Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 ஜூன், 2012

அறிய முயற்சி


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இணையதளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அவர்கள் இது குறித்து,  ‘’உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமான மொழிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மொழிகள் வழக்கொழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 100 ஆண்டுகளில் அழிந்தேபோய்விடும். 
மொழிகள் அழிந்தால் ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசார பெருமை, பண்பாட்டு சிறப்புகளை எதிர்காலம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை தடுக்கும் நோக்கில்தான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சில மொழிகளை ஒரு சிலர் மட்டுமே பேசிவருகின்றனர். அவர்கள் காலத்தோடு அந்த மொழி அழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்த மொழியின் வீடியோ, ஆடியோ பதிவுகள் இந்த இணைய தளத் தில் வெளியிடப்படும். அதை பார்ப்பவர்கள் அந்த மொழி பற்றி தெரிந்துகொண்டால் அந்த மொழி அழியாமல் இருக்கும்’’என்று கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை பிறந்தபின் அல்ல, பிறப்பதற்கு முன்பே !

பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து குணப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன் நடத்தி சாதனை படைத்துள்ளனர். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டாம்மி கான்சலேஷ். கர்ப்பிணி ஆன இவர் தனது வயிற்றில் வளரும் கரு வளர்ச்சியை அறிய ஸ்கேன் செய்தார். 17 வாரங்கள் வளர்ச்சி அடைந்த அந்த கரு பெண் குழந்தை என தெரிய வந்தது. 

எனவே அக்குழந்தைக்கு லெய்னா என டாம்மி பெயரிட்டார். ஆனால் அந்த குழந்தையின் வாயில் புற்றுநோய் தாக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக கருவில் வளரும் குழந்தையின் வாயில் சாமர்த்தியமாக ஆபரேசன் செய்து புற்றுநோய் கட்டிகளை அகற்றினர். 

உலகிலேயே முதன்முறையாக கரு குழந்தைக்கு ஆபரேசன் செய்து லணடன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று அரிய புற்றுநோய் உருவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னும் 5 மாதங்களில் அக்குழந்தை பிறக்கும். ஆனால் இது நீண்டநாள் உயிர் வாழ்வது கடினம். என்றும் அவர்கள் கூறினர். 

இதற்கிடையே தனது வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஆபரேசன் நடந்தபோது அதன் வாயில் இருந்து நீர்க்குமிழிகள் வெளியானதை பார்த்ததாக தாய் டாம்மி தெரிவித்தார்.

கேட்பதற்கே சந்தோசமாக இருக்கின்றது ,சுத்தமாக இருக்க அரசு அதிரடி உத்தரவு













சுத்தம், நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அனைத்து பள்ளிகளும் உரிய நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் சுத்தமாகவும், நேரம் தவறாமலும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் தினமும் சுத்தமாக சீருடை அணிந்து வர வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
தரமான கல்வியை வழங்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு பசுமையாக வைக்க வேண்டும். மாணவர்களின் கற்கும் திறனை கண்காணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிசயம் ,ஆனால் உண்மை ; எந்த நிலையிலும் உயிரை பாதுகாப்பது அதனை படைத்தவனின் வல்லமையல்லவோ !

கடந்த 4 நாட்களுக்கு முன் ஆள்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது சிறுமி மகியை ராணுவத்தினர் ‌போராடி மீட்டனர். 85 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். பின்னர் அவர் உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 

அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மஹி, 4 என்ற சிறுமி, கடந்த 20ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆள் துளை கிணற்றில், தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் தெரிய வந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுமிக்கு, கயிற்றை பிடித்து மேலே வரும் அளவுக்கு விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, ராணுவ வீரர்களும், அங்கு வந்தனர். சிறுமி விழுந்த இடத்துக்கு சற்று அருகில், மீட்பு குழுவினர் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி மீட்புப்பணியை மேற்கொண்டனர்.. ஆள் துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்படும் இந்த பள்ளத்தின் வாயிலாக, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்று, அவளை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆக்சிஜன் செலுத்தப்பட்டது: சிறுமி, சுவாசிப்பதற்காக ஆள் துளை கிணற்றுக்குள், "ஆக்சிஜன்' செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலையில், "இன்னும் சில மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம்' என, மீட்பு குழுவினர் தெரிவித்தார். மாலையில் நிலைமை தலைகீழானது. சிறுமி விழுந்த துளையில் அருகில் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டும் இடத்தில், கடினமான பாறைகள் நிறைந்திருப்பதால், விரைவாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இதனால், கடந்த நான்கு நாட்களாக 70 அடி பள்ளத்தில் சிக்கியிருக்கும் மஹியின் கதி என்ன ஆகும் என கவலை உருவானது.

மீட்பில் தாமதம்: மகியை நெருங்க சில அடி தூரம் இருந்த நிலையில் அங்கு கடுமையான பாறைகள் இருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது. 
 தொடர்ந்து இன்று காலை முதல் நடந்த மீட்பு முயற்சிக்குப்பின்னர் கடந்த 85 மணிநேர போராட்டாத்திற்கு பிறகு மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். தற்போது மகியை அங்கு தயார் நிலையில் வைத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இங்கே பணம் ,இந்த நிலையிலா ?


திருச்சி உறையூரில் இன்று (23.06.2012) காலை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பையை எடுத்து அப்புறப் படுத்தச் சென்ற துப்புரவுப் பணியாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
வெறும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகளை அகற்றுவதற்காக வழக்கம் போல் எதிர்பார்த்துச் சென்றவர், அங்கே ரூபாய் நோட்டுகள் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கப்பட்டு பரவிக் கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.  ஆனால் அந்த நோட்டுகள் எதுவுமே எடுத்து ஒட்டி பயன்படுத்த இயலாத நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன.



பணியாளர் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். அதற்குள் பொதுமக்களுக்கு இந்தத் தகவல் பரவியது. கூட்டம்கூட்டமாக குப்பைத் தொட்டியைப் பார்வையிட பொதுமக்கள் திரண்டனர். அதிகாரிகள் அதற்குள் அந்த இடத்துக்கு வந்து கிழிசல் நோட்டுகளைக் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என்பது தெரியவந்தது. இவை எப்படி இங்கு வந்தன, இவற்றின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5 கிராம், 500 ரூபாய் நோட்டுகள் 550 கிராம், 100 ரூபாய் நோட்டுகள் 569 கிராம், 50 ரூபாய் நோட்டு 20 கிராம் என மொத்தம் 1103 கிராம் உள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.