ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கிட பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மாதத்தில் தெலுங்கானா கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் தெலுங்கானா பகுதியில் தற்போது பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு , இன்னும் 24 மணி நேரத்தில் தனித்தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கெடு விதித்துள்ளன.
தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இறுதி முடிவை எடுக்காவிட்டால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.பி.,க்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், தெலுங்கானா மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது என்றார். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.
இதையடுத்து தெலுங்கானா விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சூடுபறக்கிறது. பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.