Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 31 ஜனவரி, 2013

6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை : நீதிபதி வேதனை


திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் நேற்று தொடங்கப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சட்டவிரோதச் செயலில் சிக்கியுள்ள இளம் சிறார்கள் இதுவரை மதுரையில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் சென்னை நீதிமன்ற நீதிபதி ராமசுப்பி ரமணியன் நீதி குழுமத்தைத் திறந்து வைத்தார். மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாலசுந்தரகுமார் வரவேற்றுப் பேசி னார். கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது: ஒரு குழந்தை தவறு செய்வது அவரது குடும்பச் சூழலின் காரணமாகத்தான். தற்போது தாய், தந்தையர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தொலைக்காட்சி, சினிமாக்களை பார்த்து கெட்டுப் போகின்ற சூழல் உள்ளது.

குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டியது பெற்றோரின் கடமை. காலச்சூழலைப் பொறுத் துதான் ஒரு குழந்தையின் வாழ்க்கை மாறுகிறது. புத்துயிர் தருவதில் கட்டாயத்தை உணர்த்துவதுதான் இந்தக் குழுமம். நாட்டின் 1.80 குழந்தைகள் தெருக்குழந்தைகளாக உள்ளனர். 100 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.

6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். 6 முதல் 16 வயது வரை உள்ள 2 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரம்ப கல்வியைக்கூட எட்ட முடியவில்லை. 2.70 கோடி குழந்தைகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் முதல் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடிவதில்லை. 5 வயதிற்கு மேல் சுமார் 27 லட்சம் குழந்தைகள் வாழ முடியாமல் இறக்கின்றனர்.

இது வேதனையாக உள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் விடியலைத் தேடித்தான் நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்வின் புதிய பரிமாணத்தை தரும் வகையில் காவல்த்துறை, நீதித்துறை, சமூகம் இவை அனைத்தும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்''என்று பேசினார்.

கிணறை காணவில்லை தாசில்தார் மனைவி புகார்

கரூர் அருகே தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை என்று ஓய்வு பெற்ற தாசில்தார் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின¢றனர்.ஒரு சினிமா படத்தில் கிணறை காணவில்லை என நடிகர் வடிவேலு போலீசில் புகார் செய்வார். அதேபோன்ற ஒரு சம்பவம் கரூர் அருகே நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு: கரூர் மாவட்டம் தாந்தோணிமலையை சேர்ந்தவர் முருகேசன். ஓய்வுபெற்ற தாசில்தார். இவரது மனைவி இந்திராணியின் பூர்வீக நிலம் அருகில் உள்ள மோளபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு இருந்தது. இந்த நிலத்தை இந்திராணியின் பங்காளிகள் அனுபவித்து வந்தனர். நிலம் தொடர்பாக இந்திராணிக்கும், பங்காளிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கில் இந்திராணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளவும், கிணற்றில் பம்புசெட் அமைக்கவும் முடிவு செய்த இந்திராணி நிலத்தை போய் பார்த்தார். அப்போது அங்கு இருந்த கிணறு தகர்க்கப்பட்டு மூடி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பரமத்தி போலீசில் இந்திராணி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை. இதுபற்றி கேட்டபோது எனது தாய் மாமாவின் மனைவி ராமாத்தாள், அவரது மருமகள் பர்வதம் (47), உறவினர் சண்முகம் (45) ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என மனுவில் கூறி இருந்தார். இந்திராணியின் புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்வரூபம் விவகாரம்: முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை

முஸ்லிம் அமைப்புகளும், கமல்ஹாசன் இருதரப்பும் அமர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட பேசிக் கொண்டால் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளூடன் இன்று மாலை 4.30 மணிக்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும்,இந்த பேச்சு வார்த்தையில் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன் கலந்து கொள்கிறார் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளி, பொன்னுச்சாமி ஆரம்பப்பள்ளி, அரிஜன் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–கடந்த 2011–2012–ம் கல்வி ஆண்டில் எங்களது பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தோம். அந்த சூழ்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதனால் பணி நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலும், அதன்பின் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை பின்பற்றியே தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மனு தள்ளுபடி
மேலும் மாணவர்களுக்கு கட்டாய, தரமான கல்வி அவசியம். எனவே இத்தகைய கல்வியை அவர்களுக்கு வழங்க பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களே கல்வி கற்பிக்க தகுதியானவர்கள்.கடந்த 2010–ம் ஆண்டிற்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள் 5 வருடங்களுக்குள் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பை மட்டும் தகுதியாக கொண்டு வேலையில் சேர்க்க முடியாது. தகுந்த திறமையுடன் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விஸ்வரூபம் பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொண்டால் அரசு ஒத்துழைக்கும்: முதல்வர் ஜெயலலிதா


கடந்த சிலநாட்களாக விஸ்வரூபம் படப்பிரச்சினை தமிழகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த இரண்டு வாரங்களாக ‘விஸ்வரூபம்’ படம் சம்பந்தமாக பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி வருகிறது. ஊடகங்களும், தனிநபர்களும் அரசு மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

இப்படத்திற்கு 24 முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதவிர, தவ்கீத் ஜமாத் அமைப்பும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

விஸ்வரூபம் படம் வெளியாகியிருந்தால் தமிழ்நாட்டில் வன்முறை வெடிக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசு உளவுத்துறையை நம்பியே உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கவனிக்க வேண்டிய அரசு கடமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. படத்தை தடை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை.

இப்படம் 524 தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தது. இப்படத்திற்காக பாதுகாப்பு அளிப்பதற்கு 56,440 காவலர்கள் தேவை. போதுமான காவலர்கள் இல்லாததால் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை. பல்வேறு பணிகளுக்கிடையே காவலர்களால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படத்திற்கு தடை விதித்தது என்பது தவறான கருத்து. ஒரு தனியார் தொலைக்காட்சி நலனுக்காக தடை விதிக்கப்பட்டது என்பதும் வெறும் புகார்தான்.

விஸ்வரூபம் பிரச்சினையில் கருணாநிதியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ‘விக்ரம்’ பட விவகாரத்தில் எம்.ஜி.ஆருக்கும் நான் கடிதம் ஏதும் எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த நான் எதற்கு கடிதம் கொடுக்க வேண்டும். எனவே, கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்டி கட்டிய ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று கமலஹாசன் சொன்னது அவரது கருத்து சுதந்திரம். கமலஹாசன் பிரதமரை தேர்வு செய்யமுடியாது. இந்த பிரச்சினையால் கமல் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. கமலஹாசன் பெரிய முதலீட்டில் படம் எடுத்ததற்கு தமிழக அரசு பொறுப்பாகாது.

இப்பிரச்சினையை இருதரப்பும் பேசி இப்பிரச்சினையை தீர்த்துக் கொண்டால் அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

புதன், 30 ஜனவரி, 2013

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணி இடங்கள், தேர்வு மூலம் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் பேட்டி


இந்த ஆண்டு அரசு பணியில் எத்தனை காலி இடங்களுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய ஆண்டு தேர்வுபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், வருடாந்திர தேர்வுபட்டியலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நட்ராஜ் கூறியதாவது:–

இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 10 ஆயிரத்து 105 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 27 துறைகளில் 37 விதமான பதவிகள் அடங்கும். அதிகபட்ச காலி இடங்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் குரூப்–2 தேர்வு மூலமாக 2,714 இடங்களும், குரூப்–2 தேர்வு மூலம் 1,300 பணி இடங்களும், 1,500 வி.ஏ.ஓ. இடங்களும், தொழில்நுட்ப பணியைப் பொருத்தவரையில், அதேபோல், 2,790 டாக்டர் பணி இடங்களும் 1,800 கால்நடை மருத்துவர்கள் இடங்களும் நிரப்பப்படும், இந்த காலி இடங்களின் எண்ணிக்கை தோராயமானதுதான். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தேர்வுமுறை–பாடத்திட்டம் மாற்றம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக உறுப்பினர் எம்.ஷோபினி தலைமையில் ஒரு கமிட்டியும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து உறுப்பினர் கே.லட்சுமணன் தலைமையில் தனியாக ஒரு கமிட்டியும் போடப்பட்டது. இந்த இரு கமிட்டிகளின் பரிந்துரைஅடிப்படையில், தேர்வுமுறையிலும், பாடத்திட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, இதுவரை குரூப்–2 தேர்வில் இடம்பெற்றிருந்த நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுகின்றன. முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–1 தேர்வில் விண்ணப்பதாரர் எடுக்கிற மதிப்பெண் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தனித்தனி தேர்வுகள்
குரூப்–1 தேர்வில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை மெயின் தேர்வுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒரு காலி இடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்தது. இனிமேல் ஒரு காலி இடத்திற்கு 50 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.

வி.ஏ.ஓ. தேர்வில் அதிரடி மாற்றம்
மேலும், வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.

இனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.

நடப்புகால நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம்
பொதுவாகவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புகால நிகழ்ச்சிகள் குறித்த கேள்விகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிமேல், பொதுஅறிவு தாளில் நடப்பு கால நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக தனியாக வினா வங்கி தயாரிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்–2 தேர்வின் முடிவு பிப்ரவரி மாதம் 1–ந் தேதி வெளியிடப்பட்டு அதற்கான கவுன்சிலிங் 18–ந் தேதி தொடங்கும்.

இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது;–

இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆண்டு தேர்வு பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் போன்ற பதவிகள், குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் வயது வரம்பு விதிமுறையால் பாதிப்பு வருமே என்று கேட்கிறீர்கள். அதுபோன்று பாதிப்பு ஏதும் வராத வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட இந்த குரூப்–2 பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி பணி இடம் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படுவதால் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வியியல் தொடர்பாக கூடுதலாக ஒரு தாள் எழுத வேண்டும்.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை


புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்.

பகுதி நேர பள்ளிகள் அமைக்க இடம் பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை


இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில் பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரா, பீகார், கர்நாடகா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இடம் பெயர்ந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், பாதிக்கு மேற்பட்டோர், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடம்பெயர்ந்து வாழ்வோருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எந்த பாதுகாப்பு வசதியும் இங்கு இல்லை. இதுகுறித்த, கருத்தரங்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சென்னையில் வசிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது: சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல், வேலைக்காக சென்னை வந்துள்ளோம். நாங்கள் வேலை பார்த்தாலும், எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என, எண்ணுகிறோம். ஆனால், மொழிப் பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. அதனால், படிக்க வைக்கும் எண்ணம் இருந்தும், படிக்க வைக்க முடியவில்லை.

பெரிய கட்டடங்கள் அமைக்கும் இடங்களில், தொடர்ச்சியாக வேலை செய்வோம். ஒரு இடத்தில், கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஒரு ஆண்டாகும். கிழக்கு கடற்கரை சாலையில், பல ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தோர், பல்வேறு கட்டடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, அதிக அளவில் வெளிமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில், அந்தந்த மொழியில் பாடம் நடத்தும் பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு, இலவச அரிசி வழங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவிலாவது விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, இலவச அரிசியை, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

முற்றுகிறது தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிகிறது


ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கிட பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மாதத்தில் தெலுங்கானா கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் தெலுங்கானா பகுதியில் தற்போது பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும்‌ தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு , இன்னும் 24 மணி நேரத்தில் தனித்தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கெடு விதித்துள்ளன.

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இறுதி முடிவை எடுக்காவிட்டால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.பி.,க்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், தெலுங்கானா மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது என்றார். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.

 இதையடுத்து தெலுங்கானா விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சூடுபறக்கிறது. பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நெருங்கும் பொதுத்தேர்வு - கணினி ,அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை


தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 2001 முதல் 2012 வரை, தமிழகம் முழுவதும் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்திற்கு கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் விஜயகுமார் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் 1,200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 2002-10 வரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், முதலில் 5 முதுநிலை ஆசிரியர்களுக்கும், பின்னர் 9 ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டன. ஆனால், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 2008-09ல், 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதிலும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. இப்பாடத்துடன், காலியாக உள்ள பிற பாட ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் பணி நியமனம் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், இது சார்ந்த வேறு எந்தவித தகவல்களையும் எங்களால் தெரிவிக்க இயலாது" என்றனர்.

விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதம்!


விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை நீக்கும்படி கமலஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீது கடந்த 24-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. 26-ந்தேதி நீதிபதி வெங்கட்ராமன் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 28.01.2013 திங்கள்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கமலஹாசன் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். தீர்ப்பை இன்று தள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று விசாரணை நடக்கிறது.

விசாரணையின் போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

திங்கள், 28 ஜனவரி, 2013

இளைஞர்களே நாட்டின் பலம்: பிரதமர் மன்மோகன் சிங்

இளைஞர் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு சந்திக்கும் பல்வேறு சவால்களை எளிதாக சமாளிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 டில்லியில் என்.சி.சி., மாணவர்களிடையே பேசிய அவர், "இந்தியா இளைஞர்களின் தேசம். இளைஞர்களே நமது நாட்டின் மிகப்பெரிய பலம். முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இளைஞர்கள் தங்களது உரிமைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களிடையே, நாட்டை சீர்படுத்த வேண்டும் என ஆசை மிக அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர் சக்தியை நாம் முறையாக சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளை, சவால்களை எளிதாக சமாளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

நேதாஜி விஷயத்தில் உண்மைகள் வெளிவரவில்லை


"நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களுக்கு, மத்திய அரசிடமிருந்து, ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால், இந்த விஷயத்தில், உண்மைகள் வெளிவரவில்லை,'' என, சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின் மகள், அனிதா போஸ் கூறியுள்ளார்.இந்திய சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். நாட்டின் விடுதலைக்காக, இந்திய தேசிய ராணுவம் என்ற படைப் பிரிவை உருவாக்கியவர். 1945, ஆக., 18க்கு பின், நேதாஜியை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

விமான விபத்தில் இறந்து விட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனாலும், நேதாஜி எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்ற விவரங்கள், மர்மமாகவே இருந்தன. இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்காக, 1956, 1970 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில், விசாரணை கமிட்டிகள் அமைக்கப்பட்டன.முதல் இரண்டு விசாரணை கமிட்டிகளும், நேதாஜி, விமான விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தன. மூன்றாவது கமிட்டி, இதுதொடர்பாக, தைவானில் சென்று விசாரணை நடத்தியதாகவும், குறிப்பிட்ட நாளில், அப்படி ஒரு விமான விபத்து எதுவும் நிகழ வில்லை என்றும், தைவான் அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேதாஜியின் மகள், அனிதா போஸ், கூறியுள்ளதாவது:நேதாஜி மாயமானது குறித்து, விசாரிப்பதற்காக, மூன்று விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த மூன்று விசாரணை குழுக்களுக்கும், அப்போது ஆட்சியில் இருந்த, மத்திய அரசுகளால், போதிய அளவில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கவில்லை என்ற, முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
அரசின் ஆதரவு கிடைத்திருந்தால், நேதாஜி எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய, விவரங்கள் தெரிந்திருக்கும்.இவ்வாறு அனிதா போஸ் கூறினார்.

"மிஸ்டு கால்' அழைப்பு கொடுப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது


"மிஸ்டு கால்' என்ற வார்த்தையே பலருக்கு, வேம்பாக கசக்கும். அழைத்து பேசினால், காசு வீணாக போய்விடும் என நினைத்து, "மிஸ்ட் கால்' கொடுத்து, பேசும் சிக்கன நபர்கள் ஏராளமாக உள்ளனர். அத்தகைய நபர்களின் அழைப்புகளை ஏற்க, தயக்கம் காட்டுபவர்களும் உண்டு."மிஸ்டு கால்' கொடுப்பவர்களின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.இந்த புதிய முறை, 2011ம் ஆண்டில் தான் இந்தியாவில் பரவலானது. லோக்பால் மசோதா கோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவாக, "மிஸ்டு கால்' கொடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்.

"மொபைல் போன்களில் முறையான அழைப்பு அளித்தால் பணம் செலவாகும்; "மிஸ்டு கால்' அழைப்புக்கு பணம் செலவாகாது' என்பதால், ஏராளமானோர், "மிஸ்டு கால்' கொடுத்தனர். 6 மாதங்களில், 2.5 கோடி பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, "மிஸ்டு கால்' மூலம் ஆதரவு அளித்தனர்.இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்களும், தங்கள் பொருட்களை விளம்பரபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கருத்தை அறியவும், "மிஸ்டு கால்' முறையை பின்பற்ற துவங்கி விட்டன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட எண்ணுக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்கள் கணக்கில் உள்ள பணம் விவரம், மொபைல் போனில் கிடைக்கும்.பெரிய பன்னாட்டு நிறுவனங்களான, எச்.யு.எல்., மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களும், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கின்றன.

