Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

அந்தோ பரிதாபம் !,முடங்கிய அரசு நல வாரியம் .....!


தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், கோரிக்கைகள், நல திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, "கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலவாழ்வு சங்கம்' ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார்; பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் முன்னிலை வகித்தார்."மாற்றுத்திறனாளிகள் சமூக நல பாதுகாப்பு திட்டங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நலவாரியம் செயல்படாமல் உள்ளது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் விதத்தில், நலவாரியத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநில கொள்கையை அரசு வெளியிட வேண்டும் ' என, வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இடஒதுக்கீடு சரியாக அனுமதிக்கப்படாததால், படித்து, பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அரசு முறையான செயல் திட்டங்கள் வகுத்து வேலைவாய்ப்பு பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் மத்திய அரசு பின்பற்றும் விதிமுறைகளை தமிழக அரசும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் துறையில் ஐந்து சதவீத வேலைவாய்ப்பு கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்திட்டத்தில் பயனாளிகளாக காத்திருக்கும் 3,365 பேருக்கு இத்திட்டத்தில் பயன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் வருமான உச்சவரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அளிக்க வேண்டும்.
சுயதொழில் செய்ய கடனுதவி பெறுவதற்கு அரசு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கியும் கூட்டுறவு வங்கிகள் எளிதான நடைமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் குறைந்த வட்டியில் கடன்பெற முடியாத நிலை உள்ளது. வங்கிகள் எளிய முறையில் கடனுதவி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மானியத்தில் அளிக்கப்படும் கடன் திட்டங்களுக்கு எவ்வித பிணையமின்றி கடன் கிடைக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.வருவாய்த்துறை மூலம் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் பெறுவதற்கு வருமான உச்சவரம்பை விலக்கி, ஊனத்தின் தன்மையை மட்டும் வைத்து ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான திட்டங்களை முறையாக நிறைவேற்ற, மாவட்ட கலெக்டர் தலைமையில், மாற்றுத்திறனாகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில பொரு ளாளர் சந்திரகுமார், கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் கன்னியப்பன், செயலாளர் ஷேக் பரீதுல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பலஸ்தீன அதிபர் யாசர் அரபாத் உடல் தோண்டி எடுக்கும் பணி ஆரம்பம்


பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று வதந்தி பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வகம், அவரது உடையில் கடுமையான 'போலோனியம்-210' என்ற 'ஐசோடோப்' கண்டறியப்பட்டதாக கூறியது.

இதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த நச்சுத்தன்மை செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக  பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது.

கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அராபத்தின் கல்லறை இடிக்கப்படும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஊதுபத்தி தொழிலில் பெருகும் வணிக வாய்ப்பு


பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -  ஊதுபத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு பெருகியுள்ளது.அதுமட்டுமின்றி, ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனங்களும், ஊதுபத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.இதனால், இந்நிறுவனங்களுக்கு, ஊதுபத்திகளை தயாரித்து தரும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.இந்தியாவில் ஊதுபத்தி சந்தையின் மதிப்பு, 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சாரா நிறுவனங்கள், பெரும்பான்மை பங்களிப்பை கொண்டுள்ளன.அமைப்பு சார்ந்த பிரிவில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு 7-8 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஊதுபத்திகளில் ஒன்றான, "மங்கள்தீப்' பிராண்டு ஊதுபத்திகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இந்திய ஊதுபத்தி சந்தையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி,12-13 சதவீதமாக உள்ளது."இதை விட, ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வளர்ச்சி, மும்மடங்காக உள்ளது' என, இப்பிரிவின் தலைமை செயல் அதிகாரி வி.எம்.ராஜசேகரன் தெரிவித்தார்.ஐ.டி.சி., நிறுவனம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 20 சிறிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து பெற்றுக் கொள்கிறது.இந்நிறுவனங்கள், மாதம், 70 கோடி ஊதுபத்திகளை, ஐ.டி.சி.,க்கு வழங்கி வருகின்றன. தற்போது, மேலும் 5-10 புதிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து, பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

