செல்வி .ஜெயலலிதா ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், கடந்த நான்கு மாதங்களில், 281 இளம் பெண்கள் உட்பட மொத்தம் 553 பேர் காணாமல் போய் உள்ளதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குடும்பச் சண்டை, வயதானவர்களை ஒரங்கட்டுவது, இளம் வயது காதல், பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுவது, கடத்தல் என, காணாமல் போவோர் குறித்த புகார்கள் தினமும் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.
தமிழக போலீஸ் இணையதள தகவல்படி, கடந்த ஜனவரி, 1 முதல் ஏப்., 20 வரை, 553 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 16 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் மட்டும், 281 பேர். இதில், 160 பேர் பள்ளி, கல்லூரியில் படிப்பை முடித்த மற்றும் படிப்பை தொடரும் மாணவிகள். 30 வயதுக்கு மேல் 75 வயதுக்கு உட்பட்டோர், 27 பேர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள் கணவர் மற்றும் பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள்.காணாமல் போனவர்களில், 198 பேர் ஆண்கள். 16 வயது முதல், 30 வயது உடைய இளைஞர்கள், 85 பேர். காதல் மோகத்தில் பெண்களுடன் தலைமறைவாகி இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போனவர்களில், 29 பேர், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.
பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் படி, 175 பேரை , போலீசார் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள, 378 பேரை கண்டு பிடிக்க முக்கிய நகரங்களில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.