Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 மார்ச், 2013

இந்தியா முன்னேறுகிறது: ஐ.நா. அறிக்கையில் தகவல்


 பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020 ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும்.

தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990 ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008 ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை, குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

பலத்த மழை
நெல்லை மாவட்டம் அம்பை, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கசிந்தது. கடுமையான வெயிலால் இந்த பகுதிகளில் அதிக வெப்பம் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9.45 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு 11 மணிக்கு மேல் நேற்று காலை வரை அவ்வப்போது பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலையிலும் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

அருவிகளில் வெள்ளம்:
குற்றாலம் மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலிஅருவி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்ட செண்பகா தேவி அருவி, தேனருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில் பழுப்பு நிறத்தில் வெள்ளம் கொட்டியது. பழைய குற்றாலம் அருவி பகுதியில் நடந்து செல்லும் படிக்கட்டு வரை தண்ணீர் சென்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவிக்கு சென்று குளித்தனர். இந்த மழையால் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

வரிவசூல் மையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் : நெல்லை மாநகராட்சி


2012–2013 நிதியாண்டு 31–3–2013 ல் முடிவடைவதால் பொதுமக்கள் தங்கள் வரிகளை செலுத்துவதற்கு ஏதுவாக விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மாநகராட்சி கணினி வரிவசூல் மையங்கள் செயல்படும்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவை வைத்துள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகைகளை செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான நடவடிக்கைகளை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: கருணாநிதி


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி மிரட்டல் விடுத்தார்

 மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் :
காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார். மேலும் அவர், தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார். 

இந்நிலையில் கருணாநிதி இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறினார். மேலும் அவர், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., நீடிக்காது. கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் தி.மு.க., உறுதியாக உள்ளது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு அநீதி ஏற்படும். தமிழகத்தில் சிங்களர்கள் தாக்கப்படுவது சரியல்ல எனவும் கூறினார்.