகவதர் - என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்குகள் என வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கானவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் பதஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றோர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஆனார்கள். இங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாகச் சென்றவர்களில் டி.எல். வெட்கட்ராமய்யர், அழகிரிசாமி, பி.எஸ்.கைலாசம், இரத்தினவேல் பாண்டியன், வி.இராமசாமி, வரதராசன், எஸ்.நடராசன், எஸ்.மோகன், கே.வேங்கடசாமி, ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடந்த 1962-ல் இதன் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் தனது 38 -வது வயதில் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கு முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத்தந்த ஆசான் ஆவார்.
அன்றைய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமிழ் இலக்கியம், இசை, கலை, சமூக மேம்பாடு என்று சகல துறையிலும் சிறந்து விளங்கினர். திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நீதியரசர் சிவசாமி ஐயர் கல்விக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.

ரசிகமணி டி.கே.சி.யின் சகா, நீதிபதி மகராசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்றைக்கும் மகராசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஷேக்ஸ்பியரின் "கிங் லியர்' படிக்கப் படிக்கத் திகட்டும்.
நீதிபதி மு.மு. இஸ்மாயில் தலைமையிலான குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட சென்னை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பைபிள் தாளில் அச்சிடப்பட்ட அந்த கம்பராமாயணப் பதிப்பு பலராலும் இன்று பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்துக்குப் போனால், உயர் நீதிமன்ற மகாராஜாவைத் தெய்வத்துக்கு இணையாகப் பேசுவதுண்டு. ஒரு சமயம் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும்பொழுது செய்துங்கநல்லூரில் டீக்கடை விளம்பரப் பலகையில் "ஐகோர்ட் மகாராஜா துணை' என்று போடப்பட்டிருந்தது. அதுகுறித்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜனை குறிப்பதுதானா இது என்று கேட்டபோது, "ஒரு சிலர் ஆம்; அது அவரைக் குறிப்பதுதான்' என்றனர். ஆனால், அதுகுறித்த தெளிவான கருத்தை அறிய முடியவில்லை. இப்படியாக கிராமப்புறத் தரவுகளிலிருந்து உயர் நீதிமன்றத்தை எவ்வளவு பூஜிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
வி.கே. திருவேங்கட ஆச்சாரியார் அட்வகேட் ஜெனரலாக இருந்தபொழுது, காமராசர் முதல்வராக இருந்தார். ஒரு முக்கிய வழக்கு குறித்து எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று ஒரு முதலமைச்சரைத் தன் வீட்டுக்கே வரவழைத்தவர்தான் வி.கே.டி. அந்த அளவு தங்கள் தரத்தைப் பாதுகாத்து, வழக்கறிஞர் தொழிலுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தவர்கள் அவர்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றிய ஜான் புரூஸ் நார்டனின் புதல்வர் ஏர்லி நார்டனைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியாற்றினார்.
இவர் பின்னாளில் தன்னை இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்டதோடு, அதன் சட்டதிட்டங்களை வகுப்பதிலும் பங்கேற்றவர். ஆங்கிலேயர்கள் இவரை தேசத் துரோகி என்று குறிப்பிட்டனர். உடனே நார்டன், அநீதியை எதிர்ப்பதும், எந்த ஒரு நாட்டுக்கும் தங்களின் சொந்த விஷயங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று கோருவதால் தேசத் துரோகி என்று கூறினால், நான் அப்படிப்பட்ட தேசத் துரோகியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

÷வங்காளம் பிளவுபட்டபோது அதனை எதிர்த்து நடைபெற்ற அன்னிய பொருள் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதனை ஒடுக்க அரசு பலவகையிலும் முயன்றது. அப்போது மசாபூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்போர்ட் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்தார். மேலும், போலீஸாரிடம் வாதம் செய்தான் என ஒரு சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்தார்.

அந்தச் சிறுவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆங்கிலேயர் இருவர் மாண்டனர். இச்செயலுக்கு மேலும் பலர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, மகான் அரவிந்தரும் அதில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.

அப்போது சென்னையில் இருந்த ஏர்லி நார்டனை அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆங்கிலேய அரசு அழைத்துச் சென்றது. அதற்காக நார்டனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 வக்கீல் பீஸ் வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய தொகை. இவரும் அந்த வழக்கில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக வாதாடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத் தகவல்களை மகான் அரவிந்தர் தனது "சிறைச்சாலையில் எனது நாட்கள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, மந்தைவெளியில் உள்ள ஒரு தெருவுக்கு இவ்வாறு இரு முகங்களைக் காட்டிய நார்டனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒருபக்கம் இந்த வலிமை மிகுந்த உயர் நீதிமன்றத்துக்கு எதிராகத் தாக்குதலும் நடந்தேறின. சட்டமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் பிரச்னைகள் ஏற்படும்பொழுது பலதரப்பான விவாதங்களும் விமர்சனங்களும் நடந்தேறின.

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமியை அட்வகேட் ஜெனரலாக நியமித்தபோதும், அதன்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆர்ஜித வழக்கில் நீதிபதி சத்தியதேவ் தீர்ப்பு குறித்து சட்டமன்றத்தில் விவாதித்தபொழுதும், சட்டப்பேரவைத் தலைவராக பி.எச். பாண்டியன் இருந்தபொழுது நீதிபதி சிங்காரவேல் ஒரு கிரிமினல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை சட்டமன்றத்தில் ரத்து செய்தபோதும் - நீதித்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் உயர் நீதிமன்றம் அயராது தனது பணிகளைத் தொடர்ந்தது.

