Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 11 மார்ச், 2013

ஐ.ஏ.எஸ். தேர்வை இனி தமிழில் எழுத முடியாது!


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது இனி வெறும் கனவாகவே போய்விடக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையில் ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதன்மைப் பாடத் தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஹிந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகக் குறையும் என கூறப்படுகிறது.
அதோடு, தமிழ் இலக்கியத்தை, தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே விருப்பப்பாடமாகத் தேர்வு செய்ய முடியும் எனவும் மற்றொரு விதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்துதான் படித்து வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.
2009-ல் 622 பேரும், 2010-ல் 561 பேரும் தமிழில் தேர்வு எழுதினர். கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் தமிழில் தேர்வு எழுதிய 10-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முதல் கட்டத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் பிரதான தேர்வை தமிழகத்தில் 300 முதல் 600 பேர் வரை எழுதுகின்றனர்.
பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஓரிரு மாணவர்கள் மட்டுமே பிரதான தேர்வை தமிழில் எழுதும் தகுதியைப் பெறுவர். எனவே 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை எட்டவே முடியாது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் படித்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் புதிய விதிகள் மறைமுகமான ஹிந்தி திணிப்பே என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் இதுகுறித்து மேலும் கூறியது:
பட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற தொழில் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழில் தேர்வே எழுத முடியாது. பி.ஏ., பி.எஸ்சி., போன்ற படிப்புகளும் மிக அரிதாகவே தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன.
எனவே, கிராமப்புற மாணவர்கள் இனி தமிழ் வழியில் தேர்வு எழுத முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆங்கில வழிப் படிப்புகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு பெரிய அளவில் ஆங்கிலப் புலமை தேவையில்லை. ஆனால், இந்தியாவில் முதல் 100 பேரில் ஒருவராக வருவதற்கு மேம்பட்ட ஆங்கிலப் புலமை நிச்சயம் தேவை. எனவே, இந்தப் புதிய திருத்தங்கள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவே உள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வரும் கோவை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
வரலாறு, புவியியல் போன்ற விருப்பப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பதிலிருந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும் சில தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது: இந்தப் புதிய விதிகள் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆகும் வகையில் உள்ளதாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.
முதன்மைத் தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் 1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுப் பாடங்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.
ஆனால், மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.
தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும். தமிழில் எழுத முடியுமா என்று தெரிந்துகொள்ள அவர்கள் காத்திருக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அந்த மாநில மொழியில் தேர்வு எழுத முடியுமா, இல்லையா என்பது தெரியவரும்.
அதேபோல், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பதையும் தடுக்கும் வகையில் புதிய விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் கிராமப்புற,ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார் அவர்.
பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை நீக்க வேண்டும், ஏற்கெனவே இருந்தவாறு பட்டப்படிப்பை எந்தமொழி வழியாக படித்திருந்தாலும் அவர்களை தமிழ் வழியில் எழுத அனுமதிக்க வேண்டும், தமிழ் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோருகின்றனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும்.
இதில் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) அப்ஜெக்டிவ் டைப் வினாக்களாக இருக்கும். அதாவது சரியான விடையைத் தேர்வு செய்யும் வடிவில் இருக்கும். பிரதான தேர்வு முழுவதும் கட்டுரை வடிவில் இருக்கும்.
இந்தக் கட்டுரை வடிவிலான தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஆனால், இதற்கான விடைகளை மாணவர்கள் தமிழிலோ அல்லது வேறு பிராந்திய மொழிகளிலோ அளிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இப்போது அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் 2 விருப்பப் பாடங்களுக்கு பதில் இனி ஒரு விருப்பப் பாடம் மட்டுமே இருக்கும்.

வறண்டன மூணாறு அருவிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மூணாறு பகுதியில், கோடை மழை இன்றி, வறட்சி நிலவுவதால், நீர் வீழ்ச்சிகள் வறண்டு, சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கேரளாவில், "தென்னகத்து காஷ்மீர்' என, அழைக்கப்படும் மூணாறு, பசுமையான மலைப் பகுதியாகும். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும், வெளிநாட்டு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.மூணாறைச் சுற்றிலும் பெரியகானல், ஆற்றுக்காடு, நயமக்காடு, லக்கம், வாளரா, சீயப்பாறை உட்பட, ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்; கோடையிலும், நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படும்.

ஆண்டுதோறும் பிப்ரவரியில் மூணாறு பகுதியில், கோடை மழை பெய்யும். இந்த ஆண்டு, கோடை மழை பெய்யாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது; நீர் வீழ்ச்சிகள் வறண்டுள்ளன. சோலை வனங்களும், புல் மேடுகளும் பசுமை இழந்து காட்சியளிக்கின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

சொத்து விவரம் வெளியிடாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 1,057 பேர்


தமிழகத்தை சேர்ந்த, 20 பேர் உட்பட, நாடு முழுவதும், 1,057 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களின் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.

நாடு முழுவதும், 6,217 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். இவர்களில், 1,339 பேர், பணி மூப்பு அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம், தங்களின், அசையா சொத்து விவரங்களை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த வகையில், 2011ம் ஆண்டு, 107, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில், 198 அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டில், மிக அதிகமாக, 1,057 அதிகாரிகள், தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்காமல் உள்ளனர்.

அவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், 20 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 147 பேர், அருணாச்சல பிரதேசம் - கோவா - மிசோரம் - யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும், 114 அதிகாரிகள் தங்கள் சொத்து விவரத்தை வெளியிடவில்லை. கர்நாடகாவில், 58, ஆந்திராவில், 53, பஞ்சாபில், 48, ஒடிசாவில், 47, மேற்கு வங்கத்தில், 45, இமாச்சல பிரதேசத்தில் 40, அரியானாவில், 35, ஜார்க்கண்டில், 25, குஜராத்தில், 14 என, 1,057 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் அசையா சொத்து விவரங்களை தெரிவிக்காமல் உள்ளனர். இவர்களில், 350 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து குவித்ததால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, அரவிந்த் மற்றும் தினு ஜோஷி தம்பதியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் : மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்


"வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை,'' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்,  சல்மான் குர்ஷித்,உ.பி., மாநிலம்  காஜியாபாத்தில் நடந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை தினவிழாவில், நேற்று பங்கேற்றார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இப்போதெல்லாம், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதுகாப்பு படையினரில், கணிசமான பகுதியினரை, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு, போதிய அளவில் போலீசாரை ஈடுபடுத்த முடியவில்லை. என்னை பொறுத்தவரை, வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில், உடன்பாடு இல்லை. இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க கூடாது. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை.