சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள காவிரியாற்றில் இருந்து தான் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு தினமும், 15.5 கோடி லிட்டர் குடிநீர் எடுப்பதற்கான தனிகுடிநீர் திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
தவிர, வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நாள்தோறும், 21.5 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, மேட்டூர் தொட்டில்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. மேட்டூர் அணை நீர் பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்கும் நிலையில், அணை கரையோர கிராமங்களில் மட்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது.
மேட்டூர் அணை கரையோரம் உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில், 14 பஞ்சாயத்து உள்ளது. காவிரி கரையோரம் உள்ள நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி தவிர, 12 பஞ்சாயத்துகளிலும் வறட்சி நீடிக்கிறது. இந்த பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை போக்க, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் முதல், 22 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், கொளத்தூர் பேரூராட்சிக்கு, எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த குடிநீர் கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. சுழற்சி முறையில், பஞ்சாயத்துக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கிராமங்களில் அதிகபட்சமாக, இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், கிராமபுற மக்கள் சுகாதாரமான, சுத்திகரித்த குடிநீர் இல்லாமல், உப்பு கலந்த போர்வெல் குடிநீரையே குடிக்கின்றனர். இதனால், கிராமப்புற பொதுமக்கள் ஏராளமானோர் கிட்னி செயல்இழப்பு, எலும்புகள் பலவீனம் உள்பட பல்வேறு பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை குறித்து பண்ணவாடி பஞ்., தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பஞ்சாயத்துக்கு வினியோகம் செய்யும் குடிநீருக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முன்பு மாதம், 14 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினோம். தற்போது, 7,000 ரூபாய் மட்டுமே செலுத்தும் அளவுக்கு குடிநீர் சப்ளை பாதியாக குறைந்து விட்டது.
அரசு, பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேட்டூர் அணையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்கிறது. அணை கரையோர கிராமங்களில் இன்னும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நீடிப்பது வேதனையளிக்கிறது. அணை கரையோர கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, அரசு புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.