மராத்தி மொழி நாளிதழ் ஒன்று, தன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளது. அந்த எண்ணுக்கு, "மிஸ்ட் கால்' கொடுத்தால், மாத சந்தா விவரம், மொபைல் போனுக்கு வந்து விடும்.பிரபல சினிமா தியேட்டர் நிறுவனத்துக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், டிக்கெட் விவரம் தெரிய வருகிறது. விமான நிறுவனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த, "மிஸ்டு கால்' வர்த்தகம், இப்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திட்ட மேலாண்மை துறை - உலகெங்கிலும் பணி வாய்ப்புகள்


ஒரு பிரமாண்டமான பாலத்தையோ அல்லது விமான நிலையத்தையோ அல்லது கட்டடத்தையோ பார்க்கையில், நமக்கு பிரமிப்பாக தோன்றுவது இயற்கையே. இதுபோன்ற கட்டுமானத் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க, திறமையான திட்ட மேலாண்மையே காரணம்.

Project management எனப்படும் இந்த செயல்பாட்டில், ஆதி முதல் அந்தம் வரை திட்டமிடுதல் மட்டுமே இடம் பெறாது.

மாறாக, செயல்படுத்தும்போது எழும் பிரச்சினைகளை சமாளித்தல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றும் திட்டமிட்ட செலவுக்குள் அந்த வேலையை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் யோசித்து தயாராக வேண்டும். பல பெரிய திட்டங்களின் வெற்றிகளும், தோல்விகளும், மேற்கூறிய அம்சங்களை கையாள்வதிலும், தேவையான, கடைசிநேர மாற்றங்களை செய்வதிலும் அடங்கியுள்ளன.

ஒரு முழுநீள தொழில்
திட்ட மேலாண்மை என்பது ஒரு முழுமையான தொழில். இத்தொழிலில், சவால்கள், ஆச்சர்யம் மற்றும் அபரிமித சம்பளம் போன்றவை கிடைக்கின்றன. இத்துறை வல்லுநர்கள், ஐடி/ஐடிஇஎஸ், கட்டுமானம், பொறியியல், நிதி, சுகாதாரம், டெலிகாம், கன்சல்டன்சி மற்றும் உற்பத்தி தொழில்துறை உள்ளிட்ட பலவிதமான துறைகளுக்கு, திட்ட மேலாண்மை நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

உலகெங்கிலும் திட்டமிடப்பட்டுள்ள ஏராளமான பணிகளுக்கு, 2013ம் ஆண்டு வாக்கில், மொத்தம் 60 லட்சம் திட்ட மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம், இவர்களை பணி நியமனம் செய்கையில், இவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.

வணிகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுதல்
நடைமுறையில், அனைத்து ஐஐஎம்.,களும், திட்ட மேலாண்மை தொடர்பாக, குறிப்பிட்ட வகையான பாடங்களை கற்பிக்கின்றன. பொதுவாக, எம்பிஏ பாடத்திட்டங்களில் இந்த Project Management பாடத்தின் அம்சங்கள் இடம்பெற்றாலும், ஒரு முழு நீள பாடமாக இது கற்பிக்கப்படுவதில்லை.

எனவே, Specialist courses மட்டுமே, இந்தக் குறையை தீர்ப்பனவாக உள்ளன. ஆனால், எம்பிஏ படிப்புகளில் இவை பரவலாக காணப்படுவதில்லை. மேலும், கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளிலும், இப்பாடத்தின் அம்சங்கள் கலந்துள்ளன.

இத்தொழில் நிபுணர்களுக்கான தேவைகள்
தற்போது, சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்குவதற்கான அம்சங்களை, தனது கல்வித் திட்டத்தில் வைத்துள்ளன. சென்னை ஐஐடி வழங்கும் எம்பிஏ படிப்பில், திட்ட மேலாண்மையானது, மைய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பலவிதமான விருப்பப் பாடங்களால்(electives) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, திட்ட மேலாளர்களுக்கான தேவைகள், உலகளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை ஈடுசெய்ய, மேலாண்மைப் பள்ளிகள், அத்துறை தொடர்பான படிப்புகள் வழங்குவதை உறுதிசெய்து, நிலைமையை சரிசெய்ய வேண்டியுள்ளது.

தகுதி சான்றிதழ்
ப்ராஜெக்ட் பயிற்சி பெறுநர்களுக்கு, அனைத்து வகையான கல்வி மற்றும் திறன் நிலைகளில், ஒரு விரிவான நிலையிலான சான்றிதழை, திட்ட மேலாண்மை கல்வி நிறுவனம் வழங்குகிறது. தற்போது 6 Credential -களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தப் படிப்பு, ஒருவரின் தொழில்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தையும் சோதிக்கிறது.

ப்ராஜெக்ட் மேலாளர்களால் மேம்படுத்தப்பட்டு, உங்களின் செயல்பாட்டு திறனின் சிறப்பை, PMI சான்றிதழ் உறுதி செய்கிறது. இந்த செயல்பாடானது, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ப்ரொபஷனல்(PMP) மூலமாக விவரிக்கப்படுகிறது. மேலும், தர மேலாண்மை அமைப்புகளுக்காக, ISO 9001:2000 நிலையில், PMP பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம்
PMI Certification, சர்வதேச அளவில் அங்கீகாரமும், மதிப்பும் பெற்றவையாக உள்ளன மற்றும் முறைமைகள், தர நிலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றுக்கு இடையில், மாற்றத்தக்க வகையில் உள்ளன. இதன்மூலம், திறமையை அளவிடுவதில், இதுவொரு நம்பத்தகுந்த அம்சமாக உள்ளது.

திட்ட மேலாளர்களுக்கான தேவைகள்
இன்றைய உலகின் மொத்த உற்பத்தில் 5ல் 1 பங்கு, அதாவது, 12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், திட்டங்களுக்காக செலவிடப்படுகின்றன. எனவே, இத்துறைக்கு, திறன்வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

நாளுக்கு நாள், திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பெருகி வருவதாலும், அத்துறையிலுள்ள பலபேர் ஓய்வுபெற்று செல்வதாலும், இத்துறைக்கு தேவையான மனிதவளம் அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல்
இத்துறையில் வாய்ப்புகள் அதிகரித்துவரும் அதேநேரத்தில், PMI Certification என்பது, உங்களின் தயார்நிலையை மேலும் உறுதிபடுத்துகிறது. மருத்துவம், தொலைதொடர்வு, நிதி, ஐடி மற்றும் கட்டுமானம் ஆகிய பல்வேறான துறைகளில், ஏற்கனவே, PMI Credential பெற்ற 4 லட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளனர். இத்துறையில், நுழைய, உங்களுக்கான நேரமிது.

ஏனெனில், காலிப்பணியிடங்கள் மிக அதிகமாக உள்ளன. திட்ட மேலாண்மை திறனைக் கொண்டிருந்து, திட்ட மேலாளர் பணியை நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நெரிசல் மிகுந்த வேலைவாய்ப்பு சந்தையில், உங்களுக்கு விருப்பமான பணிகளை பெற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

இரண்டு கைகள் இழந்தவர்களுக்கு எளிதாக ஓட்டும் மூன்று சக்கரவாகனம் என்ஜினீயரிங் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு


இரண்டு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக ஓட்டிச்செல்லும் வகையில் 3 சக்கர மோட்டார் வாகனம் ஒன்றை என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் கண்டு பிடித்து கோவை கல்லூரி கண்காட்சியில் செயல் விளக்கம் அளித்தார்.

கைகள் இல்லாமல்...
கால்களை இழந்த மாற்று திறனாளிகள் இருகைகளை கொண்டு, 3 சக்கர சைக்கிள், மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களை இயக்கி வாழ்க்கையில் நம்பிக்கை பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஒரு கையை இழந்தவரும், செயற்கையாக கையை பொருத்திக் கொண்டு வாகனங்களை ஓட்ட முயற்சிப்பது உண்டு.

இதில் பலர் தோற்று போவதால் வேறு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இதைவிட இருகைகளையும் இழந்தவர்களால் எதுவுமே முடியால் முடங்கி கிடக்கும் நிலையே ஏற்படுகிறது. ஆகவே ஒரு கையில்லாத, இரு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக வாகனத்தில் சென்று, வாழ்க்கை பயணத்தை இன்பமாய் கழிக்க வழியை ஏற்படுத்தி உள்ளார். சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தருண்ரெட்டி.

முதலிடம் பெற்றது
இவர் கோவை சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் மெக்கானிக் துறை சார்பில் தங்களுடைய கண்டுபிடிப்பான கைகள் இல்லாமல் இயக்கும் 3 சக்கர மோட்டார் வாகனத்தை காட்டி செயல் விளக்கம் அளித்தார். இதனால் மொத்தம் கலந்து கொண்ட 60 பேரில் இவருடைய கண்டுபிடிப்பு முதல் இடத்தை பிடித்தது. அதற்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தினத்தந்தி நிருபரிடம் அவர்கள் கூறியதாவது:–

மாற்று திறனாளிகள் ஓட்டுகின்ற 3 சக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி, அதில் கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் ஓட்டுவதற்காக புதிய மெக்கானிசம் முறையில் வடிவமைத்தேன். இதற்கு ஹேண்ட் ப்ரீ பைக் (கைகள் பிடிக்காமல் ஓட்டுதல்) என்று பெயர். கைகளுக்கு வேலை இல்லாததால் அனைத்தையும் கால்கள் மூலம் இயக்கும்படி செய்துள்ளேன்.

செயின் இணைப்பு
இதில் பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டரை அழுத்துவது, இடபுறம், வலபுறம் திருப்பது, நேராக செலுத்துதல் போன்ற செயல்பாடுகளை செயின் இணைப்பு மூலம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர ஹெட்லைட், இண்டிகேட்டர், ஹாரன் போன்றவற்றை கால்கள் மூலம் செய்வதற்கு ஏற்ப சுவிட்ச் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனக்கு உறுதுணையாக என்னுடன் படிக்கும் முத்துக்குமார் இருந்து வருகிறார்.

அடுத்த கட்டமாக முற்றிலும் தானியங்கி முறையில் இயக்க சென்சார் முறையை பயன்படுத்த உள்ளோம். இதை கண்டுபிடிக்க 10 மாதங்கள் ஆகியது. இதுபோன்ற கண்டுபிடிப்பு மாற்று திறனாளிகளுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அதிக மைலேஜ் கருவி
மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்து காப்புரிமை பெற விண்ணப்பித்து உள்ளோம். இதுபோன்ற கண்டுபிடிப்பை உலக அளவில் யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆகையால் இந்த மெக்கானிசம் எங்களின் திறமைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறோம். இந்த கண்டுபிடிப்பை நாங்கள் கோவையில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் சமர்ப்பித்த போது எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த 3 சக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் கோவையை சேர்ந்த வர்க்கீஸ், ராஜன் ஆகியோரது கண்டுபிடிப்பான வி.மெர்ஜ் என்ற அதிக மைலேஜ், புகை மாசு குறைக்கும் கருவியை பொருத்தி உள்ளோம். இதனால் எங்கள் வாகனம் தற்போதைய மைலேஜில் இருந்து 25 கிலோ மீட்டர் வரை கூடுதலாக கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி


"ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமையும் வழங்க வேண் டும்,'' என, துணை ஜனாதிபதி, ஹமித் அன்சாரி கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய வாக்காளர் நாள் விழாவில், அன்சாரி பேசியதாவது:கடந்த, 60 ஆண்டுகளில், 15 லோக்சபா தேர்தல் களையும், 350 மாநில சட்டசபை தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.ஓட்டளிப்பது அனைவரின் கடமை. அனைவரும் ஓட்டளிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதிக பெரும்பான்மை பெற்றவர் மட்டுமே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், வெற்றி பெற்றவர் களில் பலர், மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெறுகின்றனர்.

தனக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்யும் வாக்காளர், அவரின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரை நிராகரிக்கவும் வேண்டும். அதுபோல, வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என, தெரிவிக்கும் உரிமையும் வழங்க வேண்டும்.இவ்வாறு ஹமித் அன்சாரி கூறினார்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.

தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே, இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும்.

ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். பல்கலைக்கழக துறை பாடத் திட்டங்களை பதிவு செய்யும் வகையில், தனி இணையதளம் அமைக்கப்பட உள்ளது.

மாற்றம் செய்யப்படும் பாடத் திட்டங்கள், இதில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம், உலக அளவில் உள்ள பேராசிரியர்களை ஒருங்கிணைக்கிறது. இணையதள தொடர்பு மூலம், துறை பேராசிரியர்கள் வெளிநாட்டில் உள்ள அதே துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் முறைகள், பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து, சர்வதேச தரத்திற்கு கல்வி மேம்பாட்டு வழிகளை மேற்கொள்வர்.

உலகளவில் துறை வாரியாக உள்ள பேராசிரியர்கள் பற்றிய, அடிப்படை புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்கு இடமாறும் மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களே, இதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களையும் முறைப்படுத்தி, ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ஒரே பாடத்திட்ட முறையால், மாணவர்கள் பெரும் பயனடைவர். தொழில் வல்லுனர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பாடத்திட்ட மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி குழு இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பாடத் திட்டத்தால், மாணவர்களுக்கு உலக தரமான கல்வி கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இடமாற்றத்தில் செல்லும் மாணவர்கள், கல்வி தொடர உதவும். அடுத்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும், என்றார்.

சனி, 26 ஜனவரி, 2013

34 ஆண்டுகளாக பதவி உயர்வி இல்லை: தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேதனை


 கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 1978ல் மேல்நிலை பள்ளி முறை துவங்கிய போது, பல தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை பதவி உயர்வு.

இதை, கல்வி துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவர்களில் வணிகவியல் ஆசிரியர்களை மட்டும், கடந்த ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை.

தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகத்தில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணியில் சேருபவர், தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து, முதுகலை ஆசிரியர் அளவிற்கு பதவி உயர்வு பெறுகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தகுதியுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்திய, எங்களுக்கு பதவி உயர்வு இல்லை. போராட்டங்கள் நடத்தியும் பூஜ்யம் தான், என்றார்.

"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது"


 "வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கமும், சந்தேகமும் இளைஞர் பட்டாளத்திற்கு உள்ளது. தேவையான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

நாட்டின், 64வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதிய இந்தியாவின் அடையாளமாக திகழ வேண்டிய இளம் பெண், தலைநகர் டில்லியில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்ததும், நம் இதயங்கள் வெற்றிடமாகி விட்டன; அறிவில் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டன.

ஒரு உயிரை மட்டும் நாம் இழக்கவில்லை; ஒரு கனவையும் நாம் இழந்துவிட்டோம். இந்திய நாகரிகத்தில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் புனித தன்மை போற்றப்பட வேண்டும் என காலம் காலமாக போதிக்கப்பட்டு வந்துள்ளது. அத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணை சிதைத்ததன் மூலம், தேசத்தின் ஆன்மாவையும் சிதைத்து விட்டோம்.

தேசத்தின் அற நெறி திசைகாட்டியை மாற்ற வேண்டிய நேரமிது. நாம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குகிறோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும்.தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கத்திலும் சந்தேகத்திலும் இளைஞர் பட்டாளம் உள்ளது.

வளரும் தலைமுறையினரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அவர்களால் தேச குறிக்கோளை அடைய முடியும்.அதற்காக விரைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நக்சல் தீவிரவாதம் போன்ற வன்முறைகள், ஆபத்தான வடிவங்களை பெற்று விடும். தேசிய குறிக்கோளை அடைய அரசு நிர்வாகமும், சமுதாய மாற்றத்தை விரும்புபவர்களும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.

எதிர்பார்த்த அளவு கல்வி, உயர்மட்டத்தை இன்னும் அடையவில்லை. சரியான படி கல்வி வளர்ச்சி அடைந்திருந்தால், இப்போதிருக்கும் அளவை விட, இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி பெற்றிருப்போம். முந்தைய ஆறு நூற்றாண்டுகளை விட, கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்றிருக்கிறது என நீங்கள் நினைத்தால், கடந்த, 60 ஆண்டுகளை விட, வரும், 10 ஆண்டுகளில் இன்னும் அபரிமித வளர்ச்சி அடையும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, தன் முதல் குடியரசு தின உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களின் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை நிரந்தர தடை செய்வதில் எந்த தயவு தாட்சணியமும் காட்டக்கூடாது : எம்.அப்துல் ரகுமான் எம்.பி.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் விஸ்வரூபம் திரைப்படம் குறித்த அக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.

முஸ்லிம்களின் உயிர் மூச்சான புனித குர்ஆனையும்,தீவிரவாத போக்கினையும் இணைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமே தீவிர வாதத்துக்கு துணை நிறகக்கூடியதைப் போன்ற காட்சிகளையே பரவலாகக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் லீக் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கின்றது.

நம்முடைய எதிர்ப்பை மிக அழுத்தமாக தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் திர்.ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம்.சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தெரிவித்திருக்கின்றன.

தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்திருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த படத்தை வெளியிடாமல் முற்றுலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் லீகின் நிலைபாடு.
வருகிற 28-ம் தேதி வெளியிடப்ப்ட இருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பும் இதே அடிப்படையிலான நியாமுள்ள தீர்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கின்றோம்.
இந்த திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு நிச்சயமாக கெடும் என்கிற அச்சப்பாடு நிலவி வருவதை அரசாங்கமும் நீதிமன்றமும் கருத்தில் கொள்வது இன்றியமையாதது.

திரைப்படங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மாத்திரமல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது.
என்கிற முஸ்லிம் லீகின் நிலையை எல்லாத் தளங்களிலும் பதிவு செய்தே வருகிறோம்.

மதமாச்சரியம் இல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இந்த வரையரையை மீறிய காரணத்தினால் தான் விஸ்வரூபம் படம் கடும் எதிர்ப்பினை சந்தித்திருக்கிறது.இந்த எதிர்ப்பு தார்மீக நிலையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தினால் தான் ,தமிழக அரசும் உடனடியாக 15 நாட்கள் தடை விதிக்க முன் வந்திருக்கிறது.
இந்தத் தடை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலையைஉண்டாக்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை,ஆகவே அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களின் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் எந்த தயவு  தாட்சணியமும் காட்டக்கூடாது என்பதை மாத்திரம் இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

புதன், 23 ஜனவரி, 2013

வளைகுடா வாழ் தென்தமிழக மக்களுக்காக மதுரை -துபாய் விமான சேவை வேண்டும்


வளைகுடா வாழ் தென்தமிழக மக்களின் நலன் கருதி மதுரையிலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா " விமான சேவையை உடனே துவங்கவேண்டும் என்று வலியுறுத்தி துபாய் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் ஆதரவோடு துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .

ஜனவரி 22 ,2013 அன்று இ.டி.ஏ.அஸ்கான் ஆடிடோரியத்தில் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் .செய்யது சலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .

காயிதே மில்லத் பேரவையின் சார்பில் அதன் கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா பேசும்போது ,தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்தும் திருநெல்வேலி ,தூத்துக்குடி மாவட்ட மக்கள் சந்திக்கும் சிரமங்களை விலாவர்ரியாக எடுத்துக் கூறியதோடு  ,மதுரை விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா" விமான சேவை மிக அவசியமான அவசரமானது என்பதை வலியுறித்தி பேசினார் .ஈமான் சங்கம் சார்பில் கீழக்கரை ஹமீது யாசீன் , தமிழ் பேரவை  சார்பில் அஹமது மீரான் ,துபாய் தமிழ் சங்கம் சார்பில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் துபாய் மக்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர் .

மேலும் தாயகத்திலிருந்து வந்திருந்த மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு , தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் கூட்டமைப்பின் முதுநிலைத் தலைவர் இரத்தின வேலு , டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் ஜாகிர் ஹுசைன் , செயலாளர் முஸ்தபா ஆகியோர் மதுரையிலிருந்து துபாயிக்கு விமானம் சேவை துவங்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து ,உடனடியாக அந்த சேவையை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி பேசினர் .

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய ,ஏர் இந்தியா துபாய் பிரிவின் மேலாளர் ராம்பாபு அவர்கள் , மிக விரைவில் மதுரை - துபாய் விமான சேவை துவங்கும் என்று உத்திரவாதம் தந்தார் .

நிகழ்ச்சிகளை அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரகுமான் தொகுத்து வழங்கினார் .

ரவணசமுத்திரம் மீரான் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே கூட்டம் நிறைவுபெற்றது .

தனித்திறன் வளர்ப்பு (SKILL BUILDING)


கல்வி என்பது கல்விக்கூடத்தில் மட்டுமல்ல, கல்வி நிலையத்தையும் கடந்து மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமுள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் நம்மை நிதான படுத்திக்கொள்ளவும், செயல் திறனை வளர்த்துக் கொள்ளவும் அவசியமாக இருப்பது தனித்திறன்கள்தான்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையை எளிதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையே குறிக்கோளாக கொண்டு அதன் பாதையிலே நடை போட முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த மாணவன்/ மாணவி கல்வி பயிலும் காலத்தைக் கடந்து வேலைக்கு சென்ற பின், அந்த துறையில் தொடர்ந்து போட்டிகளை எதிர்கொண்டு, தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தேவை, தனித்திறனே ஆகும்.

தனித்திறன் என்பது என்ன?
நன்றாக பாடங்களை புரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவதுதான் தனித்திறனா? இல்லை. தனித்திறன் என்பது உலக அறிவை, உடல் நலனை சார்ந்த செயல்களாகும். இவை எப்படி தனித்திறனை வளர்க்கும்?

"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்ற வாக்கியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு மாணவன் என்னதான் நன்றாக படித்தாலும், அவன் உடல் நிலை நலமாக இருந்தால்தான் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். சிறு வயதிலேயே நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்களால் அவதிப்படுகிறவர்களை நாம் காண்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை இப்படி நோய்க்கு செலவழித்தால் அந்த வருமானத்தால் என்ன பயன்?

படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை படிப்பது மட்டும் தான். ஆனால் வேலைக்கு சென்ற பின் பெரும் நிறுவனத்தின் பெயரை நிலை நாட்ட வேண்டும், குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடமைகள் வரும் பொழுது அதனை வெறும் படிப்பறிவால் எதிர்கொள்ள முடியுமா?

ஒரு வங்கிக்கு சென்றால் எத்தனை பேருக்கு அதன் செயல்பாடுகள் தெரிகிறது? எத்தனை மாணவர்களுக்கு வேலைக்கான Application -ஐ நிரப்ப தெரிகிறது? இவையெல்லாம் படிப்பறிவினால் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா?

வேலைப்பளுவினால் மனம் அழுத்தம் அடையும்பொழுதும், ஒரே மாதிரியான வேலையிலும் நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் நாம் கற்றுக் கொண்டோமா?

இதனை எல்லாம் அந்த நெருக்கடியான சூழ்நிலையில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமையுமா? ஒரு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் நிலை மேலும் சிக்கலாகத்தானே அமையும். இதனை எல்லாம் சந்தித்து வரும் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே போதிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நல்ல உடல் நலத்துக்கு விளையாட்டும், மனம் புத்துணர்வு பெற இசையும் கலையும், சவால்களை எதிர்கொள்ள நடைமுறை நிகழ்வுகள் போன்ற தனித்திறன்களை மாணவப் பருவம் முதற்கொண்டே கற்றுக்கொண்டால் தானே எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.

வேளாண்துறையில் காலி பணியிடம் நிரப்பும் பணி தீவிரம்


வேளாண் துறையில் காலியாகவுள்ள, அதிகாரிகள் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்பும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. வேளாண்துறையில், ஐந்துக்கும் மேற்பட்ட துணை இயக்குனர் பணியிடங்கள் மட்டுமின்றி, மாவட்ட வேளாண் அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள், தற்போது, முழுவீச்சில் துவங்கியுள்ளன. 2006-07 முதல், 2012-13ம் ஆண்டுக்களுக்கான, அலுவலக உதவியாளர்கள்,104 பேர், 9ம்தேதி பணிநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், வேளாண்துறை கமிஷனர் அலுவலகம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வேளாண் தொழிற்நுட்ப பிரிவு பொறியாளர் அலுவலகம், விதைச்சான்றளிப்பு இயக்குனரகம் உள்ளிட்ட, இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வேளாண்துறையில் காலியாகவுள்ள, தட்டச்சர் பணியிடங்களில், 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வேளாண்துறை பணிமேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவை அடுத்து, காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில், துணை இயக்குனர் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும். பணியிடங்களில்,புதிய நியமனங்கள் தேவைப்படும் பட்சத்தில், இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடும்' என்றார்.

சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?


கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.

இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில்,  "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.

தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

சென்னை பல்கலையில் மீண்டும் பேராசிரியர்கள் பற்றாக்குறை !

பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின், 150ம் ஆண்டு விழாவை போற்றும் வகையில், 2007ல், முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன், சிறப்பு மாண்பமை - எமிரேட்ஸ், பேராசிரியர்கள் திட்டத்தை கொண்டு வந்தார். ஆசிரியர் பணியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், மாண்பமை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய இயற்பியல், வேதியியல், உயிர் இயற்பியல் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில், எமிரேட்ஸ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கவுரவ ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மற்ற ஆசிரியர்களை போலவே, மாணவர்களுக்கு பாடம் எடுத்தல், ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், 2009ல், இத்திட்டத்தை கைவிட்டார். இதுகுறித்து, மாண்பமை பேராசிரியராக பணிபுரிந்த சண்முகம் கூறியதாவது: அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் என, பல நாடுகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அங்கு மதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பும் வரை, மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம். ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டியாகவும் செயல்படலாம். ஆனால், இங்கு, கல்லூரி, பல்கலையில் பணியாற்றும் வரை மட்டுமே, பேராசிரியர்களாக மதிப்படுகின்றனர். அவர்களின் அனுபவத்திற்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்படுவதில்லை.

சென்னை பல்கலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், கவுரவ சம்பளம் வாங்காமல், இலவசமாக எமிரேட்ஸ் பேராசிரியராக பணிபுரிந்தனர். அண்ணா, பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலையில், எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில், மறுபடியும் இத்திட்டத்தை, புதிய துணைவேந்தர் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.

திங்கள், 21 ஜனவரி, 2013

லட்சம் பேருக்கு "கல்தா" நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம்


பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில், 48 சதவீதத்தை, ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது, அந்த நிறுவனத்துக்கு, பெரும் சுமையாக உள்ளது.

எனவே, இந்த சுமையை குறைக்கும் வகையில், விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு லட்சம் ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.எனவே, இந்த கூடுதல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம், இவர்களுக்கான சம்பளத் தொகை, மீதமாகும் என, அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒரு லட்சம் பேர், விருப்ப ஓய்வு பெற்றால், தற்போதுள்ள சம்பளச் சுமையில், 15 சதவீதம் வரை குறையும்.

இதன் பின்,நிறுவனத்தை, சுமுகமான முறையில் செயல்படுத்த முடியும். அளவுக்கு அதிகமான ஊழியர்களின் எண்ணிக்கையைத் தவிர, மேலும் ஒரு பிரச்னையும் உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது, 50 ஆக உள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு, போதிய திறமை இல்லை.இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவித்தன.

நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை


அனுபவ் சோனி என்ற இளைஞர், பெங்களூரில் செயல்படும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த வியாழனன்று, கார்ல்டன் டவர் என்ற இடத்திலிருந்து, ஒயிட்பீல்ட் என்ற இடத்திற்கு, மாநகர பஸ்சில் பயணம் செய்தார்.பழைய விமான நிலைய சாலையில், பஸ்சில் வரும் போது, நான்கைந்து பேர், அனுபவை தாக்கி, அவரின் மொபைல் போன் மற்றும் பணம் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றனர்.

பணத்தை இழந்த அந்த இளைஞர், புகார் கொடுக்க, பழைய விமான நிலைய சாலை, போலீஸ் நிலையம் சென்றார். "சம்பவம் நடந்தது, எங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்த போலீசார், எச்.ஏ.எல்., போலீசில் புகார் கூறும்படி தெரிவித்தனர்.எச்.ஏ.எல்., போலீசாரும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை. "சம்பவம் நடந்தது, பஸ்சில். கார்ல்டன் டவர் போலீசில் போய் புகார் கொடுங்கள்' என்றனர். இதனால், விரக்தி அடைந்த அனுபவ், வீட்டுக்கு திரும்பினார்.

மொபைல் போனையும் அந்த நபர்கள் பறித்து சென்றதால், மாற்று, "சிம்' கார்டு வாங்க, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, போலீசில் புகார் செய்த நகல் கேட்டனர். மீண்டும் மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற அனுபவ், தன் வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டார்.

மறுத்த போலீசார், "போன் தொலைந்தது என, புகார் எழுதித் தந்தால் வழக்கை பதிவு செய்கிறோம்' என்றனர். "கொள்ளையர்கள் பறித்தனர் என, புகார் கொடுத்தால், ஏற்க முடியாது' என கூறியதால், வேறு வழியின்றி, "மொபைல் போன் தொலைந்து விட்டது' என, புகார் கொடுத்து, புகார் நகலை பெற்று, அதை மொபைல் போன் நிறுவனத்திடம் கொடுத்தார்.
பணம், மொபைல் போனை கொள்ளையர்களிடம் பறி கொடுத்ததை விட, போலீசார் நடந்து கொண்ட விதத்தால், மிகுந்த மன வேதனை அடைந்த அனுபவ், நடந்த சம்பவங்களை, பெங்களூரு நகர போலீசாரின், "பேஸ்புக்' இணையதளத்தில் எழுதினார்.

சனிக்கிழமை அவரின் மொபைலை தொடர்பு கொண்ட, பழைய விமான நிலைய சாலை மற்றும் எச்.ஏ.எல்., போலீசார், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உறுதி அளித்தனர். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர், அனுபவிடம் மன்னிப்பும் கேட்டார்.நெகிழ்ந்து போன அனுபவ் சோனி, மனிதனின் முகத்திற்கு இருக்கும் மதிப்பை விட, "பேஸ்புக்' இணையதளத்திற்கு இருக்கும் மரியாதையை எண்ணி வியந்தார்.

மாணவர்களுக்கு சுகாதாரம் கற்பிப்பு: அசத்தும் அரசுப்பள்ளி

கள்ளிக்குடி ஒன்றியம், எம்.போத்தநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த சுகாதாரப் பள்ளியாக செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் முழு சுகாதாரத் திட்டத்தில் தண்ணீர் வசதியுடன் தனி கழிப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 மேலும், கழிப்பறை சென்று பின்பும், சாப்பிடும் முன்பும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் ஆசிரியைகள் முன் கைநகங்களை சுத்தம் செய்கின்றனர். சுத்திரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. கூடையில் மட்டுமே குப்பைகளை மாணவர்கள் சேகரிக்கின்றனர். தினமும், சுகாதார ஆத்திசூடி சொல்கின்றனர். போதுமான சோப்புகள், கைதுடைக்கும் துண்டுகள் கொடுத்து சுகாதார விழிப்புணர்வை தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியைகள் செய்து வருகின்றனர். 

கம்பெனி செக்ரெட்டரி - ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணி!


கார்பரேட் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஒரு நபர் முக்கியப் பங்காற்றியிருப்பார். ஆனால், அவர் வெளியே தெரியமாட்டார். அவர்தான், கம்பெனி செக்ரட்டரி.

ஒரு சிறந்த கம்பெனி செக்ரட்டரி என்பவர், சட்டம், மேலாண்மை, பைனான்ஸ் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகிய பல்துறை அறிவை தன்னகத்தேக் கொண்டு, ஒரு நிறுவனம் - அதன் இயக்குநர்கள் வாரியம் - பங்குதாரர்கள் - அரசாங்கம் - பிற ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கிடையே ஒரு பாலமாக திகழ்கிறார்.

ஒரு கம்பெனி செக்ரட்டரி என்பவர், உள்புற சட்ட நிபுணராக இருந்து, நிறுவனத்தின் சட்ட திட்டங்களின் படி செயல்படுபவராக திகழ்கிறார். கார்பரேட் சட்டம், செக்யூரிட்டீஸ் சட்டம், கேபிடல் மார்க்கெட் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணராக இருக்கும் ஒரு கம்பெனி செக்ரட்டரி, இயக்குநர்களின் வாரியத்திற்கு, முதன்மை ஆலோசகராக இருக்கிறார் மற்றும் நிறுவனத்தின் அனைத்துவிதமான முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகிறார்.

சரியான தகுதியுள்ள ஒரு கம்பெனி செக்ரட்டரி, ஏதேனுமொரு கார்பரேட் நிறுவனத்திலும் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் பயிற்சி செய்யலாம். குறைந்தபட்சம் 5 கோடி மற்றும் அதற்கும் மேலான பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள், தமக்கான ஒரு முழுநேர கம்பெனி செக்ரட்டரியை கட்டாயம் நியமித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பணிக்கான தேவைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பைனான்சியல் பிளானிங், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், வெல்த் மேனேஜ்மென்ட், அஸெட் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், பிரைவேட் ஈக்யூடி பைனான்ஸ் போன்ற வளர்ந்துவரும் பல அம்சங்களும், கம்பெனி செக்ரெட்டரிகளின் தேவைகளை அதிகரிக்கின்றன. இத்துறையில் பயிற்சி கொடுப்பதற்காக இருக்கும் பிரபல கல்வி நிறுவனம் ICSI. இத்துறை சார்ந்த பயிற்சிகளை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக இது உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம், தொலைதூரக் கல்வியின் மூலமும் படிப்புகளை வழங்கி, கம்பெனி செக்ரெட்டரிகளை உருவாக்குகிறது. மேலும், விருப்ப வாய்மொழி பயிற்சி வகுப்புகளும் உண்டு.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒரு மாணவர், கம்பெனி செக்ரெட்டரி படிப்பில் சேரலாம். ஆனால் அவர் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். பவுண்டேஷன் ப்ரோகிராம், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்பவையே அவை. இதனோடு சேர்த்து, 15 மாதங்கள் பிராக்டிகல் பயிற்சியையும் முடிக்க வேண்டும். இந்த பிராக்டிகல் பயிற்சியை, விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராமில் தேறிய பிறகும் மேற்கொள்ளலாம்.

அதேசமயம், பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, கம்பெனி செக்ரெட்டரி படிப்பில் சேர விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்ற இரு நிலைகளை முடிக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, 15 மாத ப்ராக்டிகல் பயிற்சியும் உண்டு. படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், ICSI -ன் அசோசியேட் உறுப்பினராக நீங்கள் நியமிக்கப்படுவீர்கள் மற்றும் அதன்பிறகு, உங்களின் பெயருக்குப் பின்னால், ACS என்ற எழுத்துக்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். Associate Company Secretary என்பது இதன் அர்த்தம்.

கம்பெனி செக்ரெட்டரி படிப்பிற்கான சேர்க்கை ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் டைபெறுகின்றன.

இங்கு பயிற்சிபெற்ற கம்பெனி செக்ரெட்டரிகளுக்கு, வெளிநாட்டு பணிவாய்ப்புகள் அதிகம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல கம்பெனி செக்ரெட்டரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் திறமைகள் மற்றும் சிறப்பான தகுதி நிலைகளுக்கு அங்கு மதிப்பு அதிகம்.

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், ஆண்டுக்கு, 25 லட்சம் முதல் சுமார் 1 கோடி வரை சம்பளம் கிடைக்கிறது. சம்பள விகிதமானது, ஒருவரின் திறமை மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. கம்பெனி செக்ரெட்டரிகள், மத்திய மற்றும் மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள், யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் லாப-நோக்கமற்ற நிறுவனங்கள் ஆகியவைகளில் பரவலான பணி வாய்ப்புகளை பெறலாம்.

WTO மற்றும் GATS ஆகியவற்றின் மூலமாக, சேவைகள், உலகமயமாக்கப்பட்டுள்ளதால், இத்துறைக்கான பணிவாய்ப்புகள் பல்வேறான உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன், இந்திய அரசு இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதால், கம்பெனி செக்ரெட்டரிகளின் உலகம் இன்னும் விரிந்துள்ளது.

மேலும், 2009ம் ஆண்டின் கம்பெனிகள் மசோதா, கம்பெனி செக்ரெட்டரி தகுதி நிலையை, CEO மற்றும் CFO தகுதி நிலைகளுக்கு சமமாக நிறுத்துகிறது. இதன்மூலம், பொறுப்புகளும் அதிகரிக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் பொது பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் கீழ்கண்ட பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Corporate Restructuring
Cross border insolvencies
Mergers and amalgamations
International tax planning
National Integrated VAT systems(GST)
Competition law and competition economics
Arbitration and dispute resolution
Legal and knowledge process outsourcing
Knowledge management
Indirect taxation

கட்டண விபரங்கள்

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.3600
எக்ஸிகியூடிவ் ப்ரோகிராம் - ரூ.7000 (வணிகம் படித்த மாணவர்களுக்கு)
வணிகம் படிக்காத மாணவர்களுக்கு - ரூ.7750
ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.7500

தேர்வுக்கட்டணம்

ஆண்டுக்கு இருமுறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.875
எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் - ரூ.900(per module)
ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.750(per module)

தேர்வெழுத, விண்ணப்பிக்கும் கடைசித் தேதிகள்

மார்ச் 25 (ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 9 வரை கட்டலாம்)
செப்டம்பர் 25 (ரூ.100 அபராதத்துடன் அக்டோபர் 10 வரை கட்டலாம்)

நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் முற்ப்போக்கு சகதிகள ஒன்று திரள வேண்டும் :காங்கிரஸ் அழைப்பு

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

குண்டேரிப்பள்ளத்துக்கு யானைகள் படையெடுப்புசுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிப்பு


கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாட்டால், குண்டேரிப்பள்ளம் அணையை நோக்கி யானைகள் வரத்து அதிகரித்துள்ளது. யானையை பார்க்க மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அணையில் குவிய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாகவும், யானைகள் அதிகம் காணப்படும் வனப்பகுதியாகவும் சத்தி வனக்கோட்டம் உள்ளது.சத்தி வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், பங்களாபுதூர் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கிறது.சென்ற ஆண்டில் இருந்து சுற்று வட்டாரத்தில் அக்னி வெயில் வாட்டுவது போல் வெயிலில் தாக்கம் உள்ளது.

வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது. மரம், செடி, கொடியில் உள்ள இலைகள் அனைத்தும் காய்ந்து, கீழே உதிர்ந்த நிலையில் உள்ளன.

பனியால், ஒரு சில செடிகளில் இலைகள் தென்படுகின்றன. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. தண்ணீர் ஓடும் ஓடைகளில் தண்ணீர் இல்லை. வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. உணவு தட்டுபாடு காரணமாக வன விலங்குகள், வனத்தையொட்டி விளை நிலங்களுக்கு வர துவங்கி உள்ளன.

கோபி சுற்று வட்டாரத்தில் உணவு தேடி வந்த நான்கு வயது மான், முள்வேலியில் சிக்கி இறந்தது. தொட்டிக்குள் தவறி விழுந்த மான் ஒன்று மீட்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் குளம், குட்டையை நோக்கி வர துவங்கி உள்ளன. கோபி கொங்கர்பாளையம் பஞ்சாயத்து குன்றி மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. குன்றி, விலாங்கோம்பை, மாவநத்தம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு, 42 அடி. மழை நீரை மட்டுமே நம்பி இவ்வணை உள்ளது.மழைக்காலங்களில் மட்டுமே அணை நிரம்பி வழியும். மழை இல்லாத காலங்களில் மட்டுமே அணை வறண்டு விடும்.குண்டேரிபள்ளம் அணையின் மூலம், 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. பெரும்பாலும் கடலை, எள் போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.அணையில் இருந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 10 நாட்களுக்கு ஒரு என்ற வீதம், 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் நீலம் புயலால், ஓரளவுக்கு மழை பெய்ததால், 27 அடி தண்ணீர் வசதி உள்ளது.குண்டேரிபள்ளம் அணையின் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அணையில் உள்ள தண்ணீரை நம்பியே உள்ளன. மாலை நேரத்தில் யானை கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டமாக சென்று பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளன.

சமூகவியல் மாணவர்களுக்கு உதவித்தொகை


சமூக அறிவியல், சமூகவியல் துறை தொடர்பான மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் செல்வதற்கான களம் மற்றும் உதவித்தொகையை PCF(People Care Family) தன்னார்வ அமைப்பு வழங்குகிறது.

லெப்டினன்ட் பஸுடியோ சவ்பே கல்வி உதவித்தொகை என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்டர்ன்ஷிப் எனப்படும் படிப்பின் போதான களப்பயிற்சிக்கும் உதவுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் தங்களின் திட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இவ்வமைப்பு உதவுகிறது. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற, தங்களது சுயவிவரம், திட்டம் சார்ந்த சிறுவிளக்கக் கட்டுரையை வரும் பிப்., 14ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு PCFன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் : உள்த்துறை அமைச்சர் ஷிண்டே

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில், சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மக்கா  மஸ்ஜித் குண்டுவெடிப்பு  மலேகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.


ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு நிறம் ஏதும் கிடையாது. இதனை சோனியா ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார் என கூறினார்.

மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை: பிரதமர்


மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதமர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் வளர்ச்சி வீதம் 5.5 சதவீதமாக இருந்தது. ஆனால் பொருளாதார மந்தநிலையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக எட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களை காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் தமக்கு சாதகமாக்கியுள்ளன.

விலைவாசி உயர்வு நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட விலை ஏற்றமே இதற்கு காரணம். பணவீக்கத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும் என இவ்வாறு பிரதமர் கூறினார்.

சனி, 19 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் காந்தி தேர்வு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி நடந்த இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், அவரது தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் பெரும்பாலான தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின்னர், இன்று இரவு கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அப்போது ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி பரிந்துரை செய்தார். இதையடுத்து ராகுலை துணைத்தலைவராக நியமிப்பது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ராகுலுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால், அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது என்றும், சோனியாவுக்கு அடுத்தபடியாக கட்சியில் ராகுல்காந்தி செயல்படுவார் என்றும் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்தார். இந்த அறிவிப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுல் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். இந்த மகழ்ச்சியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கல்லறைப் பூக்கள் !


கல்லறை தோட்டத்து பூக்கள் அனைத்தும்
என்ன பேசிடும் என்னென்ன பேசிடும்

வாடினாலும்
வருத்தப்பட யாருமில்லை !

வயது வந்த பின்
மாலைகட்ட மணமக்கள் இல்லை !

தென்றல் மட்டுமே சத்தமிடும்
வெள்ளை கொடி கட்டி !

புறாக்களுக்கு இங்கு அனுமதியில்லை
அமைதி கெடாமல் இருக்க !

அவசரமாய் கடந்து செல்வோரின்
ஆழ்நிலை தூக்கம் இங்கேதான் !

பொருளாதாரம்
இங்கே பொருட்படுத்த படுவதேயில்லை !

நில அபகரிப்பு வழக்கு தொடர
கல்லறைச் சட்டத்தில் அனுமதியில்லை !

தார் சாலைகள் அமைக்க மனு பெற்ற
அமைச்சரின் இறுதி ஊர்வலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது !

நிலவின் துணை கொண்டு
மின்னொளிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !

பேச்சாளன் இங்கே
மௌனத்தின் தூதுவனாக நியமிக்கப் பட்டிருக்கின்றான் !

புத்தாண்டில் புதிய ஆணை எடுக்க
யாரும் இங்கே கிடந்த பின் எழுவதில்லை !

நமது சுவாச வெளியிடு மட்டும்தான் சிதைவு பெறாமல்
இங்கே சிம்போனி இசைத்து கொண்டிருக்கின்றது !

சதைவெறி கொண்டவனும்
சட்டத்தின் துளைகளுக்குள் சாலைகள் அமைத்தவனும்
இங்கே புதையுண்டு புத்தனாகி போனார்கள் !

”போதி” மரம் கேட்கவில்லை
போதிய மரம் மட்டும் வேண்டிய சமூக ஆர்வலரின்
மகன் நட்ட பூச்செடி நாங்கள்..!

எங்கு நட்டாலும்
புன்னகையே அறிவிக்கப்படாத எங்களது தேசிய மொழி..!


----இளம் கவிஞன் ,ஆய்குடி மணி 

துப்பாக்கி, பீரங்கி சத்தத்திற்கு நடுவே அச்சமின்றி செயல்படும் பள்ளி


இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே செயல்படும் நடுநிலைப் பள்ளி, எவ்வித பதற்றமும் இல்லாமல் வழக்கம் போல் இயங்குகிறது.

ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில், பக்கீர் தாரா என்ற கிராமம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கும், பக்கீர் தாராவுக்கும், 1.5 கி.மீ., தான் இடைவெளி. எல்லையில் நடக்கும் மோதல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்களின் போது, இந்த கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சமீபத்திய உச்சகட்ட பதற்றத்திலும், எவ்வித அச்சமும் இல்லாமல், பக்கீர் தாரா அரசு நடு நிலை பள்ளி தினமும் செயல்படுகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர், பல்பீர் சிங்.
எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலால், பள்ளியின் சுற்றுச் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சுவடும், பீரங்கி குண்டுகளுக்கு இலக்கானதால், பாதிக்கப்பட்ட கட்டடங்களும், இன்னும் அந்த பள்ளியில் காணப்பட்டாலும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த அச்ச உணர்வும் கிடையாது.

மாணவர்களில் பலரும், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தான். 14 வயது தாய்ரா கவுன்சார் என்ற மாணவியின் தாய், எட்டு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதற்காக, உயிரை இழந்தவர். இவரை போல ஏராளமான மாணவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தால், பல விதங்களில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களிடம் பயம் என்பதே இல்லை.

நாட்டின் பிற பகுதி, நடுநிலைப் பள்ளி மாணவர்கள், வீடியோ கேம்ஸ், டிவி நிகழ்ச்சிகளை பற்றி பேசும் போது, இந்த பள்ளி குழந்தைகள், பாகிஸ்தான் தாக்குதல், துப்பாக்கி சூடு, பீரங்கி சத்தம், ராணுவ வாகனங்கள் போன்றவற்றை பற்றியே பேசி வருகின்றனர்.

கேள்விக்குறியாகும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியின் எதிர்காலம்


பொன் விழாவை கடந்து செயல்படும், ஊட்டி அரசு கலை கல்லூரி கட்டட விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, கல்லூரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயரான ஜான் சல்லிவன், தற்போதைய ஊட்டி அரசுக் கலை கல்லூரி கட்டடம் அருகே தனக்கென ஒரு குடியிருப்பை முதலில் அமைத்தார்.

கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், "கல் பங்களா" "கன்னிமரா காட்டேஜ்" என அழைக்கப்படுகிறது. நிர்வாக பணிகளை மேற்கொள்ள அருகே ஒரு கட்டடத்தை மீண்டும் கட்டினார்; அந்த கட்டடம் கடந்த 1955 முதல், அரசுக் கலை கல்லூரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்டடமும் கடந்த 1905ம் ஆண்டைய ஆவணத்தின் படி, "கல் பங்களா முகப்பு" என பதிவாகியுள்ளது.

தொடரும் வளர்ச்சி: கல்லூரியில், தற்போது 3,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 14 இளங்கலை, 8 முதுகலை, ஏழு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. 78 நிரந்தர பேராசிரியர்கள், 51 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். பொதுப்பணித் துறையினர், கல்லூரியை பராமரித்து வருகின்றனர்.

கல்லூரியை மேம்படுத்த, மாணவர் எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசு கலைக் கல்லூரிக்கும், தலா 100 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தகுதியுள்ள கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

"கல் பங்களா" சர்ச்சை: இந்நிலையில், ஊட்டி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னிமரா காட்டேஜ், கல்லூரி முதல்வர் குடியிருப்பாக அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், பயன்படுத்தப்பட்டு வருகிறது. "இக்குடியிருப்பை அருங்காட்சியகமாக மாற்ற, சில தனியார்கள் குடியிருப்பை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது" என, கூறப்படுகிறது.

கல்லூரி இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்படும் எழுத்துப்பூர்வ கடிதங்களில், "கல் பங்களாவை (ஸ்டோன் ஹவுஸ்) காலி செய்ய வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.

ஆவணப்படி, கல்லூரி முகப்பு கட்டடம் தான் "கல்பங்களா" என பதிவாகியுள்ளது. இக்கட்டடத்தில், பொருளாதாரம், வரலாறு, கணிதம், பாதுகாப்பு, தமிழ் துறை வகுப்புகள் தவிர, கல்லூரி நூலகமும் செயல்படுகிறது. "இந்த கட்டடத்தை தான் காலி செய்ய அரசு வலியுறுத்துகிறது" என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கல்லூரி வளர்ச்சிக்கு தடை?: அரசு கலைக் கல்லூரி, அதை சுற்றியுள்ள பகுதி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது; இது, அரசு புறம்போக்கு என, ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டு குடியிருந்தாலே, அவர்களுக்கு பட்டா கொடுக்கும் அரசு, 58 ஆண்டுகளாக கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் அரசு கலைக்கல்லூரி பெயரில், நிலத்தை பதிவு செய்து கொடுக்க இதுவரை ஆர்வம் காட்டாமல் இருப்பதும், கல்லூரி பயன்பாட்டில் உள்ள கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற ஆர்வம் காட்டுவதும், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம், வாடகை கட்டடத்தில், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அதை மேம்படுத்தி, அதன் பயன் மக்களை போய் சேர்வதற்கான நடவடிக்கையில் இறங்காமல், புதிதாக ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்த "மெனக்கெடுவது" பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.