வழக்குரைஞர்கள் தங்களுடைய கடமைகளையும், பெருமைகளையும் விட்டுக்கொடுக்காமல், ஆங்கிலத்தில் Noble Profession, Learned Friend  என்று வழக்குரைஞர்களைக் குறிப்பிடுவதற்கு ஏற்றவாறு அந்தப் பண்புகளைக் கட்டிக்காத்த பாரம்பரியம் இந்த நீதிமன்றத்துக்கு உண்டு.
ஏர்லி நார்டனைக் குறிப்பிட்டதுபோல, வழக்குரைஞர்களாக இருந்த சி.பி. ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், ராஜா ஐயர், எஸ். மோகன் குமாரமங்கலம், வி.கே. திருவேங்கட ஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எஸ். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ். செல்லசாமி, டி. செங்கல்வராயன், பி.ஆர்.டோலியே இப்படி கீர்த்தி பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையைத் தமிழகத்தில் மேம்படச் செய்தவர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய-மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கிய பொறுப்புகளைப் பெற்றவர்களும் உண்டு.
இன்றைய சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. அதில் 40 நிரந்தர நீதிபதிகள், 17 பேர் கூடுதல் நீதிபதிகளாவர். நீண்டகால போராட்டத்துக்குப் பின், நீதிபதி ஜஸ்வந்த் சிங்கின் பரிந்துரைக்குப் பின், 1985-லிருந்து வலியுறுத்தப்பட்டு தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 12 நீதிபதிகளோடு செயல்படுகிறது.
முதலில் தொடங்கிய மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்களும், அதே பேரில்தான் இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன. அந்த நகரங்களின் பெயர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மாற்றப்பட்டாலும் இன்னும் நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

இவையாவும் சார்ட்டட் ஐகோர்ட் என்று வழங்கப்படுகின்றன. இந்த மூன்று உயர் நீதிமன்றங்களுக்கும் மற்ற நீதிமன்றங்களைவிட சில அதிகாரங்கள் கூடுதலாக உள்ளன.

அதாவது, எல்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய Letters Patent Appeal என்ற இரண்டாவது மேல் முறையீடு என்ற சிறப்பதிகாரம் உண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே உள்ளது.
இப்படியான வரலாற்றுப் பதிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பல உள்ளன. சாமானியர்களுக்கு நீதியை வழங்குகின்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆளுமைக்கு நாம் தலை வணங்குவோம். அதனுடைய நீதி பரிபாலனம் எந்நாளும் ஜனநாயகத்துக்கு வலு கூட்டட்டும்.
நன்றி : தினமணி 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பத்ர் போர் வரலாற்றில் ஏன் ?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள், இரத்தம் ஒட்டுதலைத் தவிர்ந்த பல்வேறு கொடுமைகளை தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில், அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும், இவற்றுடன், நபியவர்களை துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை.அவர்கள்,தனிமைப்படத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும், அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்து வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு அனுப்பியிருந்தான். ஆதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான். 

இவ்விசயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,
'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகனமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் ஹிஜ்ரி இரண்டாம் வருடம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், குறைஷியரை எதிர்கொள்ள வெளிப்பட்டார்கள். பத்ரில், காபிர்களின் எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கினராக மட்டுமே முஸ்லிம்கள் இருந்து, அவர்களை நேருக்குநேர் எதிர்கொண்டார்கள். தமது ஈமானுடைய பலத்தினாலும், அல்லாஹ்வுடைய நாட்டத்தினாலும் வெற்றி பெற்றார்கள்.

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்


புத்தகம் வைத்து தேர்வு எழுதுவது சாத்தியமா ?


மாணவர் மனப்பாடம் செய்யும் நிலைமாறி, அறிவு மேம்படும் வகையில் புத்தகத்தை வைத்து எழுதும் தேர்வு முறை அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது மாணவர் அறிவை மேம்படுத்தவும், புத்தக சுமையை குறைக்கவும் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறையைப் போலவே, தேர்வு முறையிலும் நவீனத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போதுள்ள முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறையே அதிகம் உள்ளது. பெரும்பாலும் புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. எனவே வினா-விடை புத்தகங்களையே மாணவர்கள் அதிகம் அதிகம் நம்பி உள்ளனர்.
மனப்பாட சக்தியுள்ள மாணவரே அறிவுத்திறன் மிக்கவர் என்ற நிலை உள்ளது. இதை விடுத்து புத்தகத்தினுள் இருந்து ஒரு வினாவை கேட்டால், "வினாத்தாள் மிகவும் கடினம்" என விமர்சனம் கிளம்புகிறது. எனவே, ஒரு தலைப்பிலான பாடம் அல்லது கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை புரட்டிப் படிக்கும் வகையில் மாணவர்கள் தேர்வு முறை இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்தபின், தேர்வில் வினாக்களை பாடப் புத்தகத்தினுள் இருந்து நுணுக்கமாக கேட்க வேண்டும். தேர்வு எழுதும்போது புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் விடையை புத்தகங்களில் தேடி எடுத்து எழுத வேண்டும். இதற்கு புத்தகத்தை ஆழ்ந்து படித்திருந்தால்தான் விடையை தெளிவாக எழுத முடியும். அரசு துறைகள் பலவற்றில் இதுபோன்ற தேர்வுகள் (டிபார்ட்மென்டல் எக்ஸாம்) தற்போது நடைமுறையில் உள்ளது.

சனி, 4 ஆகஸ்ட், 2012

உலக வரலாற்றில் ஒரு பொற்கால ஆட்சி !

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.