Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 12 ஜனவரி, 2013

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி


விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், புது தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்து பேசியது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் அரசால் 2010ம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் வியாபாரத்துக்கு ரூ. 1லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், உற்பத்தி சேவை தொழிலுக்கு ரூ. 3 லட்சம், உற்பத்தி தொழிலுக்கு ரூ. 5 லட்சம் வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ. 75,000 வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோர் 45 வயது வரை இருக்கலாம்.

ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  சுயதொழில் ஊக்குவித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க, வருவாய் அதிகரிக்க புதுத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அக்டோபர் 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.டி.ஐ. படித்து முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், சிறப்பு பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், மகளிர் ஆகியோருக்கு 45 வயது வரை இருக்கலாம்.

இதில் சேவைத்தொழில் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை இருக்கலாம். தமிழக அரசு மானியமாக 25 சதவிதம் வீதம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்படும் தேர்வுக்கமிட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கடன் ஓப்புதல் பெற்ற பின்னர், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1மாதம் பயிற்சியளிக்கப்பட்டு, தொழில் தொடங்க உதவப்படுகிறது. என்றார்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியிடங்கள் நிரப்பப்படுமா?


மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோட்டத்தில் டிராக்மேன், டிக்கெட் செக்கிங், இன்ஜின் டிரைவர், ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் 1,200 வரை காலியாகவுள்ளன. இதனால் ரயில்களில் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதாக இன்ஜின் டிரைவர்கள் புலம்புகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட விடுப்பு எடுக்க முடியாத நிலையுள்ளது. டிராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட பாதுகாப்பு பிரிவுகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட செயலாளர் ஜெ.எம்.ரபீக் கூறுகையில், ""இன்ஜின் டிரைவர், கார்டுகள் போன்ற பாதுகாப்பு பிரிவிலுள்ள காலியிடங்களை நிரப்ப பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. டிக்கட் கவுன்டர்களில் ஊழியர் பற்றாக்குறையால், பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இக்கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 43 பணியிடங்களில் 8 ஆயிரம் பேர் மட்டும் பணியில் உள்ளனர். தேவையான ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி, மஸ்தூர் யூனியன் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜூன் 31ம் தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றாதபட்சத்தில் ரயில் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

கோட்ட ஊழியர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஓய்வு, இறப்பு காரணங்களால் காலியிடங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் ஊழியர்கள் ரயில்வே தேர்வாணையம் சார்பில் நியமிக்கப்படுகின்றனர். இக்கோட்டத்திலுள்ள காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். இருக்கும் ஊழியர்களை கொண்டு, பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என்றார்.

கிரிமினல்கள் போட்டியிட 2014 பொதுத் தேர்தலுக்கு முன் தடை


 வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பொதுத்தேர்தல் நடப்பதற்கு முன்பா‌கவே மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார்.

தற்போது மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் சிலர் மீது கொலை ,ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார் வந்துள்ளன. இவர்களில் சிலர் மீது வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இனி வருங்காலத்தில் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ‌கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

15 ஆண்டுகள் கிடப்பில் உள்ள கோரிக்கை
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்தே தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி கிரிமினல் குற்றவாளிகள் கோர்ட் மூலம் 5 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் காலத்திற்கேற்ப அரசுகள் மாறி வருவதால் அந்த கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்தது.

தற்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவதால் , கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , மாநில சட்டசபை,பார்லிமென்ட் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.எனவே அடுத்த பார்லிமென்ட் பொதுத்தேர்தலில் கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் நி்ச்சயம் போட்டியிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.