Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு: கி.வீரமணி


ஆசிரியர்களின் தகுதித் தேர்விலும் பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் இதில் தலையிட்டு சமூகநீதி முடிவுகள் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ரத்து செய்து, வகுப்புவாரியான தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து, புதிய தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, தமிழ்நாட்டில் சட்டப்படி நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி மறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும்,  ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையும் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

1) தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு “ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும், (2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14) சமூக நீதி அறவே பின்பற்றப்படவில்லை.

2) 2895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 27-7-2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் பொதுப்போட்டியில் வெற்றி பெற்ற ‘இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப் போட்டிக்கான இடங்களில் நிரப்பாமல், அவரவர் சார்ந்த இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பி, பொதுப்போட்டி இடங்கள் என்பது முற்றிலும் முன்னேறிய சமூகத்தினருக்கான இடங்களாக ஆக்கப்பட்டிருந்தது.

3) இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு அளித்த நீதியரசர் நாகமுத்து, ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் பட்டியலை முற்றிலுமாக ரத்து செய்ததோடு, தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரி நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தை அடுத்து, அது முற்றிலும் தவறு எனக் கூறிய நீதியரசர், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையும் திரும்பப்பெறவும் உத்தரவிட்டார். (WP 21170 of  2012 dt:: 1.10.2012).   அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல், இனி இதுபோல் நடைபெறாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

01.10.2012 அன்று வெளிவந்த இந்த தீர்ப்பின்படி, கடந்த 24-08-2012 அன்று வெளியிடப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பட்டியலும் நீதிமன்ற ஆணையால் செல்லாததாக்கப்பட்டுவிட்டது.

தகுதி மதிப்பெண்கள் எங்கே?

4) தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் (NCTE)) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, “ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, பொதுவாக 60ரூ-ற்கு (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத) அவரவர் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்.

5) இத்தேர்வில் வெற்றி பெற்றவர்தான், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். (தனியார் பள்ளிகள் உட்பட)

6) தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் இத்தகுதிச் சான்றிதழ் அவசியம். தற்போது நடைபெற்ற தேர்வில் 19,000 மட்டுமே தேர்வு என்று அறிவிக்கப்பட்டதால், மீதமுள்ளோர் எந்த பள்ளியிலும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடியான தகுதித் தேர்வு முறையினால் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆறரை லட்சம் பேர்கள் (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புரத்தைச் சேர்ந்தோர்) தனியார் பள்ளிகளில் கூட ஆசிரியர் பணியில் சேர முடியாத பெருந்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

7) தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி, பிற மாநிலங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு தனி மதிப்பெண்களை நிர்ணயம் செய்து தேர்வு நடத்தியுள்ளன.

எடுத்துக்காட்டாக,

ஆந்திரா  OC 60%, OBC 50%, SC/PH 40%,
அஸ்ஸாம்  OC 60%, Others 55%, (OBC, SC/ST/PH)
பீகார்  OC 60%, Others 55%,
ஒரிசா  OC 60%, Others 50%,

8) ஆனால் தமிழ்நாட்டில் பொதுப்போட்டிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 60  விழுக்காடு மதிப்பெண்களை,  அனைத்துப் பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் உட்பட பெறவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டு “ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும்”, (TNTET) சமூகநீதி முறை அடிப்படையிலான தனித்த தகுதி மதிப்பெண்கள் முறை பின்பற்றப்படவில்லை.

9) தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடியாது. ஆனால், அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டிய வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிக்கையை வெளியிடாமலேயே மூன்றே நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 19000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10) ஆனால், பட்டியலின் முழு விவரம் அதாவது பொதுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் என எந்தவொரு பட்டியலும் வெளியிடப்படாமல் இந்த பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பணி நியமன இடஒதுக்கீட்டில், BC, MBC, SC, ST தவிர்த்து BC Muslim, SC  அருந்ததியர் மற்றும் அனைத்துப் பிரிவினரிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உண்டு.

கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

11) இந்த நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள உயர்ஜாதியினரைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களும், பதிவு அடிப்படையில் மூப்பும் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்போட்டியில் இடம் பெறாமல், இடஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்.

12) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கணிதம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் முதல் மதிப்பெண் 142 பெற்ற சித்ரா என்பவர் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 107 மதிப்பெண் பெற்ற சுந்தரி என்பவர் முன்னேறிய சமூகத்தவர், பொதுப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபோல் 130 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பலரும், இடஒதுக்கீட்டு இடங்களுக்குத் தள்ளப்பட்டிருக்க, வெறும் 90 மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்ற மோசடி, பதிவுமூப்பு அடிப்படையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்திலும் நடைபெற்றிருக்கிறது. சான்றாக, மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், 13.11.2002-இல் பதிவு செய்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், 15.2.2010-இல் பதிவு செய்த முன்னேறிய வகுப்பினர் பொதுப்பட்டியலிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அதிர்ச்சிகரமான விதத்தில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாமலேயே, தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகும்கூட

13) இவை அனைத்தும், முதுநிலைப் பட்டதாரிகள் பணி நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நாகமுத்து அவர்களின் கடுமையான தீர்ப்புக்குப் பிறகும்கூட துணிந்து செய்யப்பட்ட மோசடிகள்! மேலும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் தனது தீர்ப்பில், ஆசிரியர் தேர்வுக் கழகம் எவ்வாறு இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என விரிவாக  எடுத்துக்காட்டி உத்தரவிட்டதற்கு மாறாக இந்த 19000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்  நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலை முழுவதுமாக ரத்து செய்ததோடு, புதிய பட்டியல், இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. வேறுவழியின்றி முறையான கட்-ஆப் மதிப்பெண்களை மட்டும் வெளியிட்ட தேர்வு வாரியம், அதன்படி திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிடவில்லை.

கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிட்ட பின்னும் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக பணி நியமனப் பட்டியலில் பொதுப் போட்டியில்  இடம் பெற வேண்டிய தகுதி வாய்ந்த தாழ்த்தப்பட்டோர், இடஒதுக்கீட்டுப் பிரிவிலேயே  (SC) சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு செய்யப்பட வேண்டும்

நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுகளையும், ஆதாரங்களையும் வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத் தலைவர் திரு.சுர்ஜித் சவுத்ரியின் திட்டமிட்ட, இந்த மோசடிகளை வெளிக் கொணர வேண்டுமானால், திரு.சுர்ஜித் சவுத்ரி இல்லாத நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து, இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் பணி நியமனங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிடவேண்டும்.

தேவை புதுப்பட்டியல்

14) அதனுடன், உடனடியாக NCTE விதிப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய தகுதி மதிப்பெண்களை தமிழக அரசு அறிவித்து, அதன்படி முன்பு நடந்த இரு தகுதித் தேர்வுகளுக்குமான புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்.

15) கடந்த ஆண்டு செய்யப்பட்ட இந்த 21,000 பணி நியமனங்களையும் (முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் உள்பட) நிறுத்தி வைத்து, ஆசிரியர் பணி நியனமங்கள் தொடர்பான வகுப்புவாரியான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட முறையான அறிவிக்கையை வெளியிட்டு, உயர்நீதிமன்றத் தீர்ப்பில் (01.10.2012) அறிவுறுத்தப்பட்டபடி முறையான இடஒதுக்கீட்டின்அடிப்படையில் வகுப்புவாரியான கட்ஆப் மதிப்பெண்களை அறிவித்து, பணி நியமனத்திற்குரிய கலந்தாய்வு நடத்தப்படவேண்டும். கட்-ஆப் மதிப்பெண்களும், கட் ஆப் தேதியும் தான் இடஒதுக்கீட்டை, முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றுவதற்குரிய மிகச்சரியான நடைமுறையாகும்! இப்படித்தான் டி.என்.பி.எ°.சி உள்பட மற்ற எல்லாத் துறைகளிலும் நடந்துவருகிறது. ஆனால், நீதிபதி நாகமுத்து அவர்களின் உத்தரவைப் பார்க்கும்பொழுது திரு.சுர்ஜித் சவுத்ரி இதுவரை கட்-ஆப் மதிப்பெண்களையே வெளியிடாமல் பணியிடங்களை நிரப்பி, மோசடியான முறையில் கடந்த காலத்தில் பல்வேறு பணிநியமனங்களையும் மேற்கொண்டுள்ளார்.

16) 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து 10 மாணவர், மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு சார்பில் தெளிவான திட்டவட்டமான கருத்துகள், தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள்ளனர் என்றும் 1921 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பான பெரிய வரலாறு இருக்கிறது என்றும், வளர்ந்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தமிழ்நாடு அரசின் அண்மைக்கால ஆசிரியர் பணி நியமனம் இடஒதுக்கீடுக்கு விரோதமாக நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

முதல் அமைச்சர் தலையிட வேண்டும்

17)  திரு.சுர்ஜித் சவுத்ரி உள்பட தவறு செய்த அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த  சமூகநீதி மண்ணில்  இவ்வளவு பெரிய சமூக அநீதி நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட அந்தக் கால கட்டத்தில் முதல் அமைச்சராகவிருந்த ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையையும் (1993-1994) இந்த நேரத்தில் நினைவூட்டி, அவசர கதியில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.


தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது

அகில இந்திய அளவில்  முஸ்லிம்களுக்கு 10 % இட ஒதுக்கீடு ! தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்வு !
பூரண மது விலக்கு! விசாரணை கைதிகளாக பல்லாண்டுகளாக உள்ள அப்பாவி சிறைவாசிகள் விடுதலை !
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது .

திருநெல்வேலியில் ரயில்வே சந்திப்பு முன் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா தலைமையில் நடந்தேறியது .ஆர்ப்பாட்டத்தின்  இறுதியில்  நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தஞ்சாவூரில் கோரிக்கை பேரணி மாநில செயலாளர்  தளபதி ,ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான்  தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .
சுமார் 2500 க்கும் அதிகமானோர் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

கடலூரில்  கோரிக்கை பேரணி மாநில துணைத்தலைவர்   தளபதி ,ஷபிகுர்ரகுமான் மன்பஈ   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

விழுப்புரத்தில்   கோரிக்கை பேரணி மாநில செயலாளர்    காயல் மஹபூப்    தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  விழுப்புரம்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சுமார் ஆயிரக்கணக்கானோர்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

நாகப்பட்டினத்தில்   கோரிக்கை ஆர்ப்பாட்டம்  மாநில செயலாளர்   திருப்பூர் சத்தார்   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  நாகை  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதயா மக்கள்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .


திருச்சியில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் ஜி.எம்.காசிம் தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதாய மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .
கன்னியாகுமரியில்  இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் இபுராஹிம் மக்கி  தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .