Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 19 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட படத்திற்கு தடை வித்தித்து ,அதனை எடுத்தவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் 


இஸ்லாத்தை இழிவுப்படுத்தி அமெரிக்க யூதரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துவ பாதிரியாரால் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்தை அதன் விளம்பர காட்சிகளை தடை செய்து அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்காத வரை உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பு அடங்காது. யாராலும் அடக்கவும் முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்"என்ற திரைப்பட முன்னோட்ட காட்சிகள் உலக முஸ்லிம்களை கொந்தளிக்க செய்து அமெரிக்க துhதரகங்களுக்குமுன்னால் ஆர்ப்பாட்டம் போராட்டம் என வீரியமடைந்து வருகிறது. சென்னையில் அமெரிக்க துணைத்துhதரகத்துக்கு முன்னால் கடந்த 5 நாட்களாக நடைபெறும் முற்றுகை போராட்டங்கள் துhதரக செயல்பாடுகளையே முடக்கிப் போட்டுவிட்டன.

இன்று (18-09-2012) மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போராட்டம் சென்னையின் பிரதான பகுதிகளை செயலிழக்கச் செய்து விட்டது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடிப் போயின போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த போராட்டம் முடிந்ததற்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்ட கலைஞர் செய்திகள் இரவுப் பதிப்பு செய்தி அறிக்கையில் நேர்க்கானலுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பதில்களும்:-

கேள்வி:- சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வாகனங்களில் வருவோருக்கு ஏன் எதற்கு இந்த போராட்டம் என்றே தெரியவில்லை இந்த போராட்டம் தேவைதானா? என்பதே முதல் கேள்வி எதற்காக இந்த போராட்டம்?

பேராசிரியர் பதில்:- போராட்டம் தேவை தானா என்ற கேள்வியே இப்போது இல்லை. போராட்டம் தேவை என்ற உணர்வே முஸ்லிம்கள் மனதில் உள்ளது. மற்ற விஷயங்களாக இருந்தால் தேவையா? தேவையில்லையா என்ற கேள்வி எழும். இப்பொழுது நடைபெறுவதில் அந்த பிரச்சனையே இல்லை.

இது தேவைதான் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் உணர்வு உள்ளது. அதற்கு என்ன காரணம் என்றால் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறான  செய்தி அருவருக்கத்தக்க படங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

என்னை பொருத்தவரை மிதவாதி, இதவாதி என்று சொல்வார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அந்த காட்சிகளை என்னிடத்தில் சொல்லிக் காட்டினார்கள். என்னாலேயே தாங்க முடியவில்லை. ஆனால் அதைப்பார்க்கின்ற இளைஞர்கள், வாலிப பிள்ளைகள் நிச்சயமாக கொந்தளிப்பார்கள்.

அதனுடைய வெளிப்பாடுதான் இப்பொழுது நடந்துக்கொண்டு இருக்கிறது. இது உலகம் முழுவதும் நடக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக நடக்கின்ற கொந்தழிப்புகளை நாம் செய்தியாக பார்க்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்று முழுமையாக நமக்கு தெரிவதில்லை. இதை விட பன்மடங்கு கொந்தளிப்பு வெளிநாடுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி குற்றம் குறை சொல்வது என்பது- முஸ்லிம்களைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது வேறு. ஆனால் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறு பரப்புவது என்பதை எந்த ஒரு முஸ்லிம்களும் தாங்கிக்கொள்ள மாட்டான். அதற்கு காரணம் என்னவென்றால், யாரை விடவும், தன்னை விடவும், தன்னுடைய தாய்,தந்தயரை விடவும் எதை விடவும் மிக உயர்வாக முஸ்லிம்கள் மதிப்பது நபிகள் நாயகத்தை தான்.

இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் அந்த உணர்வுகளின் ஆழம் தெரியும். இதை நான் சொல்லும் போது இவருக்கு என்ன இவ்வளவு வெறியா? என்று எண்ணத் தோன்றும் இது இதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு கொள்கை.

அப்படிப்பட்ட நபிகள் நாயகத்தைப் பற்றி ‘ இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாம் பேசில் என்ற யூதர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் சர்ச்சைக்குரிய ஆபாச படங்களை நிறைய தயாரித்துள்ளார். இதற்காக இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்படிபட்டவர் சமீபத்தில் ‘டெசட் வாரியர்’ பாலைவன வீரர் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து 60 நடிகர் நடிகைகளை நடிக்க செய்து அந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு 50 லட்சம் டாலர்களை 100 யூதர் செல்வந்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளார் 35 பேருடைய ஒத்துழைப்போடு 3 மாதங்களில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜார்ஜ் என்று ஹீரோவிற்கு பெயர் வைத்தார். இந்த படத்தை எடுத்து முடித்ததும் ஹீரோவின் பெயரை முஹம்மது என்றும், படத்தின் பெயரை ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்றும் மாற்றியுள்ளார்.

