நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நகரம் கடையநல்லூர். இதன் மலை அடி வாரத்தில் முந்தல் என்ற வனப்பகுதி. இங்கே மான், மிளா, காட்டுப்பன்றி யானைகள் கூட்டம் கூட்டமாக உள்ளன. இவைகள் அண்டைப் பகுதியில் உள்ள தென்னை வாழைத் தோப்புகளை அழித்து விடாமலிருக்க வடகரை முதல் கருப்பாநதி வரை வனத்துறை மின் வேலி அமைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 8 யானைகள் கொண்ட கூட்டம் மலைக்குள் இருந்து தோட்டப்பகுதிக்குள் இறங்கியது. அந்த கூட்டத்தில் ஒரு குட்டி யானையும் இருந்தது. இந்த யானைகள் மேலகடைய நல்லூரை சேர்ந்த கணேசன் என்பவரது தென்னந்தோப்பில் தென்னைகளை வேரோடு பிடுங்கி எறிந்தன. குறும்பைகளை பிய்த்து தின்றன. அதே பகுதியில் உள்ள ராமர் பாண்டியன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளையும் யானைகள் சேதப்படுத்தின. அப்போது கணேசனின் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குட்டி யானை தவறி விழுந்தது. இதனால் அந்த குட்டி யானை பிளிறியது. சத்தம் கேட்டு மற்ற யானைகள் அங்கு திரண்டன.
குட்டி யானையை தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியில் யானைகள் ஈடுபட்டன. விடிய விடிய போராடி குட்டி யானையை மீட்க முயன்றது. பின்னர் ஒரு வழியாக தொட்டியில் இருந்த குடிநீரை உறிஞ்சு வெளியேற்றி குட்டி யானையை மீட்டன.
காலை வழக்கம் போல் விவசாயிகள் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது யானைகள் அங்கு கூட்டமாக நிற்பதை கண்டும், பயிர்களை நாசம் செய்திருப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விவசாயிகள் திரண்டு வெடி வெடித்து யானைகளை விரட்டினர். எனினும் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே நின்றன.
இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வன அதிகாரி வெள்ளதுரை தலைமையில் வன காவலர்கள் திரண்டு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். தொடர்ந்து இப்பகுதியில் வன விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க சோலார் மின் வேலியை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.