Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 15 டிசம்பர், 2012

வேலியே பயிரை மேய்ந்த கதை : கேவலப்படும் ஆசிரிய சமுதாயம்

தேவகோட்டை அருகே பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 ஆசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த அனுமந்தம்பட்டியிலுள்ள அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கடந்தாண்டு கேரளா சுற்றுப்பயணம் சென்றனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம், மாணவியரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அப்போது விஷயம் அமுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், சொக்கர் என்பவர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு அனுப்பிய புகாரில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்குழுவினர் நடத்திய விசாரணையில், வேத மாணிக்கம் தவிர, சீனிராஜ் என்ற ஆசிரியரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிய வந்தது. இதையடுத்து, கலெக்டருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அவரது உத்தரவின் பேரில், இருவர் மீதும் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூளையின் பாதிப்பைக் குறைக்க முடியும்: அப்துல் கலாம்


மாற்றுத்திறன் குழந்தைகளுடன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துரையாடும் நிகழ்ச்சி,கோவை கிக்கானி பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.
"லீட் இந்தியா - 2020" அமைப்பு மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். கலாமின் பேச்சை, சைகை மொழி மூலம், ஆசிரியை ஒருவர் குழந்தைகளுக்கு விளக்கினார்.

மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரையும் கைகுலுக்கிய பின் மேடையேறிய, அப்துல் கலாம் பேசியதாவது: ஸ்ரீகாந்த் எனும் உங்களைப் போன்ற ஒரு மாற்றுத்திறனாளி, பல்வேறு இடர்களை மன உறுதியுடன் எதிர்கொண்டு, அமெரிக்காவில் எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், இன்று படிக்கிறார். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அறக்கட்டளை, தொழிற்சாலைகள் துவங்கி, ஏற்றுமதி செய்து வருகிறார். தன்னம்பிக்கையால், இதை அவர் சாதித்தார். தன்னம்பிக்கை தான் வெற்றியின் முதல் படி; நீங்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, என் மாணவர் ஆராய்ச்சி நடத்தினார்.

கோடிக்கணக்கான நியூரான்களால் ஆன மனித மூளைக்கு, சவால் மிக்க பணிகளை கொடுத்தால், நியூரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; மூளை நன்கு செயல்படும். அதிகரிக்கும் நியூரான்கள், ஒரு, "நெட்வொர்க்" போல் செயல்பட்டால், மூளைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறையும் என, கண்டுபிடித்துள்ளார்; க்கிய ஆராய்ச்சி இது. இதன் மூலம், மூளை வளர்ச்சியற்ற பல குழந்தைகள் வெற்றி பெற முடியும்.

முறையான பயிற்சி அளித்தால், மாற்றுத் திறனாளிகளால் நிறைய சாதிக்க முடியும். காது கேட்காத குழந்தைகளுக்கு உதவ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் - டி.ஆர்.டி.ஓ., "காக்ளியர் இம்பிளான்ட்" எனும் புதிய கருவியை உருவாக்கியுள்ளது. இதை பொருத்தினால், பேசும் திறன் உருவாகும்.

இந்தாண்டு இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துவிடும். 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள இக்கருவி, ஏழைகளின் நலன் கருதி, 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.

மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்


 நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 17 கல்லூரிகளில் போலி மருத்துவ ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் போலி மருத்துவர்கள் ஆசிரியர்களாக பணி புரிந்து வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளுக்கும் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சில வழக்குகளில் சி.பி.ஐ., பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என கூறிய அமைச்சர் மருத்துவ கவுன்சில் அமைப்பில் இருந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் பெயரை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவி்த்தார்.

மேலும் 1999-ம் ஆண்டு நிறை‌வேற்றப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கான சட்டதிட்டங்களின் படி பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் போலியான ஆசிரியர்கள் நியமனம் கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பித்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பின் இணைய தளத்தி்ல் மருத்துவகல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைப்படும் மருத்துவர்களின் விபரங்களை வெளியிட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.