கடும் மின்வெட்டு காரணமாக வேலை வாய்ப்பு குறைந்து, வருவாய் பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் தீபாவளி வரை தாக்குப்பிடித்தனர். போனஸ் வாங்கியதும், பண்டிகையை கொண் டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார் களா, மாட்டார்களா என பனியன் கம்பெனி உரிமையாளர்களும், விசைத்தறியாளர்களும் கலக்கம் அடைந் துள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்களை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்களின் சொந்த ஊர்களுக்கு பஸ் அனுப்பி, அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.
திருப்பூரில் பனியன் தொழிலிலும், அதை சார்ந்த பிற தொழில் பிரிவுகளிலும், வெளிமாவட்ட மக்களே பிரதான தொழிலாளர்களாக உள்ளனர். நகரிலேயே குடும்பத்துடன் குடியேறியிருந்தாலும், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். திடீரென கணிசமான அளவு தொழிலாளர்கள் வெளியேறுவதால், பனியன் உற்பத்தி முடங்குகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றாலும், வழக்கமான அளவு உற்பத்தி நடப்பதில்லை.
தற்போது, குறித்த நேரத்தில் ஆர்டரை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயம், ஏற்றுமதி பனியன் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக, தொழிலாளர்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், மின்வெட்டு காரணமாக வேலைவாய்ப்பு குறைந்து, வருமானம் பாதியாக குறைந்துள்ளதால், தொழி லாளர்கள் திரும்பி வருவார்களா என்ற அச்சம் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பனியன் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில்,"தீபாவளிக்கு சென்றவர்களில், 90 சதவீதம் பேர், நாளை (18ம்தேதி) இரவுக்குள் திருப்பூர் திரும்புவர். சிலர், பொங்கல் பண்டிகை வரை, அங்கேயே தங்கியிருப்பர். ஏற்றுமதி நிறுவனங் களுக்கு, தொழிலாளர்கள் தேவைப்படுவதால், அவர்கள், சொந்த ஊர் செல்ல கம்பெனி மூலமாக பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல், பஸ்களை அனுப்பி வைத்து, தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.
விசைத்தறி நிலை:பல்லடம் பகுதியில் 35 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழில்களில் 35 ஆயிரம் பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதில், 20 ஆயிரம் பேர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். பல்லடம் பகுதியில் ஆறு மாதத்துக்கு மேலாக, தினமும் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறிகளை சீராக இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்த 30 சதவீத விசைத்தறியாளர்கள், ஜெனரேட்டர் உதவியுடன் இயக்கி வருகின்றனர். மின்வெட்டு காரணமாக தொழிலாளர்களின் கூலி முன்பை விட பாதிக்கு பாதி குறைந்து விட்டது. கூலி குறைவால் அன்றாட தேவையை கூட முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.
தீபாவளிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே 10 சதவீத தொழிலாளர்கள் வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள், போனஸ் வாங்குவதற்காக மிகவும் சிரமப்பட்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை வேலை பார்த்து வந்தனர். பண்டிகைக்கு முந்தைய நாள் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. அதைப்பெற்ற தொழிலாளர்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்று விட்டனர். மின்வெட்டு காரணமாக, வேலை பாதிப்பு, கூலி குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் மீண்டும் வருவார்களா, மாட்டார் களா என்ற சந்தேகம் விசைத்தறியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விசைத்தறியாளர்கள் கூறுகையில், "மின்வெட்டு காரணமாக துணி உற்பத்தி 60 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. துணி உற்பத்தி குறைவால் தொழிலாளர்களின் கூலியும் பாதி அளவுக்கு குறைந்துள்ளது. அக்கூலியை கொண்டு தொழிலாளர்கள் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமம் என்பது எங்களுக்கு தெரியும். துணி உற்பத்தி குறைவால், எங்களால் அவர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு கூலி வழங்க இயலவில்லை.
பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்ற வெளிமாவட்ட தொழிலாளர்களில் 50 சதவீதத்தினராவது மீண்டும் வேலைக்கு வருவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. மின்வெட்டு பிரச்னை எப்போது தீரும் என்பதே தெரியவில்லை,' என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
காலியாகும் வீடுகள்:கடந்த ஆறு மாதமாக, தினமும் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. தொழில்கள் கடும் நசிவை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து, கூலி 50 சதவீதம் குறைந்து விட்டது. அடிப்படை தேவையை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
சொந்த ஊரில் குறைவாக கூலி கிடைத்தாலும், வீட்டு வாடகை குறைவு, உற்றார், உறவினர்கள் அருகில் இருப்பதால், விசேஷங்களுக்கு விடுமுறை எடுக்காமல் வேலைக்கு செல்ல முடியும். போக்குவரத்து செலவின்மை போன்ற காரணங்களால், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் 10 சதவீதத்தினர், வாடகை வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.