Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 20 அக்டோபர், 2012

நமக்கு நாமே மின்சாரம் ! வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய் இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.

செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும்  (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .

கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.


தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாதம் தோறும் 8,170 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு பிரச்னையால் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சுமார் 3 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்படும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத தவணை தொகை 150 ரூபாய் பிடித்தம் செய்ய்பபடுகிறது. இந்த தொகையை குறைக்க வேண்டும். கல்வித் துறை அலுவலகங்களில் சுமார் 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 18ம் தேதிக்குள் இக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து நவம்பர் மாதம் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து பகுதிகளிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கைகளுக்காக பிற ஆசிரிய சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி !


மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.


வியாழன், 18 அக்டோபர், 2012

சினிமா பாணியில் தொலைந்து போன கிராமம் ,20 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டது


 சினிமா பாணியில் பொன்னேரி அருகே தொலைந்து போன ஒரு கிராமம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பம்பட்டு ஊராட்சி வரைபடத்தில் இருந்த சின்னஞ்சிறு கிராமம். இதன் மொத்த பரப்பளவே 1 1/2 ஏக்கர்தான். கிராமத்தை சுற்றி அரண்போல் வயல்வெளியும், அனுப்பம்பட்டு ஏரியும் காட்சியளித்தது. நீரலைகள் ததும்ப பசுஞ்சோலைக்குள் ஒரு நந்தவனமாய் வேலப் பாக்கம் வியக்க வைத்தது. 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

விவசாயத்தையே நம்பி வாழ்ந்த அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வண்டிப்பாட்டையை சாலையாக பயன்படுத்தி வந்தார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள், துள்ளி விளையாடிய பூமி-சாதியை மறந்து பல இனத்தவர்கள் கூடி வாழ்ந்த அதிசய கிராமம் ஆக்கிரமிப்பாளர்களின் கண்களை உறுத்தியது. அதிகார வர்க்கத்தினர் விரட்டுயடித்ததால் ஊரை காலி செய்து அனைத்து குடும்பங்களும் வெளியேறியது.

வேலப்பாக்கம் கிராமமும் அந்த கிராமத்துக்கு செல்லும் 600 மீட்டர் நீளமும் 30 அடி அகலமும் கொண்ட வண்டிபாட்டையும் தனியார் சிலரது சொத்துக்களாக மாறியது. வேலப்பாக்கம் என்ற கிராமமே இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை பதிவேடுகளில் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களாய் வேலப்பாக்கம் இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்? என்ற எந்த விபரமும் பதிவேடுகளில் இல்லை.

இந்த நிலையில் மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ்சாட்டர்ஜி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். எங்கெங்கு அரசு நிலங்கள் உள்ளது என்பதை கண்டறிந்து பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி லதா, ஊராட்சி தலைவர் (பொறுப்பு) சுந்தரராஜன் மூலம் நிலங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பையும் மீறி பதிவேடு கள் மூலம் வேலப்பாக்கம் கிராமம் இருந்த தகவல்களை திரட்டி அதிகாரிகள் நிலத்தை மீட்டனர். தொலைந்து போன வேலப்பாக்கம் மீட்கப் பட்டதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் 50 குடும்பங்களை குடியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வேலப்பாக்கம் என்ற பெயர் பலகையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த பகுதிக்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட கிராமம் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ளதை அந்த பகுதி மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கிறார்கள்.

புதன், 17 அக்டோபர், 2012

எய்ட்சை தடுக்கும் பசுவின் பால் !


  உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி., எய்ட்சை பசுவின் பால் அருந்தினால் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மார்டிட் கிராம்ஸ்கி இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் சோதனையின்படி, கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை (ஆன்டிஜென்ஸ்) உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற பின் தந்த முதல் பாலை (கொலாஸ்டிரம்) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யை தடுக்கக்கூடிய ஏராளமான எதிர் உயிரிகள் (ஆன்டிபாடீஸ்) இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது விஞ்ஞானிகள் இந்த முறை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தனது சோதனை குறித்து மார்டிட் கிராம்ஸ்கி கூறுகையில், எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில், எதிர் உயிரிகள் நிறைந்த புரோட்டீன் (ஆன்டிபாடீஸ்) ஒட்டிக்கொள்ளும். இதனால் எச்.ஐ.வி., வைரசால், மனித செல்களில் ஒட்டிக்கொள்ள இயலாது. இதன் மூலம் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., பரவுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில் பூட்டில் சாவியைப் போல எதிர் உயிரி புரோட்டீன் இணைவதால், எச்.ஐ.வி., வைரசால் வேறு எந்த செல்லுடன் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. 

இதில் ஒரு கவலை தரத்தக்க விஷயம் என்னவென்றால் இம்முறை செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது தான்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சுற்றுலா கைடு - ஒரு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த தொழில்


சுற்றுலா கைடு என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த தொழிலாகும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நாட்டைப் பற்றிய ஒரு சிறந்த மதிப்பீட்டை, சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் ஒரு மாபெரும் பணியை கைடு மேற்கொள்கிறார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, நலன், திருப்தி மற்றும் சந்தோஷம் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறன், வெளிநாட்டு மொழியில் புலமை மற்றும் பிறரிடம் சகஜமாக பேசிப் பழகும் பாங்கு போன்றவை ஒரு வெற்றிகரமான சுற்றுலா கைடுக்கு தேவையான பண்புகள்.

லைசன்ஸ் அளிக்கப்பட்ட கைடுகளின் வகைகள்

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், போதுமான தகுதிகளை அடைந்த கைடுகளுக்கு, பிராந்திய அடிப்படையில் லைசன்ஸ்களை வழங்குகிறது. மொத்தம் 5 பிராந்தியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவையே. மாநில அளவிலான லைசன்ஸ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. இதற்கான விபரங்கள், அந்தந்த மாநில சுற்றுலாத் துறைகளின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

பிராந்திய நிலையிலான கைடுகளில்(Regional level guides - RLG) 4 பிரிவினர் உள்ளனர்


1. பொது

முழுநேர அடிப்படையில், தங்களுக்கான பிராந்தியங்களில் இவர்கள் பணிபுரியலாம். இவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாக, பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் பள்ளி படிப்பிலும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

2. பொது - மொழி அடிப்படையிலான

பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், கொரியன், ரஷ்யன், ஜப்பானீஸ், தாய், அராபிக், ஹங்கேரியன், போலிஷ், ஹீப்ரூ மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் புலமைப்பெற்றவர்கள் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். இவர்கள், அவ்வப்போது, சுற்றுலா அமைச்சகத்தால் அடையாளம் காணப்படுவார்கள்.

இவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த, மேற்கூறிய மொழிகள் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்.


3. நிபுணத்துவ கைடுகள்

சுற்றுலா, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம் மற்றும் வனம் - வனவிலங்குகள் போன்ற சுற்றுலா தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், சிறப்பு பிரிவில் அடங்குவார்கள். நிபுணத்துவ கைடுகள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்கள், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்க வேண்டும்.



4. நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான
சுற்றுலா தொடர்பான, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம், தொல்லியல் துறை, வனம் - வனவிலங்கு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது சிறப்பு படிப்பை முடித்தவர்கள் இப்பிரிவில் அடங்குவார்கள்.
வெளிநாட்டு மொழியில், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற அம்சங்களோடு, நல்ல புலமைத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் பணியிடங்கள்
மேற்கூறிய சுற்றுலா கைடுகள் பிரிவுகளில் ஒருவர் தேர்வு பெற்றிட, முதல் மீடியா விளம்பரம் கொடுக்கப்படும் தேதி பிரகாரம், 20 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் அதற்கு தேவைப்படும் கைடு பணிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், சுற்றுலா கைடுகளின் தேவை அளவிடப்படும். இந்தப் பணியானது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும்.
தேர்வாதல்
கைடுகளை தேர்வு செய்யும் செயல்பாடானது, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்(IITTM) அல்லது சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஏதேனும் அமைப்பைக் கொண்டு நடத்தப்பெறும். ஒருவர் தேர்வு பெற்றவுடன், அவருக்கு IITTM -ல் பயிற்சியளிக்கப்படும்.பிராந்திய வாரியாக, பயிற்சிக்காக, எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு கொடுக்கப்படும் விளம்பரங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 3 மணிநேரம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலமாக, பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் ஒருவரின் பொது நுண்ணறிவுத் திறன் மற்றும் தகுதி பரிசோதிக்கப்படும்.மொத்தம் 300 மதிப்பெண்களில், குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும்.பயிற்சிக்காக அறிவிக்கப்பட்ட இடங்கள், நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும்.
பயிற்சி மற்றும் லைசன்ஸ் பெறுதல்
குவாலியர், புவனேஷ்வர், டெல்லி, கோவா மற்றும் நெல்லூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள IITTM -ன் வளாகங்களில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய ஆர்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் இடங்களில் களப் பயிற்சி மற்றும் வகுப்பறை பயிற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெறும்.
பொது மற்றும் பொது(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 26 வாரங்களும், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம்(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 13 வாரங்களும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த அனைவரும், இன்னொரு பெரிய படிநிலையைக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் Viva voce போன்ற அம்சங்களைக் கொண்ட அடுத்தக்கட்ட தேர்வானது, ஒருவரின் வழிகாட்டும் திறன், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் இடங்களைப் பற்றிய அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு மொழியில் அவரின் புலமை(தேவையான இடங்களில்) போன்றவை இவைகளின் மூலம் அளவிடப்படும்.
இந்த இறுதித் தேர்வை ஒருவர் எழுத, வகுப்பறை மற்றும் களப்பயிற்சியில், குறைந்தது 80% வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தப்பின்னர், இந்திய அரசின், பிராந்திய இந்திய சுற்றுலா அலுவலகத்தால், பிராந்திய நிலையிலான கைடு லைசன்ஸ் வழங்கப்படும்.
இந்த லைசன்ஸ் 3 வருடங்களுக்கு செல்லும். பின்னர், Refresher courses முடித்து இதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு மொழியில் புலமை
கைடு படிப்பை வெற்றிகரமாக முடிக்க, இந்தப் புலமையானது அவசியமான ஒன்று. ஆங்கிலத்தில் தடுமாற்றம் உள்ளவர்கள், பிரட்டிஷ் கவுன்சில் நடத்தும் மொழித்திறன் படிப்புகளில் பங்கேற்று, தங்களின் மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். மேலும், பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்க, தனியார் நிறுவனங்களை அணுகலாம்.
அவை, இதுதொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மொழிகளைப் படிப்பவர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதே சிறந்தது. ஏனெனில், இதன் மதிப்பு அதிகம்.
சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும்
அதிகளவிலான வாய்ப்புகள் இதுபோன்ற ஆபரேட்டர்களிடமிருந்தே வருகின்றன. Cox and kings, Thomas cook, Le passage to India tours and travels, Kuoni travels, Abercrombie, Kent India and SITA tour and travels போன்றவை, முன்னணி சுற்றுலா ஆபரேட்டர் நிறுவனங்களாகும்.இவை பெரும்பாலும், சர்வதேச விமானங்கள் அதிகம் வரும் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாக கொண்டவை.
சம்பளம்
சுற்றுலா தொழில் துறையில் நல்ல அறிமுகம் பெற்ற ஒருவர் லைசன்ஸ் பெற்ற கைடு, வருடத்திற்கு ரூ.4 முதல் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மேலும், வருவாயானது, ஒருவர் எந்த மொழியில் புலமை பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
ஆங்கிலம் மட்டுமே நன்கு அறிந்த ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.2,500 பெறுகிறார். ஆங்கிலம் தவிர்த்த பிற வெளிநாட்டு மொழிகளில் பணிபுரியும் ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை பெறுகிறார்.
முக்கிய அறிவுரை
சுற்றுலா ஆபரேட்டர்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கையாளும்போது, கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உங்களைப் பற்றி தரும் Feedback -கள்தான், உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை அதிகரித்து, அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும்.




ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ரோபோடிக்ஸ் துறை படிப்புகள்


பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, வீடு அல்லது காரை, ரோபோட்டுகளை வைத்து சுத்தம் செய்யலாம் என்ற சிந்தனையானது, வெறும் பகட்டும், ஆடம்பரமும் நிறைந்தது என்று சொல்லி ஒதுக்கப்பட்டது. இன்றைய நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ரோபோடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மனித வளத்திற்கு பஞ்சம் நிலவும் இன்றைய காலகட்டத்தில், பலவிதமான வேலைகளை செய்வதற்கு, ரோபோட்டுகளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக உள்ளது. மேற்கூறிய நாடுகளில், எதிர்வரும் குறுகிய காலத்தில், பலவிதமான வேலைகளுக்கு, மக்கள், ரோபோட்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு, விலை மலிவான மற்றும் பலவிதமான வேலைகளை செய்யும் ரோபோட்டுகளை அதிகளவில் தயாரிப்பதற்கான சூழல் உருவாகும் என்றால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ரோபோட்களின் பயன்பாடு

இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோட்களின் பயன்பாடு என்பது விரிவடைந்த ஒன்றாக விளங்குகிறது. வீட்டுப் பயன்பாடுகள் முதற்கொண்டு, பலவிதமான தொழிற்சாலை பயன்பாடுகள் வரை, ரோபோட்கள் தேவை இருக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள், பளுவான பொருட்களை கையாளுதல், வீட்டு வேலைகள், மனிதன் செய்ய வேண்டிய சில கடினமாக வேலைகள் போன்ற பல பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.

பரந்துவிரிந்த துறை

ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.

ரோபோடிக்ஸ் தொழில்துறையில், பொறியியல் செயல்பாட்டின் பல கட்டங்களில் பல நிலைகள் உள்ளன. சில பொறியாளர்கள், சிக்கல்களை, ரோபோடிக்ஸ் எவ்வாறு தீர்க்கிறது மற்றும் செயல்பாட்டை இன்னும் சிறப்புள்ளதாக மாற்றும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். வேறு சிலர், தற்போது இருக்கும் பொறியியல் கோட்பாடுகளை, ரோபோட்களை மேம்படுத்துவதில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் இதன் மேம்பாடுகள்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில்(SERC) கட்டுப்பாட்டின் கீழ், ரோபோடிக்ஸ் துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது.

பல பல்கலைகள், தேசிய ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல நிபுணர்களின் உதவியோடு மட்டும் அல்லாமல், பலவிதமான பிரிவுகளில், Programme advisory committee ன் உதவியையும் SERC பெறுகிறது.

இந்தியாவில் பின்பற்றப்படும் தராளமய பொருளாதார கொள்கைகளால், நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் பலவிதமான ஆட்டோமொபைல் கம்பெனிகளில், ரோபோடிக்ஸ் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது.


இந்தியாவில் பயிற்சி வாய்ப்புகள்

ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், சில பல்கலைகள், பட்டப் படிப்பை வழங்குகின்றன. இது highly interdisciplinary படிப்பாகும். அதேசமயம், இத்துறையில் நுழைய வேறு பல வாய்ப்புகளும் உள்ளன. இப்போதுவரை, இளநிலை பட்டப்படிப்பு அளவில், ரோபோடிக்ஸ் படிப்பிற்கு, இந்தியாவில் மிகவும் குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

அதேசமயம், ஒரு சில கல்வி நிறுவனங்கள், M.Tech மற்றும் MS நிலையில் இத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. Artificial Intelligence என்பது ரோபோடிக்ஸ் துறையுடன் மிகவும் நெருங்கியவை. பல கல்வி நிறுவனங்கள், Artificial Intelligence மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.

நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய படிப்புகளில் ஒன்றான, Theory of machines & control போன்ற படிப்பைக்கூட சிறப்பாக கற்றுத்தரும் அளவிற்கு தகுந்த ஆசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் இல்லை. இந்த நிலையில், ரோபோடிக்ஸ் துறையில், சிறப்பு பி.டெக் படிப்பை வழங்குவதென்பது இப்போதைக்கு பயன்தராத ஒரு விஷயம் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இளநிலைப் படிப்பு

இளநிலை அளவில் ஒருவரின் படிப்புத் தேர்வு என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் பி.டெக் படிப்பதானது, ஒருவரின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். முடிவாக, சிறப்பு படிப்பும் தேவை.

தற்போதைய நிலையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொணர்வது அவசியம். இதன்மூலம், மெக்கானிக்கல் பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் திணற அவசியமில்லை. அதேசமயம், மெக்கட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் பி.டெக் படிப்பானது, ரோபோடிக்ஸ் துறையுடன் ஓரளவு நெருங்கி வரும் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவிலுள்ள வேலை வாய்ப்புகள்

ரோபோடிக் தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் ஓரளவுக்கு விரிவடைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சிறப்பு(specialisation) படிப்பை முடித்தவர்கள், மெக்கானிக்கல் தொடர்புகள், சென்சார் - ஆக்சுவேடர் இன்டக்ரேஷன்ஸ், மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றின் அடிப்படையில், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமாக, ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படும் இடங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

இந்தியாவிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள்

Precision automation robotics India limited(PARI)
ABB
Kuka robotics and DiFACTO Robotics and Automation

போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), பலவிதமான சூழல்களையும், சிக்கல்களையும் கையாள, பல்வேறு விதமான ரோபோட்களை வைத்துள்ளது. DRDO, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் ரோபோட்களை கட்டமைக்க, Centre for artificial intelligence and robotics போன்ற நிறுவனங்களை அமைத்துள்ளது.

வரும் காலங்களில், வர்த்தகம், வீட்டு உபயோகம், பாதுகாப்பு, போக்குவரத்து, விநியோகம், மெக்கானிக்கல் உள்ளிட்ட மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில், ரோபோட்களின் பங்களிப்பு அதிகரித்துவிடும்.

இத்துறையில், அதிகளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், பயிற்சிகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது தொடர்பான படிப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பல்துறை அம்சமாக இருக்கும் ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் அல்லது கணிப்பொறி அறிவியல் துறைகளைப்போல், முதுநிலைப் பட்ட அளவில் ஒரு சிறப்பு படிப்பாக உள்ளது.

இந்தப் படிப்பில் ஆர்வமுள்ள ஒருவர், இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப்படிப்பை வழங்கும் வரை காத்திருக்கலாம். மற்றபடி, இதுதொடர்பான சிறப்பு படிப்புகளுக்கு தற்போதைக்கு, வெளிநாடுகளுக்கு செல்லலாம்.


ரோபோடிக்ஸ் பொறியாளரின் பணிகள்

* ரோபோட் வடிவமைப்பு.

* பல்துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்தல்.

* ரோபோட் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.

* ரோபோட் தயாரிப்பில் பயன்படக்கூடிய எலக்ட்ரானிக் உட்கூறுகளை ஆராய்தல்.

* ரோபோட்களை உருவாக்கிய பின்னர், குறைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சோதித்தல்.

* தேவைப்படும் இடங்களில், ரோபோட்களை அல்லது ரோபோட் அமைப்புகளை நிறுவுதல்.

* ரோபோட் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல்.

* பயனாளிகளுக்கு உதவுதல்

உள்ளிட்ட பலவிதமான பணிகள் உள்ளன.

ரோபோடிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

* IITs - Chennai, Delhi, Kanpur, Guwahathi, Powai, Roorki and Kharagpur.

* PSG College of Technology - Coimbatore.

* SRM institute of science and technology - Kanchipuram.

* International Institute of information technology - Hyderabad.

* The university of Hyderabad.

* University college of engineering under Osmania university - Hyderabad

* M.S. University - Baroda

* The institute of technology under the Banaras Hindu university - Varanasi

* The Birla institute of technology and Science - Pilani

* Sri sathya sai institute of higher learning - Prasanthi nilayam.