சவூதி அரேபிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் கொள்கையால் (நிதாகத்) அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சவூதி இளவரசர் சவுத் அல்-ஃபைசல் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் நிதாகத் சட்டத்தின்படி அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பலர் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சவூதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஜூலை 3-ஆம் தேதிக்குள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வெளியேறாவிட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சவூதிக்குச் சென்றுள்ளார். அங்கு சவூதி இளவரசரும்ம் வெளியுறவுத்துறை அமைச்சருமான சவுத் அல்-ஃபைசலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து இந்தியர்கள் நாடு திரும்பும் விவகாரத்தில் பிரச்னைகள் ஏற்படாதவாறு சவூதி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அல்-ஃபைசல் நம்பிக்கை அளித்துள்ளார்.
இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:
சவூதி அரேபியா, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகும். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தியர்களின் வேலைத்திறன் பற்றி சவூதி அரசு நன்கு அறிந்துள்ளது.
இந்தியர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அல்-ஃபைசத் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இரு நாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றார் சல்மான குர்ஷித்.