வேலூர் அருகே கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 29.07.2012 அன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஸ்வரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவ, மாணவிகளாகிய நீங்கள் பட்டம் பெற்றிருப்பது தான் உங்கள் முதல் சாதனை. இனிமேல் தான் உங்கள் வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இதுவரை உங்களை வழிநடத்தவும், உடலை வளர்க்க பெற்றோரும், அறிவை வளர்க்க ஆசிரியரும் இருந்தனர்.
இனி நீங்கள் தான் உங்களை பார்த்துக்கொள்ள வேண்டும். படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி பெற்றோரை கைவிட்டு விடாதீர்கள். எளிதாக வேலையில் அமர்ந்து விடலாம் என எதிர்பார்க்காதீர்கள். படித்துவிட்டால் மட்டும் போதாது. வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டு நடந்தால் மட்டுமே முன்னேற முடியும். "புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி மட்டுமே, ஆனால் வாழ்க்கையை படிப்பவன் மட்டுமே புத்திசாலி''.
வேலையில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகம் அதிக போட்டிகள் நிறைந்த உலகம் ஆகும். கடந்த கால ஏமாற்றமும், எதிர்கால ஏக்கமும் தான் மனிதனின் வாழ்க்கையை நடத்துகின்றன. விரும்பியதை அடைய நினைப்பது போல், அடைந்ததையும் விரும்ப கற்றுக்கொள்ள வேண்டும்.
வேலையில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகம் அதிக போட்டிகள் நிறைந்த உலகம் ஆகும். கடந்த கால ஏமாற்றமும், எதிர்கால ஏக்கமும் தான் மனிதனின் வாழ்க்கையை நடத்துகின்றன. விரும்பியதை அடைய நினைப்பது போல், அடைந்ததையும் விரும்ப கற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோரை மறக்காதீர்கள், பெற்றோர்களின் தியாகத்தால் தான் நீங்கள் படிக்க முடிந்தது. பெற்றோரை பாதுகாக்க வேண்டும். மூத்த குடிமக்களை பாதுகாக்க சட்டம் வந்துவிட்டது. இதை படித்தவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். பெற்றோரை பாதுகாக்காமல் இருப்பதற்கு தான் படித்தோமா? பெற்றோரை ஆனந்தமாக வைத்துக்கொள்ள இன்றே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
அதே போல் கல்லூரி ஆசிரியர்களையும், நீங்கள் படிக்க காரணமான அனைவரையும் மறக்காமல் வாழுங்கள். வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைத்துவிடாது. தனிப்பட்ட முறையில் யாராலும் வாழ்க்கை நடத்தி விட முடியாது. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை.
இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் பேசினார்.