"உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் (ஆக்டா) கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்டா சார்பில், "இந்திய உயர்கல்வியில் உள்ள சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் ஆறாவது கல்வி மாநாடு நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது. ஆக்டோ மாநில தலைவர் ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பூனாட்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், "ஒரு மனிதன் கற்கும் கல்வியே, அவனை ஆற்றல் மிக்கவனாக மாற்றுகிறது. ஆற்றல் மிக்க ஒருவரால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். மனிதனை முழு மனிதனாக மாற்றுவது கல்வியே. கல்வி மூலம் மட்டுமே நாடு வளர்ச்சியை அடைய முடியும் என்பதால், உயர்கல்வி வளர்ச்சியில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறது," என்றார்.
மாநாட்டில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியதாவது:
உயர்கல்விக்கு புதிய வலுவான பாதையை அமைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மட்டுமின்றி, மாணவர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உயர்கல்வி திகழ வேண்டும்.
தமிழக பல்கலைகள், உலக தரத்திலான கல்வியை வழங்கும் நோக்கத்தோடு, தமிழக அரசு செயல்படுவது பாராட்டுக்குறியது. சர்வதேச தரத்திற்கு இணையாக பாடத்திட்டங்களை வகுக்க, பாரதிதாசன் பல்கலையில் 10 மையங்கள் செயல்படுகிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி போன்ற துறைகளில் மட்டுமே மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அனைத்து துறைகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்காலத்துக்கு ஏற்றவாறு தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டு, சவால்களை சந்திக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிக்கவும் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் பாடம் சாராத ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்காக, பாரதிதாசன் பல்கலையில் மைக்ரோ சாஃப்ட் பயிற்சி மையத்தை துவங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆக்டோ துணைத் தலைவர் பிரேமா உள்பட பலர் பேசினர். பொருளாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார். மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் மயத்தை ஊக்குவிக்கும் போக்கை எதிர்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுமக்களுடன் இணைந்து போராட வேண்டும்.
உயர்கல்வியின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையிலான, தனியார் மயம், கட்டண கொள்ளை, வணிக நோக்கம், அரசு உதவி பெறும் கல்லூரிகளை புறக்கணித்தல் போன்றவற்றை எதிர்த்து தமிழகத்திலும், தேசிய அளவிலும் இயக்கங்கள் நடத்த வேண்டும் போன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.