Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 10 நவம்பர், 2012

சைனிக் பள்ளி அட்மிசன் ஆரம்பம்


மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.

நோக்கம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மாணவர்களை இந்திய ராணுவம், விமானப் படையில் அதிகாரிகளாக சேர தயார்படுத்துவது, உடல், உள்ளம், கல்வி வளர்ச்சியில் மேன்மை அடைவது, நல்லொழுக்கம், தியாக உணர்வு, ஒற்றுமையுணர்வை வளர்ப்பது, இப்பள்ளி அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்.

சி.பி.எஸ்.இ.,யில் இணைக்கப்பட்ட இப்பள்ளியில், பயிற்று மொழி ஆங்கிலம். இங்கு மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 வரை படிக்கலாம். பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், 50,000 ரூபாய் வரை, மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உடுமலை தாலுகா, அமாராவதியில் சைனிக் பள்ளி அமைந்து உள்ளது. நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

தகுதி: ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6ம் வகுப்பில் சேர, 10 அல்லது 11 வயதுக்குள், அதாவது 02072002க்கும் 01072003க்கும் இடையே பிறந்தவராக இருக்க வேண்டும். 9ம் வகுப்பில் சேர 13 அல்லது 14 வயதுக்குள், அதாவது 02 071999க்கும் 01072000க்கும் இடையே பிறந்தவராக இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு: மொத்த இடத்தில், எஸ்.சி., இனத்தவருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., இனத்தவருக்கு 7.5 சதவீதமும், ராணுவத்தில் பணிபுரியும், ஓய்வு பெற்றவர்களின் மகன்களுக்கு 25 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர், படிவத்தை தபாலிலோ அல்லது இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புவோர், விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் 550 ரூபாயும், எஸ்.சி/எஸ்.டி., பிரிவினர் 400 ரூபாயும்“ முதல்வர், சைனிக்பள்ளி, அமராவதி நகர் என்ற பெயரில் டிடி -யாக, எடுத்து பள்ளி முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவங்கள் அக்., 15ல் தொடங்கி டிச., 3 வரை வழங்கப்படும். கடைசி நாள் டிச., 10. தேர்வு நாள் 2013 ஜன., 06. மேலும் விவரங்களுக்கு, 04252 256 246, 04252 256 296 என்ற எண்களிலோ அல்லது www.sainikschoolamaravathinagar.edu.in. என்ற இணையதளத்தையோ பார்க்கலாம்.

நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் அண்ணாமலை பல்கலைக்கழகம்



நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது.

சம்பளம் குறைப்பது குறித்து, நான் மட்டுமே முடிவு செய்ய முடியாது. தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இன்று முதல், பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. மேலும் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மன வேதனை அடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால், குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கவோ, பட்டாசு வாங்கவோ ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலை : கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட அண்ணாமலை செட்டியார், 1920ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், மீனாட்சி கல்லூரி துவங்கினார். பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 1928ல், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, 1929ம் ஆண்டு, ஒருங்கிணைந்த பல்கலைக்கழகமாக, தமிழக அரசின் நிதி உதவியுடன் மாறியது.

கல்வியில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வி மேதைகளை உருவாக்கியது. இங்கு படித்தவர்கள், உலக அளவில் பல துறைகளில், மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த, பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, 17 ஆயிரத்து 609 ஊழியர்கள், நேரடியாகவும், பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்

கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பான நாடு அயர்லாந்து !


வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்கள், அங்கே இனவெறி உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்கும் வேளையில், அயர்லாந்தைப் போன்ற ஒரு நாட்டில், அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், நட்புணர்வுடனும் படிக்க இயலும். அயர்லாந்து மக்கள் தொகையில், 40%க்கும் அதிகமானவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது ஒரு தனிச்சிறப்பான அம்சம்.

விருப்பங்களுக்கு ஏற்ப...

அயர்லாந்து நாடானது, பல நல்ல பல்கலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு பெயர்பெற்ற ஒன்று. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அயர்லாந்து, டிரினிடி காலேஜ் மற்றும் டப்ளின் பிசினஸ் ஸ்கூல் போன்றவை அவற்றுள் சில. போஸ்ட் செகண்டரி படிப்புகள், தொழிற் படிப்புகள், டெக்னிக்கல் ட்ரெய்னிங், முழு அளவிலான பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை அளவிலான பட்டப்படிப்பு போன்ற பலவிதமான படிப்புகள் இங்கு உள்ளன. இதன்மூலம், ஒருவர் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய அம்சங்கள் கிடைக்கின்றன.

இங்குள்ள கல்வி நிறுவனங்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

* பல்கலைக்கழகங்கள்
* தொழில்நுட்ப கல்வி நிலையங்கள்
* அரசு கல்லூரிகள்
* தனியார் கல்லூரிகள்.

