Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 மார்ச், 2013

கடையநல்லூர் அடவிநயினார் அணை பகுதி சுற்றுலா ஸ்தலமாக்க நடவடிக்கை

கடையநல்லூர் அருகேயுள்ள மேக்கரை பகுதியில் அடவிநயினார் அணைக்கட்டு அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்துள்ள இந்த அணைக்கட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் பெருமளவில் அடவிநயினார் அணைக்கட்டு பகுதிக்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் அணைக்கட்டு பகுதிகள் பெருமளவு சுற்றுலா ஸ்தலமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அடவிநயினார் அணைக்கட்டு பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அச்சன்புதூர் டவுன்பஞ்.,தலைவர் சுசீகரன் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் அளித்துள்ள மனுவில் :- அச்சன்புதூர் டவுன் பஞ்.,சிற்குட்பட்ட மேக்கரை பகுதியில் அமைந்துள்ள அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலாத்துறை மூலமாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி மின் விளக்குகள், அணைக்கட்டு பகுதிகளில் தார்சாலை அமைத்தல், குறவன் பாறை பகுதிக்கு தார்சாலை அமைத்தல், சிறுவர் பூங்கா மற்றும், செயற்கை நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அமைத்திட வேண்டுமெனவும், இதற்காக சுற்றுலாத்துறை மூலம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் ,அச்சன்புதூர் பகுதியில்  அடவிநயினார் அணைக்கட்டு பகுதியினை சுற்றுலா ஸ்தலமாக அமைப்பதற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கும் முதல்வர்  உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருப்பதாக டவுன் பஞ்.,தலைவர் சுசீகரன் தெரிவித்தார்.

+2 இயற்பியல், பொருளியல் தேர்வு 41 மாணவர்கள் பிடிபட்டனர்


பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, முக்கிய பாடத் தேர்வுகள், நேற்று துவங்கின. இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், மாநிலம் முழுவதும், "பிட்' உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட, 41 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

ஏற்கனவே நடந்த தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடத் தேர்வுகளில், 66 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். இந்நிலையில், நேற்று, இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடந்தன.
வழக்கமான பறக்கும் படை குழுவினருடன், அண்ணா பல்கலை மற்றும் மாவட்டங்களில், அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், தேர்வை பார்வையிட்டனர்.

தேர்வில், "பிட்' அடித்தது உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இயற்பியல் பாடத்தில், 23 மாணவர்களும், பொருளியல் பாடத்தில், 18 மாணவர்களும் பிடிபட்டனர். வழக்கம் போல், கிருஷ்ணகிரி,
கடலூர், திருவள்ளூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான், மாணவர்கள் பிடிபட்டனர்.

அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டத்தில், இயற்பியல் பாடத்தில், ஒன்பது மாணவர்கள், பொருளியல் பாடத்தில், மூவர் என, 12 பேர் பிடிபட்டனர். நேற்றுடன், தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை, 107 ஆக உயர்ந்தது.இயற்பியல் தேர்வு, எளிதாக இருந்தது என்றும், பாடத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வரும் 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் தேர்வுகள் நடக்கின்றன. 15ம் தேதி, வணிகவியல், புவியியல் தேர்வுகளும், 18ம் தேதி, வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளும் நடக்கின்றன. 21ம் தேதி, உயிரியல், வரலாறு, தாவரவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

வரும் 25ம் தேதி, நுண் வேதியியல் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில் தொழில்வாய்ப்புக்கேற்ற புதிய பாடத்திட்டம்!


 "தொழில் வாய்ப்புக்கு ஏற்ப, புதிய பாடப் பிரிவுகள், வரும் கல்வியாண்டில் துவங்கப்படும்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், திறந்தநிலை பல்கலை மூலம், புதிய படிப்புகள், 2013-14ம் கல்வியாண்டில் துவங்கப்பட உள்ளன. இளங்கலையில், தொடுசிகிச்சை அறிவியல் முறை படிப்பும், முதுகலையில், மொழியியல், மொழி பெயர்ப்பு இயல், மேம்பட்ட நிர்வாக இயல், காவல் நிர்வாகம், ஆயத்த ஆடை வடிவமைப்பு, மகளிர் இயல் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

மேலும், பட்டய படிப்பில், கனரக வாகன இயக்கம் மற்றும் பராமரிப்பு படிப்பும், முதுகலை பட்டய படிப்பில், ஆங்கிலத்தில் படைப்பு ஆக்கம், சிறப்பு கல்வியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட, அறிவியல் துறைகள், புதிதாக துவங்கப்பட உள்ளன. சென்னை பல்கலையில், இன்று நடக்கும் ஆறாவது பட்டமளிப்பு விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும், 6,176 பேருக்கு முதுகலை பட்டமும், 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும், 5,937 பேருக்கு பட்டய சான்றிதழும், 198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.