கடந்த பல ஆண்டுகளாகவே, உயர்கல்விக்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில், ஸ்காட்லாந்து புகழ்பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்தின் எந்த பல்கலையில் படித்தாலும், சிறந்த அனுபவத்தை ஒரு மாணவரால் பெற முடியும்.
தனித்துவமான கலாச்சாரம், நல்ல இயற்கையமைப்பு மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஸ்காட்லாந்தை நோக்கி வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கின்றன.
ஸ்காட்லாந்து சரியான இடமா?
உங்களின் வெளிநாட்டு கல்விக்கு ஸ்காட்லாந்து சரியான இடமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், அதற்கு பதில் ஆம் என்பதுதான். ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கும் கல்வியால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை ஒருபுறமிருக்க, அந்நாட்டின் வலுவான பொருளாதாரமானது, உங்களுக்கு சிறந்த தொழில்துறை அறிவைக் கொடுக்கிறது.
நிதி, பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், லைப் சயின்சஸ், மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுலா, படைப்பாக்க தொழில்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவை அந்நாட்டிலுள்ள முக்கியமான தொழில்துறைகள். ஸ்காட்லாந்தில், மாணவர்கள், cross - faculty படிப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஸ்காட்லாந்திலுள்ள ஒவ்வொரு பல்கலையும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இங்கே படிப்பவர்கள் பெறும் அனுபவம், அவர்களின் நீண்ட நல்வாழ்விற்கு துணைபுரிகிறது.
உயர்கல்வி அமைப்பு
ஸ்காட்லாந்தின் உயர்கல்வி அமைப்பானது, பிற ஐரோப்பிய நாடுகளின் நடைமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்நாட்டிலிருக்கும் மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள், சுய நிர்வாக உரிமையும், சுதந்திரமும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மும்முரமாக ஈடுபடும் தன்மையும் கொண்டவை. டிகிரி மற்றும் இதர பட்டப்படிப்புகள், முற்றிலும் கல்வி நிறுவனம் சம்பந்தப்பட்டதே தவிர, ஸ்காட்லாந்து அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல.
பட்டம் வழங்குவதற்கு, ஸ்காட்லாந்து அதிகார அமைப்பினால் அங்கீகாரமளிக்கப்பட்ட பல்கலைகளின் விபரங்கள் www.dius.gov.uk என்ற இணையதளத்தில் கிடைக்கும். இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் அனைத்தும் போலோக்னோ அமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்நாட்டில், இளநிலை மற்றும் முதுநிலை அளவில் வழங்கப்படும் தகுதி நிலைகள், அந்நாட்டு உயர்கல்வி தகுதிகளுக்கான விதிமுறைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விதிகள்
பொதுவாக, மாணவர் சேர்க்கை விதிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு மாணவர், தான் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்க பொருத்தமானவர்தானா? என்பதை தெரிந்துகொள்ள, பாட உள்ளடக்கத்தை கவனமாக படிக்க வேண்டும்.
சேர்க்கை நடைமுறைகளின்போது பின்பற்றப்பட வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
* www.ucas.com என்ற இணையதளமானது, பலவிதமான பாடங்களைப் பற்றியும், அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விபரங்களை வழங்குகிறது.
* www.ucas.com இணையதளத்தில், ஆன்லைன் அப்ளிகேஷன் அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* www.ucas.com மூலம் அப்ளிகேஷன் செயல்பாட்டை தெரிந்துகொள்ளலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரங்களையும் இத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலை, உங்களுக்கான முறையான வழங்கல் கடிதத்தை அனுப்பும்.
கல்வி செலவினம்
பட்டப்படிப்பு அளவில், ஒரு வெளிநாட்டு மாணவருக்கான கல்விச் செலவு, வருடத்திற்கு 9000 பவுண்டுகள் முதல் 20000 ஆகிறது.
அதேசமயம், கல்விக் கட்டணமானது, படிப்புக்கு படிப்பு, பல்கலைக்கு பல்கலை வேறுபடும். மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு, பிற படிப்புகளை விட அதிக செலவாகும். மாணவர் விசா பெர்மிட் பெறுவதற்கு முன்பாக, உங்களின் நிதி ஆதார நிலையை நிரூபிக்க வேண்டும்.
உதவித்தொகை
Saltire என்பது, மாணவர்களுக்கான மிக முக்கியமான உதவித்தொகையாகும். முதுநிலைப் படிப்பில் 1 வருட கல்விக் கட்டணத்தை சமாளிப்பதற்கான 2000 பவுண்டுகள் உதவித்தொகை இதன்மூலம் கிடைக்கிறது. இந்தவகை உதவித்தொகைகளைப் பெறுவதற்கு, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த உதவித்தொகை, இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது.
Commonwealth scholarship, Fellowship plan and British Chevening scholarships(available only at post-graduate level) போன்றவை இதர சில முக்கிய உதவித்தொகைகளாகும். மேலும், ஒவ்வொரு பல்கலையும், தங்களிடம் சில குறிப்பிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன. இவைப் பற்றிய விபரம் அந்தந்த பல்கலை இணையதளங்களில் உள்ளது.
படிப்பின்போதான பணி
டிகிரி நிலையிலான படிப்பை(பவுண்டேஷன் அல்லது ஹையர்) மேற்கொள்கையில், வாரம் 20 மணிநேரங்கள் வரை பணிசெய்து, உங்களின் சில பொருளாதார தேவைகளை நிறைவுசெய்து கொள்ளலாம். அதேசமயம், படிப்பை முடித்தப்பிறகு, அந்நாட்டில் சிறந்த பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால், ஸ்காட்லாந்து பல்கலையிலிருந்து பெற்ற பட்டமானது, உலகளவில் நல்ல மதிப்பை கொண்டிருப்பதால், உங்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி கவலை வேண்டியதில்லை.