Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 2 மே, 2013

தமிழக அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் படுக்கை வசதியில்லை, தரையில் படுத்து சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள்


செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவில், போதிய படுக்கை வசதியில்லாததால், பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது. இதில், தினமும், 30 குழந்தைகள் வரை பிறக்கின்றன. 5 குழந்தைகள் இயல்பான பிரசவத்திலும், 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறக்கின்றன. தற்போது, பிரசவம் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இன்றி, சிகிச்சைக்கு வரும் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

படுக்கைகள் பற்றாக்குறை
இங்குள்ள இரு வார்டுகளிலும், தலா 35 படுக்கைகள் உள்ளன. இதில், குழந்தை பிரசவித்த பெண்களை இதில் படுக்க வைக்கின்றனர். அவர்கள், குறைந்தபட்சம், 9 நாட்கள் வரை, படுக்கையில் இருக்க வேண்டும். ஆனால், படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளதால், பிரசவ வார்டில் மட்டும் குழந்தை மற்றும் தாயை படுக்கையில் இருக்க அனுமதிக்கின்றனர். பிரசவம் அதிகரிப்பதால், அடுத்தடுத்த பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் வருவதால், முன்னதாக படுக்கையில் இருப்பவர்களை கீழே இறக்கி, தரைப்பகுதியில் படுக்க வைக்கின்றனர்.

அடிப்படை வசதியில்லைவார்டின் தரைப்பகுதி, சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளதுடன், அங்கு வழங்கப்படும் குடிநீரும் தூய்மையாக இல்லை. மின்விசிறிகள் முறையாக இயங்கவில்லை. கழிப்பறையும் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசி வருகிறது. படுக்கைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இப்பிரச்னைகளால், பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகளுடன் கடும் அவதிப்படுகின்றனர்.தரையில் படுக்கைஇதுகுறித்து, அச்சிறுப்பாக்கத்தைசேர்ந்த ஷர்மிளா கூறுகையில்,""பிரசவத்திற்கு பிறகு, ஒருநாள் மட்டும் படுக்கை வசதி செய்து தரப்படுகிறது. அடுத்த, 5 நாட்கள் வரை தரையில் படுக்கவேண்டியுள்ளது. இடமும் சுகாதார வசதியின்றி உள்ளதால், தொற்றுநோய் பரவுகிறது. இதனால், அடிக்கடி மருத்துவரை வந்து சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தருவதில்லை. எனவே, பிரசவ பெண்களின் நலன் கருதி, கூடுதல் படுக்கைகள் அமைத்து, இப்பிரிவை சுகாதாரத்தோடு பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.

சுற்றுச்சூழல்துறை படிப்புகள்

வெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம். இயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது.

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத் துறையில் எண்ணற்ற
வாய்ப்புகள் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட்லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது. இத் துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள்
தருகின்றன. சமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன.

நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத் துறை தருவதால் இப் படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

இத்துறை சார்ந்த படிப்பை வழங்கும் கல்விநிலையங்கள் 

1. St. Joseph's College of Arts & Science, Cuddalore 
2. St. Joseph's College, Tiruchirappalli 
3. Anna University , Chennai 
4. University Of Madras 
5. Barathiar University , Coimbature 

ITI - படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி


அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள தொழில் நுட்ப பணியாளர் பணியிடத்துக்கு உத்தேச பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா வெளியிட்ட செய்தி குறிப்பு:

அரசு போக்குவரத்த கழகத்தில், காலியாக உள்ள தொழில் நுட்ப பணியாளர் பணியிடத்துக்கு, 43 மோட்டார் மெக்கானிக், 12 டீசல் மெக்கானிக், 12 ஃபிட்டர், 14 எலக்ட்ரீசியன் உள்ளிட்ட, 81 பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

அதற்காக ஒவ்வொரு பிரிவிலும், உத்தேச வயது, பதவி மூப்பு பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. உரிய கல்வித்தகுதி பெற்று, குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்த மனுதாரர்கள், நாளை (3ம் தேதி) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அசல் கல்விச்சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஜாதி சான்றுடன் நேரில் வந்து பட்டியலை சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், பதிவுதாரர்கள், அலுவலகத்துக்கு வரும்போது, இணையதளம் வழியாக எடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை நகலை, தவறாமல் எடுத்து வரவேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க தமிழக அரசு தடை


தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, போதிய அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்தில், ஏற்கனவே தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதையும், குறிப்பாக, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பை வழங்கும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர் மத்தியில், போதிய வரவேற்பு இல்லாத நிலையையும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடம், தமிழக அரசு சுட்டிக் காட்டியது.

இதனால், "வரும் கல்வி ஆண்டில் (2013-14), புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்" என தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், தமிழகத்தில், புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் துவங்க, அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், புதிதாக, பி.எட்., கல்லூரிகள் துவங்க, எவ்வித தடையும் இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு, நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகளில், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படித்தவர்கள், நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்பின், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, நியமனம் செய்யப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து, பி.எட்., படித்தவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.இதனால், ஆசிரியர் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு, 90 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது.

இதனால், இந்த பயிற்சியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏற்கனவே இந்த பயிற்சியை முடித்துவிட்டு, 1.5 லட்சம் பேர், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளுக்கு முன், 750 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருந்தன. தற்போது, 500ஆக குறைந்துவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும், 50 முதல், 100 கல்வி நிறுவனங்கள் வரை மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் இருந்த போதும், வெறும், 8,000 இடங்கள் மட்டுமே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களினால், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, சட்டீஸ்கர், கோவா, இமாச்சல பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய, ஏழு மாநிலங்களிலும், பல்வேறு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்க, என்.சி.டி.இ., அனுமதி மறுத்துள்ளது. அந்தந்த மாநிலங்களின் கோரிக்கை அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கவுன்சில் அறிவித்துள்ளது.