பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
சமூகத்தின் அமைதியைக் கெடுப்பவர்களும், சமூக அவலங்களைக் கொடுப்பவர்களும் சராசரி மனிதர்களைவிட மிகவும் கீழானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை அடையாளம் கண்டு, தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, கிடைக்கப் பெற்ற தகவல்கள் சரிதானா? எனத் தெரிந்து கொண்ட பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வரவேண்டும் என்பதை காவல்துறை அதிகாரிகள் அறியாதவர்கள் அல்ல. தகவல்கள் சரிதான் என்றாகிவிட்டால் தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டப்படியான தண்டனை வழங்கப்பட காவல்துறை ஒத்துழைப்பு தரவேண்டியது அவர்களின் தார்மீக கடமை. தகவல்கள் சரி இல்லை என்றால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள் தார்மீக அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதையும் அதே காவல்துறை அதிகாரிகள் அறியாதவர்கள் அல்ல. ஆனால், நாட்டில் பரவலாக என்ன நடக்கிறது? ‘‘சந்தேகத்தின் பேரில் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்’’ எனக்கூறி, வேண்டுமென்றே குற்றவழக்குகளில் சிக்க வைப்பதற்கான சதிகள் நடக்கின்றன என்கிற செய்திகள் கிடைக்கிறபோது காவல்துறைமீது இருக்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துபோய் கரைந்தே போய்விடுமோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இதையெல்லாம் தாண்டி, கொடுமை என்ன தெரியுமா? ஒரு குற்ற சம்பவத்திற்கானப் பின்னணியில் யார் இருந்தது? எனக் கண்டுபிடிக்க முடியாமல் ஒரு சிலரை குறிவைத்து, ஏற்கெனவே இவர்களைப் பற்றிய எரிச்சல் காவல்துறைக்கு இருந்த காரணத்தினால் அவர்களை வேண்டுமென்றே குற்றம் சாட்டி, சித்திரவதைகள் செய்து ‘‘உண்மையை வரவழைக்கிறோம்’’ என்கிற பேரில் மனிதாபிமானத்திற்கே எதிரான அநியாயங்களை நடத்துவதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் சொல்லிக் கதறுவதை யாராலும் சகித்துக் கொள்ளவியலாது.
நாடெங்கிலும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீதான இத்தகைய அநீதப் போக்கைக் கண்டித்து தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சென்ற ஏப்ரல் 2 ஆம் தேதி நாம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி, நமது எண்ண வெளிப்பாட்டினை தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர், கோவை மாவட்ட ஆர்ப்பாட்டங்கள் என் தலைமையில் நடத்தப்பட்டன. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தலைமையேற்று நான் உரையாற்றியபோது திரண்டிருந்த மக்கள் கூட்டம் நமது கருத்தினை அப்படியே வழிமொழிந்ததை அவர்களின் பலத்த கரவொலி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சார்ந்த பெண்களெல்லாம் கூடி நின்று கண்ணீர் வடித்த அந்த காட்சி இன்னும் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. தமிழகம் எங்கும் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம் லீகின் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் எனலாம்.
அடுத்த சில நாட்களிலேயே வேதனையின்மீதே சோதனை என்பதுபோல செய்திகள் வந்தன. அண்மையில் நடைபெற்ற பெங்களூர் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் என்று தமிழகத்திலிருந்து மேலப்பாளையம் கிச்சான் புகாரி, அவரது மைத்துனர், அவரது உறவினர்கள், நண்பர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப் பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றுகூட தெரியாத அளவுக்கு மறைவாக வைக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறையின் நேரடி விசாரணை என்ற பெயரிலேயே நாட்கள் ஓடுகின்றன. சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்படவில்லை. தமிழக காவல் துறையின் ஒத்துழைப்பில் கர்நாடக காவல்துறை தொடர்ந்து சித்திரவதை செய்வதாகவும், கடுமையான அடி, உதை, மின்சார ஷாக் போன்ற கொடுமைகள் கொடுக்கப்பட்டு மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம் தலைவிரித்து வெறியாட்டம் போடுவதாக அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர்.
சென்ற வாரம் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருந்த தலைவர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த கொடுமையைப் பார்த்தீர்களா? என்று அவர்களின் தாய்மார்களும், பெற்றெடுத்த குழந்தைகளும் கதறி அழுததை வார்த்தைகள் கொண்டு யாராலும் விவரிக்க முடியாது. கிச்சான் புகாரியும், அவரது நண்பர்களும் நேரிய வாழ்வில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு உதவிகள் புரியும் தர்மநேயத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற உண்மையை அவர்கள் சார்ந்திருக்கிற ஊர் ஜமாஅத்தும், அவர்களை நன்கு அறிந்திருக்கிற சமூக அங்கமும் மீண்டும், மீண்டும் வலியுறுத்திச் சொல்லியும் காவல்துறையின் பிடிவாதம் மேலோங்கி நிற்பதை அவர்களின் உறவினர்கள் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கின்றனர். அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ‘‘தமிழக போலீஸார் நிதானம் காட்டாமல் இவர்களை கைது செய்தது நியாயமல்லவே!’’ என்று தலைவர் பேராசிரியர் தனது அதிருப்தியையும், வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்.
12.05.2013 ஞாயிறு அன்று திருநெல்வேலியில் ஷிபா மருத்துவமனை அதிபர் சகோதரர் முகம்மது ஷாபி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அங்கேயும் இப்போது தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வேதனைமிக்க தகவலை அவர்களின் பெற்றோர், துணைவியர், குழந்தைகள் சகிதமாக நேரில் வந்து கண்ணீர் மல்கக் கூறினார்கள். உள்ளமும் உடலும் வேதனையில் மூழ்கியது. அவர்கள் வடித்த கண்ணீருக்கு என்ன பதில்?
அந்தத் தாய்மார்களின் உள்ளக் குமுறலுக்கு என்ன ஆறுதல்?
ஏங்கித் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் ஏக்க மூச்சுக்கு என்ன தீர்ப்பு?
சமூக விரோதிகளைக் கண்டறியும் சவாலை எதிர்கொள்வது காவல் துறையின் கடினமான வேலைதான். அதனால் அப்பாவிகளை வேட்டையாடுவது எந்த விதத்தில் நியாயம்? காக்கிச்சட்டை சீருடையில் உலவும் குண்டர்களாக மனிதாபிமானமே இல்லாத கொடுமைக்காரர்களாக ஆகிவிட வேண்டும் என்று சட்டமா என்ன? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது அவர்களின் கடமை. அதனால், சட்டத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டு தங்கள் கண்களைக் கரித்திடும் சிலரை மாத்திரம் குறி வைத்து வேட்டையாடி குற்றம் சுமத்துவது என்பது நியாயம்தானா? காவல்துறையில் நேர்மையாக, மனசாட்சியோடு செயல்படும் பல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று மறுக்கவியலாது. ஆனால், அநீதமாகச் செயல்படும் சில அதிகாரிகள் ஒட்டுமொத்த காவல்துறையையே அவப்பெயருக்கு உள்ளாக்குவதுதான் வேதனையாக இருக்கிறது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய காவல்துறையின் செயல்பாட்டை அண்மையில் பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கண்டித்துப் பேசியபோது ‘‘நாஜி ஜெர்மனியின் கெஸ்டபோ எனும் ரகசியப் போலீஸ் போல காவல்துறை நடந்து கொண்டுள்ளது’’ என்று கடுமையாக கூறியிருக்கிறார்.