இதன்மூலம் ஒரு மாணவர், பொறியியல், மேலாண்மை, மொழி மற்றும் கலாச்சாரம், மானுடவியல், வணிகம், பேஷன், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய பல்துறைகளின் படிப்புகளை தன் விருப்பம்போல் எளிதாக தேர்வுசெய்ய முடிகிறது.

திட்டமிடுங்கள்

அயர்லாந்தில் இருக்கும் பலவிதமான கல்வி வாய்ப்புகள் பற்றி மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ள, National Framework of Qualifications(NFQ) என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அயர்லாந்தின் தேசிய குவாலிபிகேஷன் அத்தாரிட்டியால் நிர்வகிக்கப்படும் 10 அடுக்கு அமைப்பாகும் இது. NFQ உதவியுடன், ஒரு மாணவர் தனது படிப்பை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

மேலும், இந்த NFQ, வேலை வழங்கும் நிறுவனங்கள், ஒரு கல்வித்தகுதியின் நிலை மற்றும் தரம் பற்றி புரிந்துகொள்ளவும் உதவிபுரிகிறது.

ஆங்கிலம் கற்றல்

கடந்த 2008ம் ஆண்டில், 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர், அனைத்து வகையான ஆங்கில பயிற்சி படிப்புகளிலும் சேர, அயர்லாந்துக்கு வருகை புரிந்தார்கள் என்று www.educationireland.ie. தெரிவிக்கிறது. அயர்லாந்து நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் துறையானது, 110க்கும் மேற்பட்ட, நல்ல ஆங்கில மொழி பயிற்சி மையங்களை அங்கீகரித்து வைத்துள்ளது.

இந்த மையங்கள், பொது ஆங்கிலம், வணிக ஆங்கிலம், கல்வி நிலைய மற்றும் நிபுணத்துவ நோக்கத்திற்கான ஆங்கிலம், பணி அமர்வுக்கான ஆங்கிலம் என பல வகைகளிலான ஆங்கில வகுப்புகளை மேற்கூறிய பயிற்சி மையங்கள் நடத்துகின்றன.

தொழில்துறை பயிற்சி

அயர்லாந்திலுள்ள பல ஏஜென்சிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு, தொழில்துறை தொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன. அவற்றில், FAS மற்றும் Failte Ireland போன்றவை முக்கியமானவை.

விசா விதிமுறைகள்

* விசாவிற்கு கணிசமான காலத்திற்கு முன்னதாகவே விண்ணப்பித்து விடுதல் நல்லது. இதன்மூலம், உங்களுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட, 6 முதல் 8 வாரங்கள் கால அவகாசம் கிடைக்கும்.

* விண்ணப்பமானது, செல்லத்தக்க பாஸ்போர்ட், கல்வி நிறுவனத்திடமிருந்து ஏற்பு கடிதம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

* அந்த ஏற்பு கடிதமானது, நீங்கள் செலுத்திய முறையான கட்டணம், மருத்துவ காப்பீட்டு விபரங்கள், கல்வித் தகுதிகள், TOEFL, IELTS, ETAPP போன்ற உங்களின் ஆங்கில அறிவை நிரூபிப்பதற்கான சான்றிதழ் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இன்று அக்டோபர் 10 , "மலாலா" நாள் :ஐநா அறிவிப்பு


பாகிஸ்தானின் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய் (14). பாக்., பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய இந்த சிறுமியை கடந்த மாதம் சிலர்  சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

இந்நிலையில், மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மலாலா குறித்து ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம். கல்வி ஒரு அடிப்படை உரிமை. மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது” என்றும் கூறியுள்ளார்.மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க உலக முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

வைகோவிற்கு நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை !

ம.தி.மு.க.வில் வைகோவை விமர்சித்து அதன் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று பேட்டி அளித்தார். இன்று அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மீண்டும் பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

ம.தி.மு.க.வில் 18 ஆண்டுகள் இயக்கத்தை கரை சேர்க்க ஆசா பாசங்கள் இல்லாமல் உழைத்த எனக்கு கட்சி தலைமையின் உத்தரவால் இந்த இழிச்செயல் ஏற்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. அவரைப்போல் நான் பாதுகாப்பு வளையத்திற்குள் வலம் வரவில்லை. சிலரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

எல்லோருக்கும் மரணம் வரலாம். மரணம் தான் உலகத்தில் நிரந்தரமானது. அது எப்போதும் வரும். எல்லோருக்கும் வரும். அது கட்சியின் ஏவல், கூவல்களால் எனக்கு வந்து விடுமானால் அதனை வரவேற்க தயாராக இருக்கிறேன். 

பரந்து விரிந்த தமிழ்ச் சமுதாயம் இந்த இழிநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். என்னுடைய அடுத்தக் கட்ட முடிவுகள் எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதோடு இத் தமிழ்ச் சமுதாயம் மெச்சும் படியும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.