Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 2 நவம்பர், 2012

புதிய கட்டடங்களில் "சோலார் பேனல்' பொருத்துவது கட்டாயம்


 திருவள்ளூர் நகராட்சி பகுதியில், புதிதாக உருவாகும் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை (சோலார் பேனல்) பொருத்துவது, கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த விதி, வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.தற்போது, நிலவும் 14 மணி நேர மின்வெட்டு ‹ழலை சமாளிக்க, தமிழக அரசு”, சூரிய சக்தி கொள்கையை அண்மையில் அறிவித்தது. அதை செயலாக்கும் வகையில், திருவள்ளூர் நகராட்சி இந்த முன்னோடி விதிமுறையை அறிவித்து உள்ளது.

தீர்மானம்:
கடந்த மாதம், 25ம் தேதி நடந்த நகராட்சிக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, நகராட்சியிடம் கட்டட அனுமதி கோருபவர்கள், கட்டட வரைபடத்துடன், சூரிய சக்தி கட்டமைப்பை நிறுவுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 இது குறித்து, நகராட்சித் தலைவர், பாஸ்கரன் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக, புதிதாக கட்டப்படும் வீடுகளில் இதற்கான கருவிகளை பொருத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவை ஏற்று, தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிதாக கட்டப்பட உள்ள கட்டடங்களில், மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை பொருத்துவது கட்டாயம் ஆக்கப் பட்டு உள்ளது. இதற்காக, கட்டட அனுமதி கோரும் விண்ணப்பத்துடன், "தாங்கள் கட்டும் கட்டடத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கண்டிப்பாக நிறுவுவோம்' என்ற உறுதிமொழி பத்திரத்தை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்புதிய உத்தரவு, வரும், 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விதிகள்:
குறைந்தபட்சம், 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுபவர்கள், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை கட்டாயம் பொருத்த வேண்டும். இதற்கு குறைந்த பரப்பளவு கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு இது அவசியம் இல்லை.டூ கட்டட அனுமதி பெறும் போது, மின்சாரம் தயாரிக்க கூடிய பலகைகளை நிறுவுவது குறித்து உறுதிமொழி பத்திரத்தை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கட்டட பணி நிறைவடைந்த பிறகு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக, இவற்றை பொருத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், பணி நிறைவு சான்றிதழ் பெற முடியாது.

பொறியாளர்களுக்கு ஹிந்துஸ்தான் காகித ஆலையில் வேலைவாய்ப்பு


கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமாக ஹிந்துஸ்தான் காகித ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்/பல்ப் அன்ட் பேப்பர் டெக்னாலஜி, சிவில், இன்பர்மேஷன் டெக்னாலஜி, என்விரான்மென்ட், எச்.ஆர், மார்க்கெட்டிங், கமர்சியல், பினான்ஸ், பாரஸ்ட்ரி

கல்வித்தகுதி:
யூஜிசி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது ஏஐசிடிஇ.,யால் அனுமதிக்கப்பட்ட இளநிலை பொறியியல் பட்ட படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ.,வில் 55 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.ஏ.,நிதியியல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி.எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.

வயது: 22-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியுடையவர்கள் www.hindpaper.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நவம்பர் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.hindpaper.in/images/pdf/ET-Advertisement-2012_11-10-12.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தமிழகத்தில் அறிமுகமாகிறது செய்முறைத்தேர்வு இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் ......


இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன.

தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது.

முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.