ஒரு குற்றவாளிக்காக, எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாத ஒருவரையோ, சிலரையோ, அவர்களின் உறவுகளையோ பிடித்து இம்சிப்பதும், உண்மைகளை கக்க வைப்பது என்கிற பெயரில் கொடுமைப்படுத்துவதும் காக்கிச் சட்டைகளிடம் பரவலாக இருக்கும் செயல் என்று இப்போது பலரும் பேசக்கூடியதாக இருப்பதை யாரும் மறுத்திட முடியாது. அண்மையில் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தப்பியோடிய ஒரு இளைஞருக்காக அவருடைய தம்பியரை காவல் நிலையத் திற்கு அழைத்து வந்துவிட்டனர் போலீஸார். இவர்களின் தாய் கஸ்தூரி என்பவர் காவல் நிலையத்திற்குப் போய், குற்றம் செய்யாத தனது குழந்தைகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுள்ளார். காவல்துறை, வழக்கமான மிரட்டல், அசிங்கமான வார்த்தையோடு உன் மகன் வந்தால்தான் இந்தச் சிறுவர்களை அனுப்புவோம் என்று கூறி மறுத்துவிட்டதால் அந்த தாய் வீடு வந்து காவல் துறையினரின் மிரட்டல் வார்த்தைகளால் மனம் வெதும்பி தூக்கில் தொங்கி இறந்தார் என்பது செய்தி. செல்வாக்கு உள்ளவர்களுக்கு எதிராக ஏதும் நடந்துவிட்டால் செய்திகள் பூதாகரம் ஆக்கப்பட்டு வெளிவருகின்றன. பாவம் ‘இந்த கஸ்தூரிக்கு குரல் கொடுக்கவோ, மிரட்டல் விடுத்த அதிகாரிகளைத் தண்டிக்கவோ எங்கேயாவது நீதி ஒலிந்து கொண்டாவது இருக்கிறதா? என்றுதான் பார்க்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து கணினித் துறை சார்ந்த ஒரு பெண், தனது மோசமான காவல் நிலைய அனுபவத்தைக் கூறியுள்ளார். ‘‘மடிக்கணினி திருட்டுக்காக புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றோம். ‘வழக்குப் பதிவு செய்தால் தினமும் காவல் நிலையத்திற்கு வருவீர்களா?’ என்று கேட்டபோது ‘எடுத்துச் சென்ற புகாரை கொடுக்காமலேயே வந்துவிட்டோம்’ என்று கூறியுள்ளார். காவல் நிலையங்களுக்கு புகார்களுடன் செல்லும் பெருவாரியான பொதுமக்களின் அனுபவமும் இதுதான். காவல்துறை காக்கிச் சட்டையாகவே இருக்கட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. மனிதாபிமானம் இல்லாத சில காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறல்களால் பொதுமக்கள் காவல்துறைமீது கொண்டுள்ள நம்பகத்தன்மை முற்றிலும் முடமாகிவிடக்கூடாது என்பதே நாம் இங்கே ஆழமாக வலியுறுத்தும் கருத்து. மனிதாபிமானம் இல்லாத காவல் துறையும் சர்வாதிகார ஆட்சியும் வேறு வேறு அல்ல. மக்களின் தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின், செல்வாக்கு படைத்தவர்களின் கூலிப்படையாக மாறிவிட்டால் சாமானியக் குடிமகனுக்கு யார் காவல்? யார் பாதுகாப்பு? அன்றாட வாழ்வில் மக்களின் கண்முன் தெரியும் காவல்துறையின் முகம், ஆட்சியின் செல்வாக்கை நிர்ணயம் செய்யும் அளவுகோல் என்பதை ஆட்சியாளர்களும் உணர்ந்து நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம். கண்களை மூடிக் கொண்டு ஆதரிக்கும் வாக்கு வங்கியாக மக்களை நினைத்துவிட வேண்டாம்; அதற்கு முன்னால் ஆட்சியாளர்கள் தங்கள் கண்களைத் திறந்து, வேற்றுமைகளை மறந்து, மாச்சரியங்களைத் துறந்து மாசற்ற வாழ்வியலை உருவாக்குவதில் முனைப்பு காட்டிடல் வேண்டும்; பொறுத்திருந்து பார்ப்போம்.