Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 மார்ச், 2013

அரசு பேருந்துகளில் கூரியர், பார்சல் சேவை அதிக வரவேற்பு

அரசு விரைவு பேருந்துகளில் துவங்கப்பட்ட கூரியர் மற்றும் பார்சல் சேவைக்கு, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.அரசு விரைவு பேருந்துகளில், தபால் மற்றும் பார்சல் பொருட்களை எடுத்து செல்லும் வகையில், "வி ஸ்பீட்ஸ் லாஜிஸ்டிக்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம், கடந்தாண்டு இறுதியில், பணி ஒப்படைக்கப்பட்டது.

பேருந்துகளில் அனுப்பும் தபால் மற்றும் பொருட்களை, பேருந்து சேருமிடத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 250 கிராம் வரை எடையுள்ள தபால்களுக்கு, 7 ரூபாய் கட்டணமும், அதற்கு மேல், ஒவ்வொரு, 250 கிராமுக்கும், 2 ரூபாய் 50 காசு வரை வசூலிக்கின்றனர்.பார்சல் பொருட்களை பொறுத்தவரை, 2.5 கிலோவிற்கு, 25 ரூபாய் வசூலிக்கின்றனர். 7 ரூபாய்க்கு தபால் சேவை என்பதால், இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், வேலூர், கரூர் ஆகிய தமிழக பகுதிகள், கர்நாடக மாநிலம், பெங்களுரு என, மொத்தம், 14 இடங்களில், "செவன் டிகிரி செல்சியஸ்' என்ற பெயரில், இந்த சேவையை விரிவுபடுத்தி உள்ளனர்.இது குறித்து, கூரியர் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு பேருந்துகள் சென்று வரும் அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், இந்த சேவையை விரிவுபடுத்துவதே நோக்கம். அடையாள அட்டை உள்ளவரிடமிருந்து, பார்சல் பொருட்களை பெற்று வழங்குபவரிடம், அடையாள அட்டையை சோதித்த பின்னரே, பொருட்களை ஒப்படைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தென்னை தோப்புகள் "பிளாட்டுகளாக" மாறும் பரிதாப நிலை


கொட்டாம்பட்டியில், வறட்சி, மின் தட்டுப்பாடு, உற்பத்திற்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால், தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு "பிளாட்டு'களாக மாறி வருகின்றன. இதனால், தென்னை விவசாயம் மெல்ல மெல்ல அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் 8,500 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. வறட்சி, மின்தட்டுப்பாட்டால், தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், விளையும் காய்கள் நிறம் மாறி சிறுத்துக் காணப்படுகின்றன.

இதை வியாபாரிகள் வாங்க விரும்புவதில்லை. அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், நன்றாக விளைந்த காய்களை, வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பாடுபட்டு உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்காததால் சிலர் தங்களது தோப்புகளை அழித்து பிளாட்டுகளாக மாற்றி, விற்றுவருகின்றனர்.

கவிபிரகாஷ்: ஏழு ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். முன்பு 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய்கள் பறிப்போம். தற்போது, மின் தட்டுப்பாட்டால் உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாததால், காய்கள் பறிக்க 60 நாட்களுக்கு மேலாகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான காய்கள் நிறம் மாறி சிறுத்துக் காணப்படுவதால், அவற்றை வியாபாரிகள் வாங்குவதில்லை. முன்பு ஒரு ஏக்கருக்கு ரூ.5000 லாபம் கிடைத்த நிலையில் தற்போது ரூ.2000 கிடைப்பதே அரிது.

திருஞானசம்பந்தம்: பெரும்பாலான தென்னை விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிவிடுகின்றனர். அதனால் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு காய்களை கொடுக்கவேண்டிய நிலை. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத விரக்தியில் தோப்புகளை அழித்து பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இப்பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்தால் மட்டுமே, தென்னந்தோப்புகள் பிளாட்டுகளாக மாறுவதைத் தடுக்கமுடியும், என்றனர்.

இளநிலை பட்டபடிப்புகளுக்கு உதவித் தொகை


இந்தியாவில் கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.


உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.

www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 
பவுன்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலென்ஸ் அன்ட் ஆக்சஸ் (FAEA),
சி-25, கடாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, நியூ மெஹ்ரவுலி ரோடு, நியுடெல்லி-110016.
தொலைபேசி 011-41689133