இப்படி மாற்றியதோடு மட்டுமில்லாமல் இந்த வசனங்களையும் தன் இஷ்டத்துக்கு மாற்றியுள்ளார் இதற்காக அந்த நடிகர், நடிகைகள் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக ஒரு மிகப்பெரும் மோசடி செய்து இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முஸ்லிம்களை மோசடிகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், இஸ்லாம் மார்க்கம் புற்று நோய் என்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவைகளைக் கூட ஒரு முஸ்லிம் பொறுத்துக்கொள்வான். நபிகள் நாயகத்துக்கு உருவமில்லை. நபி உருவப்படத்தை வெளியிடுவதுமில்லை. ஆனால் நபிகள் என்று ஒரு உருவத்தை அமைத்து முஹம்மது என்று பெயர் சூட்டி, தாடி வைத்து ஒருவிளைமாதுடன் உறவு கொள்வதாக காட்சி அமைத்து, இன்றைக்கு வரையில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை யார் பொருத்த கொள்ள முடியும்? இந்தியாவில் இதை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் ஏன் தடை செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

கேள்வி:- உங்களுடைய தெளிவான விளக்கத்தில் இருந்து இந்தத் திரைப்படம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்துவதற்காக வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய உலக முஸ்லிம்களுடைய கோரிக்கை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்பது தானே?

பேராசிரியர் பதில்:- உலக இஸ்லாமியர்களின் கோரிக்கை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன் அமெரிக்காவின் கொள்கை என்பது, இஸ்லாத்தை முஸ்லிம்களை எதிர்க்கும் கொள்கை என்ற பொதுவான நம்பிக்கையே உலக முஸ்லிம்களிடம் உள்ளது. அது இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவையே சார்ந்தது.

அடுத்து புனித திருக்குர்ஆனை எரிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் அதைச் செய்தார்கள். அதற்கு மறுப்பு, மன்னிப்பும் அமெரிக்கா தெரிவித்தது. அதே போன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கில் அவமரியாதை செய்தனர். அதற்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பாதிரியார் அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ் திருக்குரானை எரிக்கும் போராட்டத்தை முன் கூட்டியே அறிவித்து, அவர் எரித்ததை அமெரிக்க தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தன.

அமெரிக்க அரசு அதை தடுக்கவும் இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அதைத்தொடர்ந்து இப்பொழுது நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் திரைப்படத்தை எடுத்து இப்பொழுது ஒளிபரப்பு செய்கின்றார்கள். அதை இன்று வரை தடை செய்ய வில்லை.

இது உலகலாவிய முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துகிறது. உள்ளங்களை காயப்படுத்துகிறது என்று கருதி அமெரிக்க அரசு இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யவில்லை. அப்படியானால் குர் ஆனை எரிப்பதற்கு அவர்கள் உடன்படுகிறார்களா? அதனுடைய தொடர்ச்சிதான் இது. எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமா? என்பதே முஸ்லிம்களின் கேள்வி.

எனவே தான் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன. என்னை இந்த போராட்டத்திற்கு அழைத்தார்கள். நான் செல்ல வில்லை என்னை போன்று வயதானவர்கள் நடுநிலையாக சிந்திக்க கூடியவர்கள் பொறுமையாக இருக்கலாம் ஆனால் வாலிபனாக உள்ளவன் இந்த காட்சிகளைப் பார்க்கிறான் கொந்தளிக்கிறான் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல்தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறான்.

கேள்வி:- உலகம் முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடைபெறுகின்றன அமெரிக்காவிலும் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் இந்த அளவிற்கு இல்லை. சென்னையில் அதிகம் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் போராட்டம் அமெரிக்காவில் எட்டுமா?

பேராசிரியர் பதில்:- நிச்சயம் எட்டும் அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகம் இல்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. குறைந்த பட்சம் அமெரிக்கா இணைய தளத்தில் உள்ள படங்களை தடைசெய்து இருக்கலாமே! அதை ஏன் நிறுத்தவில்லை? முதலில் இணையதளங்களில் உள்ள படங்களை நிறுத்தட்டும் அதற்கு பிறகு படம் எடுத்தவன், வெளியிட்டவன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்கா இதை செய்யும் வரை இந்த போராட்டங்கள் ஓயாது. இதை  நிறுத்தவும் யாராலும் முடியாது, மிதவாதிகள் வயதானவர்கள் அதை எரிக்க வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என சொல்லலாம் ஆனால் உணர்வு என்பது மிக ஆழமானது அந்த உணர்வை நாம் நிறுத்த முடியாது அது வெளிப்பட்டே தீரும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்