நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்முகைதீன் கூறியதாவது:டிசம்பர் 1, 2 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் முஸ்லிம்லீக் கட்சியின் அகில இந்திய கவுன்சில் கூட்டம் நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர். அடுத்த 4 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு, பார்லிமென்ட் தேர்தல் அணுகுமுறை, வட மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது, இளைஞர் அணி தேசிய மாநாடு நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
தென், வட மாவட்டங்களில் தேவர், வன்னியர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே மோதல் நடப்பது வருந்தத்தக்கது. இப்பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி ஜாதி மோதலுக்கு தீனி போடக்கூடாது. கட்சித்தலைவர்கள் ஒருவரையொருர் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
தென் மாவட்டங்களில் முன்பு ஜாதி மோதல் நடந்த போது அமைக்கப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் அளித்த பரிந்துரைகள் இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தென் மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்களை துவக்க வேண்டும். சேது சமுத்திரத்திட்டத்தை விரைவுபடுத்தினால் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும்.நான்குநேரி உயர் தொழில்நுட்பப்பூங்கா அமைப்புப்பணியை மேற்கொண்டால் பலருக்கு வேலை கிடைக்கும்.
ஒரே இடத்தில் பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் போது சமூக நல்லிணக்கம் ஏற்படும்.தொடர்ந்து ஜாதிமோதல்கள் நடப்பதை பார்க்கும் போது சங்கத்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை யாரும் பின்பற்றுவதில்லை என எண்ணத்தோன்றுகிறது. திருக்குறள், திருமூலர், வள்ளலாரின் பாடல்களை படித்து பின்பற்றினால் எங்கும் மோதல்கள் நடக்காது. டிசம்பரில் சமூக நல்லிணக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு அளிக்க வேண்டிய நிதிஒதுக்கீட்டை அளிக்க தமிழக அரசு காலதாமதம் செய்வதாக மதுரை வணிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள ரயில்வே திட்டங்கள், பால அமைப்புப்பணிகளுக்கு உரிய நிதிஒதுக்கீட்டை அளித்து பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட 9ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் மக்கள் குறித்தும், 6ம் வகுப்பு புத்தகத்தில் இறைச்சி உணவு குறித்தும் தவறான, தேவையற்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை தயாரிக்கும் குழுவில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது.தமிழகத்தில் மின்தடையால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன.
திமுக ஆட்சியில் துவக்கப்பட்ட மின்உற்பத்தி திட்டங்கள், பிற புதிய திட்டங்களை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்விநியோகம் சீர்செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியை போல வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு திமுக தடையாக இல்லை.மத்திய அரசிடம் உபரி மின்சாரத்தை கேட்டு பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன. அதை பின்பற்றாமல் மின்பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசை தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறார் முதல்வர்.மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. மத்திய அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரத்தில் சாதகமும், பாதகமும் உள்ளது. இதில் மத்திய அரசு நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. பிற மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுபவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதர்முகைதீன் தெரிவித்தார்.
மாநில பொதுச்செயலாளர் முகமதுஅபுபக்கர், பொருளாளர் ஷாஜகான், நிர்வாகிகள் கோதர்மைதீன், வடக்கு கோட்டையார் செய்யதுமுகமது, கமுதிபஷீர், நிஜாமுதீன், நெல்லை மஜீத், மாவட்டத்தலைவர் துராப்ஷா, செயலாளர் மீரான்முகைதீன் உடன் இருந்தனர்.