Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 மார்ச், 2013

தமிழக காங்கிரஸ் கட்சி உடையுமா ?


இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து ஐநா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசிற்கு எதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் , இலங்கை அரசு தமிழ் மக்களின் மீது செய்த குற்ற செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை பற்றி இந்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிற்கு திமுக அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது .

திமுக தலைமை எடுத்த முடிவினை அக்கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி வரவேற்று கொண்டாடினர் .ஆனால் ,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு மிக வேதனையையும் ,அதிர்ச்சியையும் கொடுத்தாக தெரிகின்றது .

1996 - ஆம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நரசிம்மராவ் அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் ,மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ் " என்ற கட்சியை துவக்கினார் .

அதன் பின்பு , திமுக பிஜேபி உடன் உடன்பாடு கொண்டதால் மூப்பனாரின் "தமாகா " அதிமுக உடன் கூட்டணி அமைத்தது . அப்போது , ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த மூப்பனாரின் முடிவை ஏற்க மறுத்த ப.சிதம்பரம் "ஜனநாயக மக்கள் காங்கிரஸ் " என்று ஒரு கட்சியை துவக்கி திமுக உடன் கூட்டணி கொண்டு 2 எம்.எல்.ஏ- களை பெற்றார் .

  இன்றைக்கு 1996 நிலை மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் . திமுக உடன் கூட்டணியை தொடரவே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரும்புகிறார் . அதிமுக உடன் கூட்டணி வைக்கவோ  அல்லது மூன்றாவது அணியை பற்றியோ ப.சிதம்பரம் விரும்பவில்லை .மேலும் , மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் இதே நிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .அதன் வெளிப்பாடு தான் , இன்று மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை என்ற செய்தியை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி அடைந்தார் . உடனே , பிரதமரையும் அமைச்சர்களையும்  தொடர்பு கொண்டு சிபிஐ சோதனையை இடையில் நிறுத்த நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது .

ஒரு வேளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை திமுக கூட்டணியை தொடர வழிவகை செய்ய முன்வரவில்லைஎன்றால் ,ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் தலைமையில்  மீண்டும்  தமாகா உதயமாகும் . ஜி.கே.வாசன் வராவிட்டாலும் ,ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சி உடைவது உறுதி என்று கூறப்படுகிறது .

  பல்வேறு நிலைகளில் மத்திய காங்கிரஸ் அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் , திமுக விசயத்தில் என்ன முடிவை சோனியாவும் ,ராகுலும் எடுக்கப்போகிறார்கள்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ,தொண்டர்களும் அமைதியுடன் காத்திருக்கின்றனர் .

71 வயது பெண்மணி டாக்டர் பட்டம் பெற்று சாதனை


டில்லி பல்கலைக்கழகத்தில், 71 வயதான பெண், முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், சிந்தி மொழி பாடப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஜனாதிபதியிடம் பட்டம் பெற்றுள்ளார்.

டில்லியை சேர்ந்தவர், உஷா சாஸ்வத்,71, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பின், சிந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார்.

இதன் காரணமாக, சி.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பள்ளி கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான, சிந்தி மொழி இலக்கண பாடத் திட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், 2007ம் ஆண்டு, டில்லி பல்கலையின், சிந்தி துறையில், ஆராய்ச்சி மாணவியாக தன்னை இணைத்து கொண்ட இவர், கடந்த ஆண்டு, ஆய்வை நிறைவு செய்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியிடமிருந்து, உஷா சாஸ்வத், முனைவர் பட்டம் பெற்றார்.

அப்போது பேசிய உஷா, "என் கல்வி தாகம் இனிமேலும் அடங்காது; மேலும் படிக்க உள்ளேன்" எனக் கூறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தார்.

கரூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கரூர் மாவட்டத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மக்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி, வட்டார ஒருங்கிணைப்பாளர், கணிணி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

அதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முதுகலை சமூகவியல் அல்லது ஏதாவது ஒரு முதுகலை பட்டப்படிப்பில் சமூக நலக்கல்வி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப் பாளர் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கணினி உதவியாளர் பணிக்கு பி.ஜி.டி.சி.ஏ, சுருக்கெழுத்து, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அறிக்கை:
இந்த பணிகளுக்கு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். முற்றிலும் தற்காலிக பணி ஆகும்.

விருப்பம் உள்ளவர்கள் வருகிற 28ந்தேதிக்குள் கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளாச்சி முகமை அலுவலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கூடுதல் கலெக்டர் வினய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

முலாயம் சரத்பவாருடன் சந்திப்பு மீண்டும் மூன்றாவது அணி உதயம் ?


தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகிய நிலையில், மத்திய மந்திரி பெனி பிரசாத்தை பதவி நீக்கும் பிரச்சினையில் சமாஜ்வாடி கட்சி எடுக்க இருக்கும் முடிவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், காங்கிரசின் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முலாயம்சிங் யாதவ் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அரசியலில் அணி மாற்றத்துக்கு முலாயம்சிங் முயற்சி மேற்கொண்டு வருகிறாரா? என்ற கேள்வியை இந்த சந்திப்பு எழுப்பி உள்ளது. ஆனால், அதுபோன்ற யூகங்களை இரு தலைவர்களும் மறுத்து உள்ளனர். இருவரும் கலந்துகொள்ள இருக்கும் சுதந்திரபோராட்ட தியாகி ஒருவரின் நினைவு தின நிகழ்ச்சி குறித்து விவாதித்ததாக, அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பெனி பிரசாத் வர்மா விவகாரம் குறித்து விவாதிக்க சமாஜ்வாடி கட்சியின் பார்லிமென்டரி கூட்டம் இன்று நடந்தது. இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முலாயம் சிங்கிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.