Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 19 ஜூலை, 2013

அரசு மருத்துவமனைக்கு வெளியே "வீசப்படும்" நோயாளிகள் பஸ் ஸ்டாப், ரோட்டில் கிடக்கும் அவலம்

மதுரை அரசு மருத்துவமனை வார்டுகளில் கவனிப்பாரற்று கிடப்பவர்களை, ரோட்டில் வீசும் கொடுமை தொடர்கிறது. இங்கு சிகிச்சைக்காக வயதானவர்களை அழைத்து வருபவர்கள், அப்படியே விட்டுச் செல்கின்றனர். ஆதரவற்ற முதியவர்களை பராமரிப்பது கடினம் என்பதால், இரவு நேரங்களில் அவர்களை வார்டிலிருந்து ஊழியர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றி, பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றனர். அல்லது, வேறு ஏதாவது வார்டுக்கு அருகில் கொண்டு வந்து படுக்க வைக்கின்றனர். அந்த நோயாளி இறந்தால் கூட, "ஆதரவற்றோர்' என்ற பெயரில் தான் மார்ச்சுவரியில் உடல் வைக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதற்கான ஆதாரங்களை கூட தருவதில்லை.

மூன்று நாட்களுக்கு முன், ஈரோடு கரந்தபாளையம் வீரா,45 என்பவரை வார்டிலிருந்து வெளியேற்றினர். நெஞ்சுக்கூடு வெளியே தெரியும் வகையில், காசநோயாளி போலிருக்கும் அவர், மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாக்கடையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வீரா கிடந்தார். சோறு, தண்ணீர் இன்றி உதடுகள் உலர்ந்த நிலையில், தண்ணீருக்காக "தவித்துக்' கொண்டிருந்தார். செஞ்சுருள் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்தபின், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இதேபோல, சித்த மருத்துவ வார்டு அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 60 வயது மூதாட்டி மயங்கி கிடந்தார். இப்படி மருத்துவமனையைச் சுற்றி வயதானவர்கள் ஆங்காங்கே முடங்கி கிடப்பது, பரிதாபமாக இருக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தனியிடம் ஒதுக்கி, செஞ்சுருள் சங்கத்தின் மூலம் பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சைக்கோதெரபி படிப்பு

உளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று சைக்கோதெரபி. உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு இத்துறை தான் உதவுகிறது. இதன் உதவியோடு இப்பிரச்னைகளைப் பெற்றிருப்பவர் தங்களது மனப்பாங்கையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள முடிகிறது. நடத்தை முறைகளையும் இது மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. நமது சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள்.

சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம். உளவியல் பட்ட மேற்படிப்பு முடித்தபின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிகல் சைக்காலஜி, இன்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இது போக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது. இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்னைகளை கையாளுவதாகும்.

அடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன. 

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்


பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.