எனினும், ஊதுபத்தி தயாரிப்பில் ஐ.டி.சி., கடுமையான தரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.ஐ.டி.சி.,க்கு ஊதுபத்திகளை தயாரித்து வழங்கும் சிறு நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், சிறந்த தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 9001-2000 தரச் சான்றிதழை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் சுயஉதவி குழுஇந்த வகையில், ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் முனைவோர் என, சமூகத்தில் பின்தங்கியுள்ள, 13 ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கிராமப்புற மக்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும் விதத்தில், ஒடிசா, திரிபுரா, அசாம் போன்ற மாநில அரசுகளுடன், ஐ.டி.சி., ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.நிலையான வருவாய் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவு சங்கங்களில், ஏராளமான ஊதுபத்தி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.வேளாண் தொழில் சார்ந்த, பின்தங்கிய ஊரகப் பகுதிகளில், விவசாய பொருட்களின் உற்பத் தியும், அது சார்ந்த வருவாயும் குறைந்து வரும் சூழலில், நிலையான வருவாய்க்கான தளத்தை உடனடியாக அமைப்பது அவசியம். அதற்கு, ஐ.டி.சி.,யின் ஊதுபத்தி பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

கனடாவில் படிக்கலாம் வாங்க ..............!


கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், தாங்கள் படிக்கவிரும்பும் பல்கலையுடன் நேரடியாக தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்டறிதல் வேண்டும். ஏனெனில், அங்கு, ஒவ்வொரு பல்கலைக்கும் ஒவ்வொரு தனி விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் உண்டு.

Study permit -க்கு விண்ணப்பிக்க, ஒரு பல்கலை அல்லது கல்லூரியின் ஏற்புக் கடிதத்தை(letter of acceptance) நீங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும், IELTS சான்றிதழும் உங்களுக்கு வேண்டும்.

கல்விச் செலவு
கனடாவில், இளநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான தோராயச் செலவு 17,000 முதல் 44,000 கனடா டாலர்கள் வரை ஆகிறது. இதன் விபரம்,

டியூஷன் மற்றும் மாணவர் கட்டணம் - 5,500 முதல் 26,000 கனடா டாலர்கள்

உணவு மற்றும் தங்குமிடச் செலவு - 7,000 முதல் 13,000 கனடா டாலர்கள்

தனிப்பட்ட மற்றும் மருத்துவக் காப்பீட்டு செலவு - 1,000 முதல் 3,000 கனடா டாலர்கள்

பாடப் புத்தகங்கள் - 1,000 முதல் 2,000 கனடா டாலர்கள்.

படிப்பிற்கான காலஅளவு
பொதுவாக, கனடாவில், முழுநேர இளநிலைப் படிப்புகள் 4 வருடங்கள் கொண்டவை. LLB படிப்புகள் 3 வருட காலஅளவைக் கொண்டதாக இருந்தாலும், அதில் சேர, ஏற்கனவே 3 வருடங்கள் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை, 4 வருட காலஅளவைக் கொண்டவை. அதேசமயம், கனடாவின் மருத்துவ கல்வி நிலையங்களில் சேர, ஏற்கனவே 3 வருட இளநிலைப் படிப்பு அனுபவம் இருக்க வேண்டும்.

முதுநிலைப் படிப்புகளுக்கு, 1 முதல் 3 வருடங்களும், டாக்டரேட் படிப்புகளுக்கு 3 முதல் அதற்கும் மேற்பட்ட வருடங்களும் ஆகும்.

உதவித்தொகை
கனடாவின் பல பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், சேர்க்கை நேரத்தில், ஒரு மாணவரின் மெரிட் அடிப்படையில், உதவித்தொகைகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மாணவர்களுக்கென்றே சில உதவித்தொகை திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற உதவித்தொகைகளைப் பெற, ஒரு மாணவரின் Extra curricular activities பற்றி பட்டியலிட்ட தனி விண்ணப்பங்கள் தேவை. இதைப்பற்றி அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது நிர்வாகிகளை அணுக வேண்டும்.

வேலை வாய்ப்புகள்
பல வெளிநாட்டு மாணவர்கள், தங்களின் படிப்பின்போதும், படிப்பு முடிந்த பின்பும், கனடாவில் பணிபுரிகின்றனர். ஒரு மாணவர், வளாகத்திற்குள்ளேயே பணிசெய்ய, work permit தேவையில்லை. அதேசமயம், படிப்பு முடிந்தப் பிறகோ, வளாகத்திற்கு வெளியேயோ அல்லது co-op/internship placement முறையிலேயோ பணிபுரிய வேண்டுமெனில் work permit அவசியம்.

விசா விதிமுறைகள்
விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையிடமிருந்து பெற்ற ஏற்புக் கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், தேவையான நிதியாதார ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

விசா விண்ணப்பக் கட்டணமாக 125 கனடா டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி ரூ.5470. மேலும் ப்ராசஸிங் கட்டணமாக ரூ.700 வசூலிக்கப்படுகிறது.

முதல்கட்ட ரெஸ்பான்ஸ் பெற்றபிறகு, மருத்துவ ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகை


அடுத்த 2014-15ம் கல்வியாண்டின் வெளிநாட்டுப் பல்கலை சேர்க்கை செயல்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையில், உங்களின் நிதி தொடர்பான ஏற்பாடுகளை முறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பல நாடுகள், தங்களது கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலமாக, வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய மாணவர்களைக் கவரும் சில முக்கிய நாடுகளின் உதவித்தொகை திட்டங்கள் பற்றி அறிவதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா
சமாளிக்கத்தக்க வாழ்க்கைச் செலவினம் மற்றும் சிறந்த மாணவர் சமூகம் போன்ற அம்சங்கள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியா செல்ல காரணமாகின்றன. ஆஸ்திரேலியாவின் சிறந்த காலநிலை மற்றும் வாழ்க்கை நயம் போன்றவை, வெளிநாட்டு மாணவர்களுக்கான சிறந்த அனுபவத்தை உறுதி செய்கின்றன.

கலாச்சாரத்திற்கு மெல்போர்ன் நகரமும், அழகிற்கு பெர்த் நகரமும், நிதி வளத்திற்கு சிட்னியும் உதாரணமாகத் திகழ்ந்து, அதிகளவிலான அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டில் கிடைக்கும் உதவித்தொகை திட்டங்கள் பற்றி அறிய கீழ்கண்ட சில கல்வி கண்காட்சிகளில் இடம்பெற்று பயன்பெறலாம்,

Queensland University Scholarship - February 8, 2013
Australian development Awards - December 14, 2012
La Trobe Excellence Awards - December 14, 2012
University of Sydney Scholarships - December 31, 2012

சிங்கப்பூர்
மாணவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு இடமாக, சிங்கப்பூர், QS சர்வேயினால் கணிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்திலும் பாதுகாப்பான பயணம், நவீன வசதிகள் போன்றவை சிங்கப்பூரின் சிறப்புகளில் சில. மேலும், மெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளோடு ஒப்பிடுகையில், கல்விக் கட்டணமும், வாழ்க்கைச் செலவினமும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு மாணவர்களுக்கு, சிங்கப்பூர் வழங்கும் உதவித்தொகைகளைப் பெறுவதற்கான போட்டிகள் எளிதானவை என்பதும் மற்றொரு சிறப்பம்சம்.

கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் கல்வி கண்காட்சிகளில் கலந்துகொண்டு மேற்கண்ட விபரங்களை அறியலாம்,

INSEAD - Syngenta MBA Awards - February 11, 2013
NUS Graduate Scholarships - November 15, 2012
Singapore Airlines Awards - July 15, 2013

அமெரிக்கா
அமெரிக்காவில் படித்துவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்போதைய நிலையில் 150க்கும் மேற்பட்ட உதவித்தொகை திட்டங்களை அளித்துவரும் சிங்கப்பூர், இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கீழ்கண்ட கல்வி கண்காட்சிகளின் மூலமாக, அந்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்,

Wharton Business School Award - January 4, 2013
Wesleyan Freeman Scholarship - January 1, 2013
Asia Pacific Leadership Awards - December 1, 2012
Harvard Science fellowships - December 1, 2012

பிரிட்டன்
விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும், வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில், பிரிட்டனின் மவுசு இன்னும் குறையவில்லை. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்றவை பழமையான மற்றும் புகழ்பெற்ற பல்கலைகளாக இருந்தாலும், வேறுபல சிறந்த பல்கலைகளும் அங்குள்ளன. அவை, பல உதவித்தொகை திட்டங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றன. கீழ்கண்ட, கல்வி கண்காட்சிகளில் கலந்துகொண்டு விரிவான விபரங்களை அறிவதை உறுதி செய்யுங்கள்,

West London Business Award - November 30, 2012
University of Leeds Scholarships - June 30, 2013
Charles Wallace India Trust - December 31, 2012
LSE Research studentships - January 11, 2013