குற்றாலம் மலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் சேதமடைந்திருக்கும் என தெரிகிறது. தொடரும் சம்பவங்களுக்கு சமூக விரோதிகள் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு மூலிகைகளுடன் கூடிய மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இவற்றுடன் அடர்ந்த காட்டில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது திடீரென தீப்பிடிக்கும் சம்பவம் நடக்கும். இதனால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அழியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் குற்றாலத்தில் கடுமையான வறட்சி காரணமாக அருவிகளை ஒட்டிய நிலையில் விழுந்த தண்ணீரும் தற்போது முற்றிலும் நின்று விட்டது. இதனால் குற்றாலம் வறட்சி பூமியாக காட்சியளிக்கிறது. குற்றாலத்தில் நேற்று மலைப்பகுதியில் திடீரென தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ சுமார் தொடர்ந்து எரிந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் வளர்ந்துள்ள விலை உயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடி, கொடிகளும் தீயில் எரிந்திருக்க கூடுமென கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் காரணமாக இருக்க கூடுமென்ற அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையில் வேகமாக பரவி வரும் தீயினை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.