Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 பிப்ரவரி, 2013

நெல்லை கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு


நெல்லை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் பைல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், அதன் கீழ் 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர், 2 தரம் உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், 4 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் மாற்றுப்பணி என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பாளை., நகர், மானூர், நான்குநேரி, சேரன்மகாதேவி, மேல நீலிதநல்லூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கான பைல்கள் தேக்கம் அடைந்துள்ளன.இதுதவிர மாவட்டக்கல்வி அலுவலகங்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் இளநிலை உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையுள்ளது.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், இதர உதவித்தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மாற்றுப்பணி மேற்கொண்டு வரும் ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20, 21 தேதிகளில்வேலை நிறுத்தம்:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை, நெல்லை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுடலைமணி, பொருளாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 20, 21 தேதிகளில் நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மணலியில் அமோனியா வாயு கசிவு மூச்சு திணறலால் மக்கள் தவிப்பு


மணலி உரத் தொழிற்சாலையில் இருந்து, நேற்று காலை வெளியேறிய அமோனியா வாயுவால், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

சென்னை அடுத்த மணலியில், மத்திய அரசின் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வாரத்திற்கு இருமுறை, இரவு நேரத்தில், அமோனியா வாயு வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மணலி, அரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், தில்லைபுரம், கலைஞர்நகர், லம்பைமேடு மற்றும் மாத்தூர் எம்.எம்.டி.ஏ., உள்ளிட்ட, பல இடங்களில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அமோனியா வாயு அதிகளவில் பரவியது. அப்பகுதியில் பரவிய அமோனியா வாயுவால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பல மணி நேரம் அமோனியா கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பலரும் துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றனர்.

ஆர்.டி.ஓ., சண்முகம் கூறுகையில், ""உரத் தொழிற்சாலையில், நேற்று காலை, 9:15 மணிக்கு, மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்னாக்கியை இயக்காததால், அமோனியா வாயு கசிவு வெளியேறியது. சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலை திரும்பியது,'' என்றார்.

உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?


சிங்கம்புணரி வட்டாரத்தில் பிளஸ் 2,முடிக்கும் மாணவர்கள், கல்லூரி வசதியின்றி உயர்கல்வி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு ஆண், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர்,கிருங்காக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிரான்மலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.

இவை மட்டுமின்றி, உலகம்பட்டி, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, எஸ்.புதூரில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும்,கிராமப்புற பள்ளிகளில் பிளஸ் 2, முடித்து ஆயிரத்து 500 மாணவர்கள் வெளியேறுகின்றனர்.

இப்பகுதியில் அரசு, தனியார் கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் இல்லை. ஒரு தனியார் பாலிடெக்னிக், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மட்டும் உண்டு.

வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெற வெளியூர் அனுப்புகின்றனர். ஏழை மாணவர்கள் 25 கி.மீ.,தூரத்தில் உள்ள திருப்புத்தூர், 35 கி.மீ.,தூரத்திலுள்ள மேலைச்சிவபுரி கல்லூரிக்கு தினமும் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.

மாணவிகள், மேலூர், நத்தத்திலுள்ள கல்லூரிக்கு பஸ்சில் சென்று உயர் கல்வி பெறும் கட்டாயம் உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது. இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற சிங்கம்புணரியில் அரசு, தனியார் கல்லூரிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.