ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்து மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார்.
தீர்மானம் வெற்றி
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவுள்ளதாக்கும் விதத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்தன.ஆனால் இந்தியா அப்படி திருத்தம் எதுவும் கொண்டுவராமலேயேதான், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை தமிழர்களுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மத்திய அரசு செய்த துரோகம் என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர்த்த பிற தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக விமர்சிக்க வைத்துள்ளது.
சல்மான் குர்ஷித் விளக்கம்
இந்த நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் நேற்று பேட்டி அளித்தார். அப்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–ஜெனீவாவில் (அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய) இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. இந்த தீர்மானத்தில், சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், ‘சர்வதேச சமுதாயம் திருப்தி அடையும் வகையில்’ என்ற வாசகங்கள் இந்தியாவால்தான் சேர்க்கப்பட்டன.
முயற்சிக்கப்பட்டது
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. மிகவும் வலுவான வார்த்தைகளுடன் தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அதில் மாற்றங்கள் செய்யவும், ஆதரவு திரட்டி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவும் முயற்சிப்பதுதான் சிறந்தது.
இலங்கை உறவு முக்கியம்
இலங்கையுடனான உறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்தியா இலங்கையுடன் இணைந்து செயல்பட்டுத்தான், அங்குள்ள தமிழர்கள் மறுவாழ்வு பெறுவதற்கும், அரசியல் உரிமைகள் பெறுவதற்கும் இந்தியா பாடுபட முடியும